படித்தோம் சொல்கிறோம் - முருகபூபதி

.
நீந்தவே  வேண்டிய  அகதிச்சுழியில்  நீந்திக்கொண்டிருக்கும் ஆத்மாக்களின்   ஓயாத   ஓலம்
கருணாகரமூர்த்தியின்  பெர்லின்   நினைவுகள்
    
                                              
வாழ்க்கை  ஒவ்வொருவருக்கும்  தரும்  அனுபவம்தான்  அவர்களுக்கு   வழங்கும்  புத்திக்கொள்முதல்.  வாழ்வு  அனுபவங்கள் அனைவருக்கும்   இருக்கும்.  ஆனால்,  அவற்றை  பதிவுசெய்து  தாம் பெற்ற   இன்பமும்  துன்பமும்  பெறுக  இவ்வையகம்  என  நினைத்து பரப்புபவர்கள்  பெரும்பாலும்   படைப்பாளிகள்தான்.
வாசிப்பு   மனிதர்களை   முழுமையாக்கும்  என்பார்கள்.  அதற்கு வித்திடுபவர்கள்   தமது  அனுபவங்களை  பதிவுசெய்யும் படைப்பாளிகள்தான்.
பெர்லின்  நினைவுகள்  நூல்   எனது  வசம்  வந்துசேர்ந்து  பல மாதங்களாகிவிட்டன.   இடையில்  கருணாகர மூர்த்தியும்  என்னுடன் மின்னஞ்சலில்    தொடர்புகொண்டிருந்தார்.  பல்வேறு  பணிகளுக்கு இடையில்   407   பக்கங்கள்கொண்ட    இந்நூலை  படித்து  முடிப்பதற்கு காலதாமதமாகியது.   
அண்மைக்காலங்களில்  நான்  படித்த  பல நூல்கள்  400   பக்கங் களுக்கு மேற்பட்டதாகவே   இருப்பதும்   தற்செயலானது.
நான்   அவுஸ்திரேலியாவில்  விக்ரோரியா  மாநிலத்தில் மெல்பனிலிருந்து     புறநகர்பகுதியான   Morwell  என்ற  பிரதேசத்தில்  கடந்த  சில  வருடங்களாக  வசிக்கின்றேன்.   மெல்பன்  மத்தியிலிருந்து    சுமார்  150   கிலோ   மீற்றர்  தொலைவு.    அடிக்கடி  ரயில்  பயணத்திலேயே   மெல்பன்  சென்று  திரும்புவதனால்   400   பக்க  நூல்களை   படிப்பதற்கும்  சந்தர்ப்பம்  கிடைத்திருக்கிறது. அத்துடன்  மடிக்கணினியில்  எழுதுவதற்கும் வாய்ப்புக்கிட்டியிருக்கிறது.
பெர்லின்   நினைவுகள்   நூலை  படித்துக்கொண்டு  பயணித்த சந்தர்ப்பங்களில்   அவ்வப்போது  நான்  எனக்குள்  சிரித்துக்கொண்டேன்.   சில  சமயங்களில்  அருகே  பயணிகள் இருப்பதையும்    கவனிக்காமல்  வாய்விட்டும்  சிரித்துவிட்டேன்.
ஒருநாள்   என்னருகே  இருந்த  பயணி   எனது  சிரிப்புக்கு  விளக்கமும் கேட்டார்.   பெர்லின்   நினைவுகள்   பற்றிச்சொன்னதும்,  அது ஆங்கிலத்தில்  இருக்கிறதா...? என்றார்.  
' இல்லை ' - என்றேன்.ஜெர்மனியில்  -  பெர்லினில்   வசிக்கும்  இந்த  நூலாசிரியர் ஜெர்மனியரா...?  என்று   மற்றுமொரு  கேள்வியையும்   தொடுத்தார்.
அதற்கும்   ' இல்லை '  என்றேன்.
அவர்  என்னை  வியப்போடு  பார்த்தார்.  நூலின்  பின்புற அட்டையிலிருக்கும்  கருணாகரமூர்த்தியின்  படத்தை   காண்பித்து அவர்   என்னைப்போன்று  இலங்கையர்.  ஜெர்மனியில்  முப்பது ஆண்டுகளுக்கும்  மேல்  வசிக்கிறார். -  என்று  மேலதிக  விளக்கம் கொடுத்தேன்.
அவருடன்   உரையாடல்  தொடர்ந்தமையினால்   அன்றைய பயணத்தில்  பெர்லின்  நினைவுகளை  தொடர்ந்து  படிக்க முடியாது போய்விட்டது.   அந்த   ரயில்  சினேகம்  ஜெர்மன்,  ஹிட்லர், உலகமயவாதம்,   உள்நாட்டு  யுத்தங்கள்  என்றெல்லாம்  நீடித்து திசை திரும்பியது.
கருணாகரமூர்த்தியின்  பெர்லின்  நினைவுகளும்  அவ்வாறே  தாயகம் - புலப்பெயர்வு  -  புகலிட  வாழ்வு -  அன்றாடத்தொழில் -  நாளாந்தம் தொழில்   ரீதியாக  சந்திக்கும்   மனிதர்கள்    குறிப்பாக   பால்வினை மாதர்கள்..... என்றெல்லாம்    எங்கெங்கோ திசை திரும்பிக்கொண்டிருந்தாலும்    கருணாகரமூர்த்தியின்  நோக்கத்தின் மையத்திலிருந்துதான்     சுழன்றுகொண்டு    எமது   சிந்தனையில் ஊடுறுவுகிறது.
வாசகனின்   சிந்தனையில்  ஊடுறுவும்  எழுத்து  அதனை   எழுதிய படைப்பாளிக்கு   மிகுந்த  வெற்றிதான்.
கருணாகரமூர்த்தியை  நான்  இதுவரையில்  நேரில்  பார்த்ததில்லை. சில  சந்தர்ப்பங்களில்  தொலைபேசியில்  மாத்திரம் பேசியிருக்கின்றேன்.   மின்னஞ்சல்  தொடர்பும்  இருந்திருக்கிறது. மின்னஞ்சல்   காலத்திற்கு  முன்னர்  கடிதத்தொடர்புகளும்   இருந்தன. அவரது   கடிதமும்   இணைந்த  எனது  கடிதங்கள்   என்ற  நூல்  2001 இல்   வெளியாகியிருக்கிறது.
கருணாகரமூர்த்தியும்  எனக்கு  மிகவும்  பிடித்தமான  படைப்பாளிதான்.   அவரது  அகதி  உருவாகும்  நேரம்  குறுநாவலை படித்தது  முதல்  அவரது  படைப்புகளை   சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம்  படித்துவருகின்றேன்.
அகதி  உருவாகும்  நேரம்  தமிழ்நாடு  கணையாழியின்  குறுநாவல் போட்டியில்  பரிசு பெற்றது.
அதனைப்படித்த   காலப்பகுதியில்   தினம்  தினம்  சிரித்தேன்.  அதனை மற்றவர்களுக்கும்    படிக்கக்கொடுத்தேன்.  அக்காலப்பகுதியில் அதனைப் படித்த   என்னைப்போன்ற  பலர்  அகதி  விண்ணப்பத்தை அனுப்பிவிட்டு  - வாழ்வைத்தொலைத்து   வதிவிட  உரிமைக்காக காத்திருந்தவர்கள்.

 அகதி  உருவாகும்  நேரம் -  கதை  மாந்தர்   எமக்கு நெருக்கமானவர்களாக   இருந்தார்கள்.  அன்று  அதனைப்படித்த  பலர் அவுஸ்திரேலியாவிலும்   ஏனைய  பல  சர்வதேச  நாடுகளிலும்  இன்று   நிரந்தர  வதிவிட  உரிமை   பெற்றிருப்பார்கள்.
கருணாகரமூர்த்தியின்    பெர்லின்  இரவுகள்   நூலும் படித்திருக்கின்றேன்.    அதன்   நீட்சியாக -  தொடர்ச்சியாக  இன்று  எமது    கரங்களில்   பெர்லின்   நினைவுகள்.
இந்த  நூலின்  தனித்தன்மை   அவரது  நடைதான்.  அங்கதம், கழிவிரக்கம்,   கோபம்,  கருணை,  சுற்றாடல்  சித்திரிப்பு...  இப்படி ஒவ்வொரு   பக்கமும்  வாசகரை   சலிப்பின்றி    நகர்த்திச்செல்கிறது.
வேலைக்குப்போவது,  பின்  சினிமா  பார்ப்பது,   கொஞ்சம்போல வாசிப்பது,   கொஞ்சம்  மது,  போஷனம்,  பின்  தூக்கம்  என்ற  சராசரி வாழ்க்கை   அவருக்கு  சலிப்பேற்றியதன்  விளைவு   இந்த  பெர்லின் நினைவுகள்.
ஆனால்  - அவரது    பதிவு   வாசகனுக்கு   சலிப்பைத்தராது.
நினைவுகள்  சாகாவரம்  பெற்றவை.    நாம்    எங்கு சென்றாலும் எம்மோடு   நிழலாக  தொடர்ந்து  வருபவை.   நினைவுகள்தான்  எமது மனச்சாட்சி.   எமக்கு  நீதியுரைக்கும்  நீதிபதியும்  நினைவுகள்தான். எம்மை   நாமே   சுயவிமர்சனம்  செய்துகொள்வதற்கு  உதவுவதும் நினைவுகள்தான்.
எல்லோருக்கும்   கடந்த  கால   நினைவுகள்  இருக்கின்றன.   ஆனால் எத்தனைபேர்   அவற்றை    இலக்கிய  நயத்துடன்  கலாபூர்வமாக சித்திரித்து   பதிவு செய்கிறார்கள்...?
படைப்பாளிகள்    மாத்திரமே  சிறுகதைகளாக  நாவலாக  கவிதையாக நனவிடை  தோயும்  எழுத்துக்களாக   கட்டுரைகளாக பதிவுசெய்கின்றனர்.
பெர்லின்  நினைவுகளை  வாசிக்கும்  ஒவ்வொரு  வாசகனும்  தன்னை -  தனது  வாழ்வை   அதிலிருந்தும்  தேடுவான்   என்றும் கருதுகின்றேன்.   வாசகனை  தன்னைத்தானே  தேடச்செய்யும் எழுத்துக்கும்    வலிமையுண்டு.
பொதுவாக    வாடகை  வாகனத்தை  டாக்சி  என்றுதான்   அழைப்போம்.   டாக்சி    என்ற    சொல்லை   தமிழரும்   ஆங்கிலேயரும் மட்டுமல்ல    பிறமொழி    இனத்தினரும்   பயன்படுத்துகிறார்கள். இந்நூலில்    அதற்கு    செந்தமிழில்   சீருந்து   என்ற   சொல்லை கருணாகரமூர்த்தி    அறிமுகப்படுத்தியிருக்கிறார்.    தமது    படைப்புகளில்   அவ்வாறான    புதிய    புதிய   சொற்களை அறிமுகப்படுத்தும்     பாங்கும்     அவருடைய   மற்றும்   ஒரு   சிறப்பு இயல்புதான்.
அழைப்பாழி,   குமுகாயத்தினர்,  புரிசுருளுருவில்,  நீர்த்தாரைகள், பயணவுறை,   நெகிழிக்கதிரை,   நெகிழித்தட்டு,  இப்படி  பல  சொற்கள் எமக்கு  அறிமுகமாகின்றன.
பெர்லினில்  பொலிஸ_க்கு  பொன்னம்பலம்   என்றும்    பச்சை   என்றும்   அங்கு   எமது   புகலிடத்தமிழர்களினால்   பெயர் சூட்டப்பட்டிருக்கும்    தகவலையும்   அறிகின்றோம்.
அவுஸ்திரேலியாவில்  எமது  தமிழர்கள்   பொலிஸை  பெரியப்பா என்பார்கள்.
கருணாகரமூர்த்தி   தாயகத்தை  விட்டு  வெளியேறும்  காட்சியும் சுவாரஸ்யமான   சித்திரிப்பு.  எம்மவர்  இறை  நம்பிக்கையை விட சோதிடத்திலும்   எண்சாத்திரத்திலும்  நம்பிக்கை   அதிகமுள்ளவர்கள் என்பதையும்  அங்கதச்சுவையுடன்  சொல்கிறார்.
அவர்   புறப்படு முன்னர்  தெல்லிப்பழை   துர்க்கையம்மனிடமும் வேண்டுதல்   விடுக்கிறார்.  ' எதுவேண்டு மென்றாலும்  செய்யாச்சி, என்னைத்திருப்பி  அனுப்பமட்டும்   விட்டிடாதே.... என்னால்  தாங்க முடியாது " எனச்சொல்லும்   அவருக்கு  அச்சமயம்  இரமபிரானும் நினைவுக்கு  வருகிறார்.  அதிர்ஷ்ட  விஞ்ஞானி   பண்டிட்  சேதுராமனும்  22  ஆம்  திகதிதான்   இராமபிரான் காட்டுக்குப்புறப்பட்டதாக  சொன்னதாகவும்,    ராமன்   காலத்தில் இங்கிலிஷ்    கலண்டர்    இருந்திருக்குமா...? என்றும்  கேலி   செய்கிறார்.
இது நான்   வாய்விட்டுச்சிரித்த   பந்திகளில்  (பக்கம் 34)  ஒன்று.
குடிவரவு  -  குடியகழ்வு   அதிகாரிகள்  இவரையும்  மற்றவர்களையும் தொடரூந்தில்  ஏற்றிவிட்டு  உங்களை   கவனமாக  மீண்டும் கொழும்புக்கு   அனுப்பிவைப்போம்  எனச்சொன்னதும்  இவருக்கு தெல்லிப்பழை   துர்க்கையம்மன்  ஆச்சி  நினைவுக்கு   வரவில்லை.


பெற்றதாய்தான்   வந்தார்.    ' அப்படித்திருப்பி   அனுப்பினாங்கள் என்றால்    மனதை   விட்டிடாதை    இருக்கிற   காணியை   விற்று அண்ணனின்    காசைக்கொடுத்திடலாம் " என்று  சொன்ன   தாய்தான் மனக்கண்ணில்    தோன்றியிருக்கிறார்.
அந்த வரிகளை    படித்தபொழுதும்    இதனை    எழுதும்பொழுதும்   எனது கண்கள்   பனித்தன.
அதுதான்   தாய்மை.    அந்தத்தாய்    இவரை    அனுப்பிவிட்டு வேண்டுதல்கள்    செய்திருப்பார்.   
அதன்   பலன்தான்   இன்று  நாம்   படிக்கும்   பெர்லின்  நினைவுகள்.
அந்நிய  நாடொன்றில்  புகலிடம்   என்பது    சொர்க்கலோகம்   அல்ல.
எம்மவர்கள்    சீவியத்துக்காக   வீதி   வீதியாக   அலைந்து   மாடிகளில்   ஏறி  இறங்கி  பத்திரிகை  விநியோகித்துவிட்டு  வந்து படுத்தால்  கால்கள்  விண் விண்ணென்று   உளைந்து  குத்தும்.   தூக்கம்   வராது.  நீங்கள்  எப்படியோ   தூங்க  முயலுகையில்  உங்கள் மூத்த   சகோதரியின்  மாப்பிள்ளையின்  தங்கச்சியின்   புருஷனின் சகோதரனின்   சகலன்  போன்   செய்து  எழுப்பி  ' ஒரு  இரண்டு (லட்ஷம்)   ரூபா   அனுப்படா  மச்சான்.... நம்மபாடு  படு  ரைற்றா இருக்கு "   என்று  திடுக்கிடுத்துகையில்   உங்கள்  முழங்கால் மூட்டுக்கள்    தேய்ந்து  கிறீச்சிட  ஆரம்பிக்கும்  ( பக்கம்  109) என்ற வரிகள்   பதச்சோறு.
அண்மையில்   ஒரு  கட்டுரை  படித்தேன்.  கனடாவில்  ஒரு  சகோதரி வீட்டிலிருந்து  இடியப்பம்  அவித்து விற்று   ஊருக்கு  பணம் அனுப்புகின்றாள்.   அங்கோ  ஊரில்  அவளது  சகோதரி  வீட்டிலே சமைக்காமல்   Take Away   உணவு   தருவிக்கிறாளாம்.
சொர்க்கமே   என்றாலும்  எம்  தாய்நாட்டைப்போல  வருமா...?  என்ற பாடல்  முரண்நகைதான்.
கருணாகரமூர்த்தியின்   அவதானச்சிறப்பியல்பும்  இந்த  நூலின் மதிப்பை   உயர்த்துகிறது.   அவரைக்கடக்கும்  ஒவ்வொரு கணங்களிலும்   ஏதோ   ஒரு  கதை  அல்லது  செய்தி  அவரிடம் உருவாகிறது.   படைப்பாளிக்கு  கூர்ந்த  அவதானம்  தேவை.  அது அவரிடம்   நிரம்பவும்  இருக்கிறது.
 ஜெர்மன்  மொழியில்  அவருக்கிருக்கும்  பரிச்சியம் அதனைப்புரிந்துகொள்வதிலிருக்கும்   சிரமங்களையும்   சொல்கிறது.
1999   இல்  ஜெர்மனிக்கு  நான்  சென்றபொழுது  எனது  உறவினரையே  தொடர்ந்தும்  வழித்துணைக்கு உடன்வைத்துக்கொண்டேன்.     ஃபிராங்பேர்ட்  -   கால்ஸ்ரூ  -  ஸ்டுட்கார்ட் -   பாஸல்    முதலான    இடங்களில்   சில  நாட்கள் நின்றபொழுது   அந்த  மொழிச்சிரமம்  தெரிந்தது.
 கருணாகரமூர்த்தி   அந்த  மொழியை   கற்றுத்தேர்ந்திருப்பதனால்  பல்வேறு   குண   இயல்புகள்  கொண்ட  மாந்தர்களை   தமது   சீருந்தில் ஏற்றி   இறக்கும்பொழுது   சாமர்த்தியமாக    இயங்குகிறார்.
அவர்  சந்திக்கும்  ஒவ்வொரு   பயணியிடமிருந்தும்  அவருக்கு  கதை கிடைக்கிறது.   அதனை   சுவாரஸ்யம்  குன்றாமல்  பதிவுசெய்யும் கலையும்   அவருக்குத்  தெரிகிறது.
 விநோத  நாம  வியாகரணங்கள் -  என்ற  அத்தியாயத்தில்  ஜெர்மன்  மொழிவழக்குகள்  பற்றி   விரிவாகவே   அலசுகிறார்.  அந்த மொழிமீது  அவருக்கு  காதல்  இருக்கிறதோ   இல்லையோ   ஆனால் அதனை    ஆழ்ந்து  கற்கவேண்டிய  தேவையும்  தொழில்  நிமித்தமும் அவருக்கு   இருக்கிறது.  அந்தத்தேவை   பெர்லின்   நினைவுகள்  நூலுக்கு  மூலதனமாகியிருக்கிறது.
கருணாகரமூர்த்தி  மேலைத்தேய   தரமான  திரைப்படங்களும் பார்க்கிறார்.   அதேசமயம்  தென்னிந்திய  மசாலா   படங்களும் ஹிந்திப்படங்களும்  தாராளமாகப்பார்க்கிறார்.  இந்த  நூலை எழுதும்பொழுது   பல  நடிகர் -  நடிகைகள்  அவரின்  நினவில்  வந்து வந்து   செல்கிறார்கள்.
கமல்ஹாசன்,   பாலையா,  நாகேஷ்,  செந்தில்,   வையாபுரி,  ஷோபனா, சி.கே. சரஸ்வதி,   ரஞ்சனி,    ஸ்ரீப்பிரியா,  ஐஸ்வர்யாராய்,  பிரியங்கா சோப்ரா,   திரிஷா,  மீரா  ஜாஸ்மின்,  அமலாபால்....  இப்படிப்பலர்.
பால்வினைப்பெண்கள்   பற்றிய  அத்தியாயங்கள்  அவர்கள்  குறித்து அனுதாபத்தையும்   ஏற்படுத்துகின்றது.   கருணாகரமூர்த்தியும் தி.ஜானகிராமன்   போன்று  சௌந்தர்ய  உபாசகர்தான்.   பெண்கள் பற்றிய   சித்திரிப்பில்  பல  சந்தர்ப்பங்களில்  ஜானகிராமனையும் விஞ்சுகிறார்.
சீருந்து  கட்டணத்தை   முழுமையாகச்செலுத்த  முடியாத பால்வினைப்பெண்கள்   படுக்கைக்கும்  வரவழைத்து  கடன் தீர்க்கப்பார்க்கிறார்கள்.   முத்தங்களை   பதிந்துவிட்டும்  வாடிக்கை   தேடி   ஓடிவிடுகிறார்கள்.  ஆண்வாசகர்களுக்கு  கிளுகிளுப்பூட்டுகிறார். ஆனால்  -  இவரோ    புனித  புத்தராகவே   நூல்  முழுவதும்  காட்சி  தந்து  நடமாடுகிறார்.
பாலியல்   தொழில்  நடக்கும்  இடங்கள்  சூதாட்ட  -  களியாட்ட விடுதிகள் -  மதுச்சாலைகள்   யாவும்  அங்கே   செல்லும் வாடிக்கையாளர்களுக்கு   மட்டுமல்ல  சீருந்து  சாரதியான    இவருக்கும்   அவர்களினால்   நல்ல  பரிச்சயம்.   அந்த இடங்களுக்கெல்லாம்   வாசகர்களையும்  உடன்   அழைத்துச்சென்று காண்பிக்கின்றார்.
அத்துடன்  நில்லாமல்  நூலின்  384  ஆம்   பக்கத்தில் -  இங்கே  இலவச பாலியல்   வகுப்புகள்  நடைபெறுகின்றன.  கால  நேர நிர்ணயங்களுக்கு   கீழ்வரும்  இலக்கத்துடன்  தொடர்பியற்றவும்  என எழுதிவிட்டு,   பன்னிரண்டு   இலக்கங்களை   தருகிறார்.
அந்த  இலக்கங்களை   நான்   இதில்  எழுதமாட்டேன்.   வாசகர்கள் நூலை   வாங்கிப்படித்து  தெரிந்துகொள்ளுங்கள்.
சமீபத்தில்   வெளிவந்த  பிரச்சினைக்குள்ளான  கத்தி   படத்திலும்   ஒரு தொலைபேசி  இலக்கம்    சொல்லப்பட்டு   உண்மையிலேயே  அது நடிகை    சமந்தாவின்    இலக்கம்தான்  என  நம்பிக்கொண்டு   பல பரதேசிகள்   தொலைபேசி    தொல்லையை   கொடுத்திருக்கிறார்கள். அந்த    இலக்கத்திற்குரிய    ஒரு   ஆண்மகன்    அதனால்   மன அழுத்தங்களுக்கு    ஆளானார்   என்ற   செய்தியை   சமீபத்தில் படித்தேன்.
இந்நூலில்   அரும்பொருள்    அகராதிக்கென்றே   இரண்டு   பக்கங்களை    தொடக்கத்தில்   ஒதுக்கியிருக்கிறார்   கருணாகரமூர்த்தி.
இந்நூலுக்கு   நான்  பெரிதும்    மதிக்கும்  நண்பர்   பேராசிரியர் நுஃமான்    எழுதியிருக்கும்   சில  அறிமுகக்குறிப்புகளில்,
 ' இதுவரைக்கும்   பெர்லினுக்குப்போகும்   வாய்ப்பற்ற  என்போன்ற ஏராளமான   தமிழ்  வாசகர்களுக்கு  பெர்லினின்   வளத்தையும் வனப்பையும்   மட்டுமன்றி  அந்த  வாழ்வின்  பல்வேறு அம்சங்களையும்   கருணாகரமூர்த்தியின்    பார்வையின்  ஊடாக அறிந்துகொள்ள   இந்நூல்  உதவுகிறது."   எனத்தெரிவித்துள்ளார்.
விரைவில்   வெளிவரவுள்ள  கருணாகரமூர்த்தியின்   அனந்தியின் டயறி   புதினத்திற்கு  மூத்த  இலக்கிய  விமர்சகர்  வெங்கட் சாமிநாதன்  அளித்துள்ள  முன்னுரையில்   'பெர்லினும்  தமிழ் இலக்கியத்துள்    வந்தாச்சு"   என்று    குறிப்பிட்டுள்ளார்.
இலக்கியக்கோட்பாடுகளிலும்  விமர்சனத்திலும்  எதிரும்  புதிருமாக இருப்பவர்கள்  நுஃமானும்  வெங்கட்  சாமிநாதனும்.
ஆனால் -  இவர்கள்  இருவரும்  கருணாகரமூர்த்தியின்  படைப்புகள் குறித்து   இவ்வாறு  ஒத்தகருத்துக்களைக்கொண்டிருப்பதும் கருணாகரமூர்த்திக்கு   கிடைத்த  பேறுதான்.
பெர்லின்  நினைவுகளையும்  எமக்குத்தந்த  கருணாகரமூர்த்திக்கும் இந்த  அரிய  நூலை   பதிப்பித்து  வெளியிட்ட  தமிழ்நாடு  காலச்சுவடு  பதிப்பகத்திற்கும்  வாழ்த்துக்கள்.   கருணாகரமூர்த்தியின் பெர்லின்  நினைவுகள்  இன்னமும்  முற்றுப்பெறவில்லை என்பதையே    இந்த  நூல்  உணர்த்துகின்றது.
ஏனென்றால்  அவரே  சொல்லியிருக்கும்  கவிதை   வரிகள்  இதோ:
வேலையிலேயே   கழிகின்றன   பகற்பொழுதுகள்
வேலைக்கான   தயார்ப்படுத்தலில்  நம்  இரவுகள்
மாற்றுப்போக்கின்றிக்   குதிக்க  நேர்ந்ததால்
நீந்தவே    வேண்டிய    அகதிச்சுழி   இது.
---0---
letchumananm@gmail.com


  

No comments: