கடத்தப்பட்ட 200 பாடசாலை சிறுமிகளும் போராளிக் குழு உறுப்பினர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளனர் : போகோ ஹராம்
சிரியாவில் பாடசாலை மீது ஷெல் தாக்குதல் : 13 சிறுவர்கள் பலி
ஐரோப்பாவிற்கு சட்டவிரோத படகு பயணம் : கடலில் மூழ்கி 24 குடியேற்றவாசிகள் பலி
----------------------------------------------------------------------------------------------
கடத்தப்பட்ட 200 பாடசாலை சிறுமிகளும் போராளிக் குழு உறுப்பினர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளனர் : போகோ ஹராம்
03/11/2014 நைஜீரியாவில் போகோ ஹராம் போராளிக்குழுவால் கடத்தப்பட்ட 200க்கு மேற்பட்ட சிறுமிகளை தமது போராளிக்குழு உறுப்பினர்களுக்கு அந்தக் குழு திருமணம் செய்து வைத்துள்ளதாக மேற்படி குழுவின் தலைவர் என தன்னைத்தானே உரிமை கோரும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அபூபக்கர் ஷிகாயு என்ற அந் நபர் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் வடகிழக்கு சிபொக் நகரிலிருந்து கடத்தப்பட்ட 219 சிறுமிகளும் தற்போது தமது கணவர்மாரின் வீடுகளிலுள்ளதாக கூறினார்.
''அவர்கள் அனைவரும் இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றப்பட்டுள்ளதுடன் புனித குர்ஆன் நூலின் இரு அத்தியாயங்களையும் மனனம் செய்துள்ளனர்'' என அவர் தெரிவித்தார்.
''நாங்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம். அவர்கள் புகுந்த வீடுகளில் தற்போது உள்ளனர். 200 சிபொக் பாடசாலை மாணவிகளும் மதமாற்றப்பட்டதை நீங்கள் அறியவில்லையா?'' என அவர் வினவினார்.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட புதிய வீடியோ காட்சியிலேயே அபூபக்கர் ஷிகாயு இவ்வாறு தெரிவித்துள்ளார். அபூபக்கர் ஷிகாயு என்ற மேற்படி போராளிக்குழு தலைவரை தாம் ஒரு வருடத்திற்கு முன் கொன்றதாக நைஜீரிய இராணுவம் தெரிவித்திருந்த நிலையிலேயே அவரது இந்தப் புதிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
போகோ ஹராம் போராளிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கையொன்றை மேற்கொண்டுள்ளதாக நைஜீரிய அரசாங்கம் அண்மையில் அறிவித்த நிலையில் அதனை அந்தப் போராளிக்குழு நிராகரித்துள்ளதுடன் வன்முறை தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. நன்றி வீரகேசரி
சிரியாவில் பாடசாலை மீது ஷெல் தாக்குதல் : 13 சிறுவர்கள் பலி
06/11/2014 வட கிழக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள கபன் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் 13 சிறுவர்கள் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்துள்ளவர்களின் பலரின் நிலைமை கவலைக் கிடமாகவுள்ளதால் பலியானவர்கள் தொகையில் மேலும் அதிகரிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுவதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்படி தாக்குதலுக்கு சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத்துக்கு விசுவாசமான படைகளே காரணம் என அந்நாட்டு செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மேற்படி தாக்குதலின் போது ஷெல்கள் பாடசாலையொன்றின் மீது விழுந்து வெடித்ததாக அந்நாட்டின் செயற்பாட்டாளர்களின் வலைப் பின்னலான சிரிய புரட்சி பொது ஆணையகம் தெரிவித்தது.
கபன் பிரதேசத்திலுள்ள கிளர்ச்சியாளர்களும் இராணுவமும் இந்த வருட ஆரம்பத்தில் உடன்படிக்கையொன்றை எட்டிய போதும் வன்முறைகள் இடம்பெறுவது தொடர்வதாக கூறப்படுகிறது.
சிரியாவில் மக்கள் எழுச்சி ஆரம்பமானது முதற்கொண்டு இதுவரை சுமார் 190,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஐரோப்பாவிற்கு சட்டவிரோத படகு பயணம் : கடலில் மூழ்கி 24 குடியேற்றவாசிகள் பலி
04/11/2014 ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சட்டவிரோத படகுப் பயணத்தை மேற்கொண்ட 40 க்கு மேற்பட்ட குடியேற்றவாசிகள் 24 பேர் திங்கட்கிழமை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
துருக்கிய இஸ்தான்புல்லுக்கு அப்பால் கருங்கடலில் அவர்கள் பயணித்த படகு மூழ்கியுள்ளது.
அவர்கள் பொஸ்போரஸ் நீரிணையூடாக ரோமானியாவுக்கு பயணித்ததாக கூறப்படுகிறது.
அந்தப் படகில் பயணித்தவர்கள் ஆப்கானைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான யூரோ பணத்தை கட்டணமாகசெலுத்தி இந்தப் படகுப் பயணத்தை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளில் 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்படி படகுப் பயணத்தை மேற்கொண்டவர்களில் 12 சிறுவர்களும் பெண்களும் உள்ளடங்குகின்றனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment