அப்பாவின் துப்பாக்கி -ஹினெர் சலீம்

.

குர்திஸ்தான் விடுதலையை மையமாக வைத்து, நாட்டு விடுதலைக்காக குர்தியர்கள் நடத்தும் போராட்டத்தைப் பற்றிய நாவலே அப்பாவின் துப்பாக்கி. சிறுவனான ஆசாத் தன் கதையைச் சொல்லும் விதமாக இந்நாவலின் கதை விரிகிறது. போராடும் அவர்கள் எத்தகைய முயற்சிகள் செய்கிறார்கள், அவர்களின் திட்டம் என்ன போன்றவை தெளிவாக விவரிக்கப்படாமல் நாவல் பயணிப்பது நாவலின் வாசிப்பில் நமக்கு ஒரு புரிபடாத் தன்மையைத் தருகிறது. இருந்தும் உலகெங்கும் இத்தகைய போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணரும் சந்தர்ப்பமாக இந்நாவலின் வாசிப்பனுபவத்தை எடுத்துக் கொள்ளலாம்.

தன் நாட்டுக்காகப் போராடும் தன் தந்தை, அண்ணன் மற்றும் பலரின் வாழ்க்கையை விவரம் புரியாத வயதிலிருந்து பார்த்துவரும் ஆசாத் பின்னாளில் அவனே அத்தகைய போராட்டத்திலும், அதன் சிக்கல்களிலும் உழன்று, போராட்டத்தினால் விளைவது ஒன்றுமில்லை என்றும், தான் செய்ய நினைப்பது முற்றாக வேறு என்றும் உணர்ந்து, சதாம் ஹீசேன் ஆட்சிக்குப் பிறகு இத்தாலிக்குச் சென்றுவிடுகிறான். இந்த இடைப்பட்ட காலங்களில் நிகழும் இழப்புகளையும், அவலங்களையும், துயரங்களையும் நாவல் பதிவு செய்கிறது.


இருந்தும் இந்நாவல் உணர்வுப் பூர்வமாக நம்மில் நிகழ்த்தும் தாக்கம் அதிகமில்லை. நாவலின் இறுதிப் பகுதியில் சில நிகழ்ச்சிகள் நம்மை உணாச்சிகரமாக நடத்திச் செல்கின்றன என்றாலும் மொத்த நாவலிலும் அது இல்லை என்றே சொல்லவேண்டும். வீடிழந்து, நாடிழந்து துன்புறும் ஒரு குடும்பத்தின் துயரம் நம் மனதில் போதுமான அனுதாபத்தையோ, துயரத்தையோ ஏற்படுத்தும் விதமாக ஆசிரியரால் சித்தரிக்க முடியாமால் போனது இந்நாவலின் குறை. நாம் அறியாத மக்கள், அறியாத நாடு என்பதால் அவ்வாறு பெரும் தாக்கம் நம்மில் நிகழவில்லை என்பதைவிட, ஹினெர் சலீம் தேர்ந்த கதைசொல்லி அல்ல என்பதே அதற்குக் காரணம். அவர் நடையிலும் கதை சொல்லும் முறையிலும் உணர்வுகளைவிட, செய்திகளைச் சொல்லும் முறையே மேலோங்கியிருக்கிறது. நாவல் மொத்தமும் செய்திகளைத் தொகுக்கும் முயற்சியாக அன்றி புனைவின் திறம் திறமப்பட வெளிப்பட்ட ஒரு படைப்பாக இந்நாவலை நாம் கருத முடியாது. ஆனாலும் சுய வரலாற்றைச் சொல்லும் நாவல் என்ற வகையில் இப்படைப்பு முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாகிறது.

உலகம் முழுதும் நடக்கும் நாடு, மொழி, இனம் ஆகியவற்றின் விடுதலை குறித்த போராட்டங்களும், அவை குறித்த நாவல்களும் நமக்குத் திரும்பத் திரும்ப தரும் செய்தி ஒன்றுதான். அதைப் பின்வருமாறு தொகுக்கலாம்:

நாட்டுப் பற்று, மொழிப் பற்று, இனப் பற்று, ஆகிய பற்றுக்களே இன்று உலகை அச்சுருத்தும் தீவிரவாதமாக இருக்கிறது. இத்தகைய பற்றுக்களே நம்மைப் பெரும் பிணியாகப் பிணி்த்து, உலகத்தை முடைநாற்றம் தருவதாக மாற்றிவருகிறது என்பதை உணர வேண்டிய தருணம் வந்துவிட்டது. நாடு, மொழி, இனம் தாண்டி எல்லோரும் சிந்திக்கவேண்டிய வேளை இது. இனியும் என் நாடு, என் மக்கள், என் மொழி என்பது சரியான கொள்கையாகவோ, தத்துவமாகவோ இருக்க முடியாது. நாட்டுக்காகத் தியாகம், மொழிக்காகத் தியாகம், இனத்திற்காகத் தியாகம் என்பதெல்லாம் இனி வெறும் குப்பைகள்தான் என்பதைப் புரிந்துகொண்டு செயலாற்றவேண்டிய காலம் இது. நாம் உலக மனிதர்கள் என்ற சிந்தனை மட்டுமே இனி மனிதனை முன்னெடுத்துச் செல்லும் வழிகாட்டியாக இருக்கும் என்பதோடு அது மட்டும்தான் அவனைக் காப்பாற்றும் சக்தியாகவும் இருக்கமுடியும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தத்துவமே இனி உலக மக்களின் பொதுமறையாகத் திகழவேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் நாளைய உலகில் மனிதர்கள் என்று யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள்.

ஆனால் நாம் இதைக் காது கொடுத்துக் கேளாமல், போராடுபவர்களை அனுதாபிகளாகவும், அடக்குபவர்களைக் கொடுமையாளர்களாகவும் கருதிக் கொள்கிறோம். போராடுபவர்களும் சரி, அடக்குபவர்களும் சரி இருவருமே இன்னது செய்வது என்றறியாமல் தவறு செய்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. அது நம் மூளையில் உறைக்க இன்னும் எத்தனை எத்தனை மகான்களும், ஞானிகளும் இந்த பூமியில் தோன்றவேண்டும் என்று தெரியவில்லை.

நாவலின் இறுதியில் ஆசாத் தன்னையே இவ்வாறு கேட்டுக்கொள்கிறான்: “அத்தனை ஆண்டுகள் நடத்திய போராட்டங்களால் நாங்கள் எதை அடைய முடிந்தது? வேறு ஏதோ தேவைப்பட்டு இருக்கிறது. என்ன அது? என்னிடம் பதில் இல்லை.”

பல போராட்டங்கள் இப்படித்தான் கடைசியில் முடிந்திருக்கின்றன. இத்தனை நாட்களும் நடந்த போராட்டங்களில் இறந்தவர்களுக்கு நாம் என்ன நியாயம் கற்பிக்க முடியும்? ஆசாத்திடம் மட்டுமல்ல போராளிகள் அனைவரிடமும், ஆட்சியாளர்கள் அனைவரிடமும் “நாங்கள் மனிதர்கள்“ என்ற உணர்வும் “இந்த பூமி எங்களுடையது” என்ற புரிதலும்தான் இதற்கான பதிலாக இருக்க முடியும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

நாவலின் ஓரிடத்தில் ஓவியரான சமி இவ்வாறு சொல்கிறார் “நாம்தான் இந்தப் பகுதியின் தொன்மையான மக்கள். இருந்தாலும், நமக்குப் பிறகு வந்த துருக்கியர்களுக்கென ஒரு நாடு இருக்கிறது. ஆனால் நாமோ இன்னமும் எதுவும் இல்லாமல் இருக்கிறோம். ஆனால் இதில் விசித்திரமானது என்னவென்றால் பல படுகொலைகள் நடந்த பிறகும் நாம் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்பதுதான். கல்தியர்கள், பாபிலோனியர்கள், சுமேரியர்கள், ஆகியோர் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள். ஆனால் ஒன்றும் மிஞ்சவில்லை. நாமோ எதுவும் பெரிதாக ஆகாமல் போனால்கூட இன்னும் நம் மொழியைப் பேசிக்கொண்டு உயிருடன் இருக்கிறோம். நாம் அடிபணிய மறுத்து எதிர்த்து நிற்கிறோம். இருந்தாலும் இன்னும் நாம் ஒன்றும் இல்லாதவர்கள்தான்” என்கிறார்.

இது, இத்தகைய போராட்டங்களை ஆதரித்து சொல்லப்படுகிறதா இல்லை “யாதும் ஊரே யாவரும் கேளீர்” எனும் தத்துவத்தின் அடிப்படையில், இத்தகைய போராட்டங்களின் அர்த்தமின்மையை உணர்த்துகிறதா என்பதைப் புரிந்துகொள்வதைப் பொருத்தே இம்மண்ணில் இனி இம்மானுட வாழ்வின் வாழ்க்கை இருக்கிறது.

நாவலாசிரியர் பற்றிய குறிப்புகள்:

ஆசாத் ஷெரோ செலீம் எனும் இயற்பெயருடன் குர்திஸ்தானில் பிறந்தார். தம் பதினேழாவது வயதில், ஈராக்கைவிட்டு வெளியேறி, பல ஆண்டுகள் இத்தாலியில் வாழ்ந்த பிறகு பிரான்சில் குடியேறிய சலீம், திரைப்பட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவர் இயக்கிய “வோட்கா லெமன்” எனும் திரைப்படம், 2003-ம் ஆண்டு வெனீஸ் திரப்பட விழாவில், “சான் மார்க்கோ” விருதைப் பெற்றது.

குர்திய மக்களின் வரலாற்றையும், அவரது இளமைக்கால வாழ்க்கையையும் விவரிக்கும் “அப்பாவின் துப்பாக்கி” பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

அவர் இயக்கிய திரைப்படங்கள்:

  • Long Live the Bride… and the Liberation of Kurdistan (1997)
  • Beyond Our Dreams (2000)
  • Vodka-Lemon (2003)
  • Kilometer Zero (2005)
  • The Valley of Tamburi (2006)
- See more at: http://kesavamanitp.blogspot.in/2013/11/blog-post_30.html#sthash.K1KEm5fq.dpuf

No comments: