அழுக்ககற்ற முனைந்துநிற்போம் ! - எம். ஜெயராமசர்மா ..

.

  குடுயரசு மலர்ந்தாலும்
  குடிமட்டும் மறையவில்லை
  நடுஇரவில் தனியாக
  நடமாட முடியவில்லை

  வெடிகுண்டு கலாசாரம்
  விட்டெங்கும் போகவில்லை
  நடமாடும் விபசாரம்
  நாட்டைவிட்டு அகலவில்லை

  காந்திசொன்ன சுதந்திரத்தை
  கண்டுகொள்ள முடியவில்லை
  கள்ளத்தனம் புகுந்தெங்கும்
  கழுத்தறுத்து நிற்கிறது

  நீதிநேர்மை எல்லாமே
  நிலைகுலைந்து நிற்கிறது
  சாதிவெறி தலைவிரித்து
  சதிராடி நிற்கிறது

  ஓதிநன்கு உணர்ந்தோர்கள்
  ஒதுங்கிநிற்க முயலுகின்றார
   உலுத்துகுண மிக்கோரே
  உயர்த்திக்கொடி  பிடிக்கின்றார்

  நாட்டுக்காய் உழைத்தோரை
  நாம்நினைத்துப் பார்ப்பதற்கு
  நல்லதொரு சந்தர்ப்பம்
  நம்குடியரசு நாளாகும்

 குளறுபடி அரசியலை
 குழிதோண்டிப் புதைத்திடுவோம்
 நலமுடைய அரசியலை
 நம்நாட்டில் அமைத்திடுவோம்

 தனிமனித சுதந்திரத்தை
 சரித்திரமாய் ஆக்கிடுவோம்
 தரணிதனில் பாரதத்தை
 தலைநிமரச் செய்துநிற்போம்

பாரதிரப் பாரதத்தை
பார்க்கவைக்க வேண்டுமாயின்
பக்குவமாய் குடியரசை
பாதுகாத்தல் வேண்டுமன்றோ

போரொழிப்போம் புரட்டழிப்போம்
பூசலெலாம் ஒழித்துநிற்போம்
வாசலெலாம் கோலமிட்டு
வரவேற்போம் குடியரசை

குடியரசுநாள்  தன்னில்
கூடிநாம் சேர்ந்திருந்து
அடிமனதில் ஒழிந்திருக்கும்
அழுக்ககற்ற முனைந்துநிற்போம் !

No comments: