கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்
கணவரை இராணுவத்தினர் ஏற்றிச்செல்லும் புகைப்படம் வீரகேசரியில் பிரசுரமாகியுள்ளது : மனைவி ஆணைக்குழுமுன் மன்றாட்டம்
பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் பலியான 32 பேரின் விபரங்கள்
நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயம்: 2521 பேர் இடம்பெயர்வு
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்
05/11/2014 கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவக்குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைபெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி வீரகேசரிகணவரை இராணுவத்தினர் ஏற்றிச்செல்லும் புகைப்படம் வீரகேசரியில் பிரசுரமாகியுள்ளது : மனைவி ஆணைக்குழுமுன் மன்றாட்டம்
இறுதி யுத்தத்தின்போது பொது மன்னிப்பு வழங்கப்படுமென இராணுவம் அறிவித்ததற்கு அமைய ஒப்படைக்கப்பட்ட தனது கணவரை தற்பொழுதுவரை காணவில்லை எனவும் இராணுவத்திடம் ஒப்படைத்தபின்னர், வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுகின்ற புகைப்படமொன்று கடந்த 2009.7.24 அன்று வீரகேசரிப் பத்திரிகையின் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதெனவும் இரு பிள்ளைகளின் தாயார் ஒருவர் ஆணைக்குழுவின் முன்னிலையில் கதறி அழுது தனது கணவரை மீட்டுத் தருமாறு நேற்றுக் கோரியுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முல்லைத்தீவில் மூன்றாவது நாளாக நேற்று ஒட்டுசுட்டானில் இடம்பெற்றது.
இந்த விசாரணைகளின்போது விடுதலைப் புலிகளின் அமைப்பின் ராதா வான் காப்பு படைப் பிரிவைச் சேர்ந்த கோணேஸ் என்பவருடைய மனைவியான பத்மரஞ்சினி சாட்சியமளிக்கையிலேயே இவ்வாறு ஆணைக்குழுவிடம் கோரியிருந்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது கடந்த2009.5.18 அன்று நானும் எனது கணவரும் இரு குழந்தைகளும் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வட்டுவாகல் ஊடாக உட்பிரவேசித்தோம். இதன்போது இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டவர்களை தம்மிடம் சரணடையுமாறும் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படுமெனவும் ஒலி பெருக்கிகளில் அறிவித்தனர்.
இந்த அறிவித்தலுக்கமைய முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வைத்து நானும் எனது கணவரான ராதா படையணியைச் சேர்ந்த நடராஜா சச்சிதானந்தம் (கோணேஸ் அப்பொழுது வயது 41) என்பவரை இராணுவத்திடம் ஒப்படைத்தேன். அதன்பின்னர் இராணுவத்தினர் எனது கணவரையும் மேலும் சிலரையும் வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றனர். இவ்வாறு எனது கணவரை ஏனையவர்களுடன் வாகனத்தில் ஏற்றிச் செல்கின்ற போது பிடிக்கப்பட்ட புகைப்படமொன்று கடந்த 2009.7.24 அன்று வீரகேசரி பத்திரிகையின் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. எனவே எனது கணவரை மீட்டுத் தாருங்கள் என்றார்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் சரக்குக் கப்பலில் ஏற்றப்பட்டவர்களைக் காணவில்லை.
கற்சிலைமடுவைச் சேர்ந்த கந்தையா ராசமணி என்ற பெண் சாட்சிமளிக்கையில்,
எனது மகனான கந்தையா சந்திரசேகரம் (அப்பொழுது வயது 39) என்ற இரு பிள்ளைகளின் தந்தை இறுதி யுத்தத்தின்போது புதுக்குடியிருப்புப் பகுதியில் காயமடைந்திருந்தார். இவரை புதுக்குடியிருப்பு அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருந்தோம். அங்கு ஷெல் தாக்குதல் அதிகரித்த நிலையில் மாத்தளன் பாடசாலையில் இயங்கிய பாடசாலைக்கு மாற்றினார்கள். அங்கும் ஷெல் தாக்குதல் அதிகரித்திருந்த நிலையில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சரக்குக் கப்பலில் ஏற்றி திருகோணமலைப் பகுதிக்கு சிகிச்சைக்காக அனுப்பியிருந்தனர்.
அதன்பின்னர் நாம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து எனது மகனைத் தேடினோம். ஆனால் அவரைத் தற்பொழுது வரைக் காணவில்லை. எனவே அவரை மீட்டுத் தாருங்கள் என கதறி அழுதவாறு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.
இறந்ததை தெரிவிக்காமல் மரணச் சான்றிதழை வழங்குகின்றனர்.
முல்லைத்தீவு கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான ஜெயமலர் என்ற பெண் சாட்சியமளிக்கையில்,
இறுதி யுத்தம் இடம்பெற்றபொழுது 2009.5.17 அன்று நானும் எனது கணவரும் எனது பிள்ளையும் வட்டுவாகல் பகுதி ஊடாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவதற்கு முயற்சித்தோம். அப்பொழுது எனது கணவரான துரைசிங்கம் ஜெயக்குமாருக்கு (அப்பொழுது வயது 35) ஷெல் தாக்குதலினால் சிறு காயம் ஏற்பட்டது. இதனால் அவரை சிகிச்சைக்காக இராணுவத்திடம் ஒப்படைத்தோம். இதன்பின்னர் நானும் எனது பிள்ளையும் இடைத்தங்கல் முகாமுக்குச் சென்று தங்கியிருந்தோம். அங்கு எங்களுக்கு கெப்பிடிப்பொலாவ நீதிமன்றத்திலிருந்து அறிவித்தல் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்த அறிவித்தலுக்கு அமைய எனது கணவரை இறந்து விட்டதாக மரணச் சான்றிதழ் எனக்கு தரப்பட்டுள்ளது.
ஆனால் எனது கணவருக்கு இறப்பு ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் இல்லை என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே அவரை மீட்டுத் தாருங்கள் என குறித்த பெண் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆணைக்குழுவின் விசாரணைகளில் அழைக்கப்பட்ட 57 பேரில் 44 பேர் சாட்சியமளித்துள்ளனர். இதேபோல் மறுநாள் திங்கட்கிழமை அங்கு நடைபெற்ற விசாரணைகளில் அழைக்கப்பட்ட 57 பேரில் 38 பேர் சாட்சியமளித்துள்ளனர்.
இதேபோல் நேற்று ஒட்டுசுட்டானில் நடைபெற்ற விசாரணைகளில் சாட்சிமளிப்பதற்காக 67 பேருக்கு அழைப்புக்கள் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் பலியான 32 பேரின் விபரங்கள்
04/11/2014 மீரியபெத்த மண்சரிவில் பலியாகி இருக்கலாம் என நம்பப்படும் 32 பேரது பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. தலைத்தீபாவளிக்கு பெற்றோர் வீட்டுக்கு வந்த 23 வயதுடைய யுவதியும் அவரது கணவரும் இந்த அனர்த்தத்தில் பலியாகியுள்ளனர்.
பலியானவர்கள் என நம்பப்படுபவர்களது விபரம் வருமாறு;
1. சந்திரவதனி
2. தேவிகா
3. லக்சான்
4. லுக்சிதா
5. சுஜன்
6. பாலசுப்ரமணியம்
7. பவானி
8. ரஞ்ஜிதம்
9. இராஜகௌரியும் அவரது கண
வரும் (தலைத்தீபாவளிக்கு பெற்
றோர் வீட்டிற்கு வந்தவர்கள் )
10. ராமன்
11. திலக்கலட்சுமியும் அவரது கணவரும்
12. விதுசிகா
13. முத்து
14. செல்வநாயகி
15. தங்கவேல்
16. குடும்பநலத்தாதியும் அவரது
மகனும் மகளும் மகனின் மனைவியும்
17. ருத்திரன்
18. மின்னல் என்றழைக்கப்படுபவர்
19. மாரியப்பன்
20. மாரியாயி
21. மேசன் வேலை செய்பவரும் அவரது மனைவியும்
22. தெய்வானை
23. பிரகாஷ்
24. லீலாவதி
25. மாரியாயி
26. ஆர்னேல்
நன்றி வீரகேசரி
நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயம்: 2521 பேர் இடம்பெயர்வு
06/11/2014 நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 564 குடும்பங்களைச் சேர்ந்த 2521 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment