தமிழ் கலாசார விழுமியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: - பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம்

.

News Service
அந்நியர்களின் ஆட்சியில் இலங்கை இருந்த போது அழியவிடாது பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் இன்றைய நவநாகரிக மோகத்தினால் மாற்றமடையும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். தமிழர்களின் தொல்லியல் மரபுரிமை சின்னங்களையும் பாரம்பரிய பண்பாடுகளையும் பாதுகாக்கவேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும். வட மாகாணத்திலுள்ள தமிழர்களின் பாரம்பரிய சின்னங்கள் பற்றியும் பாரம்பரிய பண்பாட்டு வாழ்க்கை முறைகள் பற்றியும் யாழ். பல்கலைக்கழகத்தில் ஆராயவேண்டும். தொல்லியல் இடங்களுக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதனை நாம் எமது மிகப்பெரும் சொத்தான பல்கலைக்கழகத்தின் ஊடாக மேற்கொள்ளவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் வலியுறுத்தியிருக்கின்றார்.
   
வட இலங்கையில் சுற்றுலாவும், தொல்லியல் மரபுரிமை சின்னங்களும் எனும் நூல் வெ ளியீட்டு விழா யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் ஏற்புரையாற்றுகையிலேயே வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஷ்பரட்ணம் தனது இத்தகைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழர்கள் சிறுபான்மையாளர் எனக்கூறப்பட்டு வருவது எனக்கு பெரும் கவலையளித்தது. அதனாலேயே நான் வரலாற்றைக் கற்கவேண்டும். அது பற்றி ஆராய்ச்சிகளை ஆய்வு செய்யவேண்டும் என எண்ணினேன். இந்த உந்துதலாலேயே தமிழர்களின் வரலாற்றுப் பாரம்பரிய வாழ்க்கை முறைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டேன். தமிழர்களின் பாரம்பரிய மரபுரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமென 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்தே கோரப்பட்டு வந்தது.

அந்நியரின் ஆட்சியில் ஐரோப்பிய கலாசார பண்பாடு இலங்கையில் பரப்பப்பட்டு விடுமோ என்ற அச்சநிலை காணப்பட்டது. அப்போது சிங்கள பாரம்பரியங்களை பாதுகாப்பதற்காக அநகாரிக தர்மபால தலைமையிலான சிங்களத் தலைவர்கள் சிங்கள பௌத்த கலாசார பாரம்பரியத்தை பேணும் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். இதே போல் வடக்கில் ஆறுமுக நாவலர் இந்து, தமிழ் கலாசாரத்தைப் பேணும் திட்டத்தை முன்னெடுத்தார். இதனால் அந்நியர் ஆட்சிக்காலத்தில் சிங்களவர்களும் தமிழர்களும் தங்களின் தனித்துவமான கலாசாரத்தை பாதுகாக்கும் நிலை காணப்பட்டது. என்றும் பேராசிரியர் புஷ்பரட்ணம் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப்பகுதிகளில் தமிழ் கலாசார விழுமியங்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் சிங்கள, பேரினவாத சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் தமிழ் கலாசார பாரம்பரியம் மற்றும் விழுமியங்களை முற்றாக இல்லாதொழிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
தமிழ் கலாசார பாரம்பரியங்களுக்கு பேர்போன வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் கலாசார சீரழிவுகளை ஏற்படுத்தும் வகையில் நீண்டகால திட்டம் வகுக்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு நிலைமைகள் மாறிவருகின்றன. யுத்தத்திற்குப் பின்னர் வடக்கில் போதைவஸ்துப் பாவனை மற்றும் மதுபான வகைகளின் பாவனை என்பன அதிகரித்துள்ளன.
நகரங்கள், மற்றும் கிராமங்கள்தோறும் போதைவஸ்தினைப் பெறக்கூடிய சூழல் வடக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் மதுபாவனைக்கான வசதி வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளதாகவே தெரிகின்றது. தங்குதடையின்றி போதைவஸ்து விநியோகஸ்தர்கள், போதைவஸ்துக்களை விநியோகிக்கும் சூழல் காணப்படுகின்றது.
பெருமளவான இளைஞர்கள், போதைவஸ்துப் பாவனைக்கு அடிமையாகியுள்ள நிலையில் குற்றச் செயல்களும் அங்கு அதிகரித்து வருகின்றன. பாலியல் துஷ்பிரயோகங்கள், பாலியல் வல்லுறவுகள், கொலைகள், கொள்ளைகள் என பல்வேறு விதமான குற்றச்செயல்கள் குடாநாடு உட்பட வடக்கில் அதிகரித்துள்ளன.
போதைவஸ்துப் பாவனை அதிகரித்துள்ளதுடன் குற்றச்செயல்களும் பெருகி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை பொலிஸார் எடுப்பதாக தெரியவில்லை. தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்ற எண்ணத்தில் உணர்வுபூர்வமான சிந்தனையுடன் செயற்பட்டு வருகின்றனர். இதனால் தான் கடந்த மூன்று தசாப்தகாலமாக உரிமை கோரி தமிழ் இளைஞர், யுவதிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய போராட்டம் தற்போது தோல்வியுற செய்யப்பட்டுள்ளபோதிலும் தமிழ் இளைஞர், யுவதிகள் மத்தியில் உரிமையைப் பெறவேண்டுமென்ற உணர்வு இருந்தே வருகின்றது.
இத்தகைய உணர்வினை மழுங்கடிக்கவேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையிலும், தமிழர்களது கலை, கலாசார விழுமியங்களை இல்லாதொழிக்க வேண்டுமென்னும் எண்ணத்திலும் வடக்கு, கிழக்கில் மதுபாவனை மற்றும் போதைவஸ்துப் பாவனை என்பவற்றை அதிகரிப்பதற்கு திட்டமிட்ட வகையில் செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றனவோ என்ற ஐயப்பாடும் தற்போதைய சூழ்நிலையில் எழுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனும் சுட்டிக்காட்டியிருந்தார். குடாநாட்டில் போதைவஸ்துப் பாவனை அதிகரித்து வருகின்ற போதிலும் அதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட வகையில் சிங்கள குடியேற்றங்களும் இடம் பெற்று வருகின்றன. தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் வகையில் இத்தகைய செயற்பாடுகள் சிங்கள பேரினவாத சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டு வந்தது. தற்போது விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐயாயிரம் சிங்களவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இதேபோல் வன்னிப்பகுதியில் சிங்கள குடியேற்றத்திற்கான திட்டமிட்ட செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றது.
வடக்கு, கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பூமியாகும். தமிழ் மக்கள் செறிந்து வாழும் இந்தப்பகுதியில் இனவிகிதாசாரத்தை மாற்றியமைத்து தமிழர்களுக்கு என்றொரு பூர்வீக நிலம் இல்லை என்று காண்பிப்பதற்காகவே திட்டமிட்ட வகையில் குடியேற்றங்கள் இடம் பெற்று வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது.
தமிழர்களின் பாரம்பரிய கலாசார விழுமியங்களை இல்லாது அழிப்பதன் மூலமும் தமிழர்களின் உரிமை கோஷத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற எண்ணமும் சிங்கள பேரினவாத சக்திகள் மத்தியில் காணப்படுகின்றது. எனவே இத்தகைய ஆபத்திலிருந்து தமிழர்களின் கலாசார விழுமியங்களையும் தமிழர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு ஓரணியாக செயற்படவேண்டும்.
அத்துடன் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஷ்பரட்ணம் வலியுறுத்தியதைப் போன்று தமிழர்களின் பாரம்பரிய சின்னங்கள் பற்றியும், பாரம்பரிய பண்பாட்டு வாழ்க்கை முறைகள் பற்றியும் தமிழ் கல்வி மான்கள் ஆராய்ச்சிகளை நடத்த வேண்டும். அந்நியர் ஆட்சிக்காலத்திலும், யுத்த காலத்திலும் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் கலாசார விழுமியங்கள் தற்போது அழிக்கப்படுவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எனவே தமிழர்களின் கலாசார பாரம்பரியங்களை அழித்து இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க விரும்பும் சிங்கள பேரினவாத சக்திகளின் செயற்பாட்டிற்கு இடமளிக்காது தமிழ் தரப்பும் திட்ட மிட்ட வகையில் கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியதே இன்றைய அவசர தேவையாக உள்ளது.

No comments: