இலக்கிய வளர்ச்சியில் ஐந்தாவது தலைமுறை படைப்பாளி ஜே.கே.

.
ஈழத்திலும்   புகலிடத்திலும்   இலக்கிய  வளர்ச்சியில்   ஐந்தாவது   தலைமுறை   படைப்பாளி  ஜே.கே.
மெல்பன்  வெளியீட்டு  அரங்கில்  அம்பலமான  அவரது கொல்லைப்புறத்து   காதலிகள்
                                             ரஸஞானி


ஜே.கே. என்ற  இரண்டு  எழுத்துக்கள்  அவுஸ்திரேலியாவில்  தமிழ் கலை - இலக்கியச்சூழலில்   சமகாலத்தில்  அதிகம்  பேசப்பட்டது.
இந்தியாவில்   ஜே.கே.   என்றால்  முக்கியமாக இரண்டுபேரைக்குறிக்கும்.   ஒருவர்  தத்துவஞானி  ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.    மற்றவர்   ஜெயகாந்தன்.   அவர்கள்  இருவரும் இருவேறு   துறைகளில்  சிறந்த  ஆளுமைகள்.
அவுஸ்திரேலியா ஜே.கே.  என்ற  ஜெயக்குமரன்  சந்திரசேகரம் கவிஞர் -  பத்தி  எழுத்தாளர் - விமர்சகர் - சிறுகதைப்படைப்பாளி முதலான   அடையாளங்களுடன்  மெல்பனிலிருந்து எழுதிக்கொண்டிருப்பவர்.
பொதுவாக  படைப்பாளிகள்  வாசகர்களைத்தான் சம்பாதித்திருப்பார்கள்.   ஆனால் -  இவர்  வாசகர்களுடன் ரசிகர்களையும்   சம்பாதித்தவர்.   அவரது  ஆக்க  இலக்கியங்கள் அவருக்கு   வாசகர்களை  தேடித்தந்திருப்பதுபோன்று    சிட்னியிலும் மெல்பனிலும்   இடம்பெற்ற   சில  கவியரங்குகளில்   அவர் கலந்துகொண்டதன்   மூலம்    ரசிகர்களையும்  சம்பாதித்திருப்பவர்.
படலை  என்ற   வலைப்பூவை   (www.padalay.com) நடத்தி  அதிலும் அடிக்கடி   எழுதிவருபவர்.
புகலிடவாழ்விலிருந்துகொண்டே   தாயக வாழ்வையும்  அழைத்து இரண்டுக்கும்  இடையே   வேரும்  வாழ்வுமாக  உணர்வுபூர்வமான நெருக்கத்தை   உருவாக்கியவாறு  எழுதிவரும்  படைப்பாளிகளின் வரிசையில்  இணைந்திருப்பவர்.
சிறுவயதில்  தமது   தாயாரிடமிருந்தே   இலக்கிய   வாசிப்பு பயிற்சியைப்பெற்றுக்கொண்டவர்.   பாடசாலைப்பருவத்திலேயே நண்பர்களுடன்  இணைந்து  இலக்கிய  இதழ்  வெளியிட  முயன்றவர். கலை - இலக்கிய  தாகத்தை  தணிக்க   பால்யகாலத்திலிருந்தே முயன்றவர்.


சுஜாதாவின்  எழுத்துக்களினால்   ஆகர்ஷிக்கப்பட்டவர்.   கம்பவாரிதி ஜெயராஜின்   சொற்பொழிவுகளில்  சொக்கிப்போய்  அவரையும்  தமது ஆதர்ச  குருவாக   ஏற்றவர்.
இலக்கிய  உரையாடல்களில்  மற்றவர்களின்  கருத்தை   முதலில்  கூர்ந்து   அவதானித்தபின்பே  தனது  கருத்துக்களை   அழுத்தமாக முன்வைப்பவர்.   கவியரங்குகளில்   இவரும்  ஒரு  சௌந்தர்ய உபாசகர்தான்.
அவுஸ்திரேலியாவுக்கு   வந்தபின்னர்தான்  தமது  படைப்பிலக்கிய நூல்   வழியே  தனது  சிறுவயது  கனவை   நனவாக்கியிருப்பவர்.
அவர்   தமது   என்  கொல்லைப்புறத்து  காதலிகள்  நூல் வெளியீட்டையும்   சற்று  வித்தியாசமாகவே   கடந்த  நவம்பர் 2 ஆம் திகதியன்று     மெல்பனில்   ( Carawatha  College) நடத்தினார். அதுசம்பந்தமான  அழைப்பிதழை  மின்னஞ்சல்  மார்க்கமாக  கலை, இலக்கிய  சுவைஞர்களுக்கு  தமது  இனிய  குரலுடனேயே அனுப்பினார்.    அத்துடன்   அழைப்பிதழையும்   அச்சிட்டு வெளியிட்டார்.   கலை,  இலக்கிய  சுவைஞர்களை   அழைப்பதற்கு  தற்கால  கணினி   தொழில் நுட்பத்தையும்  சிறப்பாக  பயன்படுத்தி மற்றவர்களுக்கு  முன்மாதிரியானார்.
யாவற்றிலும்   ஜே.கே.  அழகியலை   பேணியிருந்தார்.
அவரது   கொல்லைப்புறத்துக்காதலிகள்  அந்தரங்கமானவர்கள்  அல்ல. அவர்களை  ஆக்க  இலக்கியத்திலும்  மக்கள்  நிரம்பிய  அரங்கிலும் அம்பலமாக்கியவர்.   அவருடைய   மேடைப்பேச்சிலும்  இலக்கிய உரைநடையிலும்   அவரது  குருநாதர்களின்  தாக்கம் தவிர்க்கமுடியாததே.
தமது   நூல்  வெளியீட்டரங்கையும்  வித்தியாசமாக  அதிலும் முன்மாதிரியான  செயற்பாட்டை   அறிமுகப்படுத்தியிருந்தார்  ஜே.கே.
வழக்கமாக  நூல்  வெளியீடுகள்  நூலை   எழுதியவர்களின் முயற்சியால்தான்   நடைபெறும்.  சில  சந்தர்ப்பங்களில்  அவர்கள் அங்கம்   வகிக்கும்  சங்கங்கள்  வெளியிட்டுவைக்கும்.
ஜே.கே.யின்   என்   கொல்லைப்புறத்து  காதலிகள்  வெளியீட்டு அரங்கிற்கு  முழுமையான  அனுசரணை  வழங்கியவர்கள்   மெல்பனில் வதியும்  யாழ்ப்பாணம்  பரியோவான்   (சென். ஜோன்ஸ்)  கல்லூரியின் பழைய  மாணவர்கள்.   இவ்வாறு   நிகழ்வது  எம்மவர்களுக்கு  புதிது.
வழக்கமாக   பழையமாணவர்  சங்கங்கள்  கிரிக்கட்  போட்டிகளும் பாப்பகியூ  எனப்படும்  கோடைகால  ஒன்று  கூடல் கொண்டாட்டங்களும்   இராப்போசன  விருந்துபசாரங்களும்தான் நடத்துவார்கள்.   தமது   முன்னாள்  பாடசாலைக்கு  நிதிதிரட்டும் நிகழ்ச்சிகளில்  ஒன்றுகூடுவார்கள்.  அத்தகைய  நிகழ்வுகளிலும் முன்னர்    ஈடுபட்ட  யாழ். பரியோவான்  கல்லூரி  முன்னாள் மாணவர்கள்   கௌரவித்திருப்பது  தமது  சகாவின் இலக்கியப்பணிகளை    என்பது  மிகவும்  முக்கியமான  காலத்தின் பதிவு.
விளையாட்டு,   நடனம்,  இசை,  கேளிக்கை,   டின்னர்  டான்ஸ் முதலானவற்றில்  எல்லாம்  பெரிதும்  ஆர்வம்காட்டும்  எம்மவர்கள் நூல்   வெளியீட்டு  அரங்கில்  இலக்கியவாதியையும்  பாராட்டி  அவரது   நூல்   வெளியீட்டுக்கு  முன்னுரிமை   கொடுத்து  மண்டபத்தில் அமருவதற்கும்   ஆசனம்  தேடும்   அளவுக்கு  நிறைந்திருந்தமை மகிழ்ச்சியை  அளிக்கிறது.
மெல்பனில்   ஜே.கே.யின்  என்   கொல்லைப்புறத்து   காதலிகள்  நூல் வெளியீட்டின்   தலைமையுரையை   திரு. ஜூட்   பிரகாஷ்  நிகழ்த்தினார்.   நூல்வெளியீட்டு  அரங்கை  திரு. கந்தையா குமாரதாசன்   ஜே.கே.யை  வழக்கமான  கம்பன்  கழகப்பாணியில் கௌரவித்து   நடத்தினார்.


திருவாளர்கள்    சி. அஜந்தன்,    லெ.கேதாரசர்மா,    ஆவூரன் சந்திரன், ஆகியோர்   நூலில்  இடம்பெற்றுள்ள   பங்கர்,    யாழ்ப்பாணத்து கிரிக்கட்,    குட்டி    முதலான    கதைகளை   சிலாகித்து நயப்புரையாகவே    தமது   கருத்துக்களை    முன்வைத்தனர்.   அவர்களின்  உரைகள்  சபையில்  பலதடவை   சிரிப்பலையையும் கரகோஷத்தையும்   எழுப்பியவாறு   இருந்தமையும்   பரவசமான காட்சி.   அந்த  உரைகளின்  எளிமை   மனஇறுக்கத்தை   தளர்த்தும் வகையில்  அமைந்திருந்தமைக்குக்    காரணம்   இந்நூலின் உள்ளடக்கம்.
உரையாற்றியவர்களின்  பேச்சு,  இந்த  நூலை   படிக்கவேண்டும் அதற்குள்  தாம்  விட்டு  வந்த  வாழ்வைத்தேடவேண்டும்  முதலான உணர்வலைகளை  கேட்டுக்கொண்டிருந்த   சபையினருக்கு ஏற்படுத்தியிருக்கும்   என்றும்   கருதலாம்.
ஜே.கே.யின்  பெருவிருப்பத்திற்கு   அமைய   எழுத்தாளர்   திரு. லெ. முருகபூபதி   ஜே.கே.வுக்கு  வாழ்த்துக்கூறி   நூலை சம்பிரதாயபூர்வமாக  வெளியிட்டு வைத்தார்.   மெல்பன்  அன்பர்கள் நூலின்   சிறப்பு  பிரதிகளை  பெற்றுக்கொண்டனர்.
பாரதி   கண்ணம்மா  என்னும்  நடனவிருந்தில்   பாரதியின் பாடல்களுக்கு    அபிநயம் காண்பித்தனர்  ஜே.கே.யின்  துணைவியார்
ஜீவிகா  விவேகானந்தனும்   அவரது   மருமகள்   செல்வி .திவ்யா பிரதீபனும்.   அந்த  நிகழ்வில்  இடம்பெற்ற  சின்னஞ்சிறு  கிளியே கண்ணம்மா... பாடலை  மகாகவி  பாரதி   எவ்வாறு  மனம்   உருகி இயற்றியிருப்பார்    என்பதை   அந்த   பாடல்   வரிகள்   எமக்கு புலப்படுத்தும்.    அவ்வாறே    ஜீவிகாவும்   திவ்யாவும்  அன்றையதினம் அரங்கிலிருந்தவர்களை  உருகவைத்துவிட்டார்கள்   என்றே சொல்லலாம்.  
தரமான  அந்த  நடன  அரங்கு  நிகழ்ச்சியை   நடத்தி  தமது  ஆற்றலை வெளிப்படுத்திய   திருமதி ஜீவகா  ஜே.கே.யும்    அவர்களது  செல்ல மருமகள்   திவ்யாவையும்     அரங்கிலிருந்தவர்கள்   பெரிய  கரகோஷம் எழுப்பி   பாராட்டினார்கள்.
இசையரங்கில்   அவுஸ்திரேலியா   இசை   மற்றும்  பரநாட்டிய  ரசிகர்களுக்கு   மிகவும்    பரிச்சயமான   கலைஞர்  சிவானந்தன் அகிலன் -( பாட்டு) மற்றும் மெட்ராஸ்  கஜன் - (மிருதங்கம்)  பைரவி  ரமணன் - (வயலின்)  சதீபன் - (கடம்)  ஆகியோரின்  இன்னிசைவிருந்து   சிறப்பானது.
சுருக்கமாகச்சொல்வதாயின்   என்    கொல்லைப்புறத்து  காதலிகள்   நூல்   வெளியீடு  மூன்று  அரங்காக    நடந்தது.   இம்மூன்றையும் தனித்தனியாகவும்   நயந்து    பேசமுடியும்.   எழுத முடியும்.

No comments: