இலங்கைச் செய்திகள்


நுவரெலியாவில் மினி சூறாவளி

கிழக்கு பல்கலை உணவுச்சாலைகள் திடீர் பரிசோதனையையடுத்து மூடப்பட்டுள்ளன

ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

நுவரெலியாவில் மினி சூறாவளி

நுவரெலியா, பொரலந்த வஜிரபுர பகுதியில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.





இதன் காரணமாக 5 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் ,பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ குமாரசிறி மேலும் தெரிவித்தார்.





நன்றி வீரகேசரி 





கிழக்கு பல்கலை உணவுச்சாலைகள் திடீர் பரிசோதனையையடுத்து மூடப்பட்டுள்ளன

29/09/2014  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் உணவுச்சாலைகளில் இன்று  திங்கட்கிழமை செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் பரிசோதனையை அடுத்து அந்த ஐந்து உணவுச்சாலைகளும் அவர்களால் பூட்டப்பட்டன.
அத்துடன் அந்த உணவுச்சாலைகளில் இருந்த பாவனைக்கு உதவாத உணவுப் பண்டங்களும் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் உணவு இன்றி தவிக்க நேரிடும் என்று சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து மூன்று உணவுச்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இது விடயமாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது
கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி உணவுச்சாலை ஒன்றில் பெறப்பட்ட உணவுப் பார்சலில் புழு காணப்பட்டதாக மாணவர் ஒருவரால் புகார் செய்யப்பட்டது. இதனை அடுத்து ஏறாவூர் பொலிஸாரும், மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகரும் ஞாயிற்றுக்கிழமை குறித்த உணவுச்சாலையை பரிசோதனை செய்து அதனை பூட்டினர்.
பின்னர் இன்று திங்கட்கிழமை அங்கு விஜயம் செய்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினர் ஏனைய 4 சாலைகளையும் பூட்டினர். செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச சபையிடமிருந்து அனுமதி பெறுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தும் அந்த அனுமதியை பெறத்தவறிவிட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் பாவனைக்கு உதவாத உணவுகளும் காலாவதியான உணவுகளும் அவர்களால் கைப்பற்றப்பட்டு 5 சாலைகளும் பூட்டப்பட்டன.
இதனை அடுத்து மாணவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பதட்டம் அங்கு நிலவியது. சம்பவத்தைக் கேள்வியுற்று பொலிஸாரும் அங்கு விரைந்தனர். இறுதியில் 10 நாட்களுக்குள் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 3 சாலைகளை மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.
நன்றி வீரகேசரி 











ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

02/10/2014 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா, கண்டி, கேகாலை, மாத்தளை, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய  மாவட்டங்களிலேயே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி



















No comments: