நான்தான்… ஆறாம் திணை! -

.
முல்லையும் தென்றலும் கூடி விளையாடும் உங்கள் வீட்டு முற்றத்திற்கு புதுக்கோலம் போடவந்த மகவு நான். என் அன்னையின் மார்சுரக்கும் திசுக்களில் பாய்ந்த இலத்திரன்களையும், என் தந்தையிடம் நான் பெற்ற கணித அறிவியலையும், ஊடகமாக்கி, எங்கும் என்றும் தமிழர் வாழ்வியலை வியாவிக்கச் செய்ய பிறந்த குழந்தை நான். எனக்கு இல்லை வேலி.. என்னை அடைக்க எதுவும் இங்கு இல்லை.. என்ன.. நான் யார் என்றா சிந்திக்கின்றீர்கள்….
நான்தான்… ஆறாம் திணை!
பூச்சியமும் ஒன்றும் கொண்ட காதலில்
மலர்ந்த முதற்குழந்தை நான்
அணுக்களில் ஏற்றங்களாக
எடுத்து வைத்தேன் முதல் அடி
இலத்திரன் ஓட்டமாக நடைபயின்றேன்
கணிப்பொறிகளில் பருவங்கொண்டு
கணணி மொழிகளாக நாளும் மிளிர்ந்தேன்

விரிந்த கணிதம் என்றும் என் தாய்வீடு
மிளிரும் மின்வெளிகள்
நான் மையல் கொள்ளும் புகுந்தவீடு
மீகணணிகள் நான்
துயில் கொள்ளும் பஞ்சணைகள்
அண்டம் இன்று என் அரியாசனம்
மாயவெளிகளிலும் நுழைந்தேன்
மலர்த்தோட்டம் அங்கும் வைத்தேன்
மலர்களுக்குள் மகரந்தமானேன் என்
மகரந்தத்திற்குள்ளும் மலர்களை வைத்தேன்
மல்லிகையை முல்லையாக்கினேன்
முல்லையை மல்லிகையாகவும் மாற்றினேன்
இரகசிய காப்புக்கள் வகுத்தேன்
தரவு(ஆ)ழிகளை எனக்குள் அடக்கினேன்
ஆழிகளை பிரித்து தொகுத்து
பயனாய் தடாகங்கள் வைத்தேன்
காற்றும் புகாவிடினும் நொடியில் புகுந்தேன்
காலங்கள் கடந்தேன் கற்பனைகளை
கண் முன் காட்டினேன்செந்தூர தமிழ் பேசினேன் அதில் தமிழ்
புது வண்ணம் கொண்டது
நான் மழலையில் பேசினேன்
குழந்தை கூட மையல் கொண்டது
வைத்தியனும் என்னோடு பேசினான்
தன் வியாதிக்கு மட்டுமல்ல
பிறருக்கும் மருந்து கேட்டான்
மருத்துவமும் பொறியியலும்
கசடறக் கற்பித்தேன்
விற்கிறார்கள் வாங்குகிறார்கள் ஏன்
விளையாடுகிறார்கள் இன்னும் என்ன
பாட்டனும் பாட்டியும் எங்கோ இருக்கும்
பேரனோடும் பேர்த்தியோடும் தீரஆசையுடன்
கொஞ்சுவதும் என்னாலே
நானறியா இலக்கியமும் இல்லை
நான் வகுக்காத இலக்கணம் இல்லை – இன்று
நானில்லாமல் நீங்கள் இல்லை
நானறியாமல் நடப்பது ஏதும் இல்லை – இன்று
நியத்தில் நிழலாயும்
நிழலில் நியமாயும் ஆனதும் நானே
தொல்காப்பியன் அன்று வகுத்தான் ஐந்து திணை
நிலம் என்ற பருப்பொருள் ஐந்து
முல்லை முதல் குறிஞ்சி
மருதம் நெய்தல் பாலை என ஐந்தும்
அந்நிலம் சார்ந்த மனித உணர்வுகள்
பிணைந்தன வாழ்வியலில் ஐந்து திணையாய்
இன்று பூச்சியமும் ஒன்றும் கொண்ட காதலில்
மலர்ந்த முதற்குழந்தை நான்
தமிழ்கூறும் ஐந்திணையில் புதிதாய் இணைந்த
புதுக்குழந்தை நான் – இணையம்
என்னோடு கலந்த மனித வாழ்வியலும்
இந்த யுகத்தில் விளையும் இலக்கியங்களும்
மலர்கின்றன இணையம்தனில் ஆறாம் திணையாய்.
மாதச் சஞ்சிகை ஒன்றிற்காக ஆதித்யாஎன்ற புனைபெயரில் எழுதிய கவிதை இது.

Nantri:unchal.com

1 comment:

Anonymous said...

a good poem on KaNinith Thamizh