வண்டாடும் தலைவனால், திண்டாடும் தலைவி!
சங்க இலக்கியங்களில் அடங்குகின்ற எட்டுத்தொகை நூல்களிலே ஒன்றாக விளங்குவது கலித்தொகை. கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று புகழ்ந்துரைக்கப்படும் கலித்தொகை முற்றுமுழுதாக அகப்பொருளைத் தாங்கிநிற்கும் சிறந்ததோர் இலக்கியமாகத் திகழ்கின்றது.
கலித்தொகையில் மருதக்கலி என்றழைக்கப்படும் மருதத் திணைக்கான பகுதியில் 35 பாடல்கள் உள்ளன. அவை மருதன் இளநாகனார் என்ற புலவரால் பாடப்பட்டவை. வயலும் வயல் சூழ்ந்த இடமுமே மருதநிலம் எனப்படுகின்றது. நெல்விளையும் பூமி. நிறைவான வாழ்க்கை. செல்வச் செழிப்பிலே மக்கள் மிதந்தார்கள். குடும்ப உறவிலே சிறந்தார்கள். ஆடல்பாடல்களில் மகிழ்ந்தார்கள்.
பொருள்படைத்த ஆடவர்களில் சிலர் பரத்தையர்களையும் நாடினார்கள். அதனால் மனைவிமார் ஊடினார்கள். குடும்பப் பெண்கள் கணிகையிடம் சென்ற கணவனை உரிமையோடு கண்டித்தார்கள். வீட்டுக்கு வராதே என்று தண்டித்தார்கள். தவறுணர்ந்த ஆண்கள் கெஞ்சினார்கள். மனைவியர் மன்னித்து மீண்டும் கொஞ்சினார்கள். மருதக்கலியின் பாடல்களிலே இந்தக்காட்சிகளையெல்லாம் காணலாம்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் நிலவிய பண்டைத் தமிழகத்தைப் படம்பிடித்துக்காட்டுகிறது மருதக்கலி. ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதநிலத்தின் உரிப்பொருளாய் அமைந்ததென்ற தொல்காப்பிய நெறிப்படுத்துதலுக்குக் காரணமே உழவுத் தொழிலால் உயர்ந்து நின்ற அந்த மக்களின் வளமான வாழ்க்கை முறையில் நிலவிய பண்பாடுதான். அத்தகைய மருதக்கலியில் இருந்து ஒரு பாடலையும் அது தருகின்ற காட்சியையும் சுவைத்துப் பார்ப்போம்.
இருமனம் கலந்துää திருமணம் புரிந்து இல்லறம் நடாத்திவருகிறார்கள் தலைவனும் தலைவியும். வருடங்கள் சில கடக்கின்றன. தலைவனின் மனதில் சபலம் பிறக்கின்றது. தலைவியோடு அன்பாகவே இருந்தாலும்ää பரத்தையர் உறவையும் அவனது உள்ளம் நாடுகின்றது. ஒருநாள் தலைவிக்குத் தெரியாமல் பரத்தையரிடம் சென்றுவிடுகின்றான். அவர்களோடு உறவாடி மகிழ்கின்றான். மீண்டும் மீண்டும் அங்கே செல்லவேண்டும் என்ற வேட்கை அவனை வாட்டுகின்றது. அதனால் அந்த உறவினைத் தொடர்கிறான். ஒருநாள் இந்த விடயம் தலைவிக்கு எப்படியோ தெரியவருகின்றது. அவள் துக்கத்தால் துடித்துப் போகிறாள். கோபத்தால் கொதித்துப் போகின்றாள். தலைவனின் தேர்வருகின்ற சத்தம் கேட்கிறது. கண்கள் சிவக்க. உதடுகள் துடிதுடிக்க அவனது வருகைக்காகக் அவள் காத்திருக்கிறாள். தப்பான வழியில் இன்பம் அனுபவித்தவிட்டுத் திரும்பிய தலைவன் இப்போது தேரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் வருகின்றான். தலைவி வார்த்தைகளால் அவனைச் சாடுகின்றாள். இதோ பாடல்:
“பொய்கைப்பூப் புதிது உண்ட வரிவண்டு கழிப்பூத்த
நெய்தல் தாது அமர்ந்து ஆடிப் பாசடைச் சேப்பினுள்
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை
மைதபு கிளர் கொட்டை மாண்பதிப் படர்தரூஉம்
கொய்குழை அகைகாஞ்சித் துரை அணி நல் ஊர!
‘அன்பிலன், அறனிலன், எனப்படான்’ என ஏத்தி
நின்புகழ் பலபாடும் பாணனும் ஏமுற்றான்
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்த உண்டாங்கு, அளி இன்மை
கண்டும், நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்
முன்பகல் தலைக்கூடி, நண்பகல் அவள் நீத்துப்
பின்பகல் பிறர்த்தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்
எனவாங்கு –
கிண்கிணி மணித்தாரோடு ஒலித்து ஆர்ப்ப
ஒண்தொடிப் பேரமர்க்கண்ணார்க்கும் படுவலை இது என
ஊரவர் உடன்நகத் திரிதரும்
தேர் ஏமுற்றன்று நின்னினும் பெரிதே.”
(கலித்தொகை. மருதத்திணை. பாடல்: 9. பாடியவர்: மருதன் இளநாகனார்)
வண்டு ஒன்று பொய்கையில் பூத்த மலரின் புதிய தேனை உண்ணும். பின்னர் நெய்தல் மலருக்குச் சென்று அதன் மீது அமர்ந்து தேனுண்ணும். அதற்குப் பிறகு வயலிலே மலர்ந்திருக்கும் தாமரை மலரிலே வந்து அமர்ந்துகொள்ளும். அவ்வாறு ஒவ்வொரு இடமாக மாறிமாறிச் சென்று தேனைச் சுவைத்து மகிழும். அத்தகைய வண்டைப்போல உள்ளவனே! வளம்நிறைந்த காஞ்சித்துறையை உடைய ஊரைச் சேர்ந்தவனே கேட்பாயாக! அன்பில்லாதவன் அறம் இல்லாதவன் என்றெல்லாம் ஒருக்காலமும் சொல்லப்படாதவன் நீ என்று உன்புகழைப் பாடித் திரிகின்றானே பாணன்ää அவன் பைத்தியம் பிடித்தவன். உயிரைக்கொல்லும் நஞ்சு என்று தெரிந்தும் அதனை உண்பவர்களைப்போல நீ இரக்கமில்லாதவன் என்று தெரிந்திருந்தும் உனது பேச்சை நம்புகின்ற பெண்களும் பைத்தியம் பிடித்தவர்கள். முற்பகலில் ஒருத்தியுடன் கூடி இன்புற்றுப் பின் நண்பகலில் அவளை விட்டு நீங்கி வேறிடம் சென்றுவிட்டுப் பிற்பகலில் மற்றொருத்தியைத் தேடுகின்ற நீயும் பைத்தியம் பிடித்தவனாகிவிட்டாய். விலைமாதரை வீசிப் பிடிக்கின்ற வலை என்று உனது தேரை ஊரவர்கள் பரிகசித்துப் பேசுகிறார்கள். அத்தகைய தேருக்குப் பாகனாக இருப்பவன் உன்னையும் விடப் பெரிய பைத்தியகாரன். (என்று தலைவனைப் பார்த்துத் தலைவி கோபத்துடன் கூறுவதாக இந்தப்பாடல் அமைந்தள்ளது)
தவறுகண்டவிடத்துத் தலைவனைத் தட்டிக்கேட்கவும் துணிவுடன் எதிர்த்துப் பேசவும்கூடிய அளவுக்குப் பண்டைத்தமிழ்ப் பெண்கள் சமத்துவ உரிமையுடன் விளங்கினார்கள் என்பதையும் ஆணாதிக்கத்திற்குட்பட்ட அடிமை வாழ்வு அன்றைய பெண்களுக்கு இருந்ததில்லை என்பதையும் இது போன்ற பாடல்களின்மூலம் அறியமுடிகின்றது.
No comments:
Post a Comment