கே.பாலச்சந்தர் - கலகக்குரல்களின் முன்னோடி

.

 'கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு கர்வமா இருக்கலாம், கர்ப்பமாத்தான் இருக்கக்கூடாது'  - அவள் ஒரு தொடர்கதை என்கிற திரைப்படத்தில் இருந்த இந்த ஒரு வரி வசனத்தில் இருந்த குறும்புத்தனமும் சீற்றமும்தான் யார் இந்த பாலச்சந்தர் என்று என்னை தேடிப் பார்க்க வைத்தது. 'கட்டில் சத்தம் தாங்கலை' என்பது  திருமணமாகாத பெண்ணொருத்தி தன்னுடைய அண்ணியிடம் சொல்லும் அதே திரைப்படத்தில் வரும் இன்னொரு வசனம். 'சக்ஸஸ் சக்ஸஸ்' என்பது போன்ற சென்ட்டிமென்ட் வசனத்துடன் துவங்கும் அப்போதைய தமிழ் சினிமாக்களில் இப்படிப்பட்ட அதிர்ச்சிகர வசனங்கள் எல்லாம் இன்று கூட  நினைத்துக் கூட பார்க்க முடியாதவை. இப்போதைய இயக்குநர்கள் கூட கையாளத் தயங்குபவை. கவிதாவிற்கு திருமணமே ஆகக்கூடாது என்று இயக்குநர் திட்டமிட்டு அடுக்கிய சதிகளின் தொகுப்பாக  கூட இத்திரைப்படம் ஒருவிதத்தில் எனக்கு தோற்றமளிக்கும். கடவுள்களைப் போலவே கதாசிரியர்களும் சாடிஸ்ட்டுகளாக இருந்தால்தான் அந்த புனைவு விளையாட்டுகள் சுவாரசியமாக அமையும் போலிருக்கிறது. என்றாலும் பொறுப்பற்ற ஆண்களின் உலகில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் ஆண்களுக்காகவும் சேர்த்து கடைசி வரையிலும் உழைத்தேதான் தன்னை வருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது எனும் கசப்பான யதார்த்தத்தைதான் அத்திரைப்படத்தில் முன்வைத்திருக்கிறார் என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.சினிமாவை வெறுமனே பொழுதுபோக்கு அம்சமாக மாத்திரமே இச்சமூகம் அணுகிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அதை மத்தியதர வர்க்க குடும்பங்களின் வரவேற்பறை விவாதங்களாக மாற்றிய வகையில் பாலச்சந்தரின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனித்தன்மையும் முக்கியத்துவமும் உண்டு. 'அரங்கேற்றம்' திரைப்படம் வெளிவந்த போது அப்போதைய சமூகப் பிரச்சினைகளுள் ஒன்றாக இருந்த 'குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை' வெளிப்படுத்தும் விதமாக அத்திரைப்படம் அமைந்திருந்தாலும் கூட ஒரு பிராமண பெண்ணை பாலியல் தொழிலாளியாக சித்தரித்தற்காக  பிராமண சமூகத்தின் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. இந்த சர்ச்சைக்கு பத்திரிகை ஆசிரியா் சோ  அளித்த விளக்கத்தை வாசித்த நினைவிருக்கிறது.  'ஒரு கதையில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு பாத்திரம் அதல பாதாளத்தில் விழும் போதுதான் பார்வையாளர்களுக்கு இயல்பாகவே அதன் மீது அதிக பரிவுணர்ச்சி ஏற்படும். அந்த வகையில்தான் இத்திரைப்படத்தை அணுக வேண்டும்'. புனைவில் இயங்கும் ஒரு கதாபாத்திரம் அதன் தன்மைக்கு முரணான எதிர் துருவ நிலையில் பயணப்படும் போதுதான் அந்த முரணியக்க நிலையில் அந்தப் புனைவு சுவாரசியமாக அமையும் என்கிற வகையில் சோவின் இந்த விளக்கம் சரியானது போல தோன்றினாலும் சாதிய நோக்கில் அது ஒரு சமூகத்தை உயர்த்தி சொல்வது போல் சுயநலமாக அமைந்திருப்பது முறையற்றது.

பாலச்சந்தரின் பெரும்பாலான திரைப்படங்கள் இவ்வாறான சர்ச்சைகளையும் விவாதங்களையும் அப்போதைய தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தின. அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி கவனத்தை ஈர்த்தன.  ஆனால் தம்முடைய படைப்புகளை வெறுமனே அதிர்ச்சி மதிப்பீட்டு நோக்கில் திட்டமிட்டு அவர் உருவாக்கியதாக தெரியவில்லை. ஏனெனில் அவைகளில் சமூகத்தின் மீதான கடுமையான விமர்சனங்களோடு கூடவே அதற்கான பரிவுணர்ச்சியும் கலந்திருந்தது.  "பாலு.. உன்னோட படங்கள்ல மட்டும்தான் பாடல்கள் எழுதுவதற்கு சவாலாக அமைகிற மாதிரியான சிக்கலான, சுவாரசியமான கதைச் சூழல்கள் இருக்கு" என்று கண்ணதாசன், பாலச்சந்தரிடம் சொன்னதாக ஒரு தகவல் உண்டு.

கிராமங்களில் நிகழ்ந்த புராணக்கதைகளின் மீது அமைந்த தெருக்கூத்து நாடகங்களும் அதன் தொடர்ச்சியாக திரை நடிகர்கள் நடித்த ஸ்பெஷல் புராண நாடகங்களும் வெற்றிகரமாக செயல்பட்ட காலத்தில்  சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் அப்போது தங்களுக்கென சொந்தமான நாடகக்குழுவைக் கொண்டிருந்தார்கள். எஸ்.வி. சகஸ்ரநாமம், எம்.ஆர்.ராதா, போன்று பல நடிகர்கள் ஒருபுறம் திரைப்படங்களிலும் இன்னொரு புறம் தங்களின் மரபு தொடர்ச்சியை கை விட்டு விடாமல் பெருவிருப்பத்துடன் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்கள். இம்மாதிரியான நாடகங்கள் பின்னர் திரைப்படங்களாகவும் உருவாகின. இந்தக் காலக்கட்டங்கள் மங்கிய சூழலில் கல்வியறிவு பெற்ற நகரத்தின் மத்திய தர வர்க்க இளைஞர்கள் தங்களின் கலைத்திறமையை வெளிக்காட்ட அமெச்சூர் நாடகக்குழுக்களை உருவாக்கினார்கள். இந்த நாடக மரபிலிருந்து உருவாகி வநதவர் கே.பாலச்சந்தர். சிறு வயதுகளில் எம்.கே.தியாகராஜ பாகவதர் திரைப்படங்களைக் காண்பதில் ஆர்வம் கொண்டிருந்த பாலச்சந்தருக்கு நாடகங்களை எழுதுவதில் உள்ள ஈடுபாடு இளமையிலேயே உண்டானது.

அரசு அலுவலகத்தில் அவர் பணிபுரிந்து கொண்டிருந்த போது புதிதாக பொறுப்பேற்க வந்த அதிகாரியை வரவேற்கும் விழாவிற்கு அவர் ஆங்கிலத்தில் எழுதிய நாடகமான 'மேஜர் சந்திரகாந்த்' பரப்பரப்பான வரவேற்பை பெற்றது. பிறகு நண்பர்களின் வற்புறுத்தலின் காரணமாக பொதுமக்களும் இதைக் காண ஏதுவாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட போது அமோகமான வெற்றியைப் பெற்றது. அப்போது ஓடிய திரைப்படங்களுக்கு ஈடான கூட்டத்தை பாலச்சந்தரின் நாடகங்களும் பெற்றன. திரையுலகினர் திரும்பிப் பார்க்கிற அளவிற்கான வளர்ச்சியைப் பெற்றிருந்தார் பாலச்சந்தர். இவரின் 'மெழுகுவர்த்தி' எனும் நாடகத்தை காண வந்திருந்த எம்.ஜி.ஆர், 'இது போன்ற திறமையான இளைஞர்கள் திரைத்துறைக்கு நிச்சயம் வரவேண்டும்' என்று கூறி 'தெய்வத்தாய்' திரைப்படத்தில் வசனமெழுத வாயப்பளித்தார். அத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடினாலும் தம்முடைய தனித்தன்மையும் திறமையும் அதில் வெளிப்படவில்லையே என்கிற வருத்தம் பாலச்சந்தருக்கு ஏற்பட்டதால் தம்முடைய நாடகங்களையே திரைப்படமாக்கும் பணிகளில் ஈடுபட்டார். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய 'சர்வர் சுந்தரம்' மகத்தான வெற்றியைப் பெற்றது. அதுவரை நகைச்சுவை நடிகராக அறியப்பட்டிருந்த நாகேஷை மறுகண்டுபிடிப்பு செய்து இன்னொரு பரிமாணத்தில் சித்தரித்த பெருமை பாலச்சந்தரையே சாரும். அபத்தமான சென்டிமென்ட் உணர்வுகளும் வழக்கங்களையும் இன்னமும் கூட கொண்டிருக்கும் தமிழ்  சினிமாவில் தன்னுடைய இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படத்தையின் தலைப்பையே 'நீர்க்குமிழி' என்று வைக்கும் துணிச்சலையும் புதுமையையும் பாலச்சந்தர் கொண்டிருந்தார்.அதுவரை தமிழ் சினிமாவில் மாறாதிருந்த பல பழமைவாதப் போக்குகளை பாலச்சந்தரின் படங்கள் சிதறடித்தன.

காதலனை கொன்றவனை பழிவாங்குவதற்காக அவனுக்கே சித்தியாக வந்து அதிர்ச்சி தரும் ஒரு பெண் (மூன்று முடிச்சு), திருமணமான ஒருவன் மகள் வயதுள்ள பெண்ணுடன் கொள்ளும் பாலுறவால் ஏற்படும் குடும்பச் சிக்கல்கள் (நூல்வேலி), காதலன், சேடிஸ்ட் கணவன், ஒருதலையாக காதல் செய்யும் அப்பாவியொருவன் என்று மூன்று ஆண் முனைகளில் அலையுறும் ஒரு பெண் (அவர்கள்), அதிக வயது வித்தியாசமுள்ள இரு ஜோடிகளின் காதலினால் ஏற்படும் உறவுச்சிக்கல்கள் (அபூர்வ ராகங்கள்) திருந்தி மைய நீரோட்ட வாழ்க்கையில் புக விரும்பும் ஒரு ரவுடியையும் பாலியல் தொழிலாளியையும் இச்சமூகம் அவர்களின் பழைய நிலைக்கே தள்ளும் அபத்தம் (தப்புத் தாளங்கள்) என்று வித்தியாசமான பல கதையோட்டங்களை கையாண்ட இயக்குநராக பாலச்சந்தர் திகழ்ந்தார்.

துவக்க காலத்தில் நாடகபாணிக் கதைகளையே கையாண்டாலும் ஒரு கட்டத்தில் சமூகப் பிரச்சினைகளை அலசும், அதற்கு தீர்வு காண முயலும், அவற்றை முன்வைக்கும் லட்சியவாத மனிதர்களைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்கினார். சமூகக்கதைகளை மாத்திரமல்லாமல் எதிரொலி, நூற்றுக்கு நூறு போன்ற 'ஹிட்ச்காக்' வகை சஸ்பென்ஸ் படங்களை இயக்குவதிலும் அவருடைய திறமை வெளிப்பட்டது.

எம்.ஜி.ஆர் படம், சிவாஜி படம் என்று நடிகர்களால் திரைப்படங்கள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், ஸ்ரீதருக்குப் பிறகு 'இயக்குநரின் திரைப்படங்களாக' அவை அடையாளம் காணப்பட்டு இயக்குநர்களுக்கான முக்கியத்துவத்தையும் பெருமையையும் நிறுவியதில் பாலச்சந்தரின் பங்களிப்பிற்கு முக்கியத்துவமுண்டு. அதைப் போலவே ஆண்மையவாத சிந்தனைகளில் உதிர்ந்த படைப்புகளாக தமிழ் சினிமாக்கள் உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில் பெண் கதாபாத்திரங்கள் வெறும் கவர்ச்சி பிம்பங்களாகவும் சென்ட்மென்ட் உபயோகங்களுக்காகவும் ஆண்களால் காப்பாறப்பட காத்துக் கொண்டிருக்கும் அபலைகளாகவும் சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இதிலிருந்து முற்றிலும் விடுபட்டு பெண்களை முன்னிலைப்படுத்தியும் அவர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தியும் சித்தரித்த வகையில் பாராட்டத்தக்க ஓர் இயக்குநராக பாலச்சந்தர் இருந்தார். பணக்கார பண்ணையார் - ஏழை விவசாயி என்று சமூகத்தின் மேல்நிலை x கீழ்நிலை பாத்திரங்களையே கொண்டு அதுவரையான தமிழ் சினிமாக்கள் இயங்கிய போது அதை விட குழப்பங்களும் சிக்கல்களும் கொண்ட மத்திய தர வர்க்க மனிதர்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் தமிழ் திரையில் பதிவு செய்த வகையில் பாலச்சந்தர் ஒரு முன்னோடியாக செயல்பட்டார். மிகச் சிறிய கதாபாத்திரங்கள் கூட அவருடைய திரைப்படங்களில், பார்வையாளர்களின் கவனத்தைப் பெறுமளவிற்கு அவற்றின் தனித்தன்மைகளோடு உருவாக்கப்படும். (அபூர்வ ராகங்களில் மருத்துவராக நடித்திருந்த கண்ணதாசன் பாத்திரத்தை உதாரணமாக சொல்லலாம்).

திரைப்படத்துறையில் தன் பயணத்தை வெற்றிகரமாக துவங்கிய பின்னரும் கூட தன்னுடைய அரசுப்பணியை இழப்பதில் அவருக்கு தயக்கமிருந்தது. ஏவிஎம் செட்டியார் அவருக்கு தைரியம் கூறி மூன்று வருட ஒப்பந்தம் போட்டுக் கொண்ட பின்புதான் தன் அரசுப்பணியிலிருந்து விடுபட்டார். பாலச்சந்தரின் இந்த நடுத்தர வர்க்க  பின்னணியின் மனோபாவத்தை பிரதிபலிப்பது போலவே அவரது பெரும்பாலான கதாபாத்திரங்கள் இயங்கின. 'கல்வி'யின் மூலம்தான் தங்களின் சமூகத்தின் வறுமையிலிருந்து விடுபட்டு மேலேற முடியும் என்கிற மத்தியதர வர்க்கத்தின் சிந்தனையை அவரது பல கதாபாத்திரங்கள் எதிரொலித்தன. ஸ்டார் நடிகர்களின் பின்னால் ஓடாமல் தம்முடைய திறமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டு பல புதுமுகங்களை பட்டை தீட்டி அறிமுகப்படுத்தி வெற்றிபெறச் செய்தவர் என்கிற வகையில் 'சினிமா என்பது இயக்குநர்களின் கையில் இருக்க வேண்டிய ஊடகம்' என்கிற செய்தியை தொடர்ந்து நிருபித்துக் கொண்டேயிருந்தார். 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படத்தில் சுஹாசினியைத் தவிர்த்து விவேக் உள்ளிட்ட ஏறத்தாழ அனைத்து நடிகர்களும் புதுமுகங்களே. தம்முடைய திரைப்படங்களில் வரும் பாடல் வரிகளும் இசையும் காட்சிக் கோணங்களும் வித்தியாசமாக அமைவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கன. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இசையமைப்பாளர்களின் பங்களிப்பில் பாலச்சந்தரின் திரைப்பட பாடல்கள் பிரத்யேக சிறப்புகளுடன் வெளிப்பட்டன. ரஜினி -கமல் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்தின் பாடல்கள் பொதுவெளியில் பார்வையாளர்கள் இடையே கோலாகலமான, கொண்டாட்டமான மனநிலையை உருவாக்கின.

வங்காளப் படங்களின் பாதிப்பு பாலச்சந்தரின் படங்களில் இருந்தது. குறிப்பாக சத்யஜித்ரே, ரித்வக் கட்டக் ஆகியோரைச் சொல்லலாம். 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படம் ரித்விக் கட்டக்கின் 'மேஹ தாஹ தாரா' என்கிற வங்காளப் படத்தின் தழுவலே. பாலியல் தரகராக இருக்கும் நபர் எதிர்பாராத சூழலில் தன்னுடைய மகளை பாலியல் தொழிலாளியாக கண்டு அதிர்ச்சியுறும் காட்சியும் ரே திரைப்படத்தின் ஒரு காட்சியே. 'பாலச்சந்தர் ஒரு நடிகராக வந்து விடக்கூடாது என்கிற பிரார்த்தனையும் கவலையும் எனக்குண்டு. ஏனெனில் அவர் நடிகராக வந்தால் நாங்கள் எல்லோரும் காணாமல் போக வேண்டியிருக்கும். அத்தனை சிறந்த நடிகர். அவர் எங்களுக்கு கற்றுத் தரும் நடிப்பின் சில சதவீதத்தையாவது ஒழுங்காக செய்து விட்டால் கூட அது சிறப்பாக அமைந்து விடும்' என்று தனது நேர்காணல்களில் கமல்ஹாசன் உயர்வுநவிற்சியுடன் அடிக்கடி கூறியதை காண நேர்ந்ததையொட்டி பாலச்சந்தர் நடிப்பதைக் காண பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் அவர் நடிப்பைக் காணும் போது அது அத்தனை சிலாகிக்கும்படியாக இல்லாதது ஒரு புதிரே.

சினிமாவில் சாதித்த பிறகு தொலைக்காட்சியில் பணிபுரிவதென்பது ஒருபடி கீழான செயல் என்று இன்றும் கூட நம்பப்பட்டிருக்கும் சூழலில் 90 களிலேயே பல தொலைக்காட்சி நாடகங்களை இயக்கி அனைவரையும் கவனிக்க வைத்தார். மற்றவர்களின் திரைப்படங்கள் தோல்வியடைந்தால் அதைக் கொண்டாடி மகிழும் மனப்பான்மையும் உள்ள திரையுலகில் புதிய இயக்குநர் முதற்கொண்டு எந்தவொருவரின் படைப்பு சிறப்பாக இருந்தாலும் அதை தம்முடைய கையெழுத்துடன் கூடிய கடிதத்தில் எழுதி வெளிப்படுத்தும் பிரத்யேகமான பண்பு பாலச்சந்தரிடம் இருந்தது.

தமிழ் சினிமா தனது  முன்னோடி படைப்பாளிகளை ஒவ்வொருவராக இழந்து வருவது வருந்தத்தக்கது. சமீபத்தில்தான் பாலுமகேந்திரா காலமானார். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் இன்னொரு முக்கியமான இயக்குநரும் பாலச்சந்தரும் காலமானது பேரிழப்பே. பழமைவாத மனோபாவங்கள் ஆழமாக வேரூன்றிய காலக்கட்டத்திலேயே அதைச் சிதறடிக்கும் விதமாக புதுமையான, புரட்சிகரமான படைப்புகளை உருவாக்கிய பாலச்சந்தரின் பாதையை இளம் இயக்குநர்களும் பின்பற்றுவதுதான் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

- உயிர்மை - ஜனவரி 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

No comments: