திரும்பிப்பார்க்கின்றேன் -முருகபூபதி

.
 ஈழத்து இலக்கியப்படைப்புகளுக்கு அடிக்குறிப்பு கேட்ட கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன்

தமிழில்   புதுக்கவிதை    இலக்கியம்    அறிமுகமான     காலப்பகுதியில்  அதனை    வன்மையாக   எதிர்த்தவர்கள்   இரண்டுபேர்.
ஒருவர்    பாரதி   இயல்  ஆய்வாளர்   தொ.மு.சி ரகுநாதன்.    மற்றவர் கலைமகள்   இதழின்   ஆசிரியர்    கி.வா.ஜகந்நாதன்.    புதுக்கவிதை விடயத்தில்    இவர்களிடம்    மாறுபட்ட    கருத்துக்கள்   இருந்தன. இலக்கியக்கோட்பாடுகள்    குறித்தும்    நிரம்பவும்   வேறுபட்டவர்கள்.
ரகுநாதன்    ஒரு   கம்யூனிஸவாதி.    கி.வா.ஜகந்நாதன்    ஆத்மீகவாதி. ஜகந்நாதன்    எப்பொழுதும்   நெற்றியில்   திருநீறு   துலங்க சிவப்பழமாகக்காட்சியளிப்பவர்.    ரகுநாதன்    அப்படியல்ல.
கி.வா.ஜ.   என   அறியப்பட்ட   ஜகந்நாதன்    இந்துசமய   இலக்கியங்கள் பழந்தமிழ்    இலக்கியங்கள்   மற்றும்   இராமாயணம்   மகா   பாரதம்   குறித்தே அதிகம்    எழுதியவர்    பேசியவர்.   அத்துடன்    நாட்டார்    இலக்கியம்   சிறுகதை இலக்கியத்துறை    இலக்கிய    விமர்சனங்களிலும்   ஈடுபட்டவர்.  சிறந்த ஆத்மீக    சொற்பொழிவாளராகவும்   விளங்கியவர்.
தமிழ்த்தாத்தா    என்று   அழைக்கப்படும்    உ.வே. சாமிநாதய்யரின் மாணாக்கர்.   இரட்டை    அர்த்தத்தில்    சிலேடையாக    பேச வல்ல   கி.வா.ஜ. எங்கள்    நீர்கொழும்புக்கும்   சில   தடவைகள் வந்து   உரையாற்றியிருக்கிறார்.




இன்று    இந்து   இளைஞர்    மன்றமாக    இயங்கும்    நீர்கொழும்பின்    முன்னைய     இந்து    வாலிபர்    சங்கத்திற்கு   வயது  எண்பதிற்கும்  அதிகம். இந்தச் சங்கத்தினால்   1954   ஆம்   ஆண்டு    விஜயதசமியின்போது தொடங்கப்பட்ட   பாடசாலைதான்    தற்பொழுது   வடமேல்   மாகாணத்தில்  கம்பஹா    மாவட்டத்திலேயே    தமிழ் மாணாக்கர்களுக்காக    விளங்கும்   ஒரே   ஒரு    விஜயரத்தினம்    இந்து   மத்திய   கல்லூரி.  அந்த  விஜயதசமி நாளன்றுதான்   எனக்கு   ஏடுதுவக்கப்பட்டு   வித்தியாரம்பம் செய்துவைக்கப்பட்டது.    என்னுடன்    சேர்த்து  32  குழந்தைகளுடன் அந்தப்பாடசலை    விவேகானந்தா   வித்தியாலயம்   என்ற   பெயருடன் தொடங்கியது.    பின்னர்    அதன்    ஸ்தாபகரும்    நீர்கொழும்பு    நகரபிதாவுமான விஜயரத்தினம்   என்ற   பெரியவரின்   பெயரில்   இயங்கிவருகின்றது.
அந்த   ஊரில்   ஒரு   தமிழர்    நகரபிதாவாக   (மேயர்)   இருந்திருக்கிறார்  என்ற   செய்தி   தற்காலத்தில்   அதிசயமாகவும்    கருதப்படலாம்.
இந்தப்பாடசாலையின்  முதல்   மாணவன்   என்ற    பெருமை   எனக்கு கிடைத்தது    தற்செயலானது.   (பாடசாலையில்   எனது   சேர்விலக்கம் 01)
அதனால்   எனக்கு    இந்தக்கல்லூரியுடனும்    அதனை    ஸ்தாபித்த  இந்து இளைஞர்    மன்றத்துடனும்   கடலும்   வானமும்   போன்ற   நெருக்கம்.   நகமும்   சதையுமான    அத்தியந்த   உறவு    நீடிக்கிறது.
இந்து   இளைஞர்   மன்றத்துக்கு   தமிழ்நாட்டிலிருந்தும்   இலங்கையின்   பல   பாகங்களிலுமிருந்தும்    வருகை   தரும்   பேச்சாளர்களின்   உரைகளை கேட்பதற்காகவே    அந்த    மண்டபத்திற்கு   சிறுவயது  முதல்   செல்வது  எனது   வழக்கம்.
எங்கள்    ஊருக்கு    வருகைதரும்   பிரபல    தமிழ்   அறிஞர்கள் அனைவருக்கும்   அங்கே    ஊர்வலத்துடன்கூடிய   வரவேற்பு   நிச்சயம்  இருக்கும்.
1972   ஆம்   ஆண்டில்   நான்   வீரகேசரி    பத்திரிகையின்     நீர்கொழும்பு நிருபராகவும்   இயங்கிய    காலப்பகுதியில்   தமிழ் நாட்டிலிருந்து   இலங்கை  வந்திருந்த    கலைமகள்   ஆசிரியர்   கி.வா.ஜகந்நாதனுக்கும்   வரவேற்பளிக்க மன்றம்    முடிவுசெய்திருந்தது.
கி.வா.ஜ.   இராமனின்   சகோதரர்கள்   என்ற   தலைப்பில்   உரையாற்ற வந்திருந்தார்.   அவரது    உரையை   சொற்பொழிவு    எனச்சொல்வதா உபந்நியாசம்    என    அழைப்பதா    என்பது    தெரியவில்லை.
அந்த   மேடையில்    தரையில்   ஒரு   சிவப்பு    கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.   அதில்    அமர்ந்து   கி.வா.ஜ.   சுமார்   இரண்டு மணிநேரம்   பேசினார்.    அவரது    பேச்சு  மிகவும்   சுவாரஸ்யமாகவே சபையினரை   கவரும்விதமாக  அமைந்திருந்தது. கம்பராமாயணக்காட்சிகளை   நயமுடன்   விளக்கினார்.    எளிமையான வார்த்தைகளை   பிரயோகித்தார்.


நான்    மேடைக்கு    அருகிலிருந்து   அவரது    உரையை    குறிப்பெடுத்தேன். அவரது   உரை    முடிந்து    மன்றத்தின்   செயலாளரின்   நன்றியுரையும்   முடிவடைந்த    பின்னர்    கி.வா.ஜ .   ஒரு   பெருமூச்சை   உதிர்த்தவாறு   தரையில்   கையூன்றி   எழுந்தார்.    அவருக்கு   வியர்த்திருந்தது.   அவரது வெள்ளை   வேட்டியில் -   அவர்மீது   படிந்த    வியர்வையினால்   அந்தச் செங்கம்பளத்தின்    சிவப்புச்சாயம்    பதிந்துவிட்டது.
உடனே - அய்யா   உங்கள்   வேட்டியில்   சாயம்   ஒட்டிக்கொண்டது என்றேன்.    நல்லதுதான்.    சாயம்   போகவில்லை   என்பது  ஆறுதலான   விடயம்தானே   தம்பி    என்றார்   சிலேடையுடன்.    அங்கு  நின்றவர்கள் அதனைக்கேட்டு   ரசித்து   சிரித்தனர்.
அந்த  நிகழ்ச்சிக்குப்பின்னர்  மன்றத்தின்   தலைவரும்   நீர்கொழும்பு மாநகராட்சி    மன்றத்தின்   மூன்றாம்   வட்டார    உறுப்பினருமான   ஜெயம் விஜயரத்தினம்   அவர்கள்    அந்த   மண்டபத்தின்  முன்னால்  அமைந்துள்ள அவரது   சகோதரர்   நவரத்தினம்    அவர்களின்   இல்லத்தில்   இராப்போசன விருந்துக்கு    ஒழுங்குசெய்திருந்தார்.
நான்    கி.வா.ஜ.வுடன்   இலக்கியம்    பேசியவாறு   அழைத்துச்சென்றேன். தான்   இரவில்    உணவருந்துவதில்லை   என்று   அவர்  சொன்னதும்  விருந்துக்கு   ஏற்பாடு    செய்தவர்களுக்கு    ஏமாற்றமாகிவிட்டது.   அவருக்காகவே    பல்சுவையில்   மரக்கறி   உணவுவகைகள்   தயார் செய்யப்பட்டு    பெரிய   மேசையில்    இருந்தன.   தனக்கு   ஒரு வாழைப்பழமும்    ஒரு   கிண்ணத்தில்   பாலும்   தந்தால்   போதும்  என்றார்.   மற்றவர்களை    விருந்துக்குச்செல்லுமாறு   அனுப்பிவிட்டு அங்கிருந்தவர்களில்    அவருடன்   நான்   மாத்திரம்    இலக்கியம்   பேசியதனால்   என்னை    அந்த   வீட்டின்   முன்  விறாந்தைக்கு   அழைத்துக்கொண்டு   வந்து    அங்கிருந்த    சாய்மனைக்கதிரையில்  சாய்ந்தார்.
ஜெயம்   விஜயரத்தினம்   -   கி.வா.ஜ.வுக்கு    பெரிய   வாழைப்பழம் ஒன்றைக்கொண்டு   வந்து  நீட்டினார்.
இதுவும்   தனக்கு  அதிகம்   எனச்சொல்லிவிட்டு   அதனைப்பிரித்து   எனக்கு ஒரு   பாதியைத்தந்தார்.   நானும்   சற்று   கூச்சத்துடன்   பெற்றுக்கொண்டேன்.
கி.வா.ஜ.   பற்றி   எமது   முற்போக்கு    எழுத்தாளர்கள்  மட்டுமல்ல இலங்கையில்    மறுமலர்ச்சி   கால    கட்ட    எழுத்தாளர்களின்   வழியில்   வந்த பல   எழுத்தாளர்களும்   காட்டமாக    இருந்த   காலம்  அது.
காரணம்  -   கி.வா.ஜ.    எங்கோ   ஓரிடத்தில்   ஈழத்து இலக்கியப்படைப்புகளுக்கு    அடிக்குறிப்பு   தேவை   என்று    பேசிவிட்டார்.
ஈழத்து   எழுத்தாளர்கள்   வெகுண்டு   எழுந்தார்கள்.    அதற்கு   முன்னர் இலங்கை   வந்திருந்த   கங்கை  இதழின்   ஆசிரியர்   பகீரதனும்  ஈழத்து தமிழ்   இலக்கியம்   பத்தாண்டுகள்    பின்னிற்பதாக   வேறு  சொல்லிவிட்டார்     என்ற   கோபத்தில்    இருந்தனர்    இலங்கைத்தமிழ்   எழுத்தாளர்கள்.


அச்சந்திப்பில்   கி.வா.ஜ. விடம்   இதுபற்றிக் கேட்டேன்.    இலங்கையில் குறிப்பாக   வடபிரதேச    தமிழ்   மக்களின்   மொழிவழக்குகள்   தமிழக வாசகர்களுக்குப்    புரியவில்லை    என்பதுதான்   அவரது   வாதமாக இருந்தது.
தமிழ்நாட்டில் -   சென்னையில்  - மதுரையில்   - தஞ்சையில் திருநெல்வேலியில்     பேசப்படும்   மொழிவழக்குகளில்   வெளியாகும் சிறுகதைகள்    தொடர்கதைகளை   எம்மவர்கள்   எப்படியோ புரிந்துகொள்கிறார்களே.   இங்கிருப்பவர்கள்    உங்கள்  நாட்டு எழுத்தாளர்களிடம்    அடிக்குறிப்பு    கேட்கவில்லையே   என்றேன்.
தொடர்ச்சியாக    தமிழக    இலக்கியங்களை   இலங்கை  வாசகர்கள் படித்துவருவதனால்    தமிழக   பிரதேச   மொழிவழக்குகள்   பற்றிய   புரிதல்  இருக்கிறது.   தமிழ்நாட்டின்   கல்கி,    ஆனந்தவிகடன்,   கலைமகள்     என்பனவற்றை   தொடர்ந்தும்   இலங்கையில்   வாசிக்கிறார்கள்.   தமிழ்  நாட்டு    திரைப்படங்களைப்   பார்க்கிறார்கள்.   தம்மைப்போன்று   பலர் இலங்கைக்கு    அடிக்கடிவந்து   உரையாற்றுகிறார்கள்.    ஆனால்    தமிழக வாசகர்களுக்கு    இலங்கையிலிருந்து   இந்த   வாய்ப்புகள்    வருவதில்லை. கிடைப்பதில்லை.   என்றார்.
அப்படியென்றால்   தொடர்ச்சியாக   அடிக்குறிப்புகளை   இலங்கை இலக்கியப்படைப்புகளில்    எதிர்பார்க்கிறீர்களா?    எனக்கேட்டேன்.
தம்பி   நீ...   முற்போக்கு   எழுத்தாளர்   சார்பிலிருந்து   பேசுவதாகவே தெரிகிறது.    இலங்கையிலிருக்கும்    இடதுசாரி   முற்போக்கு எழுத்தாளர்களிடமிருந்துதான்    எனது   குரலுக்கு   முதலில்   எதிர்ப்பு வந்தது   என்பதும்   தெரியும்.   இப்பொழுது   அவர்கள்   தங்கள்   சகாவாக    முன்பு    இருந்த   ஜெயகாந்தனையும்   கண்டித்து   எழுதுகின்றார்கள்.    ஜெயகாந்தன்   முன்பு   சரஸ்வதி    -   தாமரை   முதலான   முற்போக்கு     சஞ்சிகைகளில்   எழுதினார்.    தற்காலத்தில்   அவர்   ஆனந்தவிகடனில்     முத்திரைக்கதைகளை    எழுதுகிறார்.   அவர்    விலைபோய்விட்டதாக   எழுதுகிறார்கள்   உங்கள்   முற்போக்கு    எழுத்தாளர்கள்   எனச்சொன்ன      கி. வா .ஜகந்நாதன்   பேச்சை    திசைமாற்றினார்.
சற்றுநேரம்   அமைதியாக   இருந்துவிட்டு   உங்கள் நாட்டு   எழுத்தாளர் தெளிவத்தை   ஜோசப்   என்பவரின்   கதையையும்   நான்  கலைமகளில்   பிரசுரித்திருக்கின்றேன்    என்றார்.   அவர்   எங்கே    இருக்கிறார்?  என்ன செய்கிறார்?  முதலான   விபரங்களையும்   கேட்டார்.
எமது   உரையாடல்   அக்காலப்பகுதியில்   பெரும்   இலக்கிய சர்ச்சையை   ஏற்படுத்தியிருந்த   புதுக்கவிதையின்   பக்கம்   திரும்பியது.
அதென்ன   புதுக்கவிதை.   இலக்கியத்தில்  கவிதை   மாத்திரம்தான் இருக்கிறது.   புதுக்கவிதை --  புதுவெள்ளம்    போன்றது.   புதுவெள்ளத்தில்      குப்பையும்   கழிவுகளும்    அள்ளுப்பட்டு   ஓடும்.    அதுபோலத்தான்   புதுக்கவிதையும்    என்றார்   கி.வா.ஜ.    நீண்டகாலத்துக்கு    புதுக்கவிதை    நிலைக்காது    என்பதுதான்   அவரது   வாதம்.
இரவிலே   வாங்கினோம்   இன்னும்    விடியவேயில்லை   என்று   இந்திய சுதந்திரம்   பற்றி   ஒரு   கவிஞர்   புதுக்கவிதை   எழுதியிருக்கிறாரே?     என்றேன்.
அதென்ன    புதுக்கவிதையா?   அது   வசனம்.  பாரதியும்   அவ்வாறு   வசனம்     எழுதியிருக்கிறார்.    அதனை   வசன   கவிதை   என் று  கொண்டாடினார்கள்.   அதற்காக   புதுக்கவிதை   என்று   எழுதப்படுபனவற்றை   ஏற்கமுடியாது. கொண்டாட   முடியாது.  என்றார்.
ந. பிச்சமூர்த்தி   எழுதியிருக்கிறாரே?   என்றேன்.
( வல்லிக்கண்ணன்   புதுக்கவிதையின்   தோற்றமும்   வளர்ச்சியும்   என்ற   விரிவான   ஆய்வு நூல்   எழுதியுள்ளார்)
எழுதியிருக்கலாம்.   ஆனால்   புதுக்கவிதை    மரபுக்கவிதைக்கு   அருகிலேயே    வருவதற்கு   சாத்தியமில்லை    என்று   அந்த   உரையாடலுக்கு  முற்றுப்புள்ளிவைத்துவிட்டு    என்னைப்பற்றியும்   எனது    பூர்வீகம்    பற்றியும்கேட்டார்.    பிறந்த   ஊர்   இந்த   நீர்கொழும்பு.   அப்பாவின்   பூர்வீகம்  தமிழ்நாடு.    பாளையங்கோட்டையின்    முன்னாள்   கலெக்டரும்   இரசிகமணி   டி.கே.சிதம்பரநாத   முதலியாரினதும்   சகாவான  தொ.மு பாஸ்கரத் தொண்டமான்   மற்றும்   அவரது   தம்பி   பாரதி   இயல்   ஆய்வாளர்   தொ.மு.சி.  ரகுநாதன்   ஆகியோரின்   உறவினன்    எனச்சொன்னதும் -   அப்படியா   மகிழ்ச்சி.    சரிதான்   ரகுநாதனும்    புதுக்கவிதையை   ஏற்றுக்கொள்ளவில்லை    தெரியும்தானே?   என்று  மீண்டும்   விட்ட   இடத்திற்கு    வந்தார் கி.வா.ஜ. 
ஈழத்து   படைப்பு   இலக்கியங்களை   புரிந்துகொள்வதற்கு அடிக்குறிப்புத்தேவை   என்ற   அவரது   வாதம்   முன்வைக்கப்பட்டு   பல ஆண்டுகளாகிவிட்டன.   தற்காலத்தில்   ஈழத்திலும்     புகலிடத்திலும்   வாழும் எம்மவர்கள்   பலரது   நூல்கள்   தமிழ்நாட்டில்   அச்சிடப்படுகின்றன.     தமிழகத்தின்   பல   முன்னணி   பதிப்பகங்கள்    எம்மவர்களின்   படைப்புகளை     பதிப்பிக்கின்றன.    சென்னையில்   வருடாந்தம்   நடக்கும்    புத்தக சந்தையில்    ஈழத்தவர்களினதும்   புகலிடத்தில்   வாழும்   ஈழத்தவர்களினதும்  நூல்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தமிழக   இதழ்களான   காலச்சுவடு  -   உயிர்மை -   தீராநதி    மற்றும் ஆனந்தவிகடன்   முதலானவற்றில்   எம்மவர்களின்   படைப்புகள் பிரசுரமாகின்றன.   அத்துடன்   தமிழக   படைப்பாளிகள் -  விமர்சகர்களின்    முன்னுரையுடன்   எம்மவர்களின்   இலக்கிய நூல்கள்   வெளியிடப்படுகின்றன.
ஆனால் -    தற்காலத்தில்    தமிழ்நாட்டில்   எவரும்   ஈழத்து இலக்கியங்களுக்கு    அடிக்குறிப்பு    கேட்பதில்லை.   காலம்   மாறிவிட்டது.
தெனாலி   படத்தில்   கமல்ஹாசன்   பேசிய  யாழ்ப்பாணத்தமிழ்   புரியாமல் அதனை    சிங்களத்தமிழ்    என்றார்   சூப்பர்   ஸ்டார்   ரஜினிகாந்த்.  உடனே  அவரைத்திருத்தினார்   அறிவிப்பாளர்    பி.எச். அப்துல்ஹமீட்.
1983    வன்செயல்களுக்குப்பின்னர்  தமிழ்நாட்டில்   எனது   தந்தைவழி உறவினர்களைப்பார்க்கச்சென்றேன்.    இராமேஸ்வரத்திற்கு   கப்பலில் பயணித்து   அங்கிருந்து    இரவு   ரயிலில்   திருச்சிக்குச்சென்று   அதிகாலை    இறங்கினேன்.    ஒரு   சைக்கிள்   ரிக்ஷாவில்   ஏறி   திருச்சி   சுந்தர் நகருக்கு     செல்வதற்காக   பஸ்நிலையம்   வந்தேன்.    அந்த   ரிக்ஷா   ஓட்டுநர்   என்னிடம்    எங்கிருந்து   வருகிறீர்கள்?   எனக்கேட்டார்.
சிலோனிலிருந்து   என்றேன்.
கொழும்புவில்   இருக்கும்   சிலோனா?   எனக்கேட்டு   ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
சென்னையில் -   பட்டப்படிப்பு   படித்துக்கொண்டிருந்த   எனது   தமிழக உறவினரின்   மகன்  என்னிடம்   கேட்ட   கேள்வியினால்   நான்   மூர்ச்சித்து     விழவில்லை.
 உங்கள்   அம்மா   தமிழ்   பேசுவார்களா?   என   அவர்   கேட்டார்.
எமது   அம்மா   தமிழ்ப்பெண்தான்.   அவரின்    தாய்மொழியும்   தமிழ்தான்.  ஏன்   அப்படிக்கேட்கிறீர்கள்?    எனக்கேட்டேன்.
உங்கள்  அம்மா   சிலோனில்   பிறந்தவர்.    உங்கள்   அப்பா  தமிழ்நாட்டிலிருந்து   அங்கே   சென்று   உங்கள்  அம்மாவை   மணம் முடித்தவர்.    அதனால்தான்   அப்படிக்கேட்டேன்   என்றார்.
இலங்கைக்கு   வந்த   இந்தியத்தமிழர்களை விட   அங்கு  வாழும்  மற்றவர்கள்    அனைவரும்   சிங்களவர்   என்றா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்  ?  எனக்கேட்டேன்.
இல்லை....  பாரதியாரும்   சிங்களத்தீவினுக்கோர்   பாலம்   அமைப்போம்    என்றுதானே    பாடியிருக்கிறார்.   அதனால்தான்   கேட்டேன்.  -    என்று   பதில் தந்தார்    அந்தப்பட்டதாரி   தமிழ்   இளைஞர்.
நான்   எனது   தலையை   எங்கேகொண்டுபோய்    முட்டிக்கொள்வது?    என்று     அந்தக்கணம்   யோசித்தேன்.
தாய் நாடு - சேய்நாடு   உறவு   இந்த   இலட்சணத்தில்தான்    ஒரு   காலத்தில்   இருந்தது   என்பதற்காகத்தான்    இந்தத்   தகவல்களை   இங்கு   பதிவுசெய்கின்றேன்.
முன்னர்   புதுக்கவிதை   எனக்குறிப்பிடப்பட்ட    இலக்கியவடிவம்   தற்பொழுது   கவிதை   என்று   மாத்திரம்    அழைக்கப்படுகிறது.   எண்ணிறைந்த    கவிஞர்கள்   அன்று   அறிமுகமான   புதுக்கவிதை மரபிலிருந்துதான்    கவிதை   படைக்கிறார்கள்.   அதேசமயம்   சந்தம் ஓசைநயத்துடன்    எதுகை   மோனையுடன்    மரபுக்கவிதை எழுதிக்கொண்டிருப்பவர்களும்    அதே   பாணியில்   தொடருகிறார்கள்.
1906  ஆம்   ஆண்டு   பிறந்த  கி.வா.ஜகந்நாதன்    எண்ணிக்கையில்    நூறுக்கும்  அதிகமான   நூல்களை   எழுதிய   பன்னூலாசிரியர்.
       அவர்   நீண்ட   காலம்   கலைமகள்   இதழின்   ஆசிரியராக பணியிலிருந்தமையினால்   கலைமகள்   ஜகந்நாதன்   எனவும் அழைக்கப்பட்டார்.        அவர்     1998 இல்   மறைந்தார்.      அவர்   மறைந்த   நாள் 11-04-1998  ஆம்    திகதியாகும்.   (  ஏப்ரில்  -  அவரது  நினைவு  மாதம்)
அவர்   புதுவெள்ளம்   என   வர்ணித்த   புதுக்கவிதை   இன்று   வேறுகோலம்  கொண்டுவிட்டது.   ஈழத்து    இலக்கியங்களுக்கு   அடிக்குறிப்பு   கேட்பார்  இன்றில்லை.
இடைப்பட்ட   காலத்தில்   இந்த  மாற்றங்களுக்கெல்லாம்   கடுமையாக உழைத்தவர்களை    இச்சந்தர்ப்பத்தில்    நினைத்துப்பார்க்கின்றேன்.
தாய்  நாடு -   சேய் நாடு   என்ற   செல்லரித்த   பேச்சுக்களுக்கு   மத்தியில்    ஈழத்தவர்கள்   இந்தியாவின்   தொங்குதசைகளாக   இலக்கியத்தில்  வாழ்ந்தகாலம்    இன்று   அரசியலிலும்   தொடங்கியிருக்கிறது.
ஈழத்தமிழுக்கு   அடிக்குறிப்பு   கேட்டவர்கள்  காலம்   சென்றுவிட்டது. தமிழகத்தொலைக்காட்சிகளில்    சினிமா   சம்பந்தப்பட்ட    நிகழ்ச்சிகளில்   தமிழின்   இலட்சணம்   தெரிகிறது.    ஈழத்தமிழர்களினால்   தமிழுக்கு  அடையாளம்   கிடைத்திருக்கும்    இக்காலத்தில்   ஈழத்து   இலக்கியமும்  புகலிடத்தில்   வாழும்   ஈழத்தவர்   இலக்கியமும்    தமிழகத்துக்கு   புதிய செய்திகளைத்  தருகின்றது.
இந்தப்பின்னணியில்   கி.வா.ஜ. வையும்   நாம்   மறப்பதற்கில்லை.
காலங்கள்  மாறும்.

                       ---0---




No comments: