.
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளில் வட மாகாணத்தில் 9982 பேர் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரி தமிழ் பாடசாலைகளில் முதலிடத்திலும் அகில இலங்கை ரீதியில் ஆறாவது இடத்திலும் உள்ளது. 2013ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இம்முறை வடக்கில் 65.33வீத மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதன் படி கடந்த 2013ஆம் ஆண்டில் வட மாகாணத்தைப் பொருத்த வரையில் 15 ஆயிரத்து 820பேர் பரீட்சைகளுக்கு தோற்றி 9 ஆயிரத்து 982பேர் இவற்றில் உயர்தரத்திற்கு தகுதியடைந்துள்ளனர். குறிப்பாக வட மகாணத்தைப் பொருத்தவரையில் யாழ்ப்பாணத்தில் 8396 பரீட்சார்த்திகளும், வவுனியாவில் இருந்து 2478 பேரும், மன்னாரில் இருந்து 1517 பேரும், முல்லைத்தீவில் இருந்து 1318 பேரும், கிளிநொச்சியில் இருந்து 1571 பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர். அதேபோல் இம்முறை சாதாரண தரப் பரீட்சைகளில் வட மாகாணத்தினை பொறுத்தவரையில் 131பேர் அனைத்து பாடங்களிலும் சிறப்பு சித்தி பெற்றுள்ளதோடு 356பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பரீட்சையில் சித்தியடைந்த வீதத்தின் படி பாடசாலை மட்டத்தில் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி அகில இலங்கை ரீதியில் ஆறாவது இடத்திலும் தமிழ் பாடசாலைகள் அடிப்படையில் முதல் இடத்திலும் உள்ளது. அதேபோல் யாழ்ப்பாணத்தின் மற்றுமொரு பாடசாலையான யாழ். இந்துக் கல்லூரி அகில இலங்கை ரீதியில் 27வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment