இந்த ஊரில் இதுதானே முதல் தடவை.. விசயமாக்காதேங்கோ… விட்டுவிடுங்கோ...

.

28/05/2013 ஒரு ஊரில் ஒரு சம்பவம். பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நித்தமும் செல்லும் பாதை வழியே ஒரு சிறுமி நடந்து செல்கிறாள். எதிரே வக்கிர எண்ணங்களைக் கொண்ட மனித மிருகம் ஒன்று அவளை வழி மறித்து காட்டுக்குள் அழைத்துச் செல்கிறது. தனது காமப் பசி அடங்கும் வரை அப்பிஞ்சினை கதறக்கதற வன்புணர்வு செய்த பின் குற்றுயிருடன் இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டு செல்கின்றது. காமப்பசிக்கு இரையாகி சிதைத்த நிலையில் பற்றைக்குள் வீசப்பட்டிருந்த பாலகியின் முனகல் சத்தம் கேட்ட ஊரவர்கள் அவளை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த அப்பிஞ்சு காப்பாற்றப்பட்டது.

இக்கொடூர செயலைச் செய்தவனைக் கைது செய்யுமாறு மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். குற்றவாளியைக் கூண்டில் ஏற்றி பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்குமாறு வீதியில் இறங்கிப் போராடினார்கள். போராட்டம் வலுப்பெற்று அவ் ஊரின் இயல்பு நிலையை ஸ்தம்பித்தது.


போராட்டத்தின் உக்கிரத்தை உணர்ந்த சிலர் அரச உயர் அதிகாரி ஒருவரை பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு தூது அனுப்பினர். தூது சென்ற அதிகாரி, ‘இந்தப் பிரச்சினை எங்கட ஊருக்கு இப்பதானே முதல் தடவை. இதைப் பெருசு படுத்தாமல் விடுங்கோ…’ எனச் சொல்லியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் இந்தியாவின் புதுடில்லியிலோ அல்லது அங்குள்ள ஏதோ ஒரு பின்தங்கிய கிராமத்திலோ நடந்த சம்பவம் அல்ல. இது கிட்டடியில எங்கட நாட்டிலுள்ள நெடுங்கேணி என்னும் ஊரில் நடந்த உண்மைச் சம்பவம் பாருங்கோ…

அந்த ஊரின் மக்கள் படும் துன்ப துயரங்களை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வைக் காணவேண்டிய பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் அரச உயர் அதிகாரியின் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் தான் அவை.


சிறுமி ஒருத்தி மிகமோசமாக வன்புணர்வு செய்யப்பட்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறாள். பெற்றவர்கள் வேதனையில் பரிதவிக்கிறார்கள். ஊரோ அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கு. இந்த நிலையில், ஊரின் பொறுப்பு வாய்ந்த பெரிய அதிகாரி அவர்களுக்கு ஆறுதலாகச் சொன்ன வார்த்தைகள் தான் மேற்சொன்ன வார்த்தைகள் பாருங்கோ..!

இந்த ஊரில் இதுதானே முதல் தடவை. இதைப் பெரிய விசயமாக்காதேங்கோ… விட்டுவிடுங்கோ. என்றால் இதன் அர்த்தம் தான் என்ன? இதே போல இன்னும் இரண்டு, மூன்று இந்த ஊரில் நடக்கட்டும் அதுக்குப் பிறகு பார்ப்போம் என்பதா…? அல்லது சம்பவத்தை மூடிமறைத்து குற்றவாளியைக் காப்பாற்றும் எண்ணமா?

நடந்த சம்பவம் என்ன சாதாரண திருட்டுக் கேஸா..? ஒரு சிறுமியின் மானம் பறிக்கப்பட்டு அவளின் எதிர்காலமே சிதைக்கப்பட்டுள்ள படுபாதகமான சம்பவம். கட்டுக்கோப்பான தமிழ் சமுகத்தின் கலாசாரத்திற்கு விழுந்துள்ள அடி.

இந்த ஜனநாயக நாட்டின் சட்டத்தை மீறிய செயல். பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள சம்பவம். இதையா அந்த அரச அதிகாரி முதல் தடவை எனக் கூறி, முடிமறைக்க முயற்சித்தது ஏன்…?

இந்த நாட்டில கொலையோ, களவோ, அல்லது இப்படியான பாலியல் சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களோ ஒன்றுக்கு மேற்பட நடக்க வேண்டும். அப்பதான் அவற்றைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாக்கும்.! அந்தளவுக்கு இந்த நாட்டில் குற்றச் செயல்கள் அனைத்துமே சர்வசாதாரணமாகி விட்டன.

நாட்டின் நீதி நியாயச் சட்டங்கள் கூட அவற்றைக் கட்டுப்படுத்தாது போல… மனித இனத்தின் மானத்திற்கும் உயிருக்கும் இந்த அளவுக்குத்தான் இந்த நாட்டில் மரியாதையா…?

ஆனாலும் பாருங்கோ, நெடுங்கேணி மக்கள் சோர்ந்து போகவில்லை. அடக்குமுறை பேச்சுகளுக்கு பயந்து ஒதுங்கிப் போகவில்லை. குற்றவாளி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என தொடர்ந்து போராடினார்கள்.

இதன் பயனால் குற்றவாளி இனங்காணப்பட்டார். படைச் சிப்பாய் ஒருவர் சிக்கிக் கொண்டார். படைச் சிப்பாய் தான் குற்றத்தைச் செய்தவர் என்பது பொலிஸ் தரப்பிற்கு ஏற்கனவே தெரிந்திருக்கு. ஏனெண்டால் குற்றவாளியை இனங்காட்டியது பொலிஸ் தானே… இந்த விசித்திர சங்கதியை ஒருக்கால் கேளுங்கோவேன்.

சம்பவம் நடந்த அண்டைக்கு பாடசாலை பொலிஸ் பாதுகாப்பு பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிடச் சென்ற அந்தப் பொலிஸை குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த ஆமிக்காரன் ஆயுதமுனையில் அச்சுறுத்திப் போட்டுதானாம் பிள்ளையை காட்டுக்குள் கூட்டிக்கொண்டு போனவன் எண்டு அவர் பொலிஸில் வாக்குமுலம் கொடுத்திருக்கிறாராம்.

அப்படியெண்டால் குற்றவாளியைப் பற்றி பொலிஸாருக்கு அன்றே தெரியும். இக்கொடிய சம்பவம் நடக்கப் போறதைப் பற்றி சிவில் பாதுகாப்பு பொலிஸ் ஒருவருக்கு அன்றே தெரியும். குற்றச் செயல் ஒன்று நடப்பதை அவர் முன்கூட்டியே அறிந்திருக்கிறார்.

நாட்டில் குற்றச் செயல்கள் நடக்க விடாது தடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமையல்லவா..? சிவில் பாதுகாப்புக்காரரான இவர் அப்போதே அச்சிறுமியை அக்கொடியவனிடமிருந்து காப்பாற்றியிருக்க வேண்டுமல்லவா? குற்றச்செயல் நடைபெறாமல் தடுத்திருக்க வேண்டும் அல்லவா?

ஆயுத முனையில் அச்சுறுத்திப் போட்டு சிறுமியை ஆமிக்காரன் கூட்டிச் செல்கிறான் எண்டால் அந்தப் பொலிஸ் உடனே தனது மேலதிகாரிக்கு அறிவித்து படை பட்டாளத்துடன் சென்று அச்சம்பவத்தை தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் இதனை அந்த பொலிஸ்காரன் செய்யவில்லை…?

எல்லாம் முடிந்த பின்னர் சாதாரண குடிமகன் போல் இப்போது குற்றவாளியைப் பிடிக்க வாக்குமுலம் கொடுக்கிறார். இதுவா சிவிலியன்களுக்கு வழங்கும் பாதுகாப்பு..?

வடக்கில் எல்லா அதிகாரமும் இராணுவத்தினருக்குத் தான் உண்டு என்பதைத்தான் இச்சம்பவமும் எடுத்துக் காட்டுது பாருங்கோ…

இதே போல் முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியிலும் ஒரு சம்பவம். படைச் சிப்பாய் ஒருவர் பாடசாலை மாணவியை வல்லுறவுக்காக காட்டுக்குள் பலவந்தமாக கூட்டிச் செல்லும் போது, ஊர் மக்களால் தடுக்கப்பட்டார். இந்த சிப்பாயை அவரின் உயர் அதிகாரிக்கும் இனம் காட்டினர்.

அதன்பின்னர் ஊருக்குள் சென்ற ஒருசிலர் இந்தப் பிரச்சினையைப் பெரிசு படுத்தாமல் விடுமாறு மக்களை அச்சுறுத்தியுள்ளார்கள். இப்படியாகப் பல சம்பவங்கள். பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் யுத்தக் காயங்களிலிருந்து முழுமையாக இன்னமும் மீளாத மக்கள் மீது ஆயுத முனையில் பலாத்காரக் கொடுமைகள்.

தமிழ் மக்கள் வாழும் வடக்குப் பகுதியில் இன்னமும் சிவில் நிர்வாகம் நடைமுறைக்கு வரவில்லை என்பதைத்தான் இவை காட்டுகின்றன பாருங்கோ...

வடக்கில் இராணுவத்தினரால் மக்களின் நிலங்கள் அபகரிப்பு, முகாம்கள் பலப்படுத்தல் என்பற்றோடு சிவில் நிர்வாகமும் அவர்களுக்குக் கட்டுப்பட்டதுதான் என்பதை இச்சம்பவங்களும் தற்போது தெட்டத்தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன பாருங்கோ...

நெடுங்கேணி சம்பவத்தில் குற்றவாளி ஒரு படைச்சிப்பாய்தான் என்பது பொலிஸ் தரப்பினர் உடனேயே தெரிந்தும் கூட அதனை வெளிக்காட்டுவதற்கு இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டிருக்குப் பாருங்கோ… அந்தளவுக்க சிவில் பாதுகாப்பினருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் செல்லாக் காசாகப் போயிருக்குப் பாருங்கோ…

மக்களின் பிரச்சினைகளை முடிமறைக்க நினைக்கும் அரச அதிகாரிகள், குற்றம் நடக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் சிவில் பாதுகாப்புத் தரப்பினர், குற்றங்களைச் செய்து விட்டு சுதந்திரமாக உலாவித்திரியும் பாதுகாப்புப் படையினர்.

இவர்கள் தான் பாருங்கோ, இன்றைய நிலவரப்படி நாட்டின் செல்லப்பிள்ளைகள்.
-உங்களில் ஒருத்தன் (நன்றி வீரகேசரி )