சுன்னாகத்தில் இயங்கி வந்த நொதேர்ன் பவர் அனல் மின்நிலையத்தை உடனடியாக மூடுமாறு சம்பிக்க ரணவக்க உத்தரவு

.

சுன்னாகம் பகுதியில் இயங்கி வரும் நொதேர்ன் பவர் அனல் மின்நிலையத்தை உடனடியாக மூடிவிடுமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவித்துள்ளார்.

அமைச்சருடன் இன்று (22.01.14) இடம் பெற்ற சந்திப்பின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

நொதேர்ன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்கள் நிலத்தில் பரவி சுன்னாகம், தெல்லிப்பழை பிரதேசங்கள் எண்ணூறுக்கு மேற்பட்ட கிணறுகளில் சேர்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.



இது தொடர்பில் மல்லாகம் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரணையில் உள்ளன. அத்துடன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தொடர்ச்சியான போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர். அண்மையில் சூழல் பாதுகாப்பு அமையம் சார்பாக இந்த விடயம் முன்னைய ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆட்சி மாற்றத்தை அடுத்து இந்த பிரச்சினை குறித்து சூழல் பாதுகாப்பு அமையம் புதிய அரசுடன் பேச்சுக்களை ஆரம்பித்திருந்தது.

இந்த நிலையில், கிணற்று நீர் மாசடைவதற்கு காரணமாக இருந்த நொதேர்ன் பவர் மின் உற்பத்தி நிலையத்தை உடனடியாக மூடுவதற்கு
நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பான சந்திப்பு இன்று காலை கொழும்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிறுவனத்தை மூடுவதன் மூலம் யாழ்.மாவட்டத்திற்கான மின்விநியோக நடவடிக்கைகள் பாதிப்படையாது என அமைச்சர் உறுதியளித்தார் எனவும் சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவித்துள்ளார்.

No comments: