தேரடியில் தேசிகனைக் கண்டேன்! - கானா பிரபா

.


சிறுவயதில் சைவ சமய பாடம் படிக்கும் போது வகுப்பில் எப்போதும் எனக்கு அதிக மதிப்பெண் கிடக்கும். இதுவே பின்னாளில் என் கல்விப் பொதுத்தராதர உயர் வகுப்பில் இந்து நாகரிகத்தை வர்த்தகத்துறையின் நான்காவது விருப்பத்தேர்வுப்பாடமாக எடுப்பதற்கும் அடிகோலியது.

எனோ தெரியவில்லை, இணுவில் மக்களுக்கும் சமயப் பற்றிற்கும் அவ்வளவு ஈடுபாடு. ஏ.எல் வகுப்பில் கணக்கியல் பாடமெடுத்ததார் சிறீ மாஸ்டர். என் சகபாடிகளோடு யாழ் நகர் வந்து அவரின் ரியூசனுக்குப் போகும் போது " வந்திட்டான்கள் இணுவிலான்கள், பொட்டுக் குறியோட" என்று நக்கலடிப்பார். ரவுண் பக்கம் இருந்து படிக்க வரும் பெடியன்கள் ஒருமாதிரி ஏளனச் சிரிப்பை அள்ளி விடுவர். இந்து மதம் மீதும் தேவாரப் பதிகம் மீதும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இயல்பாகவே இருந்தது என்றாலும், என்னை மிகவும் கவர்ந்தது ஈழத்தில் தோன்றிய சித்தர்களின் குரு சீட மரபு. என் இந்த ஈடுபாடு தோன்றக் காரணம், இன்றுவரை நல்லூர்க்கந்தனையும், சிவதொண்டன் நிலையத்தையும் ஒவ்வொரு வெள்ளிதோறும் தரிசித்து வரும் என் தந்தை, என் சிறுவயதில் என்னை நல்லூர்க் கோயிலுக்கு சைக்கிளில் ஏற்றி அழைத்துப் போகும் காலத்தில் வழி நெடுக யோகர் சுவாமிகளின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே வருவது தான். கோயிலை அண்மிக்கும் போது அவர் வாய், யோகர் சுவாமிகளின் " நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி" என்ற பாடலை முணுமுணுக்கத் தொடங்கிவிடும். நல்லைக் கந்தனைத் தரிசித்துவிட்டு வெளியேறும் போது தேரடியோடு இருக்கும் செல்லப்பா சுவாமிகள் தியானமிருந்த மரத்தை மூன்று முறை சுற்றி "அப்பூ" என்று உளமுருகுவார், பின்னால் அவர் வேட்டியை பிடித்தபடி நான்.


பிறகு தானாகவே அவரின் சைக்கிள் சிவதொண்டன் நிலையத்துக்கு இட்டுச் செல்லும். சிவதொண்டன் நிலையத் தியான மண்டபம் நுளைந்துவிட்டாற் போதும் மயான அமைதி தவழும். அடியவர்கள் தம் காலை மடித்து நீண்டதொரு நிஷ்டையில் ஈடுபட்டிருப்பர்.

சைவசித்தாந்தம் தழைத்தோங்கிய காலத்தில் எப்படியொரு நீண்டதொரு குரு சீடமரபு இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு ஒரு நீண்டதொரு குருசீட மரபு ஈழத்தின் வடபுலத்திலும் இருந்தது.

சித்தானைக் குட்டிச்சுவாமியின் வழி கடையிற்சுவாமிகளும், கடையிற்சுவாமி வழி, செல்லப்பாச் சுவாமிகளும், செல்லப்பாச் சுவாமிகள் வழி யோகர் சுவாமிகளுமாகத் தோன்றியதே இந்தச் சித்தர்களின் குருசீடப்பரம்பரை.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் பற்றிய கவி ஒன்றை யாத்திருக்கின்றார். கடையிற்சுவாமிகள் யாழ்ப்பாண நகர் பெரிய கடை வீதி வழியே செல்லும் போது அக்கடைவீதி வாழ் வணிகர்கள் அவரைப் போற்றித் துதித்திருக்கின்றார்கள். "பெரியகடை நாதன், பித்தன் திருக்கோலம்" என்ற பாடலும் இவரையே குறித்து எழுதப்படிருக்கின்றது.

ஆத்மஜோதி என்ற ஈழத்து பக்தி சஞ்சிகையை முன்னர் நாவற்குழியிலுருந்து வெளியிட்டவர் ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள். என் கல்லூரி நூலகத்தில் அதன் பிரதிகள் பலவற்றைப் படித்த அனுபவமும் உண்டு. இந்த ஆத்மஜோதி சஞ்சிகையில் "ஈழத்துச் சித்தர்கள்" என்ற கட்டுரையைத் தொடராக எழுதிப், பின்னர் நூலுருவில் வெளியிட்டவர் ஆத்மஜோதி முத்தையா. நான் என் சமய வகுப்பில் படித்ததும், இப்படியான கட்டுரைகள் மூலம் படித்ததுமாக என் ஞாபகக் கிடங்கில் வைத்த தகவல்களை வைத்தே இக்கட்டுரையை யாத்திருக்கின்றேன்.

சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பார்கள், இது செல்லப்பா சுவாமிகளுக்கு நிரம்பவே பொருந்தும். சாத எந்நேரமும் சிவ சிந்தையுடன் இருந்தாலும், தன்னை விடுப்புப் பார்க்கவரும் அன்பர்களைக் கண்டாற் போதும் கடும் கோபம் வந்துவிடும் இவருக்கு. தூஷணை வார்த்தைகளால் ஏசியவாறே துரத்துவார். இதனால் இவரின் அருமை அறியாத சாதாரணர்கள் இவரை "விசர் செல்லப்பா" என்ற அடைமொழியோடே அழைத்தனர். ஆனால் இந்தத் திட்டல்களையும் மீறி செல்லப்பனே பழி என்று கிடந்தால் ஞானோதய நன்மார்க்கம் கிட்டும். அதற்கு நல் உதாரணம் யோகர் சுவாமிகள்.

கிளிநொச்சி நீர்ப்பாசன இலாக்காவில் களஞ்சியக் காப்பாளராக இருந்த சதாசிவன் ஒருமுறை செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ணுறுகின்றார். செல்லப்பாவின் வழமையான அர்ச்சனைகள் அவருக்கும் கிடைக்கின்றன (யாரடா நீ, தேரடா உள்ளே ) ஆனால் அவரின் வாக்கியத்தில் பொதிந்திருந்த உன்னை நீ அறிந்து கொள் என்ற மகா உண்மையை உணர்ந்து அக்கணமே செல்லப்பாவின் சீடனாகினார். அவர் தான் பின்னாளில் சிவயோக சுவாமிகள் எனவும் யோகர் சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர்.

யோகர்சுவாமிகளின் மகா வாக்கியங்களாக "எப்பவோ முடிந்த காரியம்", "ஒரு பொல்லாப்புமில்லை", "யார் அறிவார்" போன்றவை போற்றப்படுகின்றன. யோகர் சுவாமிகளால் சிவதொண்டன் நிலையம் என்ற ஆன்மீக மையமும், சிவதொண்டன் என்ற மாத இதழும் தோற்றம் பெற்று இன்றும் நிலைத்து நிற்கின்றன. இவரின் மகா சிந்தனைகள்
"நற்சிந்தனை" ஆக நூலுருப் பெற்றது.

உலகெலாம் பரந்துவாழும் இவர் பக்தர்கள் ஆன்மீக நிலையங்கள் அமைத்துக் குரு பூசைகளையும், நற்பணிகளையும் ஆற்றி வருகின்றார்கள்.
மேலதிக தகவலுக்கு சகோதரர் கனக சிறீதரனின் வலைப்பூவையும் பார்க்க:
http://kanaga_sritharan.tripod.com/yogaswami.htm

சிவதொண்டன் நிலைய இணையத் தளம்
http://sivathondan.org/index.htm

கடந்த 2005 ஆம் வருடம் நான் யாழ் சென்றபோது, நல்லைக் கந்தன் ஆலயம் சென்று தரிசித்துவிட்டு வழக்கம் போல் தேரடி வீதியிலுள்ள மரத்தடி சென்று மூன்று முறை சுற்றுகிறேன். பின் குருமணலில் பொத்தெனப் பதியும் என் கால்கள் வெயிற் சூட்டைக் களஞ்சியப்படுத்திய குருமணலின் வெம்மைத் தகிப்பால் சூடுபட்டு வேகமெடுக்கின்றது என் நடை. அப்போது தான் பார்க்கிறேன். இதுவரை ஒருமுறைகூட என் கண்ணில் அகப்படாது போனதொன்று அது.

தேர் முட்டிக்கு எதிர்த்தொலைவில் இருந்த ஒரு குருமடம் தான் அது. தகிக்கமுடியாத ஆவலில் அம்மடத்தின் உள்ளே நுளைந்ததும் தானாகவே என் கரங்கள் கூப்பி நிற்கின்றன.
செல்லப்பாச் சுவாமிகளின் குருமடம் தான் அது.அமைதியும் தவழ, ஊதுபத்தி வாசனை நிறைக்க சிறியதோர் இடத்தில் இருக்கின்றது இந்த ஆன்மீக பீடம். தரிசனை முடிந்து புதியதொரு உத்வேகம் தழுவ வீடு நோக்கிப் புறப்பட்டு, என் அப்பாவிடம் இக்குருமடம் சென்ற சேதியைச் சொல்லுகின்றேன். அவரும் அகமகிழ்கின்றார்.


செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ட கணத்தை யோகர் இப்படிச் சொல்லுகின்றார்,
"தேரடியில் தேசிகனைக் கண்டேன், தீரெடா பற்றென்றான், சிரித்து".
இதை என் மனக்கண்ணில் நினைக்கும் போதும் எழுதும் போதும் மெய்சிலிர்க்கின்றது எனக்கு.

1 comment:

Anonymous said...

கானா. பிரபாவின் சித்தர்கள் பற்றிய ஆக்கம் படித்தேன். யோகர் சுவாமிகள் பற்றி பல கதைகள் உண்டு. எனக்குத்தெரிந்த ஒரு யாழ்ப்பாணம் அன்பரின் பெண்குழந்தைக்கு கடுமையான நோய். யாழ். ஆஸ்பத்திரி மருத்துவர்கள் இனி உயிர் தப்பாது என்று கைவிட்டுவிட்டனர். அந்த அன்பரும் அவரது மனைவியும் கதறிக்கொண்டு வந்து யோகர் சுவாமிகளின் முன்னால் நிற்கிறார்கள். அவரிடம் தங்கள் அருமைக்குழந்தையின் நிலை பற்றி பதறிக்கொண்டு சொல்கிறார்கள். யோகர் சுவாமிகள் - எதற்கும் கவலைப்படாதே என்று அந்தக்குழந்தையை ஆசிர்வதித்துவிட்டு இந்தக்குழந்தை பல்லாண்டுகள் வாழும் என்று சொல்லி அனுப்பியதுடன் உடனடியாக யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் ஸ்ரீகாந்தாவிடம் போ. நான் சொன்னதாகச்சொல் உனக்கு ஒரு காணி வேண்டும். ஏற்பாடு செய்யச்சொல் உனக்கு நிச்சயம் கிடைக்கும். இந்தக்குழந்தையின் யோகம் அப்படி என்றாராம்.
யோகர் சுவாமிகள் சொன்னது போன்று அந்த அன்பருக்கு ஒரு காணியும் கிடைத்திருக்கிறது. அந்தக்குழந்தை பெரியவளாகி படித்து தற்பொழுது அவுஸ்திரேலியாவில் சிறந்த குடும்பத்தலைவியாகவும் பேரன் பேத்திகளை கண்டுவிட்ட அம்மம்மாவாகவும் இருக்கின்றார்.
யோகர் சுவாமியிடம் பல வருடங்களின் முன்னர் ஓடிச் சென்ற அந்தத் தமிழ் அன்பர்தான் அமரர் ஓவியர் செல்லத்துரை அய்யா. யோகர் சுவாமிகளின் படத்தையும் வரைந்து இன்றும் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் ஒளிப்படத்தையும் எடுத்தவர்தான் இந்த செல்லத்துரை அய்யா.
சித்தர்கள் பற்றி பேராசிரியர் சிவத்தம்பியும் ஜெயமோகனும் எழுதியிருக்கிறார்கள். நல்லதொரு பதிவைத்தந்த கானா. பிரபாவுக்கு வாழ்த்துக்கள்.
முருகபூபதி
மெல்பன்.