நவராத்திரி - ஒரு விளக்கம் - க. கணேசலிங்கம்

.

நவராத்திரி நாட்கள் முடிவுக்கு வருகின்றன. இந்த நேரத்தில் இவை குறித்த சில கேள்விகள் எழுகின்றன.
ஏன் இந்த நாட்களை துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு மூன்று மூன்று நாட்களாக ஒதுக்கி ஒன்பதாகக் கொள்ள  வேண்டும்ஏன் இவை  ஒன்பது இரவாக (நவராத்திரியாக) இருக்கவேண்டும்ஒன்பது நாட்களாக ஏன் கொள்ளக் கூடாது?  
இத்தகைய கேள்விகளை எவரும் எழுப்புவதாகவோ அவற்றுக்குப் பதில் சொல்வதாகவோ காணோம்.
கால ஓட்டத்தில் நவராத்திரி போன்றவை குறித்த தத்துவ விளக்கமும் வழிபாட்டு முறைகளும் மாறியுள்ளன. தமிழ் நிலத்தின் சிவ சக்தி வழிபாடு குறித்து அறிவதற்கு சைவத்தின் தத்துவம் துணை செய்யும்.
உயிர்களை உய்விக்கும் பொருட்டு சிவன் பல அருள் திருமேனிகளை எடுக்கிறான். அவனின் சக்தி பேதங்களான இவற்றை ஒன்பதாக சைவ சித்தாந்தம் கொள்கிறது. சிவஞான சித்தியார் என்னும் சித்தாந்த நூல், நவம் தரு பேதமாக ஏக நாதனே நடிப்பான் என்று கூறி விளக்குகிறது. பரசிவன்,பராசக்தி, அபரசிவன்அபரசக்தி, சதாசிவன், மகேஸ்வரன், உருத்திரன்,. விஷ்ணு, பிரமா ஆகிய மூர்த்தங்களே  (நவந்தரு பேதமான) இந்த ஒன்பது வேறுபட்ட வடிவங்களுமாகும். இவற்றுள் பரசிவன் தவிர்ந்த மற்றைய வடிவங்கள் சக்தி பேதங்கள்.
மேற்கண்டவற்றில் பரசிவன்பராசக்தியைத் தவிர்த்து மற்றைய ஏழு வடிவங்களும் சுத்த மாயா தத்துவங்களில் நின்று சிவன் எடுக்கும் திருவடிவங்களாகும். சைவம் கூறும் முப்பத்தாறு தத்துவங்களில் நாதம் விந்து சாதாக்கியம் மகேஸ்வரம் சுத்தவித்தை என்பன சுத்த மாயா தத்துவங்கள். அபரசிவன், அபரசக்தி, சதாசிவன், மகேஸ்வரன் ஆகிய வடிவங்கள் முறையே முதல் நான்கு தத்துவங்களிலும், மற்ற மூன்று வடிவங்களும் சுத்தவித்தையிலும் நின்று தோன்றுகின்றன.   பரசிவன், பராசக்தி தத்துவத் தொடர்பில்லாதவர்கள்.
மேற்கண்ட ஒன்பது சிவ சக்தி  வடிவங்களுடன் தொடர்புடைய வழிபாடாக ஒன்பது நாட்களும் இருப்பதால் நவராத்திரி எனப்படுகிறது. அவற்றை ஏன் ஒன்பது பகலாக அல்லது நாளாகக் கொள்ளாமல் இரவாகக் கொள்ளவேண்டும்?
உயிர்கள் எதனையும் அறிய முடியாமல், அவற்றுக்கு அறியாமை போன்ற ஒரு மறைப்புத்திரை (a veil of ignorance) செயற்படுகிறது. திரோதானம் எனும் இம்மறைப்பு  திருவருள் ஞானம் வரும்வரை நீடிக்கும். இந்த அறியாமை இருளைக் குறிப்பதாக நவ ராத்திரி உள்ளது.    
எனவே நவராத்திரி  என்பது உயிர்களை உய்விக்க இறைவன் கொண்ட ஒன்பது மூர்த்தங்களை ஒன்பது இரவில் தொழுதிடும் வழிபாடு என்பது பெறப்படும்.
[மேற்கண்ட கருத்தை, பல ஆண்டுகளின் முன்னர் சென்னைப் பல்கலை கழகத்து சைவ சித்தாந்தத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் வை. இரத்தினசபாபதி அவர்களின் நவராத்திரி பற்றிய சொற்பொழிவில் கேட்டுள்ளேன். ]
க. கணேசலிங்கம்

No comments: