ஜீனியஸ் ஸ்ரீனிவாஸ் - வீயெஸ்வி

.
ஓவியம்: ம.செ

ரோஜா மாலைகளும் மலர் வளையங்களும் பாதி உடலை மறைத்திருக்க, கண்ணாடிப் பெட்டிக்குள் கண்கள் மூடிப் படுத்திருந்தார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். தனது வாசிப்பால் ஆயிரமாயிரம் பேரைக் கவர்ந்த 45 வயது நாயகன்.
நிஜமான ஜீனியஸ்களை, காலம் நீண்ட நாட்கள் விட்டுவைப்பது இல்லையோ? மழலை மேதையாக மேடையேறி, குறுகிய காலத்தில் உலகம் சுற்றி உச்சம் தொட்டவரை, கலைத் தாய் அவசரகதியில் தன்னிடம் திருப்பி அழைத்துக்கொண்டுவிட்டாள்.
ருடம் 1982... டிசம்பர் மாதம் 29-ம் நாள், புதன்கிழமை, நேரம்: பகல் 3:45.
இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி அமைப்புக்காக சென்னை, சங்கரதாஸ் கலை அரங்க மேடையில் பால் வடியும் முகத்துடன் 12 வயது சிறுவனாக ஸ்ரீனிவாஸ். வசீகரக் கண்கள் கொண்டவனின் கையில் மாண்டலின் என்கிற மேல்நாட்டுக் கருவி. ஆரம்ப காம்போதி வர்ணம் முடிவதற்குள்ளாகவே குழுமியிருந்தவர்கள் அவனது இசையில் மயங்கி, திறமையில் வியந்து, 'என்ன வாசிப்பு இது... அபாரமா இருக்கே!’ எனச் சிலிர்த்தனர்.


'அபாரம்’ தொடர்ந்தது. ஹம்ஸத்வனியையும், ஹம்ஸநாதத்தையும் ஸ்ரீனிவாஸின் பிஞ்சு விரல்கள் ரம்மியமாக வடித்துக்கொடுத்தன. அடுத்து நாகஸ்வரத்தின் குழைவு, புல்லாங்குழலின் இனிமை, கிளாரினெட்டின் கம்பீரம்... என கரகரப்ரியா ராகத்தில் சகலமும் சங்கமமாகி, சங்கீத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இறையருள் இருந்தாலொழிய இப்படி ஓர் அபார வாசிப்பு சாத்தியம் இல்லை. அதுவும் கர்னாடக இசைக்குக் கொஞ்சமும் தொடர்பு இல்லாத ஒரு வாத்தியத்தில் சாத்தியமே இல்லை என்பதை, அத்தனை பேரும் ஆனந்தப் பரவசத்தில் கலங்கியக் கண்களோடு ஒப்புக்கொண்டார்கள்.கர்னாடக இசை உலகில் ஒரு சூறாவளி, பலமாக வீசத் தொடங்கிய நாள் அது!
சாதாரண நிக்கர் சட்டையில், ஏழாம் வகுப்பில் படிக்கும் தோற்றத்தில் இருந்த ஸ்ரீனிவாஸை, அவரது வீட்டில் சந்தித்த தினம் நினைவில் நிற்கிறது. இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. மூவருக்கும் சொப்பு வைத்து விளையாடும் பருவம்.
தந்தை சத்தியநாராயணா, அன்றைய ஆந்திராவைச் சேர்ந்தவர். கோதாவரி மாவட்டம், பாலக்கொள்ளு இவர்களுக்குச் சொந்த ஊர். மெல்லிசை நிகழ்ச்சிகளில் கிளாரினெட் வாசித்துக்கொண்டிருந்த தந்தை எல்லாவற்றையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு, மகனின் இசையை வளர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டவர். ஸ்ரீனிவாஸின் கடைசிக் கச்சேரி வரை மேடையில் உட்கார்ந்து தாளம் போட்டு, அவ்வப்போது ஃப்ளாஸ்க்கில் இருந்து காபி எடுத்துக்கொடுத்து உதவியவர்.
ஸ்ரீனிவாஸின் குரு சுப்பராஜு. சிறுவன் ஸ்ரீனிவாஸின் இசைத் திறமையை உணர்ந்து, அவனை தன் பக்கம் இழுத்து, சரளி வரிசையில் ஆரம்பித்து, கச்சேரி மேடைக்குத் தயார்செய்து, 1980-ல் குடிவாடாவில் அரங்கேற்றம் நடப்பதற்குக் காரணமாக இருந்தவர்.                       தென் இந்தியாவில் கும்பகோணத்தில் (1981) ஸ்ரீனிவாஸின் முதல் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தவர், மறைந்த மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரன்.
அதன் பிறகு ஸ்ரீனிவாஸ் திரும்பிப் பார்க்கவே இல்லை. மாறாக, உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் அவரைத் திரும்பிப் பார்த்தார்கள். அவருடைய வாசிப்பைத் திரும்பத் திரும்பக் கேட்டார்கள்!
கொள்கைப் பரப்பு செயலாளர் போல செயல்பட்டு விளம்பரப்படுத்த ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களும், சாட்டிலைட் சேனல்களும் அறிமுகம் ஆகியிருக்காத காலத்தில், தன் உழைப்பையும் திறமையையும் மட்டுமே மூலதனமாகக்கொண்டு முன்னுக்கு வந்தவர் ஸ்ரீனிவாஸ். இசை உலகில் மேற்கத்திய, வட இந்திய, தென் இந்திய சிம்மங்களுடன் சமமாக மேடையேறி அசத்தியவர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஈடுகொடுத்து, சங்கீதத்தில் அவர்களை சவாலுக்கு அழைத்து, கணக்கு வழக்கில் சீண்டி விளையாடி மேடையைக் கலகலப்பு ஆக்குவார், பகுதாரி ராகப் பிரியரான ஸ்ரீனிவாஸ்.
எந்தவொரு கலைஞனும் முதலில் நல்ல ரசிகராக இருக்க வேண்டும். ஸ்ரீனிவாஸ் அதற்கு ஓர் உதாரணம். மேடையில் உட்கார்ந்து உதட்டோரப் புன்னகையோடும், உற்சாகத் துள்ளலோடும் அவர் வாசிப்பது அழகு ததும்பும் காட்சி. ராகம் ஒன்றை வாசிக்கும்போது, தான் நினைக்கும் சங்கதி மாண்டலின் இருந்து தெளித்து விழும்போதெல்லாம், வயலின் கலைஞரைப் பார்த்து குழந்தை மாதிரி அவர் சிரிப்பது ஒரு கவிதை. அதே மாதிரி, வயலின் - மிருதங்கம் - கடம் - கஞ்சிரா - மோர்சிங் என ஃபுல்பெஞ்ச் பக்கவாத்தியத்துடன் அமர்ந்து, ஒவ்வொருவரின் வாசிப்பையும் சபாஷ் போட்டுப் பாராட்டி மகிழ்வது, பிரும்ம லய ஞானம் கொண்டிருந்த ஸ்ரீனிவாஸின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.
வித்தையை அபரிமிதமாகக் கொண்டிருந்த ஸ்ரீனிவாஸ், வித்யா கர்வம் கொஞ்சமும் இல்லாத அபூர்வப் பிறவி. பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்; பண்பு நிறைந்தவர்; மரியாதை தெரிந்தவர்; மனிதநேயம் மிக்கவர்.
பாரத் கலாச்சார் கச்சேரி ஒன்றில், மூத்த கலைஞர் பாலக்காடு ரகு இவருக்கு மிருதங்கம் வாசித்தார். நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் வெளியே வந்திருக்கிறார்கள். கச்சேரியை ஆர்வமுடன் ரசித்த சிறுமி, தடாலென ஸ்ரீனிவாஸின் காலில் விழுந்ததும் பதறிப்போனார்.
''அவர்தான் பெரியவர்... அவர் கால்களைத் தொட்டு வணங்குறதுதான் சரி...'' என்று ரகுவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீனிவாஸ்.
''வயசுலதான் நான் பெரியவன். வித்தைல ஸ்ரீனிவாஸ்தான் பெரியவர்...'' என்று பின்னர் ரகு சொன்னபோது, சங்கடமாக நெளிந்தார் ஸ்ரீனிவாஸ்.
திருமணமாகி, ஆண் குழந்தையும் பிறந்துவிட்ட பிறகு தமது மணவாழ்க்கையில் முறிவு ஏற்பட்டதில் சுக்குநூறாக உடைந்துபோயிருப்பார் ஸ்ரீனிவாஸ். ஆனால், ஒருபோதும் அதை வெளிக்காட்டிக்கொண்டது இல்லை. மாண்டலினை ஜீவனாகவும், சங்கீதத்தைத் தவமாகவும்கொண்டு நாட்களை நகர்த்தியவர்.
''அவனுக்கு வேறு ஒண்ணுமே தெரியாது. எந்த நேரமும் ஜபம் பண்ணிண்டு இருப்பான். மாண்டலினைக் கட்டிண்டுதான் தூங்குவான். மகா பெரியவா நிச்சயம் அவனுக்கு நற்கதியைத்தான் கொடுப்பா...'' என்று ஸ்ரீனிவாஸின் உடல் அருகே நின்று அழுதவாறே சொல்லிக்கொண்டிருந்தார் 'விக்கு’ விநாயகராம்.
***
வ்வொரு தீபாவளி அன்று விடியற்காலையும், ஒவ்வொரு புது வருடத் தினத்தன்றும் தனக்கு நெருக்கமானவர்களை தொலைபேசியில் அழைத்து, உள்ளன்போடு வாழ்த்துத் தெரிவிப்பது ஸ்ரீனிவாஸின் பல வருடப் பழக்கம்.
அடுத்த மாதம் தீபாவளி வரும்; அதற்கு அடுத்த  இரண்டு மாதங்களில் நியூ இயர் வரும்.
ஆனால், ஸ்ரீனிவாஸிடம் இருந்து வாழ்த்து வராது!

No comments: