உலகச் செய்திகள்

.
ஸ்வீடனில் கலவரம்!

சதீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: 25 பேர் பலி

பேஸ்புக்கால் ஏற்பட்ட விபரீதம்!

மியன்மாரில் மீண்டும் கலவரம்!

ராஜிவ் கொலை வழக்கு: வெளியுறவுச் செயலாளருக்கு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்வீடனில் கலவரம்!

23/05/2013 ஸ்வீடன் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வன்முறைக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன.

தலைநகர் ஸ்டாக்ஹோமின் அருகில் உள்ள ஏழ்மையான குடியேற்ற மக்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள்ப்கார்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், காவல்துறையினரையும், மீட்புப் பணிக்கு வந்தவர்களைத் தாக்கியும் மூன்று இரவுகளாக வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டனர்.
செவ்வாய் அன்று இரவு ஜாகொப்ஸ்பர்கில் உள்ள காவல்நிலையம் இளைஞர்களால் தாக்கப்பட்டது. இரண்டு பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டன.


பிரதமர் பிரெட்ரிக் ரெயின்பெல்ட் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்தும்கூட, கலைப்பொருட்கள் விற்பனை மையம் ஒன்று எரிக்கப்பட்டது. 30 கார்களுக்கு மேல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
இத்தகைய வன்முறைகள் உலகின் பணக்கார நகரங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றமை நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  நன்றி வீரகேசரி   


சதீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: 25 பேர் பலி


27/05/2013 இந்தியாவின், சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் பட்டேல், மூத்த தலைவர் மகேந்திர கர்மா உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சத்தீஸ்கர் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
 சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் பரிவர்தன் பேரணி நடைபெற்றுள்ளது. இதன்போது பொதுமக்கள் போன்று சாதாரண உடையில் சுமார் 250 நக்சலைட்டுகள்  பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
பேரணி சுக்மாவில் இருந்து ஜக்தல்பூருக்கு திரும்பியபோது நக்சலைட்டுகள் திடீர் என்று தாக்குதல் நடத்தினர்.
இதில் பேரணியில் கலந்து கொண்ட மூத்த தலைவர் மகேந்திர கர்மா, முன்னாள் எம்.எல்.ஏ. உதய் குமார் முதலியார் உள்ளிட்ட 25 பேர் பலியாகினர்.
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் பட்டேலும், அவரது மகனும் நக்சலைட்டுகளால் நேற்று கடத்தப்பட்டனர். இந்நிலையில் அவர்களின் உடல்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன.
இறந்தவர்களில் 20 பொலிஸாரும் அடக்கம். கர்மா காங்கிரஸ் ஆட்சியில் சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சராக இருந்தவர்.
அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலில் காயமடைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான விசி சுக்லா விமானம் மூலம் ராய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உடலில் 3 துப்பாக்கி குண்டுகள் பாயந்ததில் அவரது கல்லீரல் மற்றும் நுரையீரல்கள் சேதமடைந்துள்ளன.
இது குறித்து அறிந்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு ராய்பூர் சென்று அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
 இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் இன்று சத்தீஸ்கர் சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 இலட்சமும் (இந்திய மதிப்பின் படி), காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000  வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

 இந்த ஆண்டு இறுதுயில் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி


பேஸ்புக்கால் ஏற்பட்ட விபரீதம்!


28/05/2013 பேஸ்புக் நண்பர்களால் கடத்தப்பட்ட சிறுவனொருவன் பின்னர் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட சம்பவமொன்று பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் சிறுவன் முஸ்தபா (13). தினமும் 24 மணி நேரமும் இணையதளத்தில் மூழ்கியிருந்த முஸ்தபா, 'பேஸ் புக்' மூலம் முகம் தெரியாத புதிய நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தான்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு பேஸ் புக்கில் அறிமுகமான சிலர் முஸ்தபாவை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை புதிய தோழரை எதிர்பார்த்து சென்ற முஸ்தபாவை அவர்கள் கடத்திச் சென்று பலூசிஸ்தான் மாகாணத்தில் ஓர் இரகசிய இடத்தில் அடைத்து வைத்தனர்.

முஸ்தபாவின் தந்தை கராச்சி சுங்கத்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரை கையடக்கத்தொலைபேசியில் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், முஸ்தபாவை விடுவிக்க சுமார் 10 கோடி ரூபாவை கப்பமாக கேட்டுள்ளனர்.
இதைக் கொடுக்கத் தவறும் பட்சத்தில் சிறுவனைக் கொன்று விடுவோம்' எனவும் மிரட்டியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சிறுவனது தந்தை கராச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவருக்கு தொடர்ந்து வந்த அழைப்புகளை ரகசியமாக கண்காணித்த பொலிஸார் கையடக்கத்தொலைபேசி சிக்னலின் படி, கடத்தல்காரர்களின் இரகசிய இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த வீட்டை முற்றுகையிட்டு கடத்தல்காரர்கள் 4 பேரை சுட்டுக்கொன்ற பொலிஸார் சிறுவன் முஸ்தபாவை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட மகனின் அருகில் அமர்ந்தபடி பெண்களுக்கு கோரிக்கை விடுத்த முஸ்தபாவின் தாயார், 'பேஸ் புக் போன்ற இணைய தளங்களில் தங்கள் பிள்ளைகள் இணையாதபடி அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
இல்லையென்றால், என் மகனுக்கு ஏற்பட்டது போன்ற சூழ்நிலையோ அல்லது அதைவிட மோசமான கதியோ உங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்படலாம்' என்று கூறியுள்ளார்.  நன்றி வீரகேசரி 

மியன்மாரில் மீண்டும் கலவரம்!

29/05/2013 மியன்மாரின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோவில் முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்களிடையே  மோதல் இடம்பெற்றுள்ளது.
பெளத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பெற்றோல் ஊற்றி முஸ்லிம் ஒருவர் எரித்ததாக வந்த செய்தியை அடுத்து இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவதுடன் அவரை எரித்த நபர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் முஸ்லிம்களின் பள்ளிகள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டது.
இதனால் கலவரம் நடைபெற்ற பகுதிகளில்  ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
 சமீபத்தில் மியன்மாரில் இடம்பெற்ற மதக்கலவரத்தில் 200-கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி


ராஜிவ் கொலை வழக்கு: வெளியுறவுச் செயலாளருக்கு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு
ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் ஜூன் 5ம் திகதிக்குள் வெளியுறவுச் செயலாளர் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் ரோ அமைப்பு, சிபிஐ துணை இயக்குநரும் பதிலளிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், நேற்று (28) புதிதாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. மதுரை மேலூரைச் சேர்ந்த சாந்தகுமரேசன் என்னும் சட்டத்தரணி இந்த பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். மறு விசாரணை நடத்தினால் தான், ராஜிவ் கொலைச் சம்பவத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியும் என்று, சாந்த குமரேசன் தனது மனுவில் தெரிவித்திருந்தார். ராஜிவ் படுகொலை தொடர்பான சில காணொளிகள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று, சிபிஐ முன்னாள் விசாரணை அதிகாரி ரகோத்தமன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறிய தகவல்கள் இந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மேலும், புல்லர் மற்றும் மகேந்திர தாஸ் மரண தண்டனை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இருவேறு கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், ராஜிவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் சாந்த குமரேசன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்  நன்றி தேனீ