தலைநகரில் கலை வளர்க்க நாட்டுக்கூத்து கலையே கைகொடுத்தது

.

பன்முக பரிமாணங் கொண்ட கலைஞர் அம்புறோஸ் பீட்டர்
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் பாடற்குழுவின் பிரதான உறுப்பினராக நாற்பத்தைந்து ஆண்டுகளாக பணியாற்றி வருவதோடு பல நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ பாடல்களை எழுதி வெளியிட்டுள்ள பெருமையைச் சார்ந்தவர்தான் அம்புறோஸ் பீட்டர். இவர் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட கலைஞர். ஆன்மீகம், கலையுணர்வு கொண்ட இவரது நினைவலைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
பிறந்தகத்தைப் பற்றி கூறுகையில்...
யாழ் புங்குடுதீவில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தேன். தந்தையார் அம்புறோஸ். தயார் பிரகாஷி. விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டிருந்த என் தந்தையார் மதப்பற்று நிறைந்தவர். ஊர் தேவாலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று திருத்தொண்டாக நினைத்து செயலாற்றுவார். அந்த ஆன்மிக உணர்வின் இரத்த பந்தம்தான் என்னுள்ளும் உள்வாங்கியுள்ளது. என் தந்தையார் ஆன்மீகத் தொண்டன் மாத்திரமல்ல நல்லதொரு நாட்டுக்கூத்துக் கலைஞரும் கூட. தந்தையின் தந்தை வழி வந்த மரபு கலையாக நாட்டுக் கூத்து எங்கள் குடும்பத்தில் விளங்கியது.
தேவாலயத்தில் பாஸ்கு காலங்களில் இடம்பெறும் கிறிஸ்தவ நாடகங்களை நாட்டுக் கூத்து பாணியில் அரங்கேற்றுவார்கள். அவ்வாறு அரங்கேற்றிய ஞானசெளந்திரியில் பெண் வேடமிற்று நடித்துள்ளேன். இதே கதையில்.
சில்லையூர் செல்வராஜனுடன் இணைந்தும் பாத்திரங்களேற்று நடித்துள்ளேன்.


ஆரம்பக் கல்வியை எங்கே பெற்aர்கள்....
புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில்தான் பாலர் வகுப்பிலிருந்து அக்காலத்து எஸ். எஸ். ஸி வரை கற்றேன். பாலர் வகுப்பு ஆசிரியையாக இருந்த ரெஜினா டீச்சரே எனக்கு அகரம் எழுத சொல்லித் தந்தார்.
பாடசாலையில் நடைபெறும் கலைவிழாக்களில் பாட்டு, நாடகம், நாட்டுக் கூத்து என பிரதான இடத்தில் முன்னிலை வகித்து வந்தேன். பாடசாலை கல்வியோடு தந்தையாரின் சக கலைஞர்களோடு இணைந்து தயாரித்த ஞான செளந்தரியா, பண்டார வன்னியன் நாட்டுக் கூத்துகளை கொழும்பு, நீர்கொழும்பு, யாழ் மாவட்டங்களிற்குச் சென்று மேடையேற்றியும் வந்துள்ளோம். மதத்திற்கு அப்பால் கலையுணர்வோடு ரசித்த ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்தார்கள். அடிக்கடி இவ்வாறு சென்று நாட்டுக் கூத்துகளை நடாத்தியுள்ளோம்.
பள்ளிகல்விக்குப் பின் கால்பதித்த தொழில் எது?
1968ஆம் ஆண்டு கொழும்பை நோக்கி வந்து தனியார் கல்வி நிறுவனங்களில் கற்றேன். உறவினர் வீட்டிலிருந்து டியூஷன் கற்றுக் கொண்டிருந்த போது லிவர் பிரதர்ஸ் நிறுவனத்தில் தொழில் வாய்ப்புக் கிடைத்தது. ஓய்வு பெறும் காலம்வரை அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அத்தோடு கொழும்பு அக்குவானஸ் கல்லூரியில் மறையாசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கற்று சித்தியெய்தி கொட்டஞ்சேனை, கொஞ்சிக்கடை பங்குகளில் மறையாசிரியராக கடந்த நாற்பது வருடங்களாக பணியாற்றியும் வருகிறேன்.
சமய சமூகப்பணிகளில் எந்தவகையில் உங்கள் பங்களிப்பு இருக்கின்றது?
தொழில் சார்ந்த நேரங்களைத் தவிர்த்து மற்றைய நேரங்களில் நான் சமயப் பணிகளில் என் கவனத்தைச் செலுத்தினேன். பால்ய பருவத்திலேயே தேவாலயத்தோடு தொடர்பு இருந்தமையால் தலைநகர் வந்ததும் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் இளைஞர் பேரவையில் உறுப்பினராகும் சந்தர்ப்பம் கிடைத்தது. பாடக்கூடிய குரல் வளம் எனக்கிருந்தபடியால் இளைஞர் குழுவில் இடம்பெறும் கலைவிழாக்களில் எனக்கு பாடும் பல சந்தர்ப்பங் களைத்தந் தார்கள்.
பாடல்களை இயற்றி இளை ஞர்களை பாடவும் வைத்துள்ளேன். இச் செயற்பாடுகள் அந்தோனியார் ஆலய பாடகர் குழுவில்பாடும் வாய்ப்பைத் தந்தது. நான் இயற்றிய திருப்பாடல்கள் பல ஆலய பாடல்குழுவால் சேர்த்துக்கொள் ளப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை நாற்பது ஆண்டுகளுக்குமேலாக பாடகர் குழுவில் அங்கத்துவம் பெற்று வருகின்றேன்.
இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட கிறிஸ்தவ பாடல்களை நிறுத்தி இலங்கைப் பாடல்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. நான் இயற்றிய சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட கிறிஸ்தவ பாடல்கள் நல்ல வரபேற்றைப் பெற்றிருந்தது. இவற்றிலிருந்து தொகுத்த பாடல்கள் அடங்கிய இருபத்தைந்து நாடாக்களை வெளியிட்டும் உள்ளேன்.
அந்தோனியார் ஆலய திருவிழாக்காலத்தில் திருச் சொரூபம் பவனி வரும்வேளை மும்மொழிகளிலும் திருப்பாடல்கள் பாடுவது வழக்கம். தமிழ் மொழியில் இசைக்கும் கானங்களில் என் பங்களிப்பும் இருக்கும். அது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.
பலநூறு கிறிஸ்தவ பாடல்களை இயற்றியுள்ளதோடு, சமய நூல்கள் நான்கு வெளியிட்டுள்ளேன். யேசு கானங்கள், திருப்பாடல்கள், திருமணித்தியால விவிலிய வழிபாடு - பாகம் ஒன்று, பாகம் இரண்டு என பதிப்புகளாக வெளிவந்துள்ளன.
நான் இயற்றி இசையமைத்த திருப்பாடல்கள் தொகுப்பை நாடாவாக வெளியிட கொழும்பு மறைமாவட்ட ஆயராகவிருந்த வண, நிக்கலஸ் மார்க்கஸ் பெர்ணாண்டோ பெருந்துணையாக விருந்தார். அந்தோனியார் ஆலய பாடகர் குழுவிலிருந்த என்னை அரவணைத்து என்னிடமிருக்கும் ஆற்றலை வெளிக்கொணர வெளிநாட்டு உதவிகளையும் பெற்றுத் தந்ததோடு அவரின் தலைமையிலேயே கொட்டாஞ்சேனை சென்போல்ஸ் மண்டபத்தில் நாடாவை வெளியிட்டும் வைத்து பெருமைப்படுத்தினார்.
சமயப்பணியைத் தவிர்த்து வேறு கலையார்வங்கள் ஏதேனும் உண்டா?
நாட்டுக்கூத்து கலைஞரான நான் அருள் நாடக கரவையூர் செல்வம் தயாரித்தளித்த கத்தோலிக்க நிகழ்ச்சியில் நாடகம், கவிதையாக்கங்களில் நிறைய பங்களிப்பு உண்டு. மன்றத்தின் சமூக நாடகங்களிலும் மற்றும் வானொலி, தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளேன். 90ஆம் ஆண்டின் முற்பகுதிகளில் இந்து கலாசாரத் திணைக்களம் நடாத்திய அரச நாடக விழாவில் அருள் நாடகமன்றத்தினால் மேடையேற்றப்பட்ட, “பயணம்”, ‘கொலைகாரன்’ நாடகங்களிலும் அசோகா, தர்ஷனா, கி.பி 2000 இசை நாடகங்களிலும் பங்கேற்றுள்ளேன். தாய் சஞ்சிக¨யின் உதவி ஆசிரியராகமிருந்து மேலும் தேசிய பத்திரிகைகளுக்கும் ஆக்கங்களை எழுதிவருகின்றேன். மறை மாவட்ட பத்திரிகையான ஞான ஒளிக்கும் ஆக்கங்களை படைத்து வருகின்றேன். பெளர்ணமி (போயா) விடுமுறையில் இலக்கிய பாசறை மூலம் கவிதை கலந்துரையாடல் அரங்கேற்றி வருகிறோம்.
எந்தெந்த மன்றங்களின் மூலம் தங்களின் சேவையை வழங்குகின்aர்கள்?
பேராசிரியர் மரியசேவியரை ஸ்தாபகராகக் கொண்டு இயங்கும் திருமறைக் கலாமன்றத்தின் இணைப்பாளராகவும், ‘கலையின் ஊடாக சமாதான முன்னெடுப்பு’ அமைப்பின் உறுப்பினராகவிருந்து கருத்தரங்குகளும், கொழும்பு ஜோசப் வாஸ் கொழும்பு உயர் துறை மாவட்ட உறுப்பினராகவும், தலைவர், செயலாளர், ஆலோசகரென்ற நிலையிலிருந்து பணியாற்றியுள்ளேன். வண ஆனந்தன் பெர்னாண்டோபுள்ளே ஸ்தாபகராக விருக்கும் சிலுவைப்பாதை அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினராகவுமிருந்துள்ளேன்.
நான்கு தசாப்தகால உங்களது சமய, சமூகப்பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்ன?
சமய சமூகப்பணிக்காக தேசிய மறைக்கல்வி பணியகத்தால் வழங்கிய மறைச்சுடர்’ விருதும், தேசிய கத்தோலிக்க சமூகத் தொடர்பு நிலையத்தின் ‘ஊடகவியலாளர் விருதும், கொழும்பு ஜோசப்வாஸ் மன்றத்தின் ‘மறை வளர்க்கும் பணி’ விருதும் மேல் மாகாண சாஹித்திய விருது மற்றும் மன்னார் மறை மாவட்டம் வழங்கிய ‘இறை இசைச் செல்வர்’விருது கெளரவங்களையும் பெற்றுள்ளேன்.
தற்போது கலைப்பணி எவ்வாறு தொடர்கிறது...?
கலைகள் வளரவும் நல் கலைஞர்தோன்றவும் வேண்டுமென்ற நன்னோக்கோடு’ கலாசுரபி கவின் கலைகள் பயிலகம்’ நடாத்தி வருகின்றேன். கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் நடாத்திவரும் இக் கலையகத்தின் மூலம் உருவான கலைஞர்கள் இங்கும் வெளிநாடுகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரே கூரையின் கீழ் பற்பல கலைகள் பயிற்றுவிக்கின்றோம். திறமையான கலையார்வம் கொண்ட ஆசிரியர்கள் பயிற்றுவிக்கின்றார்கள்.
என் கலை வாரிசுகளாக இரண்டு புதல்விகள் ஜொஸிட்டா பீட்டர், ஜெனிட்டா பீட்டர், இருவரும் கலையார்வம் கொண்டவர்கள். மகள் ஜொஸிட்டா ஐந்து வயதிலிருந்தே நாட்டியக் கலையைப் பயின்று, காலஞ்சென்ற மாண்புமிகு அமைச்சர் செளமிய தொண்டமான் தலைமையில் அரங்கேற்றம் செய்தார்.
மேலும் நடனத்தில் தேர்ச்சி பெற சென்னை கலாஷேத்திர கலைக் கல்லூரியில் இணைந்தார். இந்தியா நாட்டின் இலங்கை தூதுவராக விருந்த எஸ். மேனன் தலைமையில் ‘சலங்கை¨யின் சங்கமம்’ நாட்டிய நடனத்தை சக மாணவிகளுடன் மேடையேற்றி பாராட்டைப் பெற்றன. நோர்வே, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ரோம். இந்தியா போன்ற வெளிநாடுகளில் பல்வேறு வகையான நடன நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளார்.
மற்றைய மகள் ஜெனீட்டா இலங்கை சங்கீத சபை ஆசிரியை கெளரீஸ்வரி இராஜப்பனிடம் வீணைப் பயிற்சியை மேற்கொண்டு மேலும் பயிற்சியை சென்னை கலாஷேத்திராவில் படித்து பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
இவ் இருவரினதும் நிகழ்ச்சிகள் ரூபவாஹினி, நேத்ரா, சக்தி போன்ற தொலைக்காட்சிகளில் அவ்வப்போது இடம்பெறுவதுண்டு.
ஊரில் நாட்டுக்கூத்து கலையம்சம் நிறைந்த எங்கள் குடும்பம் இன்று தலைநகரிலும் இன்றைய காலத்திற்கேற்ப கலையை முன்னெடுத்துச் செல்கிறது.
இரண்டு மகளுடனும் மனைவி எலிசபெத் மேரியுடன் இனிதே கலையை பேணி வருகின்றேன்.
Nantri:thinakaran

No comments: