இனிய தமிழ் மாலை 2013 - திருநந்தகுமார்

.
சிட்னி பெரும்பாகத்தில் உள்ள ஆறு பாடசாலைகள் ஒன்றிணைந்து உருவாக்கிய நி.ச.வே தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இனிய தமிழ்மாலை 2013 நிகழ்வு ஒக்ரோபர் 5ஆம் திகதி மாலை 5.30 மணி முதல் 10.30 மணிவரை ஜேம்ஸ் ரூஸ் உயர் பாடசாலை மண்டபத்தில் நடந்தேறியது.  தமிழ்ப் பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகிகள், கூட்டமைப்பின் முன்னாள் நிர்வாகிகள், சமூகப் பெரியார்கள் எனப் பலரும் மண்டபத்தில் கூடியிருந்தனர். .

மாநிலத்தின் முதல் தமிழ்ப் பாடசாலையாகிய ஆஸ்பீல்ட் பாலர் மலர் தமிழ்ப் பள்ளியின் ஆரம்பகால ஆசிரியர்களுள் ஒருவராக விளங்கிய மருத்துவர் முத்துக்கிருஸ்ணன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு பதிவு பெற்ற பின்னால் பொறுப்பிலிருந்த தலைவர் பேராசிரியர் சிறீரவீந்திரராஜா, மற்றும் ஈஸ்ட்வூட் தமிழ்க் கல்வி நிலையத்தின் முதல் தலைவர் திரு பகீரதன், கூட்டமைப்பின் பாடநூல் குழுவின் தலைவர் பேராசிரியர் ஆ.சி.கந்தராஜா, சமூகப் பெரியார் முனைவர் கௌரிபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




கூட்டமைப்பின் அங்கத்துவப் பாடசாலைகளின் தலைவர்கள் மங்கள விளகேற்ற, மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் என்பவற்றோடு, அக வணக்கமும் ஆரம்ப நிகழ்வுகளாயின. பிரபல அறிவிப்பாளர்கள் திரு ரகுராம், திருமதி சோனா பிரின்ஸ் ஆகியோர் தமது கம்பீரமான குரல் வளத்தாலும், சமயோசித அறிவுப்புக்களாலும் விழாவை மெருகூட்டினர். ஹோபுஸ் மற்றும் வென்வேர்த்வில் தமிழ்ப் பள்ளி உயர் வகுப்பு மாணவிகள் நால்வர் திரு ரகுராமின் வழிகாட்டலில் நிகழ்ச்சிகளை சிறப்புற தொகுத்து வழங்கினர்.
வரவேற்புரை நிகழ்த்திய கூட்டமைப்பின் தலைவர் திரு கதிர்காமு சிவசுப்பிரமணியம் அவர்கள் பாடசாலைகள் கூட்டமைப்பின் நிகழ்கால வேலைத்திட்டங்களை சுருக்கமாகக் கூறி, அங்கத்துவப் பாடசாலைகளின் அர்பணிப்புடனான பங்களிப்பை விதந்துரைத்தார்.
சிறப்புரையாற்றிய பிரதம விருந்தினர் பிரபல மனோதத்துவ மருத்துவர் முத்துக்கிருஸ்ணன் அவர்கள் முப்பத்தாறு வருடங்களுக்கு முன்னர் ஒரு சில மாணவர்களுடன் முதன் முதலில் உருவாகிய தமிழ்ப் பள்ளி, இன்று கூட்டமைப்பு எனும் ஒரு பெரும் விருட்சத்தின் அங்கமாக விளங்கும் தன்மையைத் தொட்டுக் காட்டியதோடு, இங்குள்ள மாணவர்களுக்கு எங்கனம் திருக்குறள் மூலம் வாழ்க்கை விழுமியங்களை கற்பிக்கலாம் என்றும் விளக்கிக்கூறினார்.



ஓபன் தமிழ் ஆலயம் சங்கிலிய குமாரன் எனும் வரலாற்று நாடகத்தையும், பாலர் மலர் பள்ளி மாணவர்கள் தை மகளே வருக எனும் வில்லுப்பாட்டு மற்றும் இளங்கோ அடிகள் எனும் நாடகம் என்பவற்றையும், வென்வேர்த்வில் தமிழ்ப் பள்ளி, துஸ்யந்தன் – சகுந்தலை கதை கூறும் கணையாளி என்ற நாடகத்தையும், ஈஸ்ட் வூட் தமிழ்ப் பள்ளி இறைவனின் முகவரி எங்களிடையே என்ற நாடகத்தையும், ஹோம்புஸ் தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆகா பழம் உடலுக்கு நலம் எனும் நாடகத்தையும், மவுண்ட் ருயிட் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சுவர்க்க புரியில் ஒரு செம்மொழி மாநாடு என்ற நாடகத்தையும் மேடையேற்றினர்.
நிகழ்ச்சிகளின் நேர்த்தியும், உடை அலங்காரமும் நிகழ்சித் தயாரிப்பின் பின்னால் உள்ள உழைப்பையும், அக்கறையையும் வெளிக்காட்டியது. குறிப்பாக சிறுவர்கள் தோன்றும் நிகழ்வுகள் எல்லாம் அவர்களின் மழலைத் தமிழாலும், செல்லத் தமிழாலும் பொலிவு பெற்றன என்றே கூறவேண்டும்.



அமரர் வேந்தனார் இளங்கோ ஞாபகர்த்தமாக தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு நடாத்திய தமிழ்ப் புலமைப் பரீட்சை 2013இல் ஆரம்பப்பிரிவு, இடைநிலை கீழ்ப்பிரிவு, இடைநிலை மேற்பிரிவு மற்றும் உயர் நிலை ஆகிய பிரிவுகளில் விசேட சித்தியும் அதி விசேட சித்தியும் பெற்ற மாணவர்களுக்கும், கடந்த பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக எடுத்து அதி உயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கும், இவ்வருடம் தமிழ் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசில்களை வழங்கினர். பரிசளிப்பு வைபவம் நிகழ்ச்சிகளின் இடையே நடத்தப்பட்டதால் அடுத்த நிகழ்ச்சிக்குரியவர்கள் மேடையை தமக்கு ஏற்ற வண்ணம் அமைக்க முடிந்தது.


குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இன்னொரு பரிசளிப்பு வைபவம், நீண்ட காலம் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கும், தமிழ்ப் பள்ளிகளில் படித்துப் பின்னர் தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர்களாக்க் கடமையாற்றும் இளம் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட விருதுகளும் சான்றிதழ்களும் என்று கூறலாம்.



கூட்டமைப்பின் செயலாளர் திரு குமார் பெருமாள் விழா சிறப்புற அமைய உதவிய அனைவருக்கும் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
வாழ்த்துச் செய்திகள், ஆசிரியர்களின் தமிழ்க் கல்வி தொடர்பான ஆக்கங்கள், பரிசில் பெற்ற மாணவர்களின் விபரங்கள், இதுவரை பன்னிரண்டாம் வகுப்புப் பரீட்சையில் தமிழ்ப் பாடத்திற்குத் தோற்றிய மாணவர்களின் பட்டியல் என்ற பல்வேறு தகவல்களுடன் வர்த்தக விளம்பரம் ஏதுமின்றி விழா மலர் அழகாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.
சிறுவர்கள் பங்குபற்றும் நாடகங்களில் அவர்கள் தம் உடலோடு பொருதிக்கொள்ளும் ஒலிவாங்கிகள் அவர்கள் உரையாற்றும் போது இங்குவதில்லை. பல மணி நேரங்களை செலவிட்டு மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஏமாற்றமடைய பிரதான காரணியாக இருப்பது ஒலிபெருக்கி சாதனங்களே.  இனிய தமிழ் மாலையிலும் இது நடந்துவிட்டது. அடுத்த விழாவில் இது சரிசெய்யப்படும் என நம்புவோம்.




No comments: