சங்க இலக்கியக் காட்சிகள் 25- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.


நோயும் அவளே! நோய்க்கு மருந்தும் அவளே!!


புலர்ந்தும் புலராத அதிகாலைப் பொழுது. வீடுகளிலே உள்ள மாட்டுத் தொழுவங்களிலே அடைத்துவைக்கப்பட்டுள்ள எருமை மாடுகளை ஆயர்கள் ஒவ்வொன்றாக வெளியே சாய்த்துக்கொண்டு வந்து மரங்களிலே கட்டுகிறார்கள். பின்னர் அவற்றின் கன்றுகளை அவிழ்த்து விடுகிறார்கள். எருமைக் கன்றுகள் எம்பிக் குதித்து ஓடிச்சென்று தத்தமது தாய் எருமைகளின் முலைகளை மோதி மோதிப் பால் குடிக்கின்றன. தாய் எருமைகள் தங்கள் தலைகளை வளைத்துத் பால் குடிக்கும் கன்றுகளை நாவால் நக்கி அன்பு காட்டுகின்றன. கன்றுகளின் கடைவாய்களிலிருந்த பால் வடிகின்றது.

சில நிமிடங்களின் பின்னர் ஆயர்கள் கன்றுகளை இழுத்து மரங்களிலே கட்டிவிட்டு எருமைகளில் பால் கறக்கின்றார்கள். பால் கறந்து முடிந்ததும் எருமைகளையும் கன்றுகளையும் அவிழ்த்துவிட்டு, மேய்ச்சல் தரைகளுக்கு அவற்றைச் சாய்த்துச் செல்கின்றார்கள். மாடு மேய்க்கும் சிறுவர்கள் எருமைகளின் மேல் ஏறியமர்ந்து அவற்றை ஓட்டிச் செல்கின்றார்கள். மெல்லிய இருளும் மெல்லமெல்ல நீங்கிப் பொழுது தெளிவாகப் புலர்ந்து வருகிறது. அந்த அதிகாலை நேரத்திலே தலைவன் தலைவியைத் தேடி வருகிறான். தழை ஆடைகளையும், மாலைகளையும் அவளுக்கு அன்புப் பரிசாகத் தருகிறான்.



தைமாதத்தின் முதல் நாளிலே அத்தகையதோர் அதிகாலை நேரத்திலே தலைவி தன் தோழிகளோடு பொய்கைக் கரைக்குச் செல்கின்றாள். எல்லோரும் பொய்கையில் இறங்கிக் குளிர்ச்சியான நீரிலே நீராடுகின்றார்கள். பின்னர் தன் மனங்கவர்ந்த காதலனை மணம்முடித்து வாழ்வதற்கு இறையருள் வேண்டி விரதம் இருக்கிறார்கள். தலைவியின் காதலன் தலைவியை நீண்டநாட்களாகக் காதலித்து வருபவன். அவளும் அப்படித்தான். அவளுக்கு ஆடைகளையும், மாலைகளையும் அன்பப் பரிசாகக் கொடுத்தவன் அல்லவா? அதனை விரப்பத்தோடு பெற்றுக்கொண்டவள் அல்லவா? அதனால் அவனே தன் கணவனாக வரவேண்டும் என்று தலைவியும் விரதம் இருந்து இறைவனை வேண்டுகின்றாள்.

இவற்றையெல்லாம் நன்கறிந்த தலைவன் - அவளின் காதலன் - காதல் நோயினால் வருந்துகிறான். தன்னைத் தலைவியுடன் களவு உறவிலே சேர்த்து வைக்கும்படி அவளின் தோழியொருத்தியிடம் கேட்கிறான். அவள் அதற்கு உடன்பட மறுக்கிறாள். அதனால், தலைவி மீது கொண்ட காதல் நோயினால் தான் அவ்வாறு தாங்கொணாமல் வருந்தவதையும், தனக்கு அந்த நோயினைக் கொடுத்தவள்தான் தன்னை நினைத்து விரதம் இருக்;கிறாள் என்பதையும், தன் நோய் தீர்க்கும் மருந்து அவளேயன்றி வேறு எதுவுமேயில்லை என்பதையும் அந்தத் தோழிக்குக் கேட்கும்படி, தலைவன் தனக்குத் தானே சொல்வது போல அமைந்த பாடல் இது.


“மன்ற எருமை மலர்தலைக் காரான்
இன்தீம் பால்பயம் கொண்மார் கன்று விட்டு
ஊர்க்குறு மாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து
தழையும் தாரும் தந்தனன் இவன் என
இழைஅணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள் அல்லது
மருந்துபிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே”

(பாடல் இல: 80, மருதத்திணை, பாடியவர் பூதன் தேவனார்)

“வீட்டிலேயுள்ள மாட்டுத் தொழுவத்திலேயுள்ள மிகவும் அகன்ற தலைகளையுடைய காரெருமைகளிலிருந்து இன்சுவை தருகின்ற பாலைக் கறந்து எடுப்பதற்காக ஆயர்கள் அவற்றின் கன்றுகளை முதலில் பால்குடிக்க விடுவார்கள். பாலைக்கறந்து எடுத்ததன் பின்னர், ஊரிலுள்ள மாடுமேய்க்கும் சிறுவர்கள் அந்த எருமைகளின் மேல் ஏறிக்கொண்டு அவற்றை மேய்த்துவருவதற்காகச் செல்வார்கள். பேரிருள் நீங்கிவரும் அத்தகைய அதிகாலை வேளையிலே - விருப்பத்தோடு வந்து உடுப்பதற்கு ஆடையும்ää அணிவதற்கு மாலையும் தனக்குத் தந்தவன் என்று கருதி என்னை அடைவதற்காக - தைத் திங்களிலே, நாணம் என்ற தகுதியும் அவளைத் தடை செய்ய, தன்தோழிகளோடு குளிர்ச்சியான பொய்கையில் சென்று நீராடி நோன்பிருக்கும் அந்த இளம் பெண்தான் எனக்கு வந்திருக்கும் இந்த (காதல்) நோய்க்கு மருந்தேயல்லாமல், வேறு மருந்துகள் எதுவுமே இல்லை” என்று தலைவன் தன்மனங்கவர்ந்தவளின் தோழிக்குக் கேட்கும்படியாகத் தன் நெஞ்சிடம் சொல்வதுபோல இப்பாடல் அமைந்துள்ளது.


இளம்பெண்கள் தைநீராடி நோன்பு இருந்தால் தாம் விரும்பியவரைக் கணவனாக அடையலாம் என்ற நம்பிக்கையால், தைநீராடி நோன்பிருக்கும் வழக்கம் அக்காலத்தில் நிலவியிருக்கிறது என்பதை இந்தப்பாடல் மூலம் அறிய முடிகின்றது.

No comments: