இந்திய அரசியல் வரலாற்றில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் முதல் முறையாக பதவியிழந்த முதல்வர்


கோப்புப் படம்.

.
இந்தியாவில் மக்கள் பிரதிநிதித் துவச் சட்டத்தின்கீழ் பதவியிழக்கும் முதல் முதல்வராகவும், முதல் பெண்மணியாகவும் ஜெயலலிதா ஆகியிருக்கிறார். தமிழகத்தைப் பொருத்தவரை அவர் இவ்விதியின் கீழ் பதவியிழக்கும் இரண்டாவது அரசியல்வாதியாவார்.
கடந்த 1991-96 ஆட்சிக் காலத்தில் ஊழல் முறைகேடு களில் ஈடுபட்டதாகக் கூறி ஜெயலலிதா மீது, அடுத்து வந்த திமுக ஆட்சிக்காலத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றில் மிக முக்கியமான வழக் காக சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு கருதப்பட்டது. இந்த வழக்கில் 18 ஆண்டுகள் கழித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் தொடர் புடைய அரசியல்வாதிகள், அந்த வழக்குகளில் குற்றவாளி என்பது நிரூபணமானால், உடனடி யாக பதவியிழப்பார்கள் என்று கடந்த ஆண்டு ஜூலையில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.


அதைத் தொடர்ந்து, அந்த தீர்ப்பின்படி முதலாவதாக பதவியிழந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் எம்.பி. ரஷீத் மசூத் ஆவார். அவர், வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியின்போது மத்திய அமைச்சராக இருந்தவர். அதன்பிறகு, பீஹாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தும் தனது எம்.பி. பதவியை இழக்க நேரிட்டது.
அமைச்சரவையும் பதவியிழக்கிறது
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக் கப்பட்டுள்ளதால் தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை உடனடியாக இழக்கிறார். அவரது முதல்வர் பதவியும் பறிபோகிறது. அவரது தலை மையிலான அமைச்சரவையும் பதவியிழக்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 1995,96-ம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த டி.எம்.செல்வகணபதியே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பதவியிழந்த முதல் தமிழக அரசியல்வாதியாவார். அவர், அமைச்சராக இருந்தபோது தொடரப்பட்ட சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் குற்றவாளி என கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப் பளிக்கப்பட்டதால், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர், தனது பதவியை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து ஜெய லலிதா, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பதவியிழக்கும் இரண்டாவது தமிழக அரசியல்வாதியாவார். இதுதவிர, இந்திய அரசியல் வரலாற்றிலேயே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் -8 (4) ன் கீழ் முதல் முறையாக பதவியை இழக்கும் முதல் முதல்வர் ஆகியுள்ளார் ஜெயலலிதா.
இதுதவிர, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்ற உத்தரவால் பதவியிழக்கும் முதல் பெண் இவர் என்பதும் குறிப் பிடத்தக்கது.

No comments: