பிரியாணி படம் என் பார்வையில் - கனா பிரபா

.


மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கிறது வெங்கட் பிரபு டீம். மலையாளத்தில் வந்த த்ரில்லர் படங்கள், குறிப்பாக அண்மையில் பிருத்விராஜ் நடிப்பில் வந்த "Memories" போன்ற படங்களைப் பார்த்துப் பழகிய ரசிகனுக்கு பிரியாணி ஒரு வெறுஞ்சோறு ஆகவே படும். நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தனியாகவும், முழு நீள மசாலாப் படங்களைத் தனியாகவும் வைத்துப் பார்த்து ரசிப்பதில் தப்பேதுமில்லை. ஆனால் முழு நீள மசாலா என்ற பெயரில் வழக்கமான இரவு விடுதி, இரட்டை அர்த்த வசனங்கள், மது போதைக் கொட்டங்களையே அரைவாசி வரை காட்டி கொஞ்சூண்டு விறுவிறுப்பைக் கடைசிக் காட்சியில் காட்டிப் புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜாவின் 100 வது படம் என்ற பெருமையை மட்டும் கொண்டிருக்கிறது. ஆரம்பம் உள்ளிட்ட இவரின் சமீப சறுக்கல்களைப் பொறுப்போடு கவனிக்க வேண்டும்.

பருத்தி வீரனோடு தொலைந்த கார்த்தியை இயக்குனர் பாலா போன்றவர்களிடம் கொடுத்து மீட்டெடுக்க வேண்டிய அவசியம் மீண்டும் உணரப்படுகின்றது.

நடிகர் ராம்கிக்கு மீள் வரவாக அமைந்த இந்தப் படத்தில் அந்த சிபிஐ அதிகாரியாக இவரையே போட்டிருந்தால் எவ்வளவு கம்பீரமாக இருந்திருக்கும், இன்னொரு துணை நடிகராகப் பயன்பட்டிருக்கிறார்.


வெங்கட் பிரபு ஹாலிவூட் அளவுக்குப் போகத்தேவையில்லை, கேரளாவின் சமீப புது வரவு இயக்குனர்களையும் அவர்கள் ஒவ்வொரு படத்திலும் கொடுக்கும் வித்தியாசமான களத்தையும் பார்த்தாலே போதும், இவருக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை வீணாக்க வேண்டிய அவசியம் இராது. இன்றைய தமிழ் சினிமாச் சூழலில் ஒரு பெரும் தயாரிப்பாளர் கிடைப்பதே குதிரைக் கொம்பாய் இருக்கும் நேரத்தில், சென்னை 28 காலத்தை நினைவுபடுத்தித் தன் விளையாட்டுத் தனத்தைக் குறைக்க வேண்டும்.

படத்தில் ஆரம்பக் காட்சிகளில் வரும் தமிழ் எழுத்துப் பிழையை நோக்கும் போது இரத்தக் கண்ணீர் வராத குறை.

பிரியாணி - சிறு பிள்ளை வேளாண்மை, கோடி வந்து சேர்ந்தாலும் வீடு வந்து சேராத பெருமை

No comments: