நிரந்தரமான, நிலையான தீர்வு ஒன்றைக் காணும் திசையை நோக்கி நிறைவேற்று அதிகாரம் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக, நாடாளுமன்றத் தெரிவுக்குழு நடவடிக்கையில் பங்குபற்றாமைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு மீத குற்றம் சுமத்துவதில் மட்டுமே அவருக்கு நாட்டம் உள்ளது என்றார் முதலமைச்சர். கொழும்பில் பேர்னாட் சொய்ஸா நூற்றாண்டு நினைவு தின உரை இன்று கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். வன்னியில் இலவசமாகக் காணி பெறுவதற்கு சிங்களவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படும் நோட்டீஸ்கள் தெற்கின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றின் பிரதிகள் எனக்கும் கிடைத்தன. அத்தகைய இலவச காணியைப் பெற்றுக் கொண்ட சிலரை வவுனியாவில் உள்ள எனது நண்பர்களுக்குத் தெரியும். வடக்கு, கிழக்கு மாகாணங்களை கபளீகரம் செய்வதுதான் ஜனாதிபதி குறிப்பிடும் நிலையான, நிரந்தரத் தீர்வு போலும். நாடாளுமன்றத் தெரிவுக்குழு நடவடிக்கைகளுக்கு வராமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதில்தான் அரசுக்கு அதிக நாட்டம். அரசியல் உள்நோக்கம் கொண்டு இப்போது 'புலிகள் மீள அணி சேர்கின்றன' என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அரசியல் உள்நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேட்டையின் கீழே பெரும் எண்ணிக்கையானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீண்டும் புலிகள் திரளுகின்றனர் என்ற கதையை நம்புவதற்கு யாரும் தயாரில்லை. அடுத்த விடயம் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்பதாகும். வடக்கு மாகாணத்துக்கான தேர்தல் குறித்து 2009, 2010, 2011, 2012 மற்றும் 2013 இல் எல்லாம் உறுதியளிக்கப்பட்டது. இறுதியாக இந்தியாவின் தலையீடு காரணமாக கடந்த செப்டெம்பரில் அது நடந்தது. அதிலும் இராணுவத்தின் நேரடித் தலையீடு இடம்பெற்றது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்த சகல வளங்களும் அரச ஆதரவுத் தரப்புக்குக் கிட்டியது. எனினும் மக்கள் பலமாக நின்று எமக்கு வாக்களித்தனர். மக்கள் அப்படி வாக்களித்த போதிலும் அதிகாரப் பற்றாக்குறையுடன் இருந்த 13 ஆவது திருத்தத்தை மேலும் பலவீனப்படுத்தவே முயற்சிகள் எடுக்கப்பட்டன.
வடக்கு, கிழக்குக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு இந்த அரசு தயாராகவில்லை. சில நடவடிக்கை முறைகளைத் தவறு எனக் காட்டி வடக்கும் கிழக்கும் உயர்நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்டன. அவற்றை இணைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியமரமுடியவில்லை. குடாநாட்டிலும் வன்னியிலும் மக்களின் பெருமளவு நிலம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இராணுவமே எமது நிலங்களில் விவசாயம் செய்கின்றது. எமது கடலில் மீன்பிடித்துத் தொழில் செய்கிறது. வர்த்தக வியாபாரங்களை முன்னெடுக்கின்றது. வேறு மொழியில் சொல்வதானால் ஆக்கிரமிப்பு இராணுவம் எதிரியின் நிலங்களின் மீதும் உடைமைகளின் மீதும் உரிமை கொண்டாடுகின்றது. அவர்கள் இடம்பெயர்ந்த எமது மக்களின் வாழ்வாதார வசதிகளை மறுக்கிறார்கள். வடக்கு மாகாணத்தில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.
இதை யாரும் நம்பாவிடில் அவர்கள் இது குறித்து ஆர◌ாய ஒரு சர்வதேச விசாரணையை ஏற்பாடு செய்து பார்க்கட்டும். வெளியே தெரியும் படை முகாம்களுக்கு மத்தியில் அடர்ந்த காடுகளுக்குள் பல முகாம்கள் செறிந்து கிடக்கின்றன. தாங்கள் ஆக்கிரமித்துள்ள எமது மக்களின் விவசாய நிலங்களைத் தங்களுக்குக் கையகப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை இப்போது இராணுவம் முன்வைத்து வருகின்றது. இவை எல்லாம் எமது மக்களின் நிலஙகள். அவர்கள் அனைவரும் அகதிகளாக இடம்பெயர்ந்து நிர்கதிக்கு உள்ளாகி அல்லாட, இராணுவமோ சொகுசு வாழ்வு வாழ்கின்றது. இதுதான் அகதிகளின் மீள்குடியமர்வு நிலைமை. ஆகவே இன்றைய தேசியப் பிரச்சினையைப் பொறுத்தவரை அதற்குக் காரணம் அதில் சம்பந்தப்பட்டோருக்கு உறுதியும், அப்பிரச்சினை பற்றிய புரிந்துணர்வும் இல்லை என்பதுதான். சுருக்கமாகக் கூறுவதானால் இலங்கையில் வித்தியாசமான தேசங்கள் உண்டு என்பதை ஏற்க மறுப்பதுதான் தேசியப் பிரச்சினைக்குப் பிரதான காரணம் என்பேன்.
இந்த உண்மையை பெரும்பான்மை இனம் ஏற்கத் தயார் என்றால்தான் ஒரு தீர்வு எட்டப்பட முடியும். ஆனால் அரசினால் அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் இந்த யதார்த்த உண்மையை - இருப்பை - மறைக்கும் திசையை நோக்கியனவாக இருக்கின்றன. இன்று அதிகாரத்தில் இருக்கும் அரசு வேண்டுமென்றே எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் இப்படி எதிர்த் திசையிலேயே உள்ளன. பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை வரை தனியாக சிங்கள பௌத்த தேசம் மட்டுமே இருக்கின்றது என்ற கருத்தில் மற்றைய தேசத்தை இல்லாதெழிப்பதே அவர்களது எண்ணம். இலங்கை நாட்டின் மீது தமிழர்களும் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்பாடு கொண்டவர்கள்.
இந்த இரத்தக் களறி சிந்தும் தேசத்தில் ஏனையோரைப் போல தாங்களும் சகோதரர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் அவா. சகோதரர் பேர்னாட் சொய்சா அவர்கள் பிறந்து இவ்வருடம் 100 வருடங்கள் ஆகின்றன. அவரைத் தோழர் என்னாது சகோதரர் என்று கூறுவதற்குக் காரணம் தோழர் என்ற உறவு 1972ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்புடன் துண்டிக்கப்பட்டு விட்டது என்பதாலேயே! அவர் எம்முடன் இல்லாவிட்டாலும் அவர் நினைவாக நாங்கள் இன்று இங்கு கூடியிருக்கின்றோம் என்றால் அவரின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்க வேண்டிய பல பாடங்கள் எமக்கு இருக்கின்றன என்ற காரணத்தினாலேயே! குறுகிய மனப்பான்மை கொண்டவர் அல்லர் அவர்.
உதாரணத்திற்கு இந்த 57ஆவது ஒழுங்கையை கொழும்பு தமிழ்ச்சங்க ஒழுங்கை என்று பெயர் மாற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது. காரணம் 'தமிழ்' என்ற சொல் சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதால் என்று நினைக்கின்றேன். சகோதரர் சொய்சா இருந்திருந்தால் அவ்வாறு மாற்றாதிருப்பதைக் கண்டித்திருப்பார்; மாற்றுமாறு ஆணையிட்டிருப்பார். சகோதரர் பேர்னாட் சொய்சா அவர்கள் எல்லா விதத்திலும் ஒரு கனவான் வாழ்க்கையை வாழ்ந்து வந்த மனிதருள் ஒரு மாணிக்கம். அவரை உற்றார், நண்பர்கள், உறவினர் மட்டுமன்றி எதிரிகளும் மதித்தார்கள். அதுதான் அவரின் சிறப்பு. 1964 தொடக்கம் 1977 வரை தொடர்ந்து அவர் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராகக் கடமையாற்றினார். அவரின் தகைமையையும் நம்பகத் தன்மையையுந் தெரிந்து வைத்திருந்த ஐக்கிய தேசிய கட்சி தமது ஆட்சிக் காலத்தில்க் கூட அவரைத் தொடர்ந்து அந்தப் பதவியில் இருக்கச் செய்தனர்.
அவரின் நம்பகத்தன்மை கொண்ட நேர்மையான அரசியல் வாழ்க்கையை, அவரின் கொள்கைளைக் கூட ஏற்றுக்கொள்ளாதவர்கள் மதித்ததால்த்தான் அவர் தொடர்ந்து கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதிக்கு பலமுறை தெரிவானார். அவர் எவர் மீதும் குரோதம் பாராட்டியவர் அல்லர். ஆகவே அப்பேர்ப்பட்ட ஒரு மனிதருள் மாணிக்கத்தைப் பற்றி நினைகூர எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று ஆங்கிலத்தில் எனக்குப் பேசக் கொடுக்கப்பட்டிருந்த தலையங்கம் ''தேசியப் பிரச்சனை'' என்பது. தேசத்தை வருத்தும் பிரச்சனையே தேசியப் பிரச்சினை என்ற பலர் நினைப்பார்கள். ஆனால் நான் கூற வருவது எமது நாட்டில் உள்ள தேசியங்களை மதிக்காததால் ஏற்பட்ட பிரச்சனையே தேசியப் பிரச்சனை என்பதுதான்.
இந்நாட்டில் இரு தேசியங்கள் பண்டைய காலந் தொடக்கம் இருந்து வருகின்றன. அவற்றிற்கு வேறு வேறான மொழி, மதம், இடம், கலாசாரம் என்பன இருந்து வந்தன என்பதை நாம் ஏற்காது போனதால்த்தான் இன்று ஒரு தேசியப் பிரச்சனை எழுந்துள்ளது. இதையுணர்ந்த காலஞ்சென்ற கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்கள் 1956 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் கூறியதை இங்கு மொழி பெயர்த்துத் தருகின்றேன்:- "அக்கிராசனர் அவர்களே! மொழிகளுக்கான சம அந்தஸ்தை வழங்குவதே நாட்டின் சுதந்திரத்திற்கும் மக்கட் சமூக குழுக்களுக்குமிடையில் ஒற்றுமைக்கும் வழி வகுக்கும். அவ்வாறில்லையென்றால் இந்த ஒரு சிறிய நாட்டினுள் இரத்தம் தோய்ந்த இரு மக்கட் குழாம்கள் இரு சிறிய நாடுகளை உருவாக்கும் நிலையேற்படலாம்.
அதாவது எமது நடவடிக்கைகளால் ஒரு சமூக மக்கட் குழுவினரை நாமே தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கு இலக்காக்கப் போகின்றோம். அண்மையில் பேரினவாதிகளிடம் இருந்து பெறப்பட்ட எங்கள் நாட்டை நாங்கள் மீண்டும் பேரினவாதத்தின் உள்ளீடலுக்குக் கையளிக்கப் பார்க்கின்றோம்." என்றார் அவர்;. இன்று வெளிநாட்டார் எம் விடயங்களில் தலையிடுவதாக முறையிடுபவர்கள் கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா அவர்களின் தூர சிந்தனையையும் சரித்திர ரீதியான நுண்பார்வையையும் கருத்தில் எடுக்க வேண்டும். இன்றைய வெளிநாட்டு அல்லது சர்வதேச உள்ளீடு அன்றைய பிழையான செயலின் பிரதிபயன் அல்லவா? இந்நாட்டில் ஆகக் குறைந்தது இரண்டு தேசிய சமூகக் குழாம்கள் இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளாத அரசியல்வாதிகளினால்த்தான் எங்கள் தேசியப் பிரச்சனை தலை தூக்கியுள்ளது.
இவ்வாறான பிரச்சனை எழாதிருக்க லங்கா சமசமாஜ கட்சி மட்டுமல்ல அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ அவர்களும் எச்சரித்துச் சொன்னதை காலஞ்சென்ற S.W.R.D.பண்டாரநாயக்கா அவர்கள் கேட்காது "சிங்களம் மட்டும்" சட்டத்தை 1956 ஆம் ஆண்டில் கொண்டு வந்ததே பின்னர் இரு தேசியங்களுக்கிடையிலான முரண்பாடுகளை வளர்த்தது. மொழியால் தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு அதேநேரத்தில் வேறு பல விதங்களிலும் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் தமிழ்ப்பேசும் மக்களுக்கு அவலங்களையும் அல்லல்களையும் கொடுக்கத் தொடங்கி னார்கள். கல்வியில் சமன்படுத்தல், பலவந்த வட-கிழக்கு மாகாணக் குடியேற்றங்கள், வட-கிழக்கை இராணுவ மயப்படுத்தல் போன்ற பலதிலும் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் ஈடுபட்டனர். இவற்றின் எதிர்த்தாக் கமாகவே எமது இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் எழுந்தது. ஆகவே வன்முறைக்கு வித்திட்டவர்கள் யார் என்று அறியாமல் நாங்கள் தேசிய பிரச்சினையைத் தீர்க்க வழிமுறைகளைத் தேட முடியாது.
அதற்கான மார்க்க வழி என்ன? சுருங்கக் கூறின் இந் நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதே தீர்வுக்கான ஒரே வழி. ஆனால் இதற்கான அரசியல் மனோதிடம் எமக்கில்லை. ஏனென்றால் எப்போதாவது ஒரு தீர்வு கிடைப்பது போல் இருந்த தருணத்தில் எல்லாம் ஒரு சில சமாதான விரோத சக்திகள் சேர்ந்து அத்தீர்வை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்துள்ளன. அதுதான் எமது அண்மையக் காலச் சரித்திரம். அண்மையில் போர் முடிந்த போது எமது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளிப்படுத்தினார்.
அவர் அரசியல் தீர்வொன்றை வெகு விரைவில் காணப்போவதாகவும் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தப்போவதாகவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களைத் தத்தமது வசிப்பிடங்களில் குடியமர்த்தி அவர்களுக்காவன செய்யப்போவதாகவும், மனித உரிமைப் பாதுகாப்பு சம்பந்தமான வழிமுறைகளைச் சர்வதேச நிலைக் கேற்றவாறு நடைமுறைப்படுத்தப் போவதாகவும், மனித உரிமைக் குற்றம் இழைத்தவர்களைத் தண்டிக்க ஆவன செய்யப் போவதாகவும் மற்றவற்றிற்கிடையில் உறுதி அளித்தார். ஆனால் நடந்தது என்ன? அரசியல் தீர்வைப் பெறுவதில் அரசாங்கம் அசமந்தப் போக்கையே வெளிக்காட்டி வருகிறது. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் தரப்பட்டிருக்கும் ஒரு சில உரிமைகளையும் வடமாகாண சபைக்குத் தராது இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் நிலை நாளாந்தம் மோசமாகிக் கொண்டு வருகிறது. வலிகாமம் வடக்கில் 6000 இற்கும் மேலான ஏக்கர் வளமுடைய காணி மக்களிடம் இருந்து பறித்தெடுத்து இராணுவம் பயிர்செய்து பல மாளிகைகள் கட்டி, காணியின் சொந்தக்காரர்களின் எதிர்பார்ப்பைப் பகற்கனவாக்கி வைத்துள்ளார்கள். எங்கும் இராணுவத்தின் அதிகாரமே வடமாகாணத்தில் தலைவிரித்தாடுகின்றது. மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்போம் என்ற அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் அண்மைக் காலங்களில் ஈடுபட்டு வருகிறது. புலிகள் வருகின்றார்கள் என்ற புருடாவைப் புனைந்துரைத்துப் புதிதாக மனித உரிமை மீறல்களைப் புரியத் தொடங்கியுள்ளார்கள் படையினரும் பொலிஸாரும். குற்றச் செயல்கள் கூடிக் கொண்டு செல்கின்றன. குற்றம் இழைத்தவர்களை கூட்டில் நிறுத்தாது அவர்களுடன் அரசாங்கம் கூடிக் குலாவி வருகின்றது.
எனவே பெரும்பான்மை மக்கள் தமிழ்த்தேசியத்தையும் வேண்டுமெனில் இஸ்லாமிய மக்களின் தேசியத்தையும் ஏற்றுக்கொண்டால்தான் விடிவை நோக்கி நாம் செல்லலாம். தமிழ்ப்பேசும் மக்கள் சமாதானத்திற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள். தேசியப் பிரச்சினையைத் தீர்க்கப் பெரும்பான்மையின மக்களும் அவர்களின் அரசியல் தலைவர்களும் ஆயத்தமாகி இருக்கின்றார்களா? அதற்கான அரசியல் மனோதிடம் அவர்களுக்கு ஏற்படுமா? காலந்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
நன்றி:seithy
|
No comments:
Post a Comment