பல்லின கலாசார வாழ்வின் வலிகளும் சவால்களும் சாதனைகளும் - ரஸஞானி

.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய சமூகத்தின் கதை பகிர்வு நிகழ்வு
        
                                                                                        
அவுஸ்திரேலியா குடியேற்ற நாடாகவும் பல்லின கலாசார நாடாகவும் விளங்குகின்றமையினால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு புகலிடம் பெற்று வாழ்பவர்கள் மத்தியில் சொல்லவேண்டிய கதைகளும் சொல்ல முடியாத கதைகளும் சொல்லத்தயங்கும் கதைகளும் சொல்ல மறந்த கதைகளும் ஏராளமாக இருக்கின்றன.
புகலிடம் பருவகால மாற்றம் தொழில் வாய்ப்பு கல்வி தலைமுறை இடைவெளி மனச்சிக்கல்கள் மொழிப்பிரச்சினை குடும்ப உறவுகள் முதியோர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உணவு நாகரீகம் நட்பு வட்டம் இன அடையாளம் கலாசார மாற்றங்களும் பிரழ்வுகளும் என இன்னோரன்ன விவகாரங்கள் புலம்பெயர்ந்த மக்களின் வாழ்வனுபவங்களில் சஞ்சரிக்கின்றன.
அவற்றை ஒவ்வொருவரும் எவ்வாறு எதிர்கொள்கின்றனர். சந்திக்கும் சவால்கள் சாதனைகள் கனவுகள் முதலானவற்றை தனிமனிதப்பார்வையிலும் சமூகப்பார்வையிலும் பகிர்ந்துகொள்ளும் வித்தியாசமான நிகழ்வினை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நேற்று முன்தினம் 16 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் நடத்தியது.



இச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவரும் இலக்கியப்படைப்பாளியுமான டொக்டர் நடேசன் தலைமையில் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளிலுமிருந்தும்  வருகை தந்து இந்நாட்டில் புகலிடம் பெற்ற பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இலங்கை இந்தியா ஆப்கானிஸ்தான் பங்களதேஷ் முதலான நாடுகளை பூர்வீகமாகக்கொண்டவர்கள் இந்நிகழ்வில் தத்தம் கதைகளை சுவாரஸ்யமாகவும் கருத்தாழத்துடனும் பகிர்ந்துகொண்டனர்.
பல்தேசிய கலாசார சிந்தனைகளை பதிவுசெய்வதற்கும் அதன் ஊடாக இனநல்லிணக்கத்தை பேணுவதற்கும் ஒவ்வொருவரிடமும் சர்வதேசப்பார்வையை உருவாக்குவதற்கும் பரஸ்பரம் கருத்தாடல்களுக்கு சமூகத்தின் கதை பகிர்வு நிகழ்வு சிறந்த களமாகும் என்று இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற சங்கத்தின் தலைவர் டொக்டர் நடேசன் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.


விக்ரோரியா பாராளுமன்ற உறுப்பினர் திரு. அலென் கிறிஃப், விக்ரோரியா மாநிலத்துக்கான இலங்கைத்தூதரக பிரதிநிதியும் பஹன இதழின் ஆசிரியருமான திரு. பந்து திஸாநாயக்கா, தென்னாசிய அரசியல் விவகாரங்களுக்கான அமைப்பின் பிரதிநிதி திரு. மனோஜ் குமார், திருமதி மங்கலம் வாசன், திருமதி உஷா சந்திரன், சட்டத்தரணி குமார் எதிரிவீர, விக்ரோரியா மாநிலத்திலத்தின் முதலாவது முஸ்லிம் பெண் தொழிற்சங்கவாதி ஜனாபா சித்தி மரைக்கார், திருமதி சிராணி திஸாநாயக்க, திருமதி டெல்ஹி பெரேரா, ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து குடியேறிய அப்துல் ஹமீட், ஆகியோரும் இலங்கையிலிருந்து படகில் வந்துசேர்ந்த சில அகதி இளைஞர்கள் மற்றும் குடும்பத்தலைவர்களும் தமது வாழ்வின் கதைகளை இந்நிகழ்வில் பகிர்ந்துகொண்டனர்.


படகில் வந்து சேர்ந்த தமிழ் அன்பர்கள் தமது கடல் பயண அனுபவங்களை திகிலுடன் விபரித்தனர். சில நாட்கள் ஒரு மிடறு தண்ணீரும் ஒரு பிஸ்கட்டுடனும் தமது நாளாந்த பசியை அவர்கள் போக்கிக்கொண்டதாக கூறியது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புலப்பெயர்வு ஏற்படுத்தியிருக்கும் வலிகளும் பிறந்த மண் குறித்த ஏக்கங்களும் அதே சமயம் அவுஸ்திரேலியா பல்லின கலாசார வாழ்வுடன் ஒன்றித்து சிக்கல்களையும் தடைகளையும் தாண்டி பெற்றுக்கொண்ட அனுபவங்களும் அந்த அனுபவங்களின் வெளிப்பாடான சாதனைகளும் அவர்களின் கதைகளில் வெளிப்பட்டன
இந்நிகழ்வில் மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்ட அன்பர்கள் திருவாளர்கள் சுந்தரமூர்த்தி மற்றும் சுந்தரேசன் ஆகியோரும் தமது சிறப்பான மொழிபெயர்ப்பின் ஊடாக தமிழ் தெரியாத அன்பர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய கதைகளை தெரிவித்தனர்.

இறுதியில் நடந்த கலந்துரையாடலில் காலத்துக்கு காலம் இதுபோன்ற சமூகத்தின் கதை பகிர்வு நிகழ்ச்சிகளை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தவேண்டும் என்று ஏகமனதான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

No comments: