சங்க இலக்கியக் காட்சிகள் 9 (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

காட்சி 9


மகளைப்பார்! அவள் திறனைப் பார்!
அது ஓர் அழகிய வீடு. அங்கே செல்வச் செழிப்போடு வாழ்கின்ற வளம்மிக்க ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தில் பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளை. அழகான பெண்பிள்ளை. அவளுக்குப் பருவம் வந்தது. காலாகாலத்தில் காதலும் பிறந்தது. அவளின் காதலனோ வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுக்குப் போதியளவு வருமானமும் இல்லை. ஆனாலும், அவனும் அவளும் கண்களால் கதைபேசி, உள்ளங்கள் உறவாடித் திருமணமும் செய்துகொண்டனர்.
பிறந்த நாள்முதல் வறுமை என்றால் என்னவென்றே அறிந்திராத அவள், அவனோடு சென்று குடிசையொன்றிலே குடும்பம் நடாத்துகின்றாள். பெற்றோருடன் வாழ்ந்தபோது அவளுக்கு ஒருநாளும் பசித்ததில்லை. பசி எடுப்பதற்கு முன்னரே, அவளின் தாய் நேரம்பார்த்து அவளுக்கு உணவூட்டிவிடுவாள்;. செவிலித்தாயோ, அவள் சிறுபிள்ளையாயிருந்தபோது தேன்கலந்த பசும்பாலை அவளுக்கு ஊட்ட முயலும்போது அவள் திமிறிக் கொண்டு தத்தித் தத்தி ஓடுவாள். இவ்வாறு பசிஎன்பதே தெரியாமல் செல்வமாக வளர்ந்தவள் அவள்.



ஆனால் இப்போது தனது கணவனின் வருமானத்திற்கு ஏற்றவாறு தினமும் ஒருவேளை உணவைத் தவிர்த்து வாழ்கிறாள். கணவனோடு அன்பாக உறவாடுகிறாள். அவனை மகிழ்ச்சிப்படுத்துகிறாள். தானும் மகிழ்ச்சியோடு இருக்கிறாள். ஒரு குடும்பத்தலைவிக்குரிய கடமைகளையெல்லாம் குறைவில்லாமல் நிறைவேற்றுகிறாள். இந்த விடயங்களையெல்லாம் அறிந்துகொண்ட செவிலித்தாய், தங்கள் மகள் குடும்பம் நடாத்துகின்ற விதத்தைப்பற்றி அவளைப் பெற்றதாயிடம் கூறுகின்றாள்.
“நம்மோடு இருந்தபோது ஏதுமறியாத சிறுபிள்ளையாக இருந்த உன் மகள் இப்பொழுது தனது கணவனுக்கு இசைந்தவாறு மிகவும் பொறுப்பு வாய்ந்த குடும்பப்பெண்ணாக மாறிவிட்டாளே! தந்தையின் செல்வத்திலே மிதந்த அவள் இப்பொழுது கணவனின் வறுமையிலும் மகிழ்ந்து வாழ்கிறாளே! இந்தத் திறமைகளையெல்லாம் அவள் எங்கே கற்றாள்?” என்று செவிலித்தாய் பெற்றதாயிடம் விதந்து கூறுகிறாள். இருவரும் வியந்து நிற்கின்றார்கள். கள்ளம் கபடமற்ற சிறு குழந்தையாகத் தாம் நினைத்திருக்கும் தமது மகள் தன் உள்ளம் நிறைந்த கணவனோடு இல்லறம் நடாத்துகின்ற அழகை அவளின் நிலைகண்டு அவளுக்காக இரங்குவதுபோல வெளிக்காட்டி, இரு தாய்மாரும் உள்ளத்தால் பெருமைப்பட்டுக்கொள்கின்றார்கள்.
பெற்றோர்கள் தம் பிள்ளைகளை எப்போதும் ஏதுமறியாச் சிறுவர்கள்போலவே நினைப்பார்கள். அவர்கள் என்ன செய்வார்களோ? எப்படிச்செய்வார்களோ? என்று கவலைப்படுவார்கள். ஆனால் அவர்களின் சிறப்புக்கண்டு நெகிழ்ந்துருகிப் பெருமைப்படுவார்கள். அப்படித்தான் இங்கேயும் செவிலித்தாய் பெற்றதாயிடம் அவளது பெண்ணின் இல்லறச்சிறப்புப்பற்றிப் புளகாங்கிதமடைந்து புகலுகின்றாள்.
இதயங்களில் எழுகின்ற இதுபோன்ற எண்ணங்களின் காட்சிகளை வண்ணத் திரைக்காட்சிபோல வடிவமைத்துக்கூறுகின்ற எத்தனையோ பாடல்கள் சங்க இலக்கியங்களிலே உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்தப்பாடல்.
பாடல்:

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
“உண்” என்று ஓக்குபு பிழைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரிமெலிந்து ஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே!

(நற்றிணை. பாடல் இலக்கம்: 110. பாலைத்திணை. பாடியவர்: போதனார். )

No comments: