திலீபன் – மொழிபெயர்ப்புக் கவிதை - ரிஷான் ஷெரிப்

.

புன்னகைக்கும் இதயம் 
கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும்
அழத் தோன்றும் முகத் தோற்றம் 
நேசத்தை யாசிக்கும்
யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து 
இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் ! 
திலீபன் ! காற்றில் உதித்தவன் !
நெஞ்சங்களில் 
அநேகமானவற்றை விட்டுச் சென்ற
முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில்
ஒரு ‘கமா’வாக மறைந்த
விலைமதிப்பற்ற யௌவனத்தை 
கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த
நேர்மையான புன்னகையும்
தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன்
அன்றிலிருந்து இன்று வரை 
கண்ணீர் ருசிக்கும் அன்னையர்
கைகளிலில்லா ஐவிரல்களையும் 
தேடியலையும் தந்தையர்
ஒன்றின் மீதொன்றாக அடுக்கப்பட்டிருக்கும் 
புதல்வர்களின் சடலங்களின் மீது 
ஓலமிட்டழுபவர்கள் 
எல்லா இடங்களிலிலும் 
இருக்கிறார்கள் திலீபன்

எரியும் விளக்கின் சுடரின் 
கதைகளைக் கேட்கும் இருளும்
‘பொறுமையை மாத்திரமே கைக்கொள்வோம்’ 
என்றே முனகும்
உருவாக்கப்பட்ட நாடகக் கோமாளிகள் 
விலகிச் செல்லும் கூடமும்
‘உண்ணாவிரதம் இருப்பது
எப்படியெனக் காட்டுகிறேன்’ எனக் கூறி 
மீண்டும் திலீபனுடன் அமைதியாகும்
நல்லூர் வானம் எனப்படுவது 
வெடிப்புற்ற பூமியென அறிந்து
சூரிய, சந்திரர்களை விடவும் 
கருமுகில்கள் அணி திரளும்
வாழ்க்கையில் சிறந்தவற்றை 
கோணலாகிய தினங்களிடையே ஒளித்து
சுவாசத்தை உடைத்துடைத்துப் பகிர்ந்து 
இதயத் துடிப்பு உறைந்ததோ திலீபன் அண்ணா…
- கசுன் மஹேந்திர ஹீனடிகல
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
கவிஞர் பற்றிய குறிப்பு
கசுன் மஹேந்திர ஹீனடிகல
இலங்கையில் சிங்கள மொழியில் எழுதும் கவிஞராகவும், எழுத்தாளராகவும், ஊடகவியலாளராகவும் அறியப்பட்டிருக்கும் கசுன் மஹேந்திர ஹீனடிகல, இலங்கை சட்டக் கல்லூரி மாணவராவார். ‘Kavi Acid’ எனும் இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு 2014 ஆம் ஆண்டு வெளிவந்து பலரது பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

No comments: