ஏர் பிடித் துழுவோம்

.

எழிலுரு உலக மாதா
இதயமாம் இளைஞர் சக்தி !
தொழிலெனும் கருவி கொண்டு
துரத்துதல் ஆகும் :பொல்லா
இழிவிருள் வறுமை தன்னை
இரவியாய் மிளிரும் தூய
இளைஞரே ஒன்று கூடி
இன்பமாய் உழைக்க வாரீர்
பள்ளியில் படித்தோம் !மேன்மை
பட்டங்கள் யாவும் பெற்றோம்
கொள்கையில் உறுதி பூண்டு
குவலயம் தன்னை மீட்க
தெள்ளிய உணர்வி னோடு
திறம்பட உழைத்து மண்ணை
வெள்ளிடை மலையாய் என்றும்
விளங்கிட வைக்க வாரீர்


காடுகள் மாய்த்து நல்ல
கழனிகள் உண்டு பண்ணி
மேடுகள் வளப் படுத்தி
மேன்மை சேர் பயிர் வளர்த்து
வாடிய முகங்கள் யாவும்
வசந்தமே !கண்டு பாடி
கூ டியே மகிழ்ந்து வாழ
கூ டியே உழைக்க வாரீர் !
ஏர் பிடித் துழுவோம் !நல்ல
எந்திரம் துனையாக் கொள்வோம்
போர்வைகள் தம்மை நீக்கி
புதுமைகள் உழைப்பில்செய்வோம் !
கார் மழை தன்னைத் தேக்கி
காசினிக் குதவும் வண்ணம்
சீர்மையாய் பயிர்க்குப் பாய்ச்சி
செகமது செழிக்கச் செய்வோம்
தேயிலை இறப்பர் தெங்கு
சிரித்திடும் வயலின் நெல்லு !
ஆய நற் கனிகள் நூறும்
அறு சுவைக் குதவும் யாவும்
நேயமாம் வளர்ப்ப தாலே !
நிலத்திடை வளங்கள் கூ டும்
சாயந் திடும் கதிர் வளர்த்தால்
தலையை நாம் நிமிர்த்த லாமே !
இளைஞர் கை இணைந்தா லிங்கு
எங்கிலை அபிவி ருத்தி ...?
வளைக் கரம் வாளை ஏந்தி
வயர் கதிர் அறுக்கும் போதும் !
களைதனைப் பிடுங்கி வீசி
காரிய மாற்றும் போதும்
களைந்து போம் வறுமைக் கோடு
காணுமே !வளர்த்தை நாடு !
உயர்வுக்கு இளைஞர் சக்தி ,
ஒன்று பட்டினையு மானால்
நயம் பல வந்து கூ டும்
நலிவுகள் மறைந்து ஓடும்
புயங்களை உயர்த்தி யிந்தப்
பூமியை பசுமை யாக்க
செயப் பட எழுமின் !எங்கள்
இளைஞரே !நாமே சக்தி !

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

No comments: