இலங்கைச் செய்திகள்

.

கோபி, அப்பன்,தேவியனின் இரத்த மாதிரிகளில் பரிசோதனை

தகவல் தருபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம்

நாட்டில் தொடரும் மழை : மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு

ஆஸி. செல்ல முயற்சித்த 26 பேர் ஒரு கோடி ரூபா சரீரப் பிணையில் விடுதலை

மாணவர்களுக்கு விரிவுரைகளுக்குச் செல்ல தடை

பொகவந்தலாவை பிரதேசத்தில் மண்சரிவு

பாகிஸ்தானின் கூட்டு இராணுவத் தளபதி இலங்கை வருகை

பிக்குமாரையும் மௌலவிமாரையும் விரட்டியடித்த பொது பல சேனா

யாழ்.மிருசுவில் பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

மனித உரிமைகள் நிலைவரம்: கவலையளிக்கும் நாடொன்றாக இலங்கை இடம்பிடிப்பு
========================================================================



கோபி, அப்பன், தேவியனின் இரத்த மாதிரிகளில் பரிசோதனை


வவுனியா,நெடுங்கேணியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என தெரிவிக்கப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் (வயது 32), அப்பன் என்றழைக்கப்படும் நவரத்னம் நவநீதன் மற்றும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான தேவியன் (36 வயது) ஆகியோரின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.


இந்த மூன்று சடலங்களும் இந்து முறைப்படி அனுராதபுரம் விஜயபுர பொது மயானத்தில் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சடலங்கள் மீதான மரண விசாரணையை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் ராஜா மஹேந்திர ராஜ நடத்தினார் என்றும், அவருடைய உத்தரவுக்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.
நீதவானுடைய உத்தரவுக்கமைய இந்தச் சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது. உடற்பாகங்கள் மற்றும் இரத்தமாதிரிகள் பதவிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் கதிரேஷன் கோவிலின் குருக்கள் ஞானசந்திரன் இறுதி கிரிகைகளை நடத்தினார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட போது ஊடகவியலாளர்கள் எவரும் மயானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.எனினும் இறுதி கிரியைகளில் கோபியின் மனைவி பங்கேற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தய செய்தி 

தகவல் தருபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம்

08/04/2014     இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும்குற்றவாளிகள் தொடர்பில் சரியான தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

1.கோபி
இவர் எல்.டி.டி.ஈ இயக்கத்தின் புலனாய்வுப்பிரிவின்கஜீபன் பொன்னையா செல்வநாயகம்அல்லது காசியன் என அழைக்கப்படுவதுடன்,31 வயதுடைய இந்த நபர் 6  அடி உயரமும் பொது நிறமும் கொண்டவர். 
2. அப்பன்
இவர் எல்.டி.டி.ஈ இயக்கத்தின் புலனாவுப் பிரிவின் நவரெத்தினம் நவநீதன் அல்லது அப்பன் என அழைக்கப்படுவதோடு 36 வயதுடைய இவர்5 அடி 2 அங்குலம் உயரமுடையவர்.
3. தேவன்
இவர் ராதா படையணியின் விமானி ஆவதோடு, அனுராதபுரம் விமானப்படை முகாமை தாக்கிய நபர்களில் இவரும் ஒருவர்.இவர் தேவன் என அழைக்கப்படுகிறார்.
இவர்கள் பற்றிய ஏதேனும் தகவல் கிடைக்குமிடத்து 0112451636 எனப்படும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது 0112321838 எனப்படும் தொலைநகல் ஊடாகவோ  தகவல்தரும்படி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 






நாட்டில் தொடரும் மழை : மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு

07/04/2014        நாட்டின் பல பகுதிகளிலும் அடை மழை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அடை மழை காரணமாக மன்னார் புத்தளம் பழைய வீதியின் எழுவான்குளம் பகுதி வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இருந்த போதும், புத்தளம் மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து பெரிதாக பாதிப்படையவில்லை என்றும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

நன்றி வீரகேசரி 






ஆஸி. செல்ல முயற்சித்த 26 பேர் ஒரு கோடி ரூபா சரீரப் பிணையில் விடுதலை

06/04/2014 ரோலர் படகொன்றில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 26 பேரை நீர்கொழும்பு மேலதிக நீதவான் எம்.ஐ.எம்.பண்டார  கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கோடி ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு பிரதேசத்தைச சேர்ந்தவர்களே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர். இவர்களில் 20 பேர் வயது வந்;தவர்களாவர். ஆறு பேர் சிறுவர்களவர்கள். சிறுவர்களில் மூவர் சிறுமிகளும் மூவர் ஆண் சிறுவர்களுமாவர்.
பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் கடந்த வருடம் ஜுலை மாதம் 14 ஆம் திகதி அம்பாந்தோட்டை கிரிந்த பிரதேசத்திலிருந்து ரோலர் படகொன்றின் மூலமாக சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டுள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக 31-7-2013 அன்று குறித்த படகு அந்தமான் தீவில் கரையொதுங்கியுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 26 பேரும் ஸ்பை ஜெட் விமானம் மூலமாக கடந்த  புதன்கிழமை இலங்கைக்கு  திருப்பி அனுபப்பட்டனர்.
இவர்கள் பல இலட்சம் ரூபா பணத்தை செலுத்தி அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க  பிரிவினர் சந்தேக நபர்கள் அனைவரையும் நீதிமன்றில் ஆஜர் செய்த போதே,  மேலதிக நீதவான் , 20 பேரையும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும், சிறுவர்கள் அறுவரையும் பிணையின்றியும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
நன்றி வீரகேசரி







மாணவர்களுக்கு விரிவுரைகளுக்குச் செல்ல தடை

08/04/2014    ரஜரட்ட பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட 13 மாணவர்கள் மீது விரிவுரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
துட்டகைமுனு விடுதியில் தங்கி இருந்த நான்காம் வருட மாணவர்கள் குழு ஒன்றின் மீது அத்து மீறி; பிரவேசித்து தாக்குதல் நடத்திய தாக 12 மாணவர்கள் மீதும் வர்த்தக பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் மீதுமே மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழக  உப வேந்தர் பேராசிரியர் ரஞ்சித் சிரிவர்தன தெரிவித்தார்.
மேற்படி தாக்குதல் சம்பவத்தில் இருமாணவர்கள் காயமடைந்து வைத்திய சாலையில் 
அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 29ம் திகதி இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
இதே வேளை விரிவுரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்கள் என உப வேந்தர் மேலும்தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி






பொகவந்தலாவை பிரதேசத்தில் மண்சரிவு

08/04/2014    பொகவந்தலாவை பிரதேசத்தில் கடும் மழை காரணமாக  லெட்சுமி தோட்டம் கீழ்பிரிவில் 109 வது இலக்க குடியிருப்புக்கு அருகாமையில் மண் சரிவு  எற்பட்டுள்ளது.
இந்த மண் சரிவானது இன்று காலை 5 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக  நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மண்சரிவினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனா.
மண்சரிவு எற்பட்ட இடத்தில் மின் கம்பம் ஒன்று சரிந்து விழும் நிலையில் உள்ளது.
நோர்வூட் பொலிஸார் இது தொடர்பான மேலதிக  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி வீரகேசரி



பாகிஸ்தானின் கூட்டு இராணுவத் தளபதி இலங்கை வருகை

08/04/2014  பாகிஸ்தானின் கூட்டு இராணுவத் தளபதி ஜெனரல் ரஷாட் மஹ்மூத் நேற்று இலங்கை வந்துள்ளார்.
பாகிஸ்தான் கூட்டு இராணுவத் தளபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் இவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல பகுதிளுக்கும் பாகிஸ்தானின் கூட்டு இராணுவத் தளபதி விஜயம் செய்யவுள்ளார்.

நன்றி வீரகேசரி








பிக்குமாரையும் மௌலவிமாரையும் விரட்டியடித்த பொது பல சேனா

09/04/2014 ஜாதிக பல சேனா என்ற அமைப்பு இன்று புதன்கிழமை  கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டை அங்கு புகுந்த பொது பல சேனா அமைப்பினர் தடுத்து நிறுத்தியதோடு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த வந்திருந்த ஒருசில பிக்குமாரையும் மௌலவிமாரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். 
மன்னார் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வில்பத்து பிரச்சினை உட்பட பொது பல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தெளிவு படுத்துவதற்காகவே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் பக்ஸ் மூலம் அறிவித்திருந்தனர். 
காலை 10.30மணிக்கு ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பிக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய அங்கு ஊடகவியலாளர்கள் வந்திருந்தனர். ஊடகவியலாளர் மாநாடு இடம்பெறும் மண்டபத்திற்கு வருவதற்கு முன்பதாக முஸ்லிம் மௌலவிகளும் வட்டரெக்கே விஜித தேரர் தலைமையிலும் ஹோட்டலில் கீழ் தளத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இதன் போதே பொது பல சேனாவின் விதாரன வெனியே நந்த தேரர் உட்பட சிலர் அவ்விடத்திற்கு வந்து பௌத்த குருமாரை பயன்படுத்தி ஊடகவியலாளர் மாநாடு நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்ப்பை வெளியிட்டனர். 
இதற்கு பதிலளித்த மௌலவியொருவர் இதனை ஜாதிக பல சேனா என்ற எமது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. எனவே நீங்கள் அழைப்பில்லாமல் இங்கு வந்திருக்கிறீர்கள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். 
பின்னர் இவ்விடத்திற்கு வந்திருந்த பொலிஸ் உயரதிகாரியொருவரும் இக்கருத்தையே தெரிவித்தார். அதன் பின்னர் அங்கு பொலிஸார் பெருமளவில் வந்து சேர்ந்தனர். 
அதன் போது அங்கு கடும் வாக்கு பிரதிவாதங்களும் சலசலப்பும் ஏற்பட்டது. இதன் போது ஆவேசமாக பேசிய நந்த தேரர் பிக்குமார் நடத்தும் கூட்டத்தில் வேறு பிக்குமார் கலந்துகொள்வதை எவராலும் தடுக்க முடியாது என்றார். 
அதனை தடுக்க மௌலவிகளுக்கு அதிகாரம் இல்லை. பௌத்த மதத்தை அகௌரவப்படுத்த இடமளிக்க முடியாது வட்டாரக்கே விஜித தேரர் எங்குள்ளவர் பௌத்தத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டவர். முஸ்லிம்களுக்கு சார்பானவர் எனக் குற்றம் சாட்டினார். இதன் போது அங்கு வந்திருந்த பொலிஸ் உயரதிகாரிகள்  பணம் கொடுத்து ஊடகவியலாளர் மாநட்டை நடத்த ஹோட்டலை பதிவு செய்துள்ளனர். எனவே அதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றார். 
இக்கருத்தை அங்கிருந்த பிரதான மௌலவியொருவரும் தெரிவித்தார். இதனை பொது பலசேனா தேரர்களும் அவர்களோடு வந்தவர்களும் ஏற்க மறுத்தனர். இவ்வாறு ஹோட்டலுக்குள் வாக்குவாதம் சூடு பிடித்துக் கொண்டிருக்கையில்,
அங்கு வந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அனைவரையும் அமைதிப்படுத்திவிட்டு பேசத் தொடங்கினார். 
முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்குமானால் மௌலவிகள் முஸ்லிம் அமைப்புக்கள் முஸ்லிம் அமைச்சுக்களோடு பேசித் தீர்க்க வேண்டும்.
அதைவிடுத்து காவியுடை தரித்தவர்களை பயன்படுத்த வேண்டாம். இந்த மாநாட்டை நடத்த வந்த வட்டரெக்கே விஜித தேரர் உண்மையான பௌத்தர் அல்ல காவியுடை போட்டுக்கொண்டு முஸ்லிம்களின் பணத்துக்கு விலை போனவர். 
அவ்வாறான ஒருவரை வைத்து மாநாடு நடத்துவதை இடமளிக்க முடியாது. முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருக்குமானால் ஜெனீவா போங்கள். உலமா சபை உள்ளது. அமைச்சர்கள் இருக்கின்றார்கள் அவர்களிடம் போங்கள் தக்வீத் ஜமாத்தே உள்ளது போங்கள். 
முஸ்லிம்கள் பலாத்காரமாக குடியேற்றப்படுகிறார்கள் வில்பத்து அழிக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் மெளனமாக உள்ளனர். ஆனால் நாம் மௌனமாக இருக்க மாட்டோம் என ஆவேசமாக பேசியதோடு அங்கிருந்த மௌலவிமாரை வெளியேற்றினர். அதன் பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டில் வந்திருந்த பௌத்த குருமாரிடம் பௌத்த மதம் தொடர்பாக கேள்விகளை கேட்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார். 
பின்னர் சிறிய பிக்குவொருவரிடம் பௌத்த மதம் தொடர்பாக பௌத்த மதம் தொடர்பில் பல கேள்விகள் கேட்டு பதிலளிக்காத நிலையில் முஸ்லிம்கள் காவியுடை போர்த்தப் பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதோடு அங்கிருந்த சில குருமார் இவர்களுக்கு சாரத்தை கொடுங்கள் என்றனர். 
அதன் பின்னர் ஊடகவியலாளர் நடத்த வந்திருந்த வட்டரெக்கே விஜித தேரர் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் மஹியங்கனைக்கு போக முடியாது என ஞானசார தேரர் தெரிவித்தார். 
பின்னர் வட்டரெக்கே விஜித தேரர் கீழ்கண்டவாறு மன்னிப்பு கேட்டார். 
நான் முஸ்லிம்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக செயற்பட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் மகா சங்கத்தினரிடமும் சிங்கள பௌத்த மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன் என்றார். 
அதன் பின்னர் அத்தேரர் பொலிஸாரால் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து பொது பல சேனாவினர் தாம் வந்த வாகனங்களில் கலைந்து சென்றனர். 
நிப்பொன் ஹோட்டலுக்கு வெளியே மக்கள் கூடியிருந்தார்கள். பொலிஸார் பெருமளவில் ஹோட்டல் வாசலில் காணப்பட்டனர். 
அந்த 1½ மணித்தியாலங்கள் நிப்பொன் ஹோட்டல் வாக்குவாதங்களால் அதிர்ந்தது. முஸ்லிம்களுக்கு தம்பிமாருக்கு பௌத்த சாசனத்தை அழிக்க இடமளிக்க மாட்டோம் எனக் கூறிக்கொண்டு பொது பல சேனாவினர் வெளியேறினர்.   
நன்றி வீரகேசரி







 யாழ்.மிருசுவில் பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

10/04/2014 வடக்கில்-கிழக்கில்  மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழில் மண்டைதீவுப்பகுதியில் மனித எச்சங்கள் அண்மைக்காலத்தில் மீட்கப்படிருந்த நிலையில் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கடந்த 18 வருடங்களாக இருந்துவந்த யாழ்.மிருசுவில் கெற்பெலியில் மனித எச்சங்கள் பல நேற்று பிற்பகல் 4 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்படட்ட  கெற்பெலி கடற்கரைப்பகுதியில் கடந்த 18 வருடங்களாக இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர்.
எனினும் அண்மையில் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தங்கள் காணிகளை உரிமையாளர்கள்  துப்புரவு செய்த போது அங்கிருந்த மண் அணைக்கு அண்மித்த பகுதியில் சிதைந்த நிலையில் மனித எச்சங்கள் இருப்பதை கண்டுள்ளனர்.
அத்தோடு  மனித உடலங்கள் எரியூட்டப்பட்ட அடையாளங்களும் தென்பட்டதையடுத்து உடனடியாக இது குறித்து பொலிஸ் மற்றும் பிரதேச செயலகத்திற்கும் காணி உரிமையாளர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பிரதேச செயலக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்து வருகின்றனர்.
 நன்றி வீரகேசரி









 மனித உரிமைகள் நிலைவரம்: கவலையளிக்கும் நாடொன்றாக இலங்கை இடம்பிடிப்பு


10/04/2014 பிரித்தானிய அரசாங்கத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள மனித உரிமைகள் நிலைவரம் குறித்த அதன் வருடாந்த அறிக்கையில் இலங்கை கவலைக்குரிய நாடொன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் (2013) உலகளாவிய ரீதியில் காணப்பட்ட மனித உரிமைகள் நிலைவரம் பற்றிய விபரங்களை உள்ளடக்கியுள்ளமை குறித்து அறிக்கையானது கடந்த வருடம் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் மோசமான முறையில் கவலையளிப்பதாகவே இருந்தது. மேற்படி அறிக்கையில் அது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- 
உட்கட்டமைப்பு மீள் கட்டுமாணம் மற்றும் நாட்டின் வடபுலத்தில் முதற்தடவையாக இடம்பெற்ற தேர்தல்கள் உள்ளிட்ட யுத்தத்திற்குப் பின்னரான நிலைவரங்களில் தொடர்ச்சியாக முன்னேற்றம் காணப்பட்டு வந்தபோதிலும் பல விடயங்களிலான ஒட்டுமொத்தப் போக்கானது எதிர்மறையாகவே காணப்பட்டது. ஊடகவியலாளர்களுக்கெதிரான தாக்குதல்கள் தொடர்கதையாகிப்போன நிலையில், இலங்கை பத்திரிகை சுதந்திரம் மற்றும் பெண்கள் உரிமைகள் குறித்து வெளியாகியிருந்த சுயாதீனமான சுட்டிகளில் இடம் பிடித்திருந்தது.
பிரதம நீதியரசரைப்  பதவி நீக்கம் செய்தமையானது தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கலாசாரமொன்றைப்பற்றிய விசனங்களை  மேலும் மோசமாக்கியதுடன், நிறுவனங்கள் சிலவற்றுக்கு இருக்க வேண்டிய சுயாதீனத்தன்மையின் அளவும் படிப்படியாக அழிக்கப்பட்டது. 
இழைக்கப்பட்டதாக கூறப்படும் போர்குற்றச் செயற்பாடுகளுக்கான  பொறுப்புக் கூறும் கடப்பாடு, மனித உரிமைகளை கண்ணியப்படுத்தல் மற்றும் அரசியல் தீர்வொன்றை காணுதல் ஆகியவற்றையே பிரித்தானியா யுத்தத்திற்கு பின்னரான அத்தியாவசிய மூலக்கூறுகளாக பார்க்கின்றதெனவும் அதில் குறித்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாரதூரமான மனித உரிமைகள் குறித்து விவகாரங்களை உரிய முறையில் கையாளுமாறும் கருத்து வெளியிடும் சுதந்திரம் பெண்கள் உரிமைகள் தேர்தல் செயற்கிரமங்கள் மற்றும் சட்டவாட்சி ஆகியவற்றில் முன்னேற்றம் காண்பிக்கும் பொருட்டு சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றுமாறும் பிரித்தானியா இலங்கை அரசைத் தொடர்ந்தும் வலியுறுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த வருடம் முதல் மூன்று மாதங்களுக்குமான மனித உரிமைகள் நிலைவரம் குறித்த இற்றைப் படுத்தல் ஒன்றில் கடந்த மூன்று மாதங்களின் போது இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளதுடன் வடபுலத்தில் சமூக ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்படுதல் மற்றும் தொந்தரவுக்குள்ளாக்கப்படுதல் பற்றிய முறைப்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளதாகவும் ஈண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த  காலாண்டுப் பகுதியில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திர நிலவரத்திலும் முன்னேற்றம் காணப்படாத நிலையே இருந்தது.
இந்த வருடம் உலக பத்திரிகைச் சுதந்திரம் பற்றி 180 நாடுகள் இடையே நடத்தப்பட்ட ஆய்வில் இலங்கை 165வது இடத்தை வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படி இருந்த போதிலும் கடந்த 2011 ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டிருந்த பிரித்தானியா பிரஜையான குராம் ஷெய்க்கின் படுகொலை விசாரணைகளில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 26ம் திகதி ஆரம்பமான நியாய விசாரணை எதிர்வரும் மாதங்களில் தொடரவுள்ளதாகவும் அதில் மேலும் காட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 நன்றி வீரகேசரி


No comments: