தொல்காப்பியரின் சித்தாந்தச் சிந்தனை

.


சித்தாந்தரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம்

பழந்தமிழ் நூலான தொல்காப்பியம் இலக்கியத்திற்கு இலக்கணம் கூறும் பெருநூல் என்னும் பெருமை பெற்றது. ஆயினும், மொழி குறித்த இலக்கணம் கூறும் நூலாக மட்டும் இது அமையவில்லை.  தமிழ் மக்களின் வாழ்வியல் குறித்த நூலாகவும் அமைந்துள்ளது.

இந்நூலிலிருந்து அன்றைய தமிழரின் வாழ்க்கை முறை, வாழ்வியற் சிந்தனைகள்,கடவுட் கொள்கை, நிலப்பிரிவுகள் போன்ற பலவற்றை அறிய முடிகிறது. தமிழரின் தத்துவச் சிந்தனையையும்  அறிவதோடு, அது சைவசித்தாந்தச் சிந்தனை என்பதையும் உணர முடிகின்றது.

அழிவற்ற உயிர்

தமிழ்மொழியின் எழுத்துக்களை வகைப்படுத்திய முன்னோர்கள் அவற்றுக்கு உயிர், மெய், உயிர்மெய் என்று பெயரிட்டுள்ளார்கள்.  தொல்காப்பியரும் இப்பெயர்களின் எழுத்துக்களை வகைப்படுத்தி அவை குறித்த குறிப்புக்களை, இடத்துக்கிடம், எவ்வகை முரண்பாடுகளும் இன்றித் தந்து இலக்கணம் வகுத்துள்ளார்.

உடம்பு நிலையற்றது.  அழியுந் தன்மை கொண்டது.  இறை அல்லது பிரமம் ஒன்றே மெய்ப்பொருள், என்று கொள்ளும் வேதாந்திகள் உடம்பு ஒரு பொய்த்தோற்றம், அது மாயை என்ற கொள்கை உடையவர்கள்.  (சித்தாந்திகள் கொள்ளும் மாயையின் விளக்கம் வேதாந்திகள் கொள்வதிலிருந்து வேறுபட்டது.)  ஆனால் உடம்பு அழியும் இயல்பு உடையதாயினும்ää அது இருக்கும் வரை மெய்யான ஒன்று என்பது சித்தாந்தக் கொள்கை.  உடம்பைக் குறிக்கும் மெய் என்ற சொல்லே இதனை உணர்த்துகிறது.அழியும் இயல்புடைய மெய்க்கு முதலிடம் கொடாமல் அழியாத் தன்மை கொண்ட உயிருக்கு சைவசித்தாந்தம் முதலிடம் கொடுக்கிறது.  தமிழ்மொழிச் சொற்களில் முதலில் மெய் எழுத்துக்கள் வருவதில்லை, என்பதைக் கூறித் தொல்காப்பியர் இதனை உணர்த்துகிறார்.  இது குறித்த தொல்காப்பியத் தொடர் வருமாறு.

‘உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா’

உயிரோடு கூடிய உடம்பே இயக்கமுடையது.  மெய் எழுத்துக்கள் முதலில் அமையக்கூடாது என்ற இலக்கணவிதி நிலையற்ற உடம்பின் கீழான இயல்பையும் அழிவற்ற உயிரின் உயர்வையும் உணர்த்துகிறது..

மெய்யின் வழி உயிர்

உயிருக்குச் சில குறைகள் உள்ளன.  ஆணவம் என்னும் மலத்தினால் பிணிக்கப்பட்டு அதன் ஆற்றல்கள் வெளிப்பட முடியாமல் இருக்கின்றன.  இந்த நிலையை நீக்குவதற்காக, இறைவன் மாயை என்னும் நுண்பொருளிலிருந்து உடம்பையும், அதனுள் அமைந்த மனம் முதலிய கருவிகளையும் படைத்தளிக்கிறான்.  இங்ஙனம் பெற்ற உடம்பின் மூலம் உயிர் செயல் புரிந்து அனுபவம் பெறுகிறது.  அதன்மூலம்  அறிவு வளர்கிறது. அறிவு வளர வளர உயிரைப் பிணித்த ஆணவக்கட்டு சிறிது சிறிதாக விலகுகிறது.

உயிரின் அறிவு, செயல், விருப்பு, ஞானம், கிரியை, இச்சை ஆகிய ஆற்றல்கள் வெளிப்படத் தோன்றுவது அது பெற்ற உடம்பின் மூலமே.  இச் சைவசித்தாந்தக் கருத்தை வெளிப்படுத்துவதாகப் பின்வரும் தொல்காப்பியத் தொடர் உள்ளது.

‘மெய்யின் வழியது உயிர்தோன்றும் நிலையே’.

உயிர் பல பிறவிகள் எடுக்கிறது.  பிறவிகள் எடுக்கமுன் ஆணவ மலத்துடன் கூடி இருந்த நிலையொன்று உள்ளது.  கேவலநிலை என்று இதனைச் சித்தாந்தம் கூறும்.  ஆணவ இருளில் இருந்த உயிரின் இந்த நிலையை ‘காரிருளில் கண்ணிலாக் குழவிபோல்’ என்று தாயுமானவர் விளக்குவார்.  இந்த நிலையைப் போக்கி உயிரை ஈடேற்றும் பொருட்டு முதன் முதலாக இறைவன் அதற்கு ஒரு நுண்ணுடம்பைப் படைத்தளிக்கிறான்.  புரியட்டகாயம் என்று சொல்லப்படும் இந்த நுண்ணுடம்பு, சித்தாந்தம் கூறும் மாயா காரியங்களாலான எட்டுத் தத்துவங்களால் ஆனது.   இந்த நுண்ணுடம்பினோடு கூடி உயிர் பல பிறவிகள் எடுக்கின்றன.  முத்தியடையும் வரை இந்த நுண்ணுடம்பு உயிருடன் இருக்கிறது.  அது உயிரின் உருவாக உள்ளது.  பிறவி எடுத்த உயிரின் உடம்பு நீங்கிய பொழுது, உயிர் இந்த நுண்ணுடம்பாலான தனது உருவுடன் இருக்கிறது.  இதனை விளக்குவதாகப் பின்வரும் தொல்காப்பியத் தொடர் உள்ளது.

‘மெய்யுயிர் நீங்கின் தன்உரு ஆகும்’

எதனைச் சார்ந்திருக்கிறதோ அதுவாகவே இருத்தல் உயிரின் தன்மை.  இதனைச் ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்று சித்தாந்தம் விளக்கும்.  உயிருக்கு இயல்பாகவே சில ஆற்றல்கள் உள்ளன.  அறிவு அல்லது ஞானம், செயல் அல்லது கிரியை, எதனையும் செய்வதற்கும் அறிவதற்குமான விருப்பு அல்லது இச்சை.  இந்த மூன்றும் உயிருக்கு இயல்பாகவே இருப்பவை.  இதனால் ‘இச்சா ஞானக் கிரியா சொரூபி’ என்று உயிரை வர்ணிப்பதும் உண்டு.  உடம்போடு கூடிப் பல அனுபவங்களைப் பெற்றாலும் உயிரின் இந்த இயல்புகள் மாறுவதில்லை.  தொல்காப்பியத்தின் பின்வரும் தொடர் இதனை விளக்குகிறது.

‘மெய்யொடு இயையினும் உயிரியல் திரியா’.

அகரமுதல்வன்

இறைவன் எங்கும் பரந்து வியாபகமாக உள்ளான்.  அனைத்துப் பொருட்களின் உள்ளும் அவற்றைக் கடந்தும் இருக்கிறான்.  கடவுள் என்ற தமிழ்ச்சொல் இதனை உணர்த்துவது.  தொல்காப்பியர் கடவுள் என்ற சொல்லைப் பல இடங்களிற் கையாள்கிறார்.

கடவுள் இலக்கணத்துக்கு உயிரெழுத்தாகிய அகரத்தை உதாரணமாகக் காட்டுவது சைவநூல்களில் காணக்கூடியது.  சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

‘அகரமுதலானை அணியப்ப னூரானை’ - சம்பந்தர்
  ‘அகர முதலின் எழுத்தாகி நின்றாய்’ - சுந்தரர்
‘அகரமுமாகி அதிபனுமாகி அகமாகி’ - அருணகிரிநாதர்

அகரத்தின் சிறப்பை விளக்கும் தொல்காப்பியர் ‘மெய்யின் விளக்கம் அகரமொடு சிவணும்’ என்று கூறுகிறார். (சிவணும்- பொருந்தும்).  மெய் எழுத்துக்களின் அசைவும் ஒலியும் அகர எழுத்தை ஒட்டியே அமையும் என்பது இதனால் விளக்கப்படுகிறது. இதற்கு விளக்கமாக நச்சினார்க்கினியர் பின்வருமாறு எழுதுகிறார்.

“இறைவன் இயங்கு திணைக்கண்ணும் நிலைத்திணைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் கண்ணும் நிற்குமாப்போல எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற் போல, அகரமும் உயிர்க்கண்ணும், அவற்றின் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாகவே நிற்கும் என்பது ஒப்ப முடிந்தது.

அடித்தளம்

உயிர் பற்றிய நச்சினார்க்கினியரின் கருத்து விளக்கமாக அமைந்த தொல்காப்பியத் தொடர் திருக்குறளின் முதற் குறட்பாவுக்குத் தளம் அமைத்ததைக் காணக் கூடியதாக உள்ளது.

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.’

தொல்காப்பியத் தொடர்கள் சிலவற்றை ஒட்டித் திருக்குறட் பாக்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘நிறைமொழி மாந்தர் ஆணையிற் பிறந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப’. -(தொல்காப்பியம்)

‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்’. -(திருக்குறள்)

திருக்குறட் கருத்துக்களும் சொல்லாட்சிகளும் பின்வந்த சைவசித்தாந்த நூல்களில் இடம்பெறுவதையும் காணலாம்.

  “அகர உயிர் போல் அறிவாகி எங்கும்
   நிகரில் இறை நிற்கும் நிறைந்து’ -(திருவருட்பயன்)

இக்குறட்பா திருவருட்பயனில் முதற் பாடலாக அமைந்தது.  இது திருக்குறளின் “அகரமுதல” எனத் தொடங்கும்ää முதற்பாவைப் பின்பற்றியதாக உள்ளது.  திருக்குறட் பாடல்கூட வேறொரு சித்தாந்த நூலில் உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது.

இறைவன் தன்னிலையில் குணங்கள் இல்லாதவன்.  அவன் குணாதீதன். ஆயினும் ஆன்மாக்களுக்கு அருளும் வகையால்ää அவனுக்குள்ளதாகச் சில குணங்கள் கூறப்படுவதுண்டு.  திருவள்ளுவர் அவனை எண்குணத்தான் என்கிறார்.

      ‘கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
 தாளை வணங்காத் தலை’.

இக்குறளுக்கு உரை கூறும் பரிமேலழகர், அவனின் எட்டுக்குணங்களாக, முற்றறிவுடைமை, வரம்பிலாற்றலுடைமை முதலிய குணங்களைக் கூறுகிறார்.  அவற்றைக் கூறிய பரிமேலழகர், “இவ்வாறு சைவ ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன” என்று சொல்லி முடிக்கிறார்.  இந்த எட்டுக் குணங்களில் ஒன்று “இயல்பாகவே வினையின் நீங்குதல்.”

உயிர்கள் கன்மம் அல்லது வினைத் தொடர்பு உள்ளவை.  அது உள்ளவரை அவை பிறப்பிறப்புக்கு உட்படும்.  உயிர்களின் அறிவு குறைவுடையது.  அது அறிவித்தால் அறியும் இயல்புடையது.  இறைவன் உயிர்களின் அறிவு விளக்கத்திற்குத் துணை புரிகிறான்.  இது சித்தாந்தக் கொள்கை.  முதன்முதல் இறைவன்  தட்சணாமூர்த்தி வடிவில் முனிவர்கள் நால்வருக்கு ஞான உபதேசம் செய்தான்.  அவனின் இந்த உபதேசமே உலகத்தவருக்கு முதல்நூலாக அமைந்தது.  இயல்பாகவே வினைத்தொடர்பில்லாத அறிவுவடிவாகிய இறைவன் செய்தது முதல் நூல் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூ லாகும்’.

இறைவன் வினையற்றவன்.  அறிவு வடிவானவன் என்ற சைவசித்தாந்தக் கருத்தை விளக்குவதாகவும் உள்ளது.  நாம் செய்த வினையின் பயனை நாமே அனுபவிக்க வேண்டும்.  “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்பது சங்கத் தமிழின் அனுபவ வாயிலாக வந்த சைவசித்தாந்த உண்மை.

ஒரு பிறவியில் ஒருவன் செய்த வினையின் பலன் அப்பிறவியிலோ மறு பிறவியிலோ அவனை அடைந்து அனுபவத்துக்கு வருகிறது.  காலம் என்ற தத்துவத்தின் அடிப்படையில்  வந்து வினைப்பயன் வினை செய்தவனைச் சேர்கிறது என்பதும் சித்தாந்தக் கருத்து இதனைத் தொல்காப்பியம் பின்வருமாறு விளக்குகிறது.

‘வினை எனப்படுவது வேற்றுமை கொளாது
 நினையும் காலை காலமொடு தோன்றும்’.

தத்துவ உலகில் செயல்,  செயலின் பலன் இரண்டும் வினை எனப்படும்.

எனவே. சைவசித்தாந்த நூற்கருத்துக்கள், பாடல்கள் சிலவற்றிற்குத் திருக்குறட் பாடல்கள் சிலவும். அவற்றுக்கு மூலமான தொல்காப்பியக் கருத்துக்களும் அடித்தளமாக அமைந்துள்ளன என்று கருத இடமுண்டு.

உலகம் ஒரு மயக்கம்

நாம் வாழும் உலகம் விண்வெளியில் தொங்கிக் கொண்டிருக்கிறது.  அதனைக் குறிக்கும் ஞாலம் என்ற தமிழ்ப் பெயரே இதனை உணர்த்துகிறது.  ஞாலுதல் என்றால் தொங்குதல் என்று பொருள்.

மண்ணின் செறிவு கொண்டது நிலம்.  நிலத்தை ஏந்துவதாக விசும்பு உள்ளது.  அதனைத் தடவிச் செல்வது காற்று.  காற்றின் வழியிலே தீ செயற்படுகிறது.  தீக்கு முரணாக நீர் உள்ளது.  இதனை விளக்குவதாகப் பின்வரும் புறநானூற்றுப் பாடல்

‘மண்திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும் வளிதலையிலே தீயும்
தீ முரணிய நீரும் . . . . .’

மண், நீர், தீ, காற்று, வெளி ஆகியவை ஐம்ப10தங்கள். இவை மாயையிலிருந்து தோன்றியவை என்பது சைவசித்தாந்தக் கோட்பாடு.  இந்த உலகமே மாயையிலிருந்து தோன்றியது என்பதும், அதன் காரியப் பொருட்களான ஐம்ப10தங்களால் ஆனது என்பதும்  சித்தாந்தக் கொள்கை.  உலகைப் போல் எமது உடலும்  மாயா காரியங்களால் ஆனது.  இவற்றின் மூலம் நாம் செயல் புரிந்து,  அனுபவம் பெற்று அறிவு வளர்ச்சி அடைகிறோம்.  ஆனால் இந்த அறிவு குறையுடையதாக, மயக்கம் தருவதாக, உள்ளது என்று சித்தாந்தம் கூறுகிறது. “மாயை மயக்கமும் செய்யுமன்றே” என்பது சைவசித்தாந்தம் தரும் விளக்கம்.

மாயையின் காரியப் பொருட்களாகிய ஐம்ப10தங்களாலான உலகமும் மயக்கம் தருவதாக உள்ளது. அதன் அமைப்பு பல்வேறு தன்மைகள் கொண்டது.  எளிதில் விளங்க முடியாதது.  பின்வரும் தொல்காப்பியத் தொடர் இதனை விளக்குகிறது.

‘நிலம் நீர் தீவளி விசும்பொடு ஐந்தும்
 கலந்த மயக்கம் உலகம் என்ப …’

இங்ஙனம் இறை, உயிர், உலகு குறித்த சைவசித்தாந்தச் சிந்தனையைப் பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்தில் காணலாம். தொல்காப்பியம் வருவதற்குப் பல ஆண்டுகளின் முன்னரே சைவசித்தாந்தம் தமிழகத்தில் உருவாகி இருந்தது என்பதையும்ää அது தமிழர் தத்துவம் என்பதையும் இதனால் உணர முடிகிறது.


க. கணேசலிங்கம்

2 comments:

சைவப்புலவர் முரு.சேமகரன். said...

மிகச் சிறந்த விளக்கம். நல்ல சித்தாந்தச் சிந்தனை விருந்து. ஐயாவின் பணி சிறக்க !

சைவப்புலவர் முரு.சேமகரன். said...

மிகச் சிறந்த விளக்கம். நல்ல சித்தாந்தச் சிந்தனை விருந்து. ஐயாவின் பணி சிறக்க !