.
பீடை மாதம் என்ற அடை மொழியோடு ஒதுக்கப்பட்ட மாதமா?
பீடை மாதம் என்ற அடை மொழியோடு அழைக்கப் படும் மார்கழி மாதம் உண்மையிலே ஒதுக்கப்பட்ட மாதமா? பீடு அதாவது பன்னிரு மாதங்களில் மார்கழி பெருமை கொண்ட மாதம் என்பதே மருவி பீடை மாதம் என்றாகியாது என்றே கொள்ள வேண்டும்.
சூரியனின் இயக்கம் வடக்கு நோக்கி தெற்கு நோக்கி நடக்கும். அந்த இயக்கம் அயனம் – பயணம் எனப்படும்.. கதிரவன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். பின் தை மாதத்தில் உத்தராயனம் தொடங்கும். தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி.
தை மாதம் உழவர் வயலின் விளை பொருட்களை வீட்டுக்கு கொண்டு வரும் திரு நாளாம் பொங்கல் நடக்க இருப்பதால் தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழியில் அவை தொடர்பான வயல் சார்ந்த அறுவடை முதலான தொழில்களில் மிகுந்த நேரம் செலவிட இருக்கிற காரணத்தினால் வேறு விசேடங்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை.உண்மையில் உணவு முதலான தானியங்களை சேமிக்கும் மாதம் இதுவாகும்.
மாதங்களில் மார்கழி
மாதங்களில் நான் மார்கழி என்றார் பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான். வட மொழியில் மார்கழி மாதத்தை, "மார்கசீர்ஷம்'' என்று, ’மார்க்கம்’ என்றால், வழி , ‘சீர்ஷம்'’ என்றால், உயர்ந்த என்று பொருள் பட சொல்வார்கள். இறைவனை அடையும் உயர்ந்த வழிக்கு இது உகந்த, சிறந்த மாதமாக அமைகிறது.
திருமாலின் நாமம்
திருமாலின் திரு நாமங்கள் பன்னிரெண்டுக்கு பன்னிரு மாதங்களின் பெயர்கள் உண்டு.
விஷ்ணு, கோவிந்தா ,மதுசூதனா, திருவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசவா நாராயணா மாதவா, கேசவா, பத்மநாபா, தாமோதரா என் அழைக்கப்படும் அப் பெயர்களில் மார்கழி 'கேசவன் ' என்று சுட்டப் படுவதாகும்.
வைகுண்ட ஏகாதசி
பெருமாளின் நூற்றெட்டு திவ்ய தேசங்களில் முதன்மையானதான ஸ்ரீ ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு நடப்பதும் இந்த மாதத்தில் தான்.
மார்கழி என்றவுடனேயே , நமக்கு திருப்பாவை, திருவெம்பாவை நினைவுக்கு வராமல் போகாது.
திருப்பாவை
ஸ்ரீ வில்லிபுத்தூர் , சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள் , மனிதரை நான் மணக்க மாட்டேன் திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டும் என எண்ணி மார்கழி மாதத்தில் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து, தன் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள். கண்ணனின் மகிமைகளைப் பாடினாள்.
திருவெம்பாவை
திருவெம்பாவை மாணிக்கவாசகர் அருளிய பாடல்களாகும். நாயக நாயகி பாவத்தில் சிவனை எண்ணி எழுதப் பட்டவை. மார்கழியில் திருவெம்பாவை சிவனுக்குச் சிறப்பாகும்.
திருவாதிரை
விஷ்ணு அலக்காரப் பிரியர், சிவன் அபிஷேகப் பிரியர். சிவலிங்கம் அடிக்கடி அபிஷேகத்தில் திளைக்கும். ஆனாலும் சிதம்பரத்தில் தில்லை நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறைகள்தான் அபிஷேகம் நடக்கும். அபிஷேகம் அங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடக்கும்.
சித்திரையில் திருவோணம், , ஆனியில் உத்திரம், மார்கழியில் திருவாதிரை, மற்றும் மாசி ஆவணி புரட்டாசி மாதங்களில் – சதுர்த்தசி ஆகிய ஆறும் சிறப்பான திரு மஞ்சனங்கள்.
அந்த ஆறு திருமஞ்சனங்களில் மார்கழியில் திருவாதிரை- ஆருத்ரா தரிசன அபிஷேகம் மிகவும் விசேஷமானது.
கோலங்கள்
மார்கழியின் இன்னொரு சிறப்பு செம்மண் பூசிய தரையில், வெண் நிற அரிசி மாவில் புள்ளிகளிட்டு, வரைந்து வீதிகளை அலங்கரிக்கும் விதவிதமானக்கோலங்கள்.அவற்றின் நடுவில் பச்சை நிற சாணத்தினால் பிடித்து வைக்கப் படும் பிள்ளையார் வடிவங்கள். அவற்றின் உச்சியில் மஞ்சள் நிறத்தில் அலங்காரம் செய்யும் பூசணிப் பூக்கள்.
செம்மண் சிவனையும், வெண் மா பிரமாவையும், சாணத்தின் பச்சை விஷ்ணுவையும், மஞ்சள் மங்கலத்தின் நிறம் என வெவ்வேறு தெய்வீகத் தன்மையினை காட்டி நிற்கின்றன.
ஆறு சமயங்களிலும் வழிபாடு
தவிர ஆதி சங்கராச்சார்யார் ஸ்தாபித்த ஆறு மதப் பிரிவுகளிலும் அந்தந்த தெய்வங்களுக்கு உரிய வழிபாடு மார்கழி மாதத்தில் நடக்கும் என்பதே உண்மை
சைவம் – சிவன் - திருவாதிரை , திருவெம்பாவை
வைணவம் - விக்ஷ்ணு -வைகுந்த ஏகாதசி , திருப்பாவை
கௌமாரம் – முருகன் - படி உற்சவம்
காணாபத்யம் – பிள்ளையார் – சாணப் பிள்ளையார்
சாக்தம்- சக்தி – பாவை நோன்பு
சௌரம்- சூரியன் – பொங்கல்
ஜெயந்திகள்
ஆஞ்சனேய சுவாமிகள் வாயு பகவானுக்கும், அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாத அமாவாசை தின மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆஞ்சனேய ஜெயந்தி தவிர ,மும்மூர்த்திகளின் வடிவில் தோன்றிய ஸ்ரீ தத்தாத்ரேயர், விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் ஆகியோர் ஜெயந்திகளும் மாரக்ழியில் வருவது மிகச் சிறப்பாகும். ஸ்ரீ ரமண மகரிஷி பிறந்ததும் , காஞ்சி மாமுனிவர் வான் வெளி கலந்ததும் இம் மாதத்தில் தான் நடந்தேறியது.
இப்படியான பல சிறப்புகளை உடைய மார்கழி மாதம் தெய்வ மாதம் என்றல்லவா போற்றப் பட வேண்டும்?
No comments:
Post a Comment