விழுதல் என்பது எழுகையே" - பகுதி 35 எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண்
தொடர்கிறது பகுதி 35

    படிப்பிலே இருவரது கவனமும் இருந்தாலும் இருவரும் தனிமையில் சந்தித்தித்து சிரித்து மகிழ்வதையும் விட்டுவிடவில்லை.சீலனின் காதல் பற்றி தாய்க்கு ஒன்றுமே தெரியாது.ஆனால் சீலனின் தங்கைக்கு மட்டும் ஓரளவு தெரியும்.என்றாலும் அவளும் தாயிடம் இது பற்றிச் சொல்லாமல் இருந்தது சீலனுக்கு நிம்மதியாக இருந்தது.காதல் இப்பவே வந்துவிட்டால் படிப்பு என்னாவது... லட்சியம் என்னாவது... என்று தாய் கவலைப் பட்டுவிடுவார். அதனால் இந்தக்காதல் தாய்க்குத் தெரியவரக் கூடாது என்பதில் சீலன் மிகவும் அவதானமாகவே இருந்தான்.இதனால் கலாவை வெளியில் கூட்டிப் போவதோ அல்லது படத்துக்குக் கூட்டிப்போவது .... எதையும் சீலன் செய்தது கிடையாது. தனிமையில் எங்காவது கதைப்பதும் சிரிப்பதுமே அவனது காதலாக இருந்தது. அதனால் தாய்க்குக் கடைசிவரையும் தனது காதலைக் காட்டிக் கொள்ளாமலே தப்பிவிட்டான் சீலன்.
    தேவையில்லாமல் பிடிபட்டதும் சிறைக்குச் சென்றதும் மருத்துவப்படிப்பு கனவாகிப் போனதும் தாய்பட்ட பாடுகளும் வெளிநாடுவந்தால் விடிவு கிடைக் கும் என்று கனவில் மிதந்ததும்...... யாவும் இப்பொழுது சீலனின் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்ததனது.கதிரையில் இருந்தவன் எந்தவித சலனங்களும் இல்லாமல் வெறித்துப் பார்த்தபடி இருந்தான்.
      .... என்ன சீலா .. இப்ப என்ன நடந்துவிட்டது என்று பேயறைஞ்சது மாதிரி இருக்கிறாய் !உனக்கு என்ன தூக்குத் தண்டனையா தந்திருக்கிறாங்கள்? இது எல்லாம் இங்கு வெரி சிம்பிள் ! தேவையில்லாமல் கவலைப்படாதே. நான் உன்னைக் கண்டதே கூட உனக்குக் கொஞ்ஞமேனும் அதிர்ஷ்டம் இருக்கிற படியால என்று எண்ணு ! நானில்லாமல் வேறுயாராவது உனக்கு மொழி பெயர்க்க வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று .. ஒருக்கால் யோசித் துப்பாரு. எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளு.


         சாந்தனது வார்த்தைகள் எதுவுமே சீலனின் காதுகளில் விழுந்ததாகத் தெரியவில்லை.அவனுக்கு... தான் இனி என்ன செய்யப் போகிறேன் என்பதே மனதில் எழுந்து நின்ற பெரும் பிரச்சினையாக காணப்பட்டது. சீலனின் மன ஓட்டத்தை ஓரளவு உணர்ந்துகொண்ட படியால் சாந்தன் அவனைச் சமாதானப் படுத்தி எப்படியும் பழைய நிலைக்குக் கொண்டுவரப் பெரும் பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தான்.
      திடீரெனக் கதிரையை விட்டு எழும்பிய சீலன் ... மச்சான் எனக்கு ஒருக்கா போன் கதைக்க உதவிசெய்வியா என்று பதட்டத்துடன் கேட்டான். சீலன் மெளனம் கலைந்து பேசியதே சாந்தனுக்கு ஒருவித திருப்பம் வந்தது போலக் காணப்பட்டது. ஆருக்குக் கதைக்கப் போறாய். உனக்கிட்ட நம்பர் எல்லாம் இருக்கோ என்று சாந்தன் கேட்டான்.அப்பொழுதுதான் சீலன் தனது பொக்கற்றைப் பார்க்கிறான். அதற்குள் நிறையப் பேப்பர்கள் இருந்தன.   நிலத்தில எல்லாத்தையும் கொட்டி ஒவ்வொன்றாக பார்த்தபடி நின்றான்.
      கொஞ்சநேரம் ஒன்றுமே பேசாமல் மீண்டும் வெறுத்துப் பார்த்தபடி நின்றான். என்னடா .. நம்பர் கிடைக்க வில்லையா? ஏனடா பழையபடி ஆகிவிட்டாய்? என்று சாந்தன் கேட்டதுதான் ..... சீலன் நிலத்தில் விழுந்து புரண்டு அழத்தொடங்கிவிட்டான். சாந்தனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சாந்தன் சீலனை தடவி .. மச்சான் என்னடா சின்னப் பிள்ளை மாதிரி அழுகிறாய். அழுதா எல்லாம் நடந்திடுமாடா? என்னடா பிரச்சினை சொல்லுடா? என்று சாந்தன் மிகவும் ஆதரவுடன் சீலனை ஆசுவாசப் படுத்தினான். மச்சான் அம்மாவின் ரெலிபோன் நம்பரைத் தொலைத்து விட்டேனடா! அங்க அவ என்ற பதிலுக்குக் எந்தநேரமும் காத்துக்  கொண்டிரு ப்பாவடா.அங்கயோ எல்லாரும் என்ர பதிலில தான் தங்கி இருக்கினம். இங்கே நானோ சிக்கலில.... என்னடா மச்சான் செய்யிறது ?
       சீலன்இஇஇ நீ ஒன்றுக்கும் கவலைப் படாதே. உனக்கிட்ட வேறு யாருடை நம்பர் இப்ப இருக்கு என்று பாரு. மற்றதைப் பிறகு பாப்பம். மச்சான் முதல் அழுகிறதை நிப்பாட்டிடா.அழுது ஒன்றும் ஆகப்போவதில்லை. நீ முதலில உன்னைத்தேற்றிக் கொள்ளடா. என்னால் முடிஞ்சளவுக்கு உனக்கு எல்லாத்தை யும் செய்து தருவன்.
      சாந்தனின் வார்த்தைகள் ஓரளவு சீலனை சுய நிணைவுக்குக் கொண்டு வந்தது.மீண்டிம் சீலன் கீழே கிடந்த பேப்பர்களை கிளறினான்.மச்சான் ஒரு நம்பர் கிடக்குது.ஆருடையநம்பர் என்று சாந்தன் கேட்டான். மச்சான் என்னைக் கைதூக்கிவிட்ட வரின் நம்பர்தாண்டா அதுஎன்று சொல்லி அந்த நம்பரை சாந்தனிடம் சீலன் கொடுத்தான்.
     ஆருடா இது? டேவிட் என்று இருக்கு. உன்னோட படிச்சவரா? அல்லாட்டி உன்ர ரீச்சரா ஃ என்று சாந்தன் கேள்விமேல் கேள்வியாய்  கேட்டான்.அவர்தா ண்டா நான் இங்க வாறதுக்கு முன்பு நல்ல நிலையில் இருக்கவும் எனக்குள் ஒரு நம்பிக்கை வரவும் பண்ணிய நல்ல மனிசனடா என்று சீலன் சொல்லி ..டேவிட்பற்றி பலவிஷயங்களை சாந்தனிடம் பகிர்ந்து கொண்டான்.
     டேவிட் என்றதும் சீலனின் முகத்தில் ஒருவித பிரகாசம் தென்பட்டதை சாந்தன் உடனே கவனித்துக் கொண்டான்.டேவிட் எப்படியும் நல்ல மனிசனாக இருக்கத்தான் வேண்டும் என்று சாந்தனும் மனத்திற்குள் எண்ணிக்கொண் டான்.
     மச்சான் ஒருகதவு மூடப்பட்டால் இன்னொருகதவு எப்படியும்திறக்கப் படும் என்பது உனக்குப் பொருந்தி இருக்கிறது.கடவுள் உனக்கு அப்பப்போ கஷ்டங் களைத்தந்தாலும் டேவிட் போன்றநல்ல மனிதர்களையும் காட்டியிருக்கிறார் என்றே நினக்கிறேன்.ஆனபடியால் மச்சான் உனக்கு இனி எல்லாம் நல்லபடி நடக்குமடா.கவலைப்படாதே. நான் இப்பவே நீ தந்த டேவிட்டின் நம்பருக்குப் போன் பண்ணுறன். அதற்குப் பிறகு நடப்பதைப் பார்ப்போம் என்று சொல்லி சாந்தன் டேவிட்டுக்குப் போன்செய்தான்.
        சீலன் கடவுளைப் பிரார்த்தித்தபடியே நின்றான். மச்சான்.... போன் அடிக்குதடா என்று சாந்தன் சொல்லியபடி சீலனிடம் போனைக்கொடுத்தான்.

    ( தொடரும் )
தொடர்ச்சி 36ஐ எழுதுபவர் ச.நித்தியானந்தன் ,இலங்கை

No comments: