பாரிஸ் மாநகரில் கோவை நந்தனின் 'கழுகு நிழல்" நூல் வெளியிடப்பட்டது..!

.

'இன்றைய உலகில், தனியார் மயம், தாராள மயம், உலகமயமாதல் என்கிற ஏகாதிபத்தியச் சுரண்டல்காரர்களுக்கெதிரான சரியான பார்வை கோவை நந்தனிடம்
இருக்கிறது. சர்வதேச விவகாரங்களை மட்டுமல்லாது ஈழத்துப் பிரச்சினைகளிலும் உலகளாவிய ஆய்வு நோக்கும், யதார்த்தப் பார்வையும் அவரது எழுத்துகளில் தெரிகிறது. தேடலில் ஈடுபட்டுத் திரட்டி, அதனைத் தொகுத்துச் சாதாரண வாசகனும் விளங்கிக்கொள்ளும் விதத்தில் எழுதும் ஆற்றலுள்ளவராக அவர் சிறந்து விளங்குகிறார். இத்தகைய பார்வையில், தேடலில் அவர் மேலும் ஈடுபட்டுப் பல படைப்புகளை மக்களுக்குத் தொடர்ந்து தரவேண்டும். அவரது நட்புலகம் பெரியது என்பதை இக்கூட்டம் எடுத்துக்காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது."
இவ்வாறு பாரிஸ் மாநகரில் கடந்த 26 -ம் திகதி (26 - 05 - 2013) ஞாயிறு மாலை நடைபெற்ற கோவை நந்தனின் 'கழுகு நிழல்" நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை வகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் என். கே. துரைசிங்கம் உரையாற்றுகையில், 'சாதியத்தையும், முதலாளித்துவத்தையும் முற்றாகவே வெறுக்கும் இலட்சியப்பற்றோடு,  அண்மைக்கால உலக மாற்றங்களை உற்றுநோக்கிச் சரியான கண்ணோட்டத்தில் தனது படைப்புகளைத் தந்திருக்கும் நந்தன் பாராட்டுக்குரியவர்" என்றார்.
ஊடகவியலாளர் எஸ். உதயகுமார் பேசுகையில், 'மக்களுக்குப் பிரயோசனமான, சிந்தனையைத் தூண்டுகின்ற, மாற்றத்துக்கான வழிவகைகளைச் சுட்டி நிற்கின்ற மாதிரி, இலங்கை முதல் சர்வதேச விவகாரங்கள் பலவற்றையும் அலசி ஆராய்ந்து அழகுற எழுதப்பட்ட படைப்புகளைக்கொண்ட சிறந்த நூல் 'கழுகு நிழல்" எனக் குறிப்பிட்டார்.
நூல் பதிப்பாளர் சுகன் வெளியீட்டுரை நிகழ்த்தினார். சி. மனோகரன், அருந்ததி,  ஆகியோரும் உரையாற்றினர். நூலாசிரியர் கோவை நந்தன் ஏற்புரை வழங்கினார்.



நூலினை திருமதி ரஜனி குகநாதன் வெளியிட்டுவைக்க முதற்பிரதியைச் சுவிஸ் மூர்த்தி பெற்றுக்கொண்டார்.
விழாவின் சிறப்பு நிகழ்வாக, 'இன்றைய இலங்கையும் புலம்பெயர் அரசியலும்" என்ற பொருளில் விவாத அரங்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சம உரிமை இயக்கத்தைச் சேர்ந்த பி. இரயாகரன், இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியைச் சேர்ந்த அ. தேவதாசன், ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியைச் சேர்ந்த எம். ஆர். ஸ்ராலின், ஈ. பி. ஆர். எல். எவ். (பத்மநாபா) அணியைச் சேர்ந்த சோலையூரான் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். சபையோரின் கருத்துக்களும் இடம்பெற்றன. சமகால அரசியல் அலசலாக இடம்பெற்ற இந்நிகழ்வினைச் சோபாசக்தி நெறிப்படுத்தித் தொகுத்து வழங்கினார்.
பல்வேறு கருத்துக்களைக் கொண்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல் ஆர்வலர்கள் என மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டத்தினருடன் விழா சிறப்புற நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.