இலங்கைச் செய்திகள்


பிக்கு தீக்குளித்தமைக்கு ஐ.தே.க. கவலை

கண்டியில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்

இலங்கை தூதுக்குழு சீன விகாரையில் வழிபாடு

எனது மகளுக்கு துப்பாக்கியால் சுடத்தெரியாது : எஜமான் மீதும் மகன் மீதுமே சந்தேகம்- ஜேர்தானில் உயிரிழந்த பணிப்பெண்ணின் தாயார்

புத்தர் சிலைகளை அமைத்து புத்தபெருமானை அவமதிக்காதீர்கள்: பொன். செல்வராசா

மட்டு. நுழைவாயிலில் புத்தர் சிலை வைக்கப்பட மாட்டாது: இராணுவம்

யாழ். கோட்டை புனரமைப்பு

தமிழர்களுக்காக குரல் கொடுத்ததால் சிங்களப்புலி என்று சொல்லப்பட்ட நண்பர் ஜயலத் மறைந்துவிட்டார்: மனோ கணேசன் 
  
திங்களன்று மறைந்த டாக்டர் ஜயலத்தின் இறுதிக் கிரியைகள்
  
வடக்குத் தேர்தலை நடத்தி இன்னொரு தடவை நாட்டில் பிரிவினை வாதத்திற்கு இடமளிக்கக்கூடாது : பியசிறி

 லண்டனில் இருந்து கோயிலுக்கு வந்தவர் இலங்கையில் கைது'

19 விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு தங்க நகைகள் கொள்ளை

=======================================================================

பிக்கு தீக்குளித்தமைக்கு ஐ.தே.க. கவலை

28/05/2013 தலதா மாளிகைக்கு முன்னால் அண்மையில் பிக்கு ஒருவர் தீ மூட்டி தற்கொலை செய்தமைக்கு பிரதான எதிர்க் கட்சி என்றவகையில் ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டுள்ளது.
இராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலதா மாளிகைக்கு முன்னால் அண்மையில் பிக்கு ஒருவர் தீ மூட்டி தற்கொலை செய்தமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கவலை தெரிவிக்கின்றது. இது குறித்து அரசு பாராமுகமாகவுள்ளதுடன் ஊடகவியலாளர்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்தை திசை திருப்ப எத்தனிக்கின்றது.
இந்த நாட்டில் இடம்பெற்ற வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் கூட இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை. தற்போதைய ஆட்சியில் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறுகின்றதென்றால் மிகவும் சந்தேகத்திற்கு இடமானது. இதற்கான விசாரணைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி   






கண்டியில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்

28/05/2013 தீக்குளித்த போவத்தை இந்திர ரத்ன பிக்குவின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கண்டியில் பிக்குகள் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கண்டி ஜோர்ஜ் டி சில்வா மேற்தளப் பூங்காவில் இடம் பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் அவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பௌத்த தர்மத்திற்காகவும் நாட்டு நலனுக்காகவும் தன்னுயிரைத் தியாகம் செய்த மேற்படி தேரரின் கோரிக்கைகள்அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
பௌத்த தர்மத்தை பிரதி பலிக்கும் வகையிலும் அதற்கு ஏற்றவாறும் சட்ட மூலங்கள் பாராளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.மத மாற்றத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சர்வமத அமைப்புக்கள் ஒழிக்கப்படவேண்டும். மாடுவெட்டுதல் முற்றாகத் தடைசெய்யப்படவேண்டும்.
இவை உட்பட இன்னும் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நன்றி வீரகேசரி  



இலங்கை தூதுக்குழு சீன விகாரையில் வழிபாடு

28/05/2013 சீனாவிற்கு ஊத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை தூதுக் குழுவினர் அங்குள்ள புத்த விகாரையில் வாழிபாட்டில் ஈடுபட்டனர்.
பெய்ஜிங்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள லிங்குவாங் பௌத்த விகாரைக்கு விஜயம் மேற்கொண்டு வாழிபாட்டில் கலந்துகொண்டு ஆசிர் பெற்றனர்.
இந்நிலையில் இவ் விகாரையின் தலைமை பிக்குவான சாங் ஜாங்க் மற்றும் சக பிக்குகளிடம் ஜனாதிபதி, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் பிரதிநிதிகள் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.








நன்றி வீரகேசரி  



எனது மகளுக்கு துப்பாக்கியால் சுடத்தெரியாது : எஜமான் மீதும் மகன் மீதுமே சந்தேகம்- ஜேர்தானில் உயிரிழந்த பணிப்பெண்ணின் தாயார்
jordan srilankawomen28/05/2013 ஜோர்தான் நாட்டில் மற்றுமோர் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த நான் நான்கு வருட ஒப்பந்தம் முடிந்து கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி திரும்புவதற்கு முதல்நாள் தான் மகளை இறுதியாக பார்த்த நாள் ஆகும்.
அதாவது செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி வீட்டு எஜமானுடன் நான் தொழில் புரிந்த வீட்டுக்கு வந்து தனது மூன்று மாத சம்பளத்தையும் தந்து வழி அனுப்பி வைத்தார். அன்று உயிருடன் பார்த்த மகளை இன்று சடலமாக காண்கிறேன் என ஜோர்தான் நாட்டில் துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்த வாழைச்சேனை கறுவாக்கேணியை சேர்ந்த பணிப் பெண் நாகேந்திரன் காந்திமதி (21) என்பவரின் தாயார் நாகேந்திரன் மங்களேஸ்வரி (46) கண்ணீருடன் கூறினார்.
கடந்த 6 ஆம் திகதி மரணமடைந்த இவரது மகளின் சடலம் ஜோர்தான் நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயத்தினால் பொறுப்பேற்கப்பட்டு நேற்று அதிகாலை விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தது. விமான நிலையத்தில் உறவினர்களினால் பொறுப்பேற்கப்பட்டு தற்போது கறுவாக்கேணியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தனது மகளின் மரணத்தில் வீட்டு எஜமான் மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தனது வீட்டில் வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்த நாகேந்திரன் மங்களேஸ்வரி தொடர்ந்தும் தெரிவிக்கையில், எனது குடும்பத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பிள்ளைகள். கணவன் நாளாந்த கூலித் தொழில் செய்பவர், அவரது உழைப்பு போதாது. பிள்ளைகளுக்கு வீடு கட்ட வேண்டும் என குடும்பத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவே 2008ஆம் ஆண்டு நான் அந்நாட்டிற்கு முதலில் பணிப்பெண்ணாக சென்றிருந்தேன். அங்கு எனது வீட்டுக்காரர் என்னை நன்றாக கவனித்தார்கள். எனக்கு எந்தப் பிரச்சினைகளும் இருக்கவில்லை.
நான் மட்டும் உழைப்பது போதாது அம்மாவுடன் சேர்ந்து தானும் அங்கு வந்து உழைக்க வேண்டும் என விரும்பி 2ஆவது மகள் காந்திமதி  தனது 18ஆவது வயதில் 2010ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் திகதி மற்றுமொரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக தொழில் புரிய அந்நாட்டிற்கு வந்திருந்தார்.
அவர் அமெரிக்க நாட்டவர் ஒருவரது வீட்டிலேயே தொழில் புரிந்தார். அந்த வீடு அமைந்துள்ள இடம் மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசம். வீட்டு எஜமானருக்கு இரண்டு ஆண்கள் உட்பட மூன்று பிள்ளைகள். வீட்டில் பிள்ளைகளோ மனைவியோ நிரந்தரமாக தங்குவதில்லை. இடையிடையே வந்து போவார்கள். அநேகமாக வீட்டில் எஜமானுடன் அவரது 2ஆவது மகன் தங்குவது வழக்கம். பெண்களே தங்குவது இல்லை. அந்த வீட்டில் ஏராளமான நாய்களும் பூனைகளும் வளர்க்கப்படுவதால் மகள்தான் அவற்றை பராமரிக்கவும் வேண்டும்.
அந்நாட்டில் நான் தங்கியிருந்த நாட்களில் மகளுடன் நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு இருந்தது. மகள் தான் எஜமானாலும் அவரது மகனாலும் கொடுமைப்படுத்துவது பற்றி கூறி அழுவார்.
ஒரு தடவை முகத்தில் சுடு நீர் ஊற்றப்பட்டுள்ளது. கையில் பிளேட்டினால் கீறப்பட்டுள்ளது. பீங்கானால் தலையில் தாக்கப்பட்டுள்ளார் என தான் அனுபவித்த கொடுமைகளை சொல்லி அழுத மகள் எதிர்வரும் ஜுலை மாதம் 3வருட ஒப்பந்தம் முடிந்தாலும் நாட்டிற்கு போக முடியாது எனக் கூறி தன்னை மிரட்டுவதாகவும் என்னிடம் கூறுவார்.
நான்கு வருடங்களில் அந்நாட்டில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து நாடு திரும்புவதற்கு முன் மகளையும் அழைத்த போது தனது ஒப்பந்தம் எதிர்வரும் ஜுலையில் முடிவதால் அதன் பின்னர் வருவதாக கூறியிருந்தார். ஆனால் மகள் வரவில்லை அவரது சடலம்தான் வந்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி அந்நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயத்திலிருந்து வந்த தொலைபேசி தகவலில் ஆரம்பத்தில் மகள் இறந்து சடலம் வைத்தியசாலையில் இருப்பதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நாம் அந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது கடந்த 6 ஆம் திகதி வீட்டில் சிறிய பிரச்சினையொன்றில் அவரே சுட்டுக் கொண்டு இறந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.
என்னை பொறுத்தவரை எனது மகள் தனக்குத் தானே வெடி வைத்து மரணமடைந்ததாக கூறப்படுவதை ஏற்க முடியாது. அவர் துப்பாக்கியால் சுடுவது பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. இந்நிலையில் அவரால் எப்படி தனக்குத் தானே வெடி வைக்க முடியும்.
ஏற்கனவே, இருவரும் கொடுமைக்காரர்கள். மகள் கொடுமைப்படுத்தப்பட்ட அடையாளங்கள் கூட அவரது முகத்திலும் தலையிலும் உள்ளன. எனவே என்னை பொறுத்தவரை வீட்டு எஜமான் மீதும் அவரது மகன் மீதும் தான் சந்தேகம் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.நன்றி தேனீ 














புத்தர் சிலைகளை அமைத்து புத்தபெருமானை அவமதிக்காதீர்கள்: பொன். செல்வராசா

29/05/2013 மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌத்த மக்கள் இல்லாததால் ஏற்கனவே இருக்கின்ற புத்தர் சிலைகளை பராமரிப்பதற்கு யாருமே இல்லாத நிலையில் புதிதாக எதற்கு புத்தர் சிலை? இப்பிரதேசத்தில் புத்தர் சிலைகளை அமைத்து புத்தபெருமானை அவமதிக்காதீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

 மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் புத்தர் சிலை அமைக்கப்பட மாட்டாது என மட்டக்களப்பு 231ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சுதந்த திலகரத்ன உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாநகர சபையின் நுழைவாயில் வரவேற்பு வளைவுக்கு அருகில் புத்தர் சிலை அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதனைக் கண்டித்தும் இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேச மக்களினாலும் அவ்வூர் பிரமுகர்களாலும் “அத்துமீறி புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்புப் பேரணி” எனும் தொனிப் பொருளிலான மாபெரும் எதிர்ப்புப் பேரணியொன்று இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மங்களாராம விகாரை விகாராதிபதி அம்பித்திய ஸ்ரீ சுமரரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்தில் காலங்காலமாக வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு மத்தியில் இன முறுகலை ஏற்படுத்த முனைகின்றார்.

இலங்கை நாட்டில் சமாதானம் நிலவி வருகின்ற இக்கால கட்டத்தில் இவ்வாறு பௌத்த மக்கள் இல்லாத பிரதேசத்தில் புத்தர் சிலையை அமைத்து இனங்களுக்கு மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் மட்டக்களப்பு மங்களாராம விகாரை விகாராதிபதி அம்பித்திய ஸ்ரீ சுமரரத்ன தேரரின் இந்த நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது.
புத்தர் சிலை அமைப்பதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளஇந்த செயற்பாடானது மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் சமாதனத்தையும் சகவாழ்வையும் குழப்பும் நடவடிக்கையாகும்.
இதனை உடனடியாக நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் நிறுத்த வேண்டும்.


இதேவேளை குறித்த புத்தர் சிலையை இன்று புதன்கிழமை இந்த இடத்தில் வைக்கவுள்ளார் என்பதை அறிந்து இதற்கு இன்று ஆட்சேபனை தெரிவிக்கும் வண்ணமும் எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை ஏற்பாடு செய்து அதை நடாத்திக் கொண்டிருந்தோம்.
இதற்கிடையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மட்டக்களப்பிலுள்ள 231ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சுதந்த திலகரத்ன ஆகியோரை சந்தித்து இது பற்றி கலந்துரையாடினோம்.

இச்சந்திப்பின் போது குறித்த பகுதியில் புத்தர் சிலை அமைக்கப்பட மாட்டாது.என்னை நம்புங்கள்.ஏனெனில் மங்களாராம விகாராதிபதி தற்போது கண்டியில் உள்ளார்.எதற்கும் நீங்கள் பயப்படத் தேவையில்லை.தயவு செய்து ஆர்ப்பாட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விட்டு மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கையளித்ததுடன் இதன் பிரதிகளை 231ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சுதந்த திலகரத்ன மற்றும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம்.
இங்கு புத்தர் சிலை அமைக்கப்படமாட்டாது என பிரிகேடியர் வாக்குறுதி அளித்ததற்கிணங்கவே குறித்த ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளோம்.
பௌத்தர்கள் இல்லாத மட்டக்களப்பு மாவட்டத்தில் புத்தர் சிலையை அமைத்து புத்த பெருமானை அவமதிக்காதீர்கள்.இங்கு ஏலவே அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை பராமரிப்பதற்கு யாருமே இல்லாத நிலையில் மீண்டும் அதே பிரதேசத்தில் புத்தர் சிலை அமைக்கப்படுவதானது புத்தரை மேலும் மேலும் அவமதிக்கின்ற செயலாகவே நாம் கருதுகின்றோம்.

நீங்கள் உங்களுடைய விகாரைகளில் எத்தனை சிலைகளை வேண்டுமானாலும்  அமையுங்கள்.நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம்.பௌத்தர்களே இல்லாத மட்டு மாநகர சபை எல்லையில் புத்தர் சிலையை அமைத்து புத்தரை இம்சை செய்யாதீர்கள்.
இருக்கின்ற சிலைகளை நாம் ஒன்றும் செய்யமாட்டோம்.அப்படியான வேலைகளை செய்பவர்கள் அல்ல த.தே.கூ.
ஆகவே ஏற்கனவே இருக்கின்ற சிலைக்கு 1அடிக்கு அப்பால் புத்தர் சிலை அமைக்கும் இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக கைவிடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி   

 

 

 

 

மட்டு. நுழைவாயிலில் புத்தர் சிலை வைக்கப்பட மாட்டாது: இராணுவம்

buddha129/05/2013 மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் புத்தர் சிலை அமைக்கப்பட மாட்டாது என மட்டக்களப்பு 231ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சுதந்த திலகரத்ன உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் சி.கோகேஸ்வரன், பி.அரியநேந்திரன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறப்பினர்கள் கூட்டாக பிரிகேடியர் சுதந்த திலகரத்னவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போதே குறிப்பிட்ட பகுதியில் புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட மாட்டாது என பிரிகேடியர் திலகரத்ன உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறப்பினர் பொன் செல்வராசா குறி;ப்பிட்டார்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த பொன் செல்வராசா எம்.பி கூறுகையில், 'மட்டக்களப்பு நகரத்தின் நுழைவாயிலில் புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாம் அறிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் சி.கோகேஸ்பரன், பி.அரியநேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்தோம்.

மட்டக்களப்பிலுள்ள மங்களராமய விகாராதிபதி, அம்பிட்டிய சுமனரத்தின தேரர் ஆகியோர் மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அறிகின்றோம். இந்த செயற்பாடானது இந்த மக்களின் சமாதனத்தையும் சகவாழ்வையும் குழப்பும் நடவடிக்கையாகும்' என்றார்.

'குறி;ப்பிட்ட இந்த பகுதியில் பிள்ளையார் இந்து ஆலயமும், மன்றேசா கத்தோலிக்க தேவாலயமும் உள்ளது. அத்தோடு தமிழர் கலாசாரத்தை கொண்ட சித்திரங்களும் வரையப்பட்டுள்ள இந்த பகுதியில் புத்தர் சிலையை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதானது சமாதானத்தை குழப்பிவிடும் செயலாகும். இந்த நடவடிக்கையினை வன்மையாக கண்டிக்கின்றோம். இது மக்களின் இயல்பு நிலையை குழப்பிவிடும் ஒரு நடவடிக்கையாகும்' என்றார்.

'இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கேட்டு அக்கடிதத்தை நாங்கள் அனுப்பியிருந்தோம். அதற்கான பதில் வருவதற்கிடையில் அவசரமாக தேரர் அவர்கள் மேற்படி புத்தர் சிலையை இன்று புதன்கிழமை இந்த இடத்தில் வைக்கவுள்ளார் என்பதை அறிந்து இதற்கு இன்று ஆட்சேபனை தெரிவித்துடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மட்டக்களப்பிலுள்ள 231ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சுதந்த திலகரத்ன ஆகியோரை சந்தித்து இது பற்றி கலந்துரையாடினோம்.

அத்தோடு மகஜர்களையும் கையளித்தோம். இதன் போது இந்த பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட மாட்டாது என பிரிகேடியர் சுதத்த திலகரத்ன உறுதியளித்ததாக' நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மேலும் குறிப்பிட்டார். நன்றி தேனீ

 

 

 

 

யாழ். கோட்டை புனரமைப்பு

Jaffna Fortயாழ்.நகரிலுள்ள கோட்டை பலகோடி ரூபா செலவில் அரசினால் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. போத்துக்கேயர் இலங்கையின் வடபகுதியில் தமது பெயரை நிலைநாட்டும் நோக்கில்; 1619ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையினை நிறுவினர். 1658ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டு பின்னர் இடிக்கப்பட்டு மீண்டும்  தற்போது காணப்படும் ஐந்து பக்கங்கள் கொண்ட நட்சத்திர வடிவிலான கோட்டை உருவாக்கப்பட்டது.  பின்னர் இக் கோட்டை 1795ஆம் ஆண்டு எந்தவித போராட்டமும் இன்றி ஆங்கிலேயர் வசமானது. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர் வசமே இக் கோட்டை காணப்பட்டது.  இக்கோட்டை கடந்த கால யுத்தத்தின் போது பீராங்கித் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.  இக்கோட்டையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் வகையில் அரசாங்கத்தின்; பல கோடி  ரூபா செலவில் தற்போது புனரமைக்கப்பட்;டு வருகின்றது. நன்றி தேனீ

 

 

 

 

 

 

தமிழர்களுக்காக குரல் கொடுத்ததால் சிங்களப்புலி என்று சொல்லப்பட்ட நண்பர் ஜயலத் மறைந்துவிட்டார்: மனோ கணேசன்


30/05/2013 தமிழ் பேசும் மக்களுக்கு, பெரும்பான்மை சகோதர இனத்தின் மத்தியில் புதிய நண்பர்கள் உருவாகாத நிலையில், புதிது புதிதாக இனவாத பகைமை பேசுபவர்கள்தான் நாள்தோறும் தோன்றி வருகின்றார்கள்.
இந்நிலையில் நம் மத்தியில் செயற்பட்டு, வாழ்ந்து, இருந்த தமிழ் பேசும் மக்களின் நண்பர்  மருத்துவ கலாநிதி ஜயலத் ஜயவர்த்தனவின் மறைவு, இன்றைய இனவாத சூழ்நிலையில் மிகப்பெரும் இழப்பாக என்னால் உணர முடிகின்றது.
அவரது மறைவு என் மனதை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் சிகிச்சை  பெற்றிருந்த வேளையில் மரணமடைந்த ஜயலத் ஜயவர்த்தன எம்பியின் மறைவு தொடர்பாக மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

2007ம் வருடத்தில் என்னை சிஐடியினர் விசாரணை என்ற பெயரில் ஒன்பது மணித்தியாலம் தடுத்துவைத்து கைது செய்ய முயற்சித்த வேளையில் என்னோடு இறுதிவரை விசாரணையின் போது கூட இருந்து போலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு என்னை மீட்டு வந்தவர், ஜயலத் ஜயவர்தன ஆகும். ஆகவே நான் தனிப்பட்டமுறையில், ஜயலத் ஜயவர்தனவுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்.
கொழும்பில் தமிழர்கள் நாளாந்தம் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு, கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்ட, கோர யுத்தம் நடைபெற்ற காலமாக அப்போதைய காலகட்டம் இருந்தது. இன்றைய காலகட்டத்தைவிட அன்று நாளாந்த நிலைமைகள் கடும் மோசமாக இருந்தன.
எனது கட்சி உறுப்பினர்கள்கூட என்னுடன் தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதற்கு தயங்கிய அந்த காலகட்டத்தில், ஜயலத் ஜயவர்தன என்னுடன் இணைந்து நின்று சிங்கள புலி என்ற பட்டத்தை சுமந்தார்.
அவரது இந்த தமிழ் பேசும் மக்கள் சார்பு கொள்கை தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினர் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்த வேளையிலும் ஜயலத் ஜயவர்தன தன் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளவில்லை.  
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆழ்ந்த இரங்கலை ஜயலத் ஜயவர்தனவின் குடும்ப அங்கத்தவர்களுக்கு தெரிவித்துகொள்கின்றேன்.  அவரது இறுதி கிரியைகளில் நமது கட்சி தொண்டர்கள் தீவிரமாக பங்குபற்ற வேண்டும் எனவும் கேட்டு கொள்கின்றேன்.  நன்றி வீரகேசரி  





திங்களன்று மறைந்த டாக்டர் ஜயலத்தின் இறுதிக் கிரியைகள்


30/05/2013 ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக அன்னாரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நோய்வாய்ப்பட்டு சிங்கப்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த டாக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று அதிகாலை காலமானார். அன்னாரது பூதவுடல் இலங்கைக்கு எடுத்து வர ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஜூன் மூன்றாம் திகதி திங்கட்கிழமை ஜா-எல வெலிகம்பிட்டியவில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இவரது வெற்றிடத்திற்கு 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அஜித் மானப்பெரும கம்பஹா மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

எனவே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனின் இடத்திற்கு அஜித் மானப்பெருமவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
       நன்றி வீரகேசரி 




 

வடக்குத் தேர்தலை நடத்தி இன்னொரு தடவை நாட்டில் பிரிவினை வாதத்திற்கு இடமளிக்கக்கூடாது : பியசிறி


30/05/2013 பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களோடு வட மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாது. இராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து இந்த நாட்டினை விடுதலைப்புலிகளிடம் இருந்து காப்பாற்றியுள்ளனர். இன்னொரு முறை இந்த நாட்டில் பிரிவினை வாதத்திற்கு இடமளிக்கக்கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் பியசிறி விஜயநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லயில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று அனைத்து மக்களும் மாகாண சபை முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான கட்சிகள் கூட இம் முறைமை வேண்டாம். என்றே கூறுகின்றனர். எனவே அரசாங்கம் இப்போது சரியான ஒரு அரசியல் தீர்மானத்தினை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றது.
நாம் நினைக்கவில்லை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டினை பிரித்துக் கொடுப்பார் என்று. அவ்வாறு ஏதும் தவறு விளைவிக்கப்படுமாயின் அதனை தடுக்க எல்லா விதமான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் எனவும் அவர் மேலும் கூறினார்.   நன்றி வீரகேசரி  







லண்டனில் இருந்து கோயிலுக்கு வந்தவர் இலங்கையில் கைது'

- பி.பி.சி

M.Ganesarubanஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் திங்களன்று நடைபெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக லண்டனில் இருந்து வருகை தந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். வற்றாப்பளையில் உள்ள தனது பெற்றாருடைய வீட்டில் இருந்தபோது, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இருக்கின்றார்களா என வீட்டிற்கு வந்து இருவர் முதலில் விசாரித்துவிட்டுச் சென்றதாகவும் பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்த 6 பேர் அவரைக் கைது செய்து கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவில் இருந்து வந்துள்ளதாகத் தெரிவித்த அவர்கள் காலையில் வவுனியாவில் உள்ள தமது அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படி கூறியதற்கமைய இன்று காலை வவுனியாவுக்குச் சென்றபோது, அவரை மேல் விசாரணைக்காக உடனடியாகக் கொழும்புக்குக் கொண்டு செல்வதாகவும் சனிக்கிழமை வந்து அவரைப் பார்வையிடலாம் என்றும் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய மயில்வாகனம் கணேசரூபன் என்றும், நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பிரித்தானிய பிரஜை என்றும் 18 வருடங்களின் பின்னர் தாயகத்திற்கு அதுவும் ஆலய நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வந்து, அடுத்த வாரமே தாங்கள் லண்டன் திரும்பிச் செல்லவிருந்த வேளையிலேயே, இவ்வாறு தனது கணவன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவருடைய மனைவி சுகந்தினி தெரிவித்தார். இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் முறையிட்டிருப்பதுடன், பிரித்தானிய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.நன்றி தேனீ 






19 விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு தங்க நகைகள் கொள்ளை


02/06/2013 மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பரிவுக்குட்பட்ட குருக்கள் மடம் எனும் இடத்தில் மட்டக்களப்பபு –கல்முனை குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீரில ஸ்ரீ செல்ல கதிர்காமர் கோயிலில் உள்ள 19 விக்கிரகங்கள் இன தெரியாத நபர்களால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளதோடு தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் எமது செய்தியாளர் ஸ்ரீரில ஸ்ரீ செல்ல கதிர்காமர் கோயில் பூசாரி வெ.கு.நாகராஜ குருக்களை வினவிய போது, நேற்று இரவு 10 மணிக்குப் பிறகுதான் இந்த நாசகார சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் இக் கோயிலில் 19 விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 25 பவுண் தங்கள் களவாடப்பட்டுள்ளதாகவும், கோயில் ஓட்டை கழற்றி தான் கோயிலுக்குள் இனம் தெரியாத நபர்கள் இறங்கி இருப்பதாகவும் இது தொடர்பில் சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயசிங்க தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு இங்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்க உடனடியாக மோப்ப நாய்கள், கை விரல் அடையாளம் எடுப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளும் படி உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் நிலமைகளை கேட்டறிந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேந்திரன்,சி.யோகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் ஆகியோர் நேரில் சென்று நிலமைகளை கேட்டறிந்து கொண்டதோடு இதன் சூத்திர தாரிகளை உடனடியாக கைது செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.


 நன்றி வீரகேசரி