கமெரூனில் இரு மதகுருமாரும் கன்னியாஸ்திரியும் கடத்தல்
எம்.எச்.370 விமானத்தினது என நம்பப்படும் புதிய இரு சமிக்ஞைகள் ஆஸி. கடற்படைக் கப்பலால் அவதானிப்பு
கமெரூனில் இரு மதகுருமாரும் கன்னியாஸ்திரியும் கடத்தல்
07/04/2014 கமெரூனில் இரு இத்தாலிய மதகுருமாரும் கனேடிய கன்னியாஸ்திரியொருவரும் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சனிக்கிழமை கடத்தப்பட்டுள்ளதாக இத்தாலிய வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
கமெரூனின் வடமேற்கேயுள்ள மரோவா மாவட்டத்திலுள்ள கட்டடமொன்றை கொள்ளையிட்ட ஆயுததாரிகள், மேற்படி மதகுருமாரையும் கன்னியாஸ்திரியையும் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட மதகுருமாரில் ஒருவர் கமெரூனில் கடந்த 6 வருடங்களாக தங்கியிருந்ததாகவும் மற்றைய மதகுரு அந்நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு முன்பே வந்ததாகவும் இத்தாலிய ஊடகமொன்று அறிக்கையிட்டுள்ளது நன்றி வீரகேசரி
எம்.எச்.370 விமானத்தினது என நம்பப்படும் புதிய இரு சமிக்ஞைகள் ஆஸி. கடற்படைக் கப்பலால் அவதானிப்பு
08/04/2014 காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய கடற்படை கப்பலொன்று, அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டிகளிலிருந்து வெளிப்படுவதையொத்த நீருக்கு கீழான புதிய சமிக்ஞைகளை இனங்கண்டறிந்துள்ளதாக அந்த தேடுதல் நடவடிக்கையை ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டுள்ள அமைப்பு திங்கட்கிழமை தெரிவித்தது.
சுமார் ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட அந்த விமானத்தை தேடும் நடவடிக்கையில் மிகுந்த நம்பிக்கையளிக்கும் ஒன்றாக இவை உள்ளன என மேற்படி அமைப்பின் தலைவரான ஓய்வு பெற்ற அவுஸ்திரேலிய விமானப் படைத் தலைவர் அங்கஸ் ஹுஸ்டன் கூறினார்.
அவுஸ்திரேலிய கடற்படை கப்பலான ஓசன் ஷீல்ட்டால் அவதானிக்கப்பட்ட இரு சமிக்ஞைகளில் ஒன்று இரண்டு மணித்தியாலத்துக்கு மேற்பட்ட காலம் நீடித்துள்ளது.
அந்தக் கப்பலிலுள்ள 'டவ்ட் பிங்கர் லொக்கேட்டர்' என்ற சமிக்ஞைகளை இனங்காணும் கருவியைப் பயன்படுத்தியே இந்த சமிக்ஞைகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த சமிக்ஞைகள் காணாமல் போன மலேசிய 'எம்.எச்.370' விமானத்துக்கு சொந்தமானவையா என்பதை உறுதிப்படுத்த மேலதிக தகவல்கள் தேவைப்படுவதாக அங்கஸ் ஹுஸ்டன் தெரிவித்தார்.
அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியிலான சமிக்ஞைகளை பெறுவதற்கான 30 நாட்கள் காலக்கெடு முடிவடைவது தொடர்பில் மணித்தியாலங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே இந்த புதிய சமிக்ஞைகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலேசிய 'எம்.எச்.370' விமானம் கடந்த மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நகருக்கு 239 பயணிகளுடன் பயணித்த வேளை காணாமல் போனது. அந்த விமானம் தென் இந்து சமுத்திரத்தில் விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பலால் இனங்கண்டறியப்பட்ட சமிக்ஞைகளில் முதல் சமிக்ஞை இரு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு தொடர்ந்து அவதானிக்கப்பட்ட நிலையில் மறைந்துள்ளது.
இதனையடுத்து அந்தக் கப்பல் திரும்பிய வேளை இரண்டாவது சமிக்ஞை இனங்கண்டறியப்பட்டது. அந்த சமிக்ஞை சுமார் 13 நிமிடங்கள் நீடித்துள்ளது.
இந்த சமிக்ஞைகள் விமான தரவு பதிவுக்கருவியிலிருந்தும் ஒலிப்பதிவு கருவியிலிருந்தும் வெளிப்பட்டிருக்க சாத்தியமுள்ளதாக அங்கஸ் ஹுஸ்டன் தெரிவித்தார்.
ஏற்கனவே சீனக் கப்பலொன்றால் இரு சமிக்ஞைகள் மிகவும் குறுகிய காலத்திற்கு அவதானிக்கப்பட்டமை குறிப்படத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment