மெல்பன் சந்திப்பு - ரஸஞானி

.
மெல்பன்   சந்திப்பில்  பாடசாலைத்தமிழ் - பத்திரிகைத்தமிழ்  -  படைப்பிலக்கியத்தமிழ் 

புகலிடத்தில்  தமிழ்  கற்கும்  எம்மவர்  பிள்ளைகள், தாயகத்தில்    சர்வதேச  பாடசாலைகளில்  ஆங்கிலம் கற்கும்    எம்மவர்  பிள்ளைகள்.
பெற்றோர்  -  பிள்ளைகள்  சஞ்சரிக்கும்   வேறுபட்ட  மொழிக்கல்வி  உலகம்

                                                                                 
" பாடசாலைத்தமிழ்   மொழி  அறிமுகத்தையும்  மொழி  அறிவையும் தரும்.    பத்திரிகைத்தமிழ்  பாடசாலையில்  பெற்ற  அறிவிலிருந்து செய்தியை  கிரகிக்க  உதவும்.   படைப்பிலக்கியத்தமிழ்  உணர்வுகளை வெளிப்படுத்தும்.    இவ்வாறு  மொழியானது   மாணவர்களிடமும் வாசகர்களிடமும்     இலக்கிய சுவைஞர்களிடமும் எடுத்துச்செல்லப்படுகிறது." -    என்று  கடந்த  சனிக்கிழமை   24  ஆம்   திகதி  அவுஸ்திரேலியாவில் மெல்பனில்    நடந்த  கலந்துரையாடல்  சந்திப்பில்  மூத்த  இலக்கிய திறனாய்வாளர்   திரு. வன்னியகுலம்    உரையாற்றுகையில் தெரிவித்தார்.
பாடசாலைத்தமிழ்  -  பத்திரிகை   ஊடகத்தமிழ் -   படைப்பிலக்கியத்தமிழ்   என்னும்    தலைப்பில்  மெல்பன்  கலை, இலக்கியவாதிகள்    மற்றும்  தமிழ்   ஆசிரியர்கள்  சிலரால் ஒழுங்குசெய்யப்பட்ட  கலந்துரையாடல்    சந்திப்பு   நிகழ்வு    எழுத்தாளர்    லெ.முருகபூபதியின்   தலைமையில்   மெல்பனில் மோர்வல்   என்னும்    இடத்தில்    அமைந்த    திறந்தவெளிப்பூங்காவில் நடைபெற்றது.
திரு.வன்னியகுலம்    அவுஸ்திரேலியாவில்    மெல்பனுக்கு வருகைதந்திருந்ததை    முன்னிட்டு    அவரை   வரவேற்று அவருடனான    சந்திப்பு    கலந்துரையாடல்   ஒழுங்கு   செய்யப்பட்டது.
வன்னியகுலம் ,  யாழ். பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப்பட்டத்திற்காக  ஈழத்துப்புனைகதைகளிற்  பேச்சு வழக்கு   என்னும்    தலைப்பில்    ஆய்வுசெய்தவர்.    இலக்கியத்திற்கும் மொழிக்குமுள்ள    தொடர்பு  பேச்சு மொழியின்    முக்கியத்துவம், ஈழத்துப்    பேச்சுவழக்கின்   பொதுப்பண்புகள்,    அவை தமிழகப்பேச்சுவழக்குடன்    வேறுபடும்    தன்மைகள்   பற்றியெல்லாம் ஆய்வுசெய்திருப்பவர்.


அத்துடன்  புனைகதை  இலக்கிய  விமர்சனம்  என்ற   நூலையும் (2001)    எழுதியிருப்பவர்.   ஒன்றிணைந்த  வட - கிழக்கு  மாகாண சபையில்    ஊடகச்செயலாளராகவும் -  பின்னர்  தலைநகரில் ரூபவாஹினி    ஒளிபரப்பு  கூட்டுத்தாபனத்தில்  தமிழ்ச்சேவை பணிப்பாளராகவும்   -   வீரகேசரியில்   செய்தி    ஆசிரியராகவும் பணியாற்றியிருப்பவர்.



மோர்வல்    பூங்காவில்  நடந்த  இச்சந்திப்பு  கலந்துரையாடலில் மெல்பனில்  தமிழ்ப்பாடசலைகளில்  பணியாற்றும்  சில ஆசிரியர்களும்   இங்கு  வதியும்  படைப்பிலக்கியவாதிகளும் கலந்துகொண்டனர்.
தற்பொழுது   இங்கு  கோடைகாலம்  என்பதனால்  திறந்தவெளிப்பூங்கா  நிகழ்வு   சற்று   வித்தியாசமாகவும் அமைந்திருந்தது.    நீண்ட    நீரோடைக்கு    அருகில்   மரங்கள்  - செடி கொடிகள்   -  மலர்களுடன்   இயற்கை    எழில் மிக்க   புல்வெளிப் பூங்காவில்  (Morwell  Immigration  Park)  மதியபோசன  விருந்துடன்   ஆரம்பமான  இக்கலந்துரையாடலில்  வன்னியகுலம் மேலும்    உரையாற்றுகையில்  தெரிவித்ததாவது:-
" ஒவ்வொரு  மாணவரும்   பாடசாலையில்  கற்கும்பொழுது ஆசிரியர்களிடம்    பெற்றுக்கொள்ளும்  அறிவானது,  அவர்களின் பாடத்திட்டத்திற்கு    அமைவாகவே    இருக்கும்.    பாடத்திட்டங்களை தயாரிப்பவர்களும்     ஆசிரியர்களே.   மொழியின்  இலக்கணம்  அங்கு முக்கியத்துவம்    பெறும்.     மாணவர்கள்  பாடல்களை   மனனம் செய்வர்.    தெளிவான  உச்சரிப்பு  அங்கே   அவர்களிடம் எதிர்பார்க்கப்படும்.    கட்டுரைகள்  எழுதுவார்கள்.   அனைத்தும்    ஆசிரிய   வழிகாட்டுதலுடன்   நிகழும்.
இம்மாணவர்   தமது  கல்வியின்போதும்  கல்வியை நிறைவுசெய்துகொண்டபின்னரும்    பத்திரிகைகளை படிக்கத்தொடங்கும்  பொழுது    அல்லது    வானொலியில் தொலைக்காட்சியில்    செய்தியை   கேட்கும்பொழுது  அங்கே  வேறு ஒருவகையான  தமிழ்  உரைநடைக்கு  பரிச்சயமாகின்றார்.
அதே  மாணவர்  ஒரு  சிறுகதையை   அல்லது  கவிதையை -  நாவலை    படிக்க  நேரும்பொழுது  வேறுபட்ட  மொழிப்பிரயோகத்தை காண்பார்.    எப்படியோ   மொழியானது  இவ்வாறு  இடத்துக்கு தக்கவாறு    உரைநடையில்  மாறுதல்களை   தந்துகொண்டே   இருக்கும்.



பத்திரிகைத்தமிழ்    செய்திக்கு  முக்கியத்துவம்  கொடுப்பது.  அதனை பாடசாலை    கட்டுரைத்தமிழில்  தரமுடியாது.   வாசகனை   ஆர்வத்தில் ஆழ்த்தக்கூடியவாறு   செய்தியின்  தலைப்பு  உருவாகும்.   செய்தியின்   உள்ளே  வாசகனை   அழைத்துச்செல்லும்  உத்திதான்  அங்கே    முக்கியத்துவம்    பெறும்.
படைப்பிலக்கியத்தில்  ஒரு  பாத்திரம்  உரையாடும்பொழுது  அதன் இயல்புகள்   - சுற்றாடல் -  பேச்சுவழக்கு   என்பன   இன்றியமையாதவை.    அங்கு  பாத்திரங்களின்  பேச்சுவழக்கில் உணர்வுகள்   வெளிப்படும்.   உணர்வுகளே   பாத்திரங்களை முழுமைப்படுத்தும்;.
 நாம்  மாணவர்களாக  இருந்த  காலத்தில்  அறிஞர் மு. வரதராசனின் நூல்களை    விரும்பிப்படித்தோம்.   ஆனால்,  இன்று   அவ்வாறு   எம்மால்  படிக்க  முடியுமா...?
இலங்கையில்  இலங்கையர்கோன்  முதல்  பல  படைப்பாளிகள் மனிதர்களின்  உணர்வுகளுக்குத்தான்  முக்கியத்துவம்  கொடுத்து எழுதினார்கள்.    ஒரு  படைப்பாளிதான்  தனது  கதா  மாந்தரை   தெரிவு செய்கிறார்.    அவ்வாறு  தெரிவுசெய்யும்  பொழுது  அவை   உரையாடும்    தமிழை   தான்   பாடசலையில்  கற்ற  கட்டுரைத்தமிழ் போன்று   எழுத  முடியுமா...?  அப்படி  எழுதினால்  உங்களால்   அதனை வாசிக்கத்தான்   முடியுமா...?  இவ்வாறு  மொழியானது   ஒரு  மனிதனின்    பால்ய  காலத்திலிருந்து  அவன்  முதுமையடையும் வரையில்   பல்வேறு  கோலம்  கொண்டு  விடுகிறது.
திரு. வன்னியகுலம்  தமது  இளமைக்காலத்தில்  ஆசிரியர்களிடம் பெற்ற   தமிழ்  அறிவையும்  பின்னர்,  பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட   சிந்தனையையும்,  ஊடகத்துறையிலும் திறனாய்விலும்   பெற்றுக்கொண்ட  அனுவத்தையும்  சுவாரஸ்யமாக வெளிப்படுத்தினார்.
கலந்துரையாடலில்  பங்கேற்றவர்கள் -  புகலிடத்தில்   தமது பிள்ளைகளிடம்    தமிழை   தக்கவைத்துக்கொள்ள  மேற்கொள்ளும் பகீரதப்பிரயத்தனங்களையும்  தெரிவித்தனர்.
அவுஸ்திரேலியாவில்    பல்கலைக்கழக  பிரவேசப்பரீட்சையில்  தமிழ் மொழியையும்    ஒரு  பாடமாகக்கற்று  தேர்ச்சியடைந்து  மேலதிகப் புள்ளிகள்   பெறும்  வாய்ப்பு  இருந்தாலும் -  நடன  அரங்கேற்றத்திற்கு தயாராகும்   ஒரு  பிள்ளையைப்போன்று  கடினமாக  உழைத்து  தமிழை   ஆர்வமுடன்  கற்றுவிட்டு -  தனது  பல்கலைக்கழக  பிரவேச மேலதிக    புள்ளிகள்  கிடைத்த  திருப்தியுடன்    ஒதுங்கிவிடுகின்றன. பின்னர் -  அதன்  அன்றாட  வாழ்வில்  தமிழ்  மொழியின்  பயன்பாடு குறைந்துவிடுகிறது   எனச்  சுட்டிக்காண்பிக்கப்பட்டது.
புகலிடத்திற்கு   வந்த  மற்றும்  பிறந்த   தமிழ்க்குழந்தைகளும் புகலிடத்தில்     வீட்டில்  தமிழ்பேசவேண்டும்   என்ற  மனோபாவம் பெற்றவர்களிடம்    இருப்பதனால்  அவர்களை   வார  விடுமுறை நாட்களில்    தமிழ்ப்பாடசாலைகளுக்கு  அனுப்புகிறார்கள்.   விடுமுறை காலத்தில்  தாயகம்  செல்லும்  பொழுது   - ஊரில்   இருக்கும்   பாட்டா, பாட்டியிடமும்    மற்றும்  தமது  உறவினர்களிடமும்  அவர்கள் தமிழில்    பேசவேண்டும்  என்றும்  மூத்ததலைமுறையினர் விரும்புகின்றனர்.
இது   ஒருபுறமிருக்க  இலங்கையிலே   இன்று  கல்வி  உலகம்  வேறு ஒரு   திசையில்  திரும்பிவிட்டது.   அங்கே  வசதியுள்ள தமிழ்க்குடும்பங்கள்   தமது  பிள்ளைகள்  ஆங்கிலத்தில்  நல்ல  தேர்ச்சி    பெறவேண்டும்  என்பதற்காக  சர்வதேச  பாடசலைகளுக்கு அதிகம்   செலவழித்து  தமது  பிள்ளைகளை  அனுப்புகின்றார்கள். அங்கே   அவர்கள்  பாடசாலை  மொழியாக  ஆங்கிலத்தையே கற்பதனால்   தமிழையும்  தங்கள்   சமயத்தையும்   மறந்துவிடும் அபாயம்   தோன்றும்  எனக்கருதி  மாலையில்    அல்லது  சனி -ஞாயிறு  விடுமுறை   நாட்களில்  தனியாரிடம்  தமிழ்  - சமயம் முதலான   பாடங்களை   கற்பிக்க  அனுப்புகின்றனர்.
" ஏன்   அப்படி...? "  எனக்கேட்டால்,    விடுமுறை  காலங்களில் அவுஸ்திரேலியா  , கனடா,   அமெரிக்கா  மற்றும்  ஐரோப்பிய நாடுகளிலிருந்து   வரும்   தமது  உறவினர்களின்   பிள்ளைகளுடன் ஈடுகொடுத்து    உரையாடுவதற்காக  ஆங்கிலத்தில்  பேசுவதற்கு பயிற்சி    பெறுவதற்கு   சர்வதேச  பாடசாலைக்கு  அனுப்பினாலும் -- அதனால்   தாய்த்தமிழை   மறந்துவிடாதிருக்க   பிரத்தியேக  தமிழ் வகுப்புகளுக்கு    அனுப்பி  தமிழ்  சொல்லிக்கொடுக்கவேண்டிய   நிர்ப்பந்தம்    தோன்றியிருப்பதாகவும்   சொல்லப்படுகிறது.
சுவாரஸ்யமான   முரண்நகையை   புகலிடத்திலும்  தாயகத்திலும்  இவ்வாறு    காண   முடிகிறது.
புகலிடத்தில்     பிள்ளைகளுக்கு  தமிழ்  தேவை.   தமிழை  கற்றாலும் பேசுவது    என்னவோ   ஆங்கிலத்தில்.   இலங்கையில் தமிழைக்கற்றாலும்   வெளிநாடுகளிலிருந்து  வரும்  உறவினர் பிள்ளைகளுக்கு   ஈடுகொடுக்குமாற்போன்று   ஆங்கிலம்   பேச வேண்டும்    என்ற  எதிர்பார்ப்பு  தாயகத்து  வசதி  படைத்த பெற்றோருக்கு.
இதிலிருந்து    தெளிவாகும்  உண்மை:   பெற்றவர்கள்  ஒரு   உலகத்தில் பிள்ளைகள்    வேறு   ஒரு    உலகத்தில்.
இந்த  சுவாரஸ்யம்  குறித்து  இச்சந்திப்பில்  உரையாடப்பட்டபொழுது இதில்   கலந்துகொண்ட  இலங்கையில்   நீர்கொழும்பில்  ஐந்தாம் வகுப்பு  புலமைப்பரிசில்    பரீட்சைக்குத்   தோற்றும்   மாணவர்களுக்கு விசேட    பயிற்சிகளை   வழங்குபவரும்  அங்கே  சமயம்  கற்பிக்க இயங்கும்  அறநெறிப்பாடசாலையின்     அதிபரும் சர்வதேசப்பாடசாலையில்    ஆங்கிலத்தில்    கல்வி    கற்கும் தமிழ்ப்பிள்ளைகளுக்கு     பிரத்தியேகமாக    தமிழ்   கற்பிக்கும் ஆசிரியையுமான     திருமதி  பரிமளஜெயந்தி  நவரட்ணம் - தன்னிடம் கற்க   வரும்   மாணவர்களுக்கு  தமிழ்  கற்பிக்கத்தரப்பட்டுள்ள பாடத்திட்டத்திற்கு  அமைவாகவே    தமிழை    சொல்லிக்கொடுக்க நேர்கையில்    ஏற்பட்ட  முரண்நகை   பற்றி  குறிப்பிட்டார்.
ஒரு   வகுப்பில்  தண்ணீரின்   மறுபெயர்   பற்றி  சொல்லிக்கொடுத்தோம்.
தண்ணீர்  -   நீர்
மற்றும்    ஒரு  வகுப்பில்  பழங்களின்  பெயர்களை சொல்லிக்கொடுத்தோம்.    மாம்பழம்,    தோடம் பழம்,    வாழைப்பழம் - பலாப்பழம்   -   அப்பிள் பழம் -    திராட்சைப்பழம்.
பிள்ளைகள்    எழுதிப்பழகினார்கள்.   பின்னர்  அடுத்த  வகுப்பில் "  நீர் விரும்பும்   பழங்கள்  யாவை...? "   என்பதை    எழுதுங்கள் எனச்சொன்னபொழுது  -  அந்தப்பிள்ளைகள்    திரு  திருவென விழித்தன.    எதுவும்    எழுதவில்லை.    புரிந்துகொள்ள   முடியாத மௌனம்.    ஒரு  பிள்ளை  எழுந்து கேட்டது,
" ரீச்சர் ....நீர்... பழங்களை விரும்புமா...? "
சமய   வகுப்பில்  ராஜராஜ  சோழன்  பல  கோயில்களை கட்டுவித்தான்    எனச்சொல்லிக்கொடுத்து    எழுதச்சொன்னபொழுது ராஜ ராஜசோழன்   கோயில்களை   கட்டிவித்தான் -  என்று எழுதினார்கள்.    வித்தான்   செய்த    விபரீதம்   அப்படி  இருக்கிறது.
தற்காலத்தில்   வரும்  தென்னிந்திய  தமிழ்த்திரைப்படங்களில்  தமிழ் மொழி  படும் பாடு பற்றியும்   சிலர்  கருத்து   தெரிவித்தனர். இலங்கையில்    சோறுக்கு  சாதம்    என்றும்    பொருள்    இருக்கிறது. ஆனால் - தமிழக  பேச்சுவழக்கில்  சோறு  Rice   ஆகிவிட்டது.
ஒரு   திரைப்படத்தில்  வந்த  காட்சியில்  பந்தியில்  அமர்ந்திருந்தவர் தனக்கு  Rice  வேண்டும்   என்று   பல   தடவை  கேட்டதும்,  அவருக்கு அருகில்   அமர்ந்திருந்த  ஒரு  தமிழ்மொழிப்பற்றாளர்  எழுந்து சென்று   அரிசியை  (Rice ) கொண்டு  வந்து  அவரது   சாப்பாட்டு இலையில்    கொட்டினாராம்.
மொழியின்    பயன்பாட்டிலிருக்கும்  சுவாரஸ்யங்கள்  குறித்த கலந்துரையாடல்    கலகலப்பாகியது.
இச்சந்திப்பில்  எழுத்தாளர்கள்  ஆவூரான்  சந்திரன்,   கிருஷ்ணமூர்த்தி இலங்கையில்   சுடரொளி  பத்திரிகையில்  ஊடகவியலாளராக பணியாற்றிய    பிரசாந்த்   மற்றும்  இலக்கிய  ஆர்வலர்  முன்னாள் மரபு  இலக்கிய  இதழ்    ஆசிரியர்   விமல்  அரவிந்தன்,    தமிழ் ஆசிரியர்கள்  செல்வி  கமலா  வேலுப்பிள்ளை  -  திருமதிகள்  மாலதி  முருகபூபதி,   ராதா  அரவிந்தன்,  பாரதிபள்ளி    வெளியிட்ட    பாப்பா பாரதி   ஒளிப்படக்காட்சி  தொகுப்புகளின்    ஒளிப்பதிவாளர்    கிருஸ்ணமூர்த்தி    உட்பட    கலை, இலக்கிய    ஆர்வலர்களும்    கலந்துகொண்டனர். தமிழ்ப்பாடசலைகளுக்கு    செல்லும்    பிள்ளைகளும்  கலந்துரையாடலில்  பங்கேற்றனர்.
-




No comments: