தமிழ் சினிமா

பொன்மாலைப் பொழுது

கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் தான் பொன்மாலைப் பொழுது.
ஆதவ் கண்ணதாசனும் காயத்ரியும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள்.
காயத்ரியின் அப்பா அருள்தாஸ் எந்நேரமும் சந்தேகத்தோடும், கண்டிப்பாகவும் இருப்பவர்.
ஆதவின் அப்பா கிஷோர் இதற்கு நேர்மாறானவர். மகன் சிகரெட் அடிப்பதைக்கூட தட்டி கேட்க தயங்குபவர்.
ஆதவ், காயத்ரியிடம் நட்பாக பழகுவதை கண்டு அடித்து அவமானப்படுத்தி விடுகிறார் அருள்தாஸ்.
அதன் பின்பு அப்பாவை பழிவாங்க வேண்டும் என ஆதவ்வை காதலிக்கிறார் காயத்ரி.
பள்ளி பருவத்து தீவிர காதல் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அதற்கு கிஷோர் என்ன முடிவு எடுத்தார் என்பதையும் இயக்குனர் யதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.
அப்பாவின் தட்டிக்கொடுத்தலை தவறாகவும் பயன்படுத்தாமல், சரியாகவும் புரிந்துகொள்ளாமல் பள்ளியில் உடன் படிக்கும் காயத்ரியுடன் காதலில் விழும் அப்பா(வி) பிள்ளையாக ஆதவ் கண்ணதாசன்.
அறிமுகம் என்று சொல்லமுடியாத அளவிற்கு அர்ஜுன் பாத்திரத்தில் அப்பா(வி) பிள்ளையாக அசத்தியிருக்கிறார்.
காதலி காயத்ரியுடன் நிஜமான நெருக்கம் கிறக்கம் காட்டி நடித்திருக்கிறார்.
‘கண்ணதாசன் வீட்டு கட்டுத்தரியும் காதல் பாடும்தானே!’ என நிரூபித்திருக்கிறார்.
காயத்ரி, திவ்யாவாக வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘18 வயசு’ படங்களைக் காட்டிலும் இவரின் நடிப்பில் நல்ல பக்குவம் தெரிகிறது.
ஆதவ்வின் அப்பாவாக கிஷோர். தன் சிறு பிராய காதலையும் ப்ளாஷ்பேக்கில் நினைத்தபடி, மகனையும் அவனது காதலையும் முள்ளின் மீது பட்ட சேலையாக கையாளும் விதத்தில் ‘ஹேட்ஸ் ஆப் கிஷோர்’ சொல்ல வைக்கிறது.
பழைய இரும்பு வியாபாரியாகவும் புதிய நாயகி காயத்ரியின் அப்பாவாகவும் அருள்தாஸ் அலற வைக்கிறார்.
அனுபமா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட அம்மா கதாபாத்திரங்களும் பளிச்சிட்டிருக்கின்றனர்.
பாடல்கள் சுமார் ரகம் தான். ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவு உண்மையாகவே அவரை ஒளிவீரன் என ஒப்புக்கொள்ள வைக்கும் பலம்!
ஏ.சி.துரை எழுதி இயக்கி இருக்கும் பொன்மாலைப் பொழுது - இசை, பாடல்கள் மாதிரி ஒரு சில குறைகள் இருந்தாலும் பள்ளி மாணவப்பருவ காதல் விழிப்புணர்வு ப(பா)டமாகும்.
நடிகர்கள்: ஆதவ் கண்ணதாசன், காயத்ரி, கிஷோர், அருள்தாஸ், அனுபமா
இயக்குனர்: ஏ.சி.துரை
ஒளிப்பதிவு: சி.சத்யா
தயாரிப்பு: அமிர்தா கௌரி
நன்றி விடுப்பு


வருத்தப்படாத வாலிபர் சங்கம்

கவலைகளை மறந்து குடும்பத்துடன் சேர்ந்து முகம் சுழிக்காமல் பார்க்கக்கூடிய ஜாலியான, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கொமெடி படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்த அழகான ஊர்தான் சிலுக்குவார்பட்டி.
அங்கே வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு தலைவராக சிவகார்த்திகேயனும், செயலாளராக சூரியும் இருக்கின்றனர்.
இதே ஊரின் தலைவராக சத்யராஜ் வருகிறார். இவருக்கு 3 பெண்கள் உள்ளனர்.
ஊரில் ஏற்படும் வாய்தகராறில் சத்யராஜ், தன்னுடைய பெண்கள் யாரையும் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டால் காதை அறுத்துக் கொள்வேன் என சபதம் கொள்கிறார்.
இதனால் தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் அவசர அவசரமாக அவர்கள் படிக்கும் வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுகிறார்.
3வது பெண்ணான நாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு திருமணம் செய்து முடித்துவைக்க முடிவு செய்யும் வேலையில், சிவகார்த்திகேயன் நுழைந்து இந்த திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.
இதனால், சிவகார்த்திகேயனுக்கும் சத்யராஜுக்கும் மோதல் ஏற்படுகிறது.
மறுபுறம், சிவகார்த்திகேயனை ஸ்ரீதிவ்யா ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.
ஆனால், சிவகார்த்திகேயனோ, அதே ஊரில் டீச்சராக வேலை பார்க்கும் பிந்துமாதவியை ஒருதலையாக காதலிக்கிறார்.
பிந்துமாதவியோ இவரது காதலை ஏற்காமல் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு போய்விடுகிறார்.
காதல் தோல்வியில் மனம் நொந்து வாடும் சிவகார்த்திகேயன், கோவில் திருவிழாவின்போது ஸ்ரீதிவ்யாவை சேலையில் பார்த்ததும் சொக்கிப் போகிறார். இதனால், அவள்மீது காதலிலும் விழுகிறார்.
இருந்தாலும் காதலை மறைத்து சிவகார்த்திகேயனை சுத்தலில் விடுகிறார் நாயகி. இவர்கள் காதல் தெரிந்ததும் சத்யராஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
பின்னர், சிவகார்த்திகேயன்- ஸ்ரீதிவ்யா காதல் என்னவாயிற்று? சத்யராஜ் இவர்களை ஒன்று சேர்த்து வைத்தாரா? என்பதே மீதிக்கதை.
சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான பாணியில் நக்கல், நையாண்டி, டைமிங் கொமெடி என்று படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார். படத்தில் இரண்டு ஹீரோக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
சிவகார்த்திகேயனுக்கு படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சமஅளவு பங்கு ‘பரோட்டா’ சூரிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து செய்யும் ரகளை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
"வாழ்க்கைல டீட்டிகாஷன் ரொம்ப முக்கியம் டேய், அது டெடிக்கேஷன் டா கோபத்துல எனக்கு அப்படித்தாண்டா வரும்." இதுபோன்று இவர் பேசும் ஒன்லைன் வசனங்களில் கைதட்டல் வாங்குகிறார்.
சத்யராஜ் ‘சிவானாண்டி’யாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். படம் முழுவதும் கெத்தாக வலம் வருகிறார்.
ஸ்ரீதிவ்யா அழகான கிராமத்து பெண்ணாக படம் முழுக்க வலம் வருகிறார்.
படத்தில் இவரது நடிப்பை வெளிக்காட்ட வாய்ப்பு இல்லாவிட்டாலும் கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார்.
காதல் காட்சிகளில் இவருடைய கண்கள் அலைபாயும் அழகை ரசிக்கும்படியாக இருக்கிறது. பிந்துமாதவி டீச்சராக வருகிறார். சில சீன்களை வந்துவிட்டு மறைந்து போகிறார்.
சிவா மனசுலசக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் ஹிட் அடிச்ச எம்.ராஜேஷின் உதவியாளர் பொன்ராம் இயக்குகிறார் என்றதும் படத்தின் மீது ரொம்பவும் எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த எதிர்பார்ப்பை இயக்குனர் முழுமைப்படுத்தியிருக்கிறார்.
வழக்கமான கதை என்றாலும் திரைக்கதையை ரசிக்கும்படியாக வைத்ததில் கைதட்டல் பெறுகிறார்.
படத்தோட கதையை யோசிக்கவிடாமல் அடுத்தடுத்து பரோட்டா சூரியின் நகைச்சுவையுடன் படத்தை நகர்த்தியதற்காக இவரை பாராட்டியே ஆகவேண்டும்.
டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட் அடித்திருந்தாலும் அவற்றை காட்சிப்படுத்திய விதமும் ரொம்பவே ரசிக்க வைக்கிறது.
சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஆட்டம் போட வைக்கிறது. இனி பாடகராகவும் ஒரு ரவுண்டு வரலாம்.
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்கிறது. ஊரின் அழகை இவரது கமெரா கண்கள் அழகாக படம்பிடித்திருக்கிறது.
மொத்தத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ அனைவரையும் சந்தோஷப்படுத்தி வெளியே அனுப்புகிறது.
நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி, பிந்து மாதவி
இயக்குனர்: பொன்ராம்
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியம்
நன்றி விடுப்பு

No comments: