ஜப்பானிய தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது

.
ஜப்பானிய தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார் மன்மோகன்சிங்! 

News Service
ஜப்பானைச் சேர்ந்த நொபுரூ கராஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். 80 வயதாகும் நொபுரூ கராஷிமா, தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர். இவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தார். இவ்வாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உடல் நிலை காரணமாக, புது தில்லியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை.
இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் பத்மஸ்ரீ விருதை நொபுரூ கராஷிமாவுக்கு வழங்கினார். டோக்கியோவில் செயல்படும் ஜப்பான்-இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நொபுரூ கராஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதை பிரதமர் வழங்கி கெளரவித்தார். 1964-ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியைத் தொடங்கிய நொபுரூ கராஷிமா, 1974-ஆம் ஆண்டில் தெற்காசிய வரலாற்றுத் துறையின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்று 20 ஆண்டுகள் பணியாற்றியவர். இப்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கெ�ரவ பேராசிரியராக உள்ளார்.
நன்றி:seithy.com