உலகச் செய்திகள்


மூழ்கிய தென்கொரிய கப்பல் தொடர்பில் கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கோரிய ஜனாதிபதி

சீனாவில் விழுந்த ரஷ்ய ஏவுகணையின் சிதைவு

உலகிலேயே விலையுயர்ந்த விவாகரத்து

மோடிக்கு ஒரு திறந்த மடல்

உக்ரைன் பிரச்னை: மீண்டும் போர்க்கப்பலை அனுப்புகிறது அமெரிக்கா

 இராணுவ கட்டுப்பாட்டில் தாய்லாந்து!

நமது அரசு ஏழை மக்களுக்கானது : நாடாளுமன்றில் மோடி

பிலிப்பைன்ஸ் பணிப்பெண் மீது சுடுநீரை வீசிய சவூதி எஜமானரின் தாய்

போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 48 பேர் பலி : நைஜீரியாவில் சம்பவம்

===================================================================

மூழ்கிய தென்கொரிய கப்பல் தொடர்பில் கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கோரிய ஜனாதிபதி

19/05/2014   தென் கொரிய ஜனாதிபதி பார்க் கெயுன் - ஹை கடந்த மாதம் மூழ்கிய சிவொல் படகு தொடர்பில் இன்று திங்கட்கிழமை தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்புக் கோரினார். 
கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி சிவொல் படகு மூழ்கியதில் 286பயணிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர் உயர் பாடசாலை மாணவர்களாவர். இந்தச் சம்பவத்தில் 18 பேர் தொடர்ந்து காணாமற் போன நிலையில் உள்ளனர். 
மேற்படி விபத்து தொடர்பிலான மோசமான செயற்கிரமத்துக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்பதாக பார்க் கெயுன் - ஹை மேலும் தெரிவித்தார். 
மேற்படி 30நிமிட நேர உரையின்போது அவர் வெளிப்படையாக கண்ணீர் சிந்தி தேம்பி அழுதார். 
இந்த விபத்து தொடர்பில் தமது கடமைகளை முழுமையாகச் செய்ய கரையோர காவற் படையினர் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், அவர்கள் விபத்தையடுத்து உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் மேலும் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று கூறினார். 
அதனால் கரையோர காவற் படையை கலைத்து அதன் பணிகளை பொலிஸாருக்கும் புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு அமைச்சிடமும் ஒப்படைக்கவுள்ளதாக அவர் கூறினார்.  நன்றி வீரகேசரி 


சீனாவில் விழுந்த ரஷ்ய ஏவுகணையின் சிதைவு

20/05/2014 
வடகிழக்கு சீனாவிலுள்ள ஹெயிவோங் மாகாணத்தில் விண்கலமொன்றின் சிதைவுகள் விழுந்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
கிகிஹார் நகரில் விழுந்த இந்த சிதைவானது தொலைத் தொடர்பாடல் செய்மதியொன்றை விண்ணுக்கு ஏந்திச் சென்ற ரஷ்ய ஏவுகணையொன்றின் சிதைவென அடையாளங் காணப்பட்டுள்ளது. 
275 மில்லியன் பெறுமதியான ஆளற்ற எக்ஸ்பிரஸ் ஏ எப் 4 ஆர் செய்மதியை ஏந்திச் சென்ற புரோடோன் AM4P ஏவுகணையே இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது. இதன்போது அதனால் ஏந்திச் செல்லப்பட்ட தொலைத்தொடர்பாடல் முறைமையும் அழிவடைந்துள்ளது. 
புரோடொன் - எம் ஏவுகணையே தோல்வியைத் தழுவியமை ஒரு வருடத்துக்கு குறைந்த காலப் பகுதியில் இது இரணடாவது தடவையாகும்.
நன்றி வீரகேசரி 

உலகிலேயே விலையுயர்ந்த விவாகரத்து

20/05/2014 விவாகரத்துக்காக உலகிலேயே அதிகளவு பணத்தை  செலுத்தும் நபர் என்ற பெயரை மொனாகோ உதைபந்தாட்டக் கழகத்தின் உரிமையாளரான ரஷ்யாவைச் சேர்ந்த திமித்ரி ரைபோலோவ்லெவ் பெறுகிறார்.
அவர் (47 வயது) திருமணம் செய்து தன்னுடன் 24 வருடங்கள் இணைந்து வாழ்ந்த மனைவி எலெனாரைபோவோவ்லெவாவிற்கு 2.68 மில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கும் (4,020, 555,987) சுவிஸ் பிராங்குகள்) அதிகமான தொகையை விவாகரத்துக்கான நஷ்டஈடாக வழங்க வேண்டும் என சுவிற்ஸர்லாந்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேற்படி தொகையானது திமிர்தி ரைபோவோவ்லெவாவின் மொத்த சொத்தில் அரைப்பங்காகும்.
அவர் தனது மனைவி எனாவிடமிருந்து விவாகரத்து பெறுவதற்காக கடந்த 6 வருடங்களாக போராடி வருகிறார்.
தற்போது எலெனா சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஆடம்பர பங்களாவில் வாழ்ந்து வருகிறார்.
நன்றி வீரகேசரி

மோடிக்கு ஒரு திறந்த மடல்

21/05/2014  பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மோடி அவர்களுக்கு வணக்கம்! உங்களுக்கு 
ModiPM-1எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை நான் மிகவும் உளப்பூர்வமாகத்தான் சொல்கிறேன்; இப்படிச் சொல்வது ஒன்றும் எனக்கு அவ்வளவு எளிதான செயலல்ல. ஏனெனில், நீங்கள் இப்போது அடைந்திருக்கும் உச்சபட்ச பதவியில் உங்களைக் காண விரும்பியவர்களில் ஒருவனல்ல நான். நீங்கள் பிரதமராகியிருப்பதுகுறித்துக் கோடிக் கணக்கானோர் பரவசத்துடன் இருக்கும் அதே வேளையில், இன்னும் கோடிக் கணக்கானோர் இதே காரணத்துக்காக வருத்தமுற்றிருக்கக் கூடும் என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள்.

ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி போன்றவர் களும், இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலகட்டத்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்துக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாயும், பிறகு உங்கள் அரசியல் குரு வாஜ்பாயும் உட்கார்ந்த நாற்காலிக்கு இதோ நீங்களும் வந்துவிட்டீர்கள். உங்களை இந்த இடத்தில் பார்க்க விரும்பாதவர்கள் நீங்கள் இந்த இடத்துக்கு வந்திருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்த கவுரவத்தை நீங்கள் பெறுவதுகுறித்து எனக்குப் பெருமளவில் ஐயப்பாடுகள் இருந்தாலும்கூட, உங்களைப் போல் பின்தங்கிய சமூகத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் வரும் ஒருவர் பிரதமர் ஆவதை நான் பெரிதும் மதிக்கிறேன். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் லட்சியமான சமத்துவம் என்பதை இது பரிபூரணமாக நிறைவுசெய்கிறது.

தேசம் என்னும் கருத்தாக்கம்

‘டீ விற்றவர்' என்று மூர்க்கமாகவும் கேலியாகவும் உங்களைப் பற்றிச் சிலர் பேசியபோது எனக்குக் குமட்டிக் கொண்டுவந்தது. பிழைப்புக்காக டீ விற்ற ஒருவர் இந்திய அரசுக்குத் தலைமை தாங்க வருவது என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஒருவருக்குக் கூஜா தூக்குவதைவிடப் பலருக் கும் டீ கூஜாவைத் தூக்கிச்செல்வது என்பது மேல் அல்லவா.

இதையெல்லாம் தாண்டி, இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் நீங்கள் இருப்பது கோடிக் கணக்கான இந்தியர்களை ஏன் சங்கடப்படுத்துகிறது என்பது குறித்து நான் பேசியாக வேண்டும். 2014 தேர்தலில் வாக்காளர்கள் மோடிக்காகவோ அல்லது மோடிக்கு எதிராகவோ வாக்களித்திருக்கிறார்கள் என்பது வேறு யாரையும்விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேசத்தின் சிறந்த பாதுகாவலன், உண்மையில் அதன் ரட்சகன் என்று சொல்லி 31% மக்களை நீங்கள் கவர்ந்ததன் மூலம், பா.ஜ.க. இவ்வளவு இடங்களை வென்றிருக்கிறது. அதே நேரத்தில் 69% மக்கள் உங்களை அவர்களின் பாதுகாவலராகக் கருதவில்லை என்பதையும் கவனித்தாக வேண்டும். இந்த தேசம் என்பது உண்மையில் என்ன என்பதில் உங்களுக்கு உள்ள கருத்துடன் மாறுபடும் கருத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேசம் என்கிற இந்தக் கருத்தாக்கம் குறித்துப் பேசும்போதுதான் இந்திய அரசியலமைப்பு, அதாவது நீங்கள் பிரதமர் பதவியில் அமர்வதற்குக் காரணமான அந்த அதிகாரம், முக்கியத்துவம் பெறுகிறது திரு மோடி அவர்களே. இந்த நேரத்தில்தான் தேசம் என்னும் கருத்தாக்கத்தைத் திரும்பிப்பார்க்க வேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

சிறுபான்மையினருக்கு நம்பிக்கையூட்டுதல்

ஒற்றுமையையும் ஸ்திரத்தன்மையையும் பற்றிப் பேசும் போதெல்லாம் சர்தார் வல்லபபாய் படேல் பெயரையும் அவருடைய ஆளுமையையும் துணைக்கு அழைக்கிறீர்கள். சிறுபான்மையினருக்கான அரசமைப்புச் சட்டக் குழுவுக்கு சர்தார் தலைமையேற்றிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். கல்வி, கலாச்சாரம், மதம் போன்றவை தொடர்பாகச் சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டம் முக்கியமான உத்தரவாதங்களைத் தருகிறது என்றால், அதற்கு சர்தாருக்கும் அந்தக் குழுவின் பிற உறுப்பினர்களுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். சிறுபான்மையினர் தொடர்பாக அரசமைப்புச் சட்டம் கொண்டிருக்கும் லட்சியத்தை உங்கள் நோக்கத்துக்கு ஏற்றவிதத்தில் மாற்றியமைக்கவோ, நீர்த்துப்போகவோ செய்யாமல் அதை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் திரு மோடி அவர்களே.

அளவுக்கு அதிகமாகவும் வெளியில் சொல்ல முடியாத வகையிலும் பலரிடத்திலும் பயம் இருக்கிறது, என்ன காரணம்?

ஏனென்றால், நீங்கள் பேரணிகளில் உரையாற்றும்போது, இந்தியக் குடிமக்கள் என்ற கருத்தாக்கத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு ஜனநாயகவாதியின் குரலைத்தான் அவர்கள் கேட்க விரும்புகிறார்களே தவிர, கட்டளைகளைப் பிறப்பிக்கும் ஒரு சக்ரவர்த்தியின் குரலை அல்ல. நீங்கள் செய்ய வேண்டியது சிறுபான்மை மக்களின் அச்சத்தைக் களைவதுதானே தவிர, ஏதோ அவர்களுக்குப் பரிபாலனம் செய்வதுபோல் நடந்துகொள்வதல்ல. ‘பாதுகாப்பு' என்பதற்கு வளர்ச்சி என்பது எந்த வகையிலும் மாற்றாகாது. ‘ஒரு கையில் குர்ஆன், மறு கையில் மடிக்கணினி’ என்ற ரீதியில் நீங்கள் பேசினீர்கள். அந்தப் படிமம் அவர்களுக்கு நம்பிக்கை யூட்டுவதாக அமையாது. ஏனெனில், வேறொரு படிமம் அவர்களை அச்சுறுத்துகிறது: இந்து என்ற தோற்றத்துக்குள் ஒளிந்துகொண்டு ஒருவர் இந்துப் புராணமொன்றின் டி.வி.டி-யை ஒரு கையிலும் அச்சுறுத்தும் வகையில் திரிசூலத்தை மற்றொரு கையிலும் வைத்திருக்கும் படிமம்.

உப்பு தடவிய பிரம்பு

முன்பெல்லாம், பள்ளிக்கூடங்களில் உப்பு தடவிய பிரம்பை வகுப்பறைக்கு வெளியே தலைமையாசிரியர்கள் வைத்திருப்பது உண்டு. பார்த்தாலே பயம் வரும்; தப்பு செய்தால் தலைமையாசிரியர் எப்படியெல்லாம் தோலை உரிப்பார் என்பதை நினைவூட்டும் விதத்தில் அந்தப் பிரம்பு வைக்கப்பட்டிருக்கும். முசாபர்நகரில் 42 முஸ்லிம்கள் 20 இந்துக்கள் இறப்பதற்கும் 50,000 பேர் வீடுவாசலை இழந்து அகதிகளானதற்கும் காரணமான கலவரங்களைப் பற்றிய மிகச் சமீப காலத்திய நினைவுகள்தான் அந்தப் பிரம்புகள். “ஜாக்கிரதை, இதுதான் உங்களுக்கு நடக்கும்!” என்ற எச்சரிக்கை கோடிக் கணக்கானவர்களின் பகல் நேர அச்சமாகவும் இரவு நேரப் பயங்கரமாகவும் நுழைந்துவிட்டிருக்கிறது.

உங்கள் கையில்தான் இருக்கிறது திரு மோடி அவர் களே, அந்த அச்சத்தை விரட்டும் பொறுப்பு. அதைச் செய்வதற் கான அதிகாரமும் சக்தியும் உங்களிடம் இருக்கிறது; அதைச் செய்யும் உரிமையும் கடப்பாடும்கூட உங்களிடம் இருக் கிறது. யார் யாரோ என்னென்னவோ சொன்னாலும்கூட, அந்த அச்சத்தை நீங்கள் போக்குவீர்கள் என்றே நம்ப விரும்புகிறேன்.

நீங்கள்தான் செய்ய வேண்டும்

முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள மதச் சிறுபான்மையினர் அனைவரும் தங்கள் மனதில் ஆழமான வடுக்களைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள், மேற்கு பஞ்சாபிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள் போலவும் காஷ்மீர் பண்டிட்டுகள் போலவும். யதேச்சையான அல்லது திட்டமிட்ட காரணங்களுக்காகத் திடீரென்று ஏதாவது கலவரம் ஏற்படும் என்றும் அதற்குப் பல மடங்கு, குறிப்பாக பெண்களை இலக்காகக் கொண்டு, பழிவாங்கல் என்றெல்லாம் தொடரும் என்றும் ஒரு அச்சம் நிலவுகிறது. தலித் மக்களும் பழங்குடியினரும், குறிப்பாகப் பெண்கள், தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவமானத்திலோ, அவமானத்துக்குள்ளானதைப் பற்றிய நினைவிலோதான் கழிக்கிறார்கள். இந்நிலையைக் கருத்தில் கொண்டு, பேச்சளவிலும் செயலளவிலும் அவர்களுடைய நம்பிக்கையை வென்றெடுங்கள் திரு மோடி அவர்களே. அவர்களுடைய நலன்களுக்காகக் குரல்கொடுக்கும் முதல் நபர் நீங்கள்தான் என்ற உறுதியை அளிப்பதன் மூலம் இதை நீங்கள் சாதிக்க முடியும்.

குடியாட்சியின் பன்மைத்துவத்திடம் முடியாட்சியின் ஒருமைத்துவ மொழியில் பேசக் கூடாது; ‘பல' என்ற சிந்தனையிடம் ‘ஒன்று' என்பதன் சொற்களில் பேசக் கூடாது. இந்தியா என்பது பன்மைத்தன்மையின் காடு. அதில் எண்ணற்ற தாவர இனங்கள் இருக்கின்றன. அவை செழித்து வளர்வதற்கு உதவும் இலைமக்கினை (ஹ்யூமஸ்) நீங்கள் போஷிக்க வேண்டுமென்று அந்தக் காடு விரும்புகிறது. ஒற்றை வண்ணம் கொண்ட ஒற்றைக் கலாச்சாரத்தை அதன் முன்னே வைத்துவிடாதீர்கள்.

ஆச்சரியப்படுத்துங்கள்!

பிரிவு 370 பற்றி நீங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு, பொது சிவில் சட்டம்குறித்த புளித்துப்போன கோரிக்கை, அயோத்தியில் ராமர் கோயில், இந்து அகதிகளையும் முஸ்லிம் அகதிகளையும்பற்றி நீங்கள் பேசியது, இவையெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை; பயத்தைதான் ஏற்படுத்து கின்றன. வெகுஜன அச்சம் என்பது இந்தியக் குடியரசின் குணாம்சமாக இருக்க முடியாது திரு மோடி அவர்களே.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை அடைந்திருக்கிறீர்கள் திரு மோடி அவர்களே. அதற்காக மறுபடியும் வாழ்த்துக்கள்! இந்த வெற்றியை அடுத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சிக் காலம் தொடங்கட்டும். அதன் மூலம் இந்த உலகத்தின் முன் நிறைய ஆச்சரியங்களை, அதாவது உங்கள் ஆதரவாளர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்த்திருக்காத ஆனால், பெரும்பாலானோர் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஆச்சரியங்களை அந்த ஆட்சிக் காலம் நிகழ்த்தட்டும். நீங்கள் மிகவும் புத்திக்கூர்மை கொண்டவர் என்பதால், முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து வரும் அறிவுரையை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். உங்கள் ஆதரவாளர்களிடமிருந்து வரும் கைத்தட்டல்களுக்கு வேண்டிய கைம்மாறு செய்யுங்கள். ஆனால், உங்களுக்கு ஆதரவளிக்காதவர்களின் நம்பிக்கையையும் பெறுங்கள்.

அரசாட்சிக் காலத்தைச் சேர்ந்தவையும், சித்தாந்தரீதியி லானவையுமான உதாரணங்கள் உங்களுக்குப் பிடிக்கும். எனவே, உங்கள் போராட்டத்தில் நீங்கள் ஒரு மகாராணா பிரதாப் சிங்கைப் போல இருங்கள், சாந்தத்தைப் பொறுத்த வரை அக்பராக இருங்கள். இதயத்தில் சாவர்க்கராக, அதாவது நீங்கள் விரும்பினால், இருங்கள்; ஆனால், மனதால் ஒரு அம்பேத்கராக இருங்கள். உங்கள் டி.என்.ஏ-வைப் பொறுத்தவரை, நீங்கள் விரும்பினால், ஆர்.எஸ்.எஸ்-காரராக இருந்துகொள்ளுங்கள். ஆனால், உங்களுக்கு வாக்களிக்காத 69 சதவீதத்தினருக்காக அவர்கள் விரும்பும் விதத்தில் இந்துஸ்தானின் வஸிர்-இ-ஆசமாக (வஸிர்-இ-ஆசம் = உருது மொழியில் ‘பிரதம மந்திரி') இருங்கள்.

நமது தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களுடன்,

உங்கள் சக குடிமகன்,
கோபாலகிருஷ்ண காந்தி

கட்டுரையாளர், காந்தியின் பேரன், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர். தமிழில்: ஆசை
Tamil.HindU
 நன்றி தேனீ 

உக்ரைன் பிரச்னை: மீண்டும் போர்க்கப்பலை அனுப்புகிறது அமெரிக்கா
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைனை ஒட்டியுள்ள கடல்பகுதிக்கு தனது போர்க் கப்பல் ஒன்றை அமெரிக்கா அனுப்புகிறது. இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையக செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ""இந்த வார இறுதியில் "வெல்லா கல்ஃப்' என்ற கப்பற்படை போர்க் கப்பல் கருங்கடல் பகுதிக்கு புறப்பட்டுச் செல்லும். கருங்கடலைப் பொருத்தவரை, எங்களது போர்க் கப்பல்கள் சுழற்சி முறையில் போவதும் வருவதுமாக இருக்கும். தற்போதைக்கு நாங்கள் அதில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகிறோம்'' என்று தெரிவித்தார். ஏற்கெனவே கருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் டேலர் சமீபத்தில் அந்த இடத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், அந்தக் கப்பலுக்கு பதிலாக வெல்லா கல்ஃப் அனுப்பப்படுகிறது. கருங்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படை நிரந்தரமாக நிலைகொள்வதை நேட்டோ அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என சமீபத்தில் அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுப்படை தளபதி வலியுறுத்தியிருந்தார். நன்றி தேனீ

 இராணுவ கட்டுப்பாட்டில் தாய்லாந்து!


22/05/2014   தாய்லாந்து முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
 
 
அந்நாட்டு அரசாங்கத்தை இராணுவம் தன்னகப்படுத்தியுள்ளதாகவும் நிலையானதும் பாதுகாப்பானதுமான ஆட்சியை இராணுவம் கொண்டு நடத்தும் என்றும் இராணுவத்தளபதி பிரயுத் சென் ஒச்சா அறிவித்துள்ளார்.
 
தாய்லாந்து அரச தொலைக்காட்சியினூடாக இச்செய்தியை அவர் மக்களுக்கு கூறினார்.
 
நாட்டில் சட்டமும் சமாதானமும் ஒழுங்காக செயற்படுவதற்கு அரசாங்கத்தை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் ஆகியவை மக்களுக்காக தொடர்ந்தும் செயற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


நன்றி வீரகேசரி

நமது அரசு ஏழை மக்களுக்கானது : நாடாளுமன்றில் மோடி

21/05/2014 நமது அரசு ஏழை மக்களுக்கானது என்று இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதலாவது உரையின் போது தெரிவித்தார்.
 
 
அவரது உரை பின்வருமாறு, 
 
மதிப்பிற்குரிய அத்வானி அவர்களே, தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களே, மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே, நீங்கள் அனைவரும் ஏகமனதாக எனக்கு புதிய பொறுப்பை அளித்துள்ளீர்கள். அதற்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். குறிப்பாக என்னை ஆசீர்வதித்த அத்வானி அவர்களுக்கும், ராஜ்நாத் அவர்களுக்கும் நன்றி.
 
நான் இத்தருணத்தில் அடல் அவர்களை நினைவு கூர்கிறேன். அவரது உடல் நலன் சீராக இருந்திருந்தால் அவர் இன்று இங்கு இருந்திருப்பார். அவரது வருகை இந்நிகழ்ச்சிக்கு முழுமை அடைந்திருக்கும். இருப்பினும் அவரது ஆசி நம்முடன் இருக்கிறது. இனிமேலும் இருக்கும்.
 
நாம் இப்போது ஜனநாயகத்தின் கோயிலில் இருக்கிறோம். நாம் அனைவரும் புனிதமாக பணியாற்றுவோம். மக்கள் நலனே முக்கியமே தவிர பதவி அல்ல. பணியும், பொறுப்பும் மிகப்பெரியவை. நீங்கள் எனக்கு அளித்துள்ள இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.
 
என் வாழ்நாளில் நான் எப்போதுமே பதவிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. பதவியை விட எண் பார்வையில் பொறுப்புகளே முக்கியத்துவம் வாய்ந்தவை.
 
நாம் அனைவரும் நமக்குள்ள பொறுப்புகளை நிறைவேற்ற நம்மையே அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். செப்டெம்பர் 13, 2013 அன்று, பா.ஜ.க. நாடாளுமன்றக் குழு எனக்கு ஒரு புதிய பொறுப்பை அளித்தது. செப்டெம்பர் 15இல் எனது பணியை முழு வீச்சில் நான் தொடங்கினேன். 
நான் எதிர்கொண்ட அந்தப் பரீட்சை மே-10 2014 இல் தேர்தல் பிரசாரத்தை நான் நிறைவு செய்த போது முடிந்தது. எனது கட்சித் தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அகமதாபாத் செல்லும் முன்னர் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றேன். அவர் அப்போது என்னிடம் கேட்டார்: "உங்களுக்கு ஓய்வு வேண்டாமா. நீங்கள் சோர்வாக இல்லையா" என்று. ஆனால் நான் அவரை உடனடியாக காண விருப்பம் தெரிவித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பின் கடமையை நிறைவேற்றிவிட்டேன் அது குறித்து தெரிவிக்க வேண்டும் என்றேன்.
 
ஒரு பண்படுத்தப்பட்ட வீரனைப் போல் என் கட்சித் தலைவரிடம் செப்டெம்பர் 13 முதல் மே 10 வரை நான் ஆற்றிய கடமை குறித்து விளக்கினேன். எனது பொறுப்புகளை சிறப்பாக செயல்படுத்தியாக கூறினேன். எனது பிரசார பயணத்தில் கோஷி நகரில் நடைபெறவிருந்த ஒரே ஒரு பிரசாரம் மட்டுமே தடை பட்டது. அதுவும், மாநில பா.ஜ.க. தலைவர் திடீர் மரணத்தாலேயே தடைப்பட்டது.
 
ஒரு நம்பிக்கையான, பொறுப்பான தொண்டராக, நான் உங்களிடம் அறிக்கை அளிக்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட பணியை கட்சித் தொண்டனாக சிறப்பாக செய்துவிட்டேன் என்றேன்.
 
நான் முதல்வரான பிறகே முதல் முறையாக முதல்வர் அறையை பார்த்தேன். இன்றும் அதே நிலை தான். இன்று தான் நான் முதல் முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தை காண்கிறேன்.
 
இத்தருணத்தில், சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன். நாட்டின் அரசியல் சாசனத்தை இயற்றியவர்களை தலைவணங்குகிறேன். இந்த உலகம், ஜனநாயகத்தின் அளப்பரிய சக்தியை கண்டு கொண்டிருக்கிறது.
 
என்னை சர்வதேச தலைவர்கள் தொடர்பு கொண்டு வாழ்த்திய போது, இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான வாக்காளர்கள் பற்றி எடுத்துரைத்தேன். அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
 
அரசியல் சாசனத்தின் சக்தியால்தான், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஏழை இந்த இடத்தில் இப்போது நிற்க முடிகிறது. ஒரு சாதாரண நபர் பிரதமர் ஆகியிருப்பது ஜனநாயகத் தேர்தல் முறையின் அடையாளம். பா.ஜ.க.வின் வெற்றியையும், மற்றவர்களின் தோல்வியையும் இன்னொரு தருணத்தில் விவாதிக்கலாம். மக்கள், ஜனநாயக கட்டமைப்பால் தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் என நம்புகின்றனர். ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது.
 
அரசு என்பது ஏழை மக்களைப் பற்றி சிந்திப்பதாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் அவர்களுக்காகவே இயங்க வேண்டும். எனவே புதிய அரசு ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான இளைஞர்கள் நலனில் அகக்றை கொண்டுள்ளது. தங்கள் சுயமரியாதைக்காகவும், நன்மதிப்பிற்காகவும் போராடும் தாய்மார்கள், மகள்களுக்காக இந்த அரசு இருக்கிறது. கிராமவாசிகள், விவசாயிகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள் இவர்கள் அனைவரது தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பு இந்த அரசிடம் இப்போது உள்ளது. இது தான் நம் தலையாய பொறுப்பு.
 
பிரசாரத்தின் போது, இந்திய தேசத்தின் புதிய முகங்களை பார்த்தேன். உட தன் உடம்பில் ஒற்றை ஆடை மட்டுமே கொண்ட நபர் கூட தனது கைகளில் பாஜக கொடி வைத்திருப்பதை பார்த்தேன். இந்த மக்கள் நமது அரசை புதிய நம்பிக்கையுடனும், எதிர்பார்புடனும் எதிர்நோக்கியுள்ளனர். இனி அவர்களை கனவை நனவாக்குவதே நமது கனவு.
 
அத்வானி அவர்கள் பேசியபோது இந்தமுறை மக்களவைத் தேர்தலின் பொறுப்புகளை ஏற்று பா.ஜ.க.வுக்கு கருணை செய்திருக்கிறார் மோடி என்றார். அத்வானி நீங்கள் மீண்டும் இந்த வார்த்தையை உபயோகிக்காதீர்கள். (மோடி அழுகிறார்)
 
ஒரு மகன் தனது தாய்க்கு செய்யும் பணிவிடையை அவருக்கு செய்யும் கருணை எனக் கூறமுடியாது. தாய்க்கு பணிவிடை செய்யக் கடமைப்பட்டவர் மகன். எனவே எனது தாயான இந்தக் கட்சிக்கு நான் கருணை செய்ததாகக் கூறமுடியாது.
 
கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த பல்வேறு அரசுகளும் அவர்கள் வழியில் நாட்டுக்கு பல்வேறு நன்மைகள் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட நல்ல திட்டங்கள் தொடரும். நாங்களும் நாட்டுக்கு நன்மை செய்வோம். மக்கள் அவநம்பிக்கை கொள்ளக்கூடாது.
 
பல்வேறு ஊடகங்களிலும் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நான் தொலைக்காட்சிகளையோ, வேறு எந்த ஊடகங்களையோ பார்க்கவில்லை. மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பு நம்பிக்கையால் விளைந்தது. இதை நான் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன்.
 
சாமான்ய மனிதனிடம் ஒரு புதிய நம்பிக்கை உதயமாகியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளின் குறிப்பிடத்தக்க சிறப்பே இதுதான்.
 
தேர்தல் முடிவு தொங்கு நாடாளுமன்றமாக அமைந்திருந்தால் மக்கள் முந்தைய ஆட்சிக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக அமைந்திருக்கும். ஆனால் பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை அளித்து அவர்கள் தங்களது நம்பிக்கைக்கு வாக்களித்திருக்கின்றனர். அவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்ற நான் முழுமையாகப் பாடுபடுவேன். அவநம்பிக்கைக்கு எந்த வகையிலும் இடம் கொடுக்கக் கூடாது. அவநம்பிக்கையால் எதுவும் நடக்கப்போவதில்லை.
 
இது புதிய நம்பிக்கைக்கும் வலிமைக்குமான நேரமாகும். இந்த அரசின் தாரக மந்திரம், அனைவருடனும் இருந்து அனைவரையும் வளரச்செயவதே ஆகும்.
 
பொறுப்புகளை நிறைவேற்றும் காலம் கனிந்துவிட்டது. 2019ஆம் ஆண்டு எனது அரசு ஆற்றிய பணிகள் குறித்த அறிக்கையை கட்சிக்கும் நாட்டுக்கும் அளிப்பேன். எனது அரசு ஏழைகளின் அரசு. அவர்களுக்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.
 
இந்த தேசத்திற்காக உயிர் துறக்கும் அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கவில்லை. சுதந்திர இந்தியாவில் பிறந்த நாம் அனைவரும் நம் தேசம் நலனுக்காக எப்படி வாழ வேண்டும் என்றே சிந்திக்க வேண்டும். நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், நம் உடலின் ஒவ்வொரு அங்கமும் இத்தேசத்தின் 125 கோடி மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட வேண்டும். இதுவே நம் கனவாக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால், தேசம் வளர்ச்சி காணும்.
 
நான் இயற்கையாகவே நன்நம்பிக்கை கொண்ட நபர். எனது மரபணுவிலேயே நன்நம்பிக்கை இருக்கிறது. ஏமாற்றங்கள் என்னை நெருங்குவதில்லை. இத்தருணத்தில், எனது கல்லூரி நாட்களில் நான் பேசியதை நினைவு கூர்கிறேன். இந்த கண்ணாடி கோப்பையை பாருங்கள். இதை பார்ப்பவர்களில் சிலர், இதில் பாதியளவு தண்ணீர் இருக்கிறது என்பர். இன்னும் சிலர், பாதியளவு வெறும் கோப்பை என்பார்கள். ஆனால், நான் பாதியளவு தண்னீரும், பாதியளவு காற்றும் இருக்கிறது என்பேன். எனது சிந்தனை எப்போதும் இப்படி ஆக்கப்பூர்வமானதாகவே இருக்கும். ஒரு ஆக்கபூர்வமான பாதையில் செல்லும் போது, நமது சிந்தனை நன்நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நம்பிக்கையுடைய நபராலேயே இந்தியாவில் நம்பிக்கையை விதைக்க முடியும்.
 
அனைவரது வாழ்விலும் துண்பம் நேரும். 2001இல் குஜராத்தை நிலநடுக்கம் தாக்கிய போது திரும்பிய பக்கம் எல்லாம் பேரழிவின் தடங்களே இருந்தது. உலகமே, குஜராத் இனி மீண்டெழ முடியாது எனவே நினைத்தது. ஆனால் குஜராத், தனது சொந்தக் காலில் மீண்டும் நின்றது. எனவே அவநமிக்கையை விட்டொழியுங்கள்.
 
ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு எப்படி முன்னேறாமல் போகும். இந்த தேசத்தில் உள்ள 125 கோடி மக்களும் ஒரு அடி எடுத்து வைத்தாலும் நாடு 125 கோடி அடிகள் முன்னேறிச் சென்று விடுமே.
 
உலகில் எந்த ஒரு நாட்டிலாவது ஆறுகால பருவநிலை இருக்கிறதா? நமது நாடு செழிப்பானது. நமது நாடு முழுவதும் இயற்கை வளங்கள் நிறைந்திருக்கின்றன. நமது நாடு ஆசீர்வதிக்கப்பட்டது. நம் மக்கள் வெளிநாடுகள் சென்று பேரும், புகழும் பெருகின்றனர். அவர்களுக்கு நம் நாட்டிலேயே வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
 
அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்கும் மேன்மை என இந்த தேர்தலில் நாம் இரண்டு விஷயங்களை வலியுறுத்தி இருந்தோம். இந்த தேர்தல், நம்பிக்கையை உருவகப்படுத்தியுள்ளது. என்னுடன் திறன் வாய்ந்த எம்.பி.க்கள் இருக்கின்றனர். மூத்த தலைவர்கள் எப்போதும் எனக்கு ஆலோசனை வழங்குவார்கள். இதன் மூலம், எனக்கு அளிக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுவேன் என நம்புகிறேன். 2019-ல் உங்களை சந்திக்கும் போது என் பணி குறித்த அறிக்கையை அளிப்பேன். கடின உழைப்பு மூலம், முழு முயற்சியுடன் குறிக்கோளை அடைவேன்.
 
வரவிருக்கும், 2015-16 ஆண்டு நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். இந்த ஆண்டு பண்டிட் தீனதயாள் உபாதயாயாவின் நூற்றாண்டு விழாவாகும். அவரே, சைரவீதிமந்திரத்தை தந்தார். கடின உழைப்பையும், தியாகத்தையும் அவர் எப்போதும் போதித்தார். அவர் போதனைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். பண்டிட் தீனதயாள் உபாதயாயாவின் நூற்றாண்டு விழாவை எப்படி கொண்டாடுவது என்பதையும் கட்சி சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.
 
கதியற்றவர்களுக்கு தொண்டு செய்யவதை அவர் எப்போதும் வலியுறுத்தியிருக்கிறார். எனவேதான் நமது அரசு ஏழை மக்களுக்கானது என்று நான் கூறுகிறேன்.
 
உலக அரங்கில், இந்திய தேர்தலும், தேர்தல் முடிவுகளும் ஆக்கப்பூர்வமாக பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்து ஒருவரை பிரதமராக்கியிருக்கின்றனர் என்பதை விட கோடிக் கணக்கான மக்கள் தெளிவான சிந்தனையோடு தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள் என்ற செய்தியே உலக நாடுகள் பலவும் பரவலாக பேசுகின்றன.
 
இந்த தேர்தல் முடிவுகள் உலக நாடுகளை இந்திய ஜனநாயகம், பாரம்பரியம் மற்றும் செயல்திறன் வசம் ஈர்க்கும். இந்திய பிரஜைகள் மத்தியில் உதயமான நம்பிக்கை, உலகளவில் உள்ள மனிதநேய ஆர்வலர்கள் மத்தியிலும் பரவியுள்ளது. இது நல்லதொரு அடையாளம்.
 
சகோதர, சகோதரிகளே, நான் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தேர்தல் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கு உரித்தாக்குகிறேன். நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு கட்சியின் மூத்த தலைவர்களே காரணம். அவர்களே எனக்கு இந்த அடையாளத்தை அளித்துள்ளனர். நமக்கு இன்று கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து, ஐந்து தலைமுறைகளாக நமக்கு முந்தையவர்கள் செய்த தியாகத்தின் பலன். ஜன சங்கம் பற்றி மக்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை. அதை ஒரு கலாச்சார அமைப்பாகவே மக்கள் பார்க்கின்றனர். தேசிய நலனுக்காக தலைதலைமுறையாய் தியாகம் செய்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்.
 
இந்த வெற்றி கோடிக்கணக்கான தொண்டர்களால் கிடைத்த வெற்றி. பாஜகவில் அனைவருமே கட்சிக்கு கட்டுப்பட்டவர்கள். இது தான் இக்கட்சியின் பலமும் கூட.
 
நீங்கள் எனக்கு புதிய பொறுப்பை அளித்திருக்கிறீர்கள். அத்வானி அவர்கள் என்னை ஆசிர்வதித்துள்ளார். நீங்கள் அனைவரும் என் மீது நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர். இது ஒரு போதும் பொய்த்துவிடாது. மீண்டும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்"
 நன்றி வீரகேசரி







பிலிப்பைன்ஸ் பணிப்பெண் மீது சுடுநீரை வீசிய சவூதி எஜமானரின் தாய்

21/05/2014   சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண் வேலைக்குச் சென்ற பிலிப்பைன்ஸ் யுவதியொருவர் எஜமானரின் தாயார் சுடுநீரை வீசியதால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோப்பியை துரிதமாக தயாரிக்கத் தவறியமைக்கு தண்டனையாகவே எஜமானரின் தாயார் அவர் மீது சுடுநீரை வீசியதாகக் கூறப்படுகிறது.
 
சுடுநீரால் முதுகும் கால்களும் அவிந்து வேதனையில் துடித்த அவரை 6 மணி நேரம் கழித்தே எஜமானரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் மருத்துவமனை உத்தியோகத்தர் ஒருவரின் உதவியுடன் சவூதியிலுள்ள தனது மைத்துனியை அந்தப் பெண் தொடர்பு கொண்டதையடுத்து மைத்துனி மருத்துவமனைக்கு வந்து அவரை மீட்டுள்ளார்.
 
தற்போது அந்தப் பெண் பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் பராமரிப்பில் உள்ளார்.
 நன்றி வீரகேசரி








போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 48 பேர் பலி : நைஜீரியாவில் சம்பவம்

22/05/2014    நைஜீரியாவில் 3 கிராமங்களில் போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 48 பேர் பலியாகியுள்ளனர்.
 
 
தென்னாபிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் தனி நாடு கோரி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். 
சமீபத்தில் அங்கு பாடசாலை மாணவிகள் சுமார் 200 பேர் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
 
மாணவிகளை மீட்கும் பணியை அண்டை நாடுகளின் உதவியோடு நைஜீரியா மேற்கொண்டு வருகிறது. பாடசாலை மாணவிகளை கடத்திய போகோஹராம் தீவிரவாதிகள் மீது போர் நடவடிக்கை எடுக்க நைஜீரியா உட்பட நான்கு ஆபிரிக்க நாடுகள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.
 
மாணவிகள் கடத்தப்பட்ட சிபோக் நகருக்கு இடையேயுள்ள 3 கிராமங்களில் இன்று அதிகாலை போகோ ஹரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
இத்தாக்குதலில் சுமார் 48 பேர் பலியாகியுள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி

No comments: