ஆஸ்கர் விருது இந்தியா சார்பில் கீது மோகன்தாஸின் 'லையர்ஸ் டைஸ்' தேர்வு

.

2015- ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியின் சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 'லையர்ஸ் டைஸ்' (Liar's Dice) அனுப்பப்பட உள்ளது.
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நள தமயந்தி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்த கீது மோகன் தாஸ் இயக்கிய படம் 'லையர்ஸ் டைஸ்'. இந்த திரைப்படத்தில் கீதாஞ்சலி தபா, நவாஸுதீன் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சிறந்த நடிகை மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதுகளை கடந்த ஆண்டு இந்த திரைப்படம் வென்றது.
2015-ஆம் வருடத்திற்கான ஆஸ்கார் விருது போட்டிக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் பங்கேற்க, இந்தியாவிலிருந்த அனுப்பக் கூடிய திரைப்படங்களை தேர்வு செய்யும் போட்டியில் 30 படங்கள் பங்கேற்றன. அந்த திரைப்படங்களில் 'லையர்ஸ் டைஸ்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புது டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் சுப்ரான் சென், இந்தியாவின் சார்பாக ஆஸ்கார் விருது போட்டியில் 'லையர்ஸ் டைஸ்' படத்தை அனுப்புவதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.


'லையர்ஸ் டைஸ்' திரைப்படம் இந்திய-திபெத்திய எல்லை கிராமத்தில் வாழும் பழங்குடி பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தியது ஆகும். வாழ்வாதாரத்துக்காக டெல்லிக்கு வேலை தேடி சென்ற தனது கணவர் பல மாதங்களாக வீடு திரும்பாததை அடுத்து, அவரைத் தேடி தனது மகளுடன் செல்லும் பெண்ணின் பயணக் கதை இது.
இந்த தேடல் பயணத்தில் ராணுவத்திலிருந்து தப்பி ஓடிவந்த ஒரு ராணுவ வீரர், இப்பெண்ணுக்கு உதவ ஒப்புக் கொண்டு அவருடன் பயணிப்பதே இந்த படத்தின் கதையாகும்.
ஆஸ்கார் விருதின் சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் போட்டியிட 1957- ஆம் ஆண்டு முதல் இந்திய படங்கள் அனுப்பப்படுகின்றன. இதுவரை 'மதர் இந்தியா', 'சலாம் பாம்பே', 'லகான்' ஆகிய இந்தியப் படங்கள் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு, இறுதி கட்டத்தில் வெற்றியடையாமல் திரும்பின. இம்முறையாவது இந்தியத் திரைப்படம் ஆஸ்கார் வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
nantri http://tamil.thehindu.com/

No comments: