திருவள்ளுவரை தெய்வமாக கோவில்கட்டி வணங்கும் கேரள மாநில மக்கள்

.

                                                                                                  ஜே.எஸ்.செல்வராஜ்


இரண்டடி பாடல் மூலம் உலகிற்கு பல்வேறு அரிய கருத்துக்களையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் வாரி வழங்கியவர் தெய்வப்புலவர் என்றழைக்கப்படும் திருவள்ளுவர் ஆவார். தமிழராகி திருவள்ளுவரை  தெய்வமாக வணங்கி அவரது குறள் வழிவாழ்பவர்கள் தமிழகத்தில் மிகச்சிலரே உள்ளனர்.கற்புக்கரசி கண்ணகிக்கு நமது அண்டைய மாநிலமான கேரளத்தில் கோவில் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருர்பீர்கள். ஆனால் கேரளாவில் தமிழராகிய திருவள்ளுவரை தெய்வமாக வணங்கும் மதத்தினர் உள்ளனர் என்பதும் திருவள்ளுவருக்கு கோயில்கட்டி வணங்கி  வருகிறார்கள் என்கிற ஆச்சரியமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
                   கேரளாவில் திருவள்ளுவரை தெய்வமாக வழிபாடுபவர்கள் ''சனாதான'' மதத்தினர் என அனைவராலும் அழைக்கப்படுகின்றனர்.
திருவள்ளுவரை கடவுளாக கொண்டுள்ள இந்த மதம் ''சமாதானமதம்'' என்றும் அழைக்கப்படுகிறது.இவர்கள் திருவள்ளுவருக்கு கேரளமாநிலத்தில் 16 இடங்களில் கோயில்கள் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இக்கோயில்களில் திருவள்ளுவருக்கு தினம் தோறும் முறைப்படி பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காஞ்சூர்தட்டம்பட்டி  என்ற ஊரில் உள்ள கோவிலாகும். மற்ற அனைத்து கோவில்களில்களிலும் இந்த மதத்தினர் திருவள்ளுவரை  அவர்களின் முறைப்படி வணங்கி வழிபட்டு வருகின்றனர்.   

 
           திருவள்ளுவருக்கென கேரளமாநிலத்தில முதன்முறையாக கோவில்கட்டியவர் சிவானந்தர் என்பவர்தான்.இவர் 1979ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி இடுக்கி மாவட்டத்தில் உள்ள சேனாபதி என்ற ஊரில் திருவள்ளுவருக்காக கோயில் கட்டினார்.கேரளவில் உள்ள இந்த அனைத்து கோயில்களிலும் ஆண்டு தோறும் திருவிழாக்கள் வெகுவிமரிசையாக  கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது மலையாள மாதமான கும்பத்தில் 17,18 தேதிகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
                        ஆனால் திருவள்ளுவர் பிறந்த தமிழகத்தில் பேருந்துகளில் அவரது குறள் அவரது படத்துடன் எழுதிவைப்பதோடு சரி,அவருக்கென எந்த திருவிழாவும் தனியாக கொண்டாடப்படுவதில்லை.கேரளவில் உள்ள சனாதான மதத்தினரின் அனைத்து செயல்களும் வள்ளுவரை முன்னிருத்தியே செய்யப்படுகின்றன.இந்த சனாதான மதத்தினர் திருமணங்களும் வள்ளுவர் கோயில்களில் எளிமையான முறையில் நடத்தப்படுகிறது. திருமணத்தின் போது மணமகன் , மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதோ அல்லது மோதிரம் மாற்றுவதோ செய்வதில்லை. வான்புகழ் வள்ளுவரின் நெறிகளை  வாசித்து மணமக்களின் கைகளை இணைத்து வைத்து திருமணங்கள் எளிமையக நடத்தப்படுகின்றன.
                   திருமண சமயத்தில் ஆடம்பர அலங்கார மண்டபங்களிலோ, ஊர்வலங்களோ ஏதுமின்றி வள்ளுவரின் இரண்டடி குறள் போல திருமணங்கள் எளிமையுடன்  நடத்த முடிக்கப்படுகிறது. தமிழகத்தில் பிறந்து தனது இரண்டடி குறள்களின் மூலம் உலகிற்கே வெளிச்சம் தந்த திருவள்ளுவரை தமிழர்களாகிய நாம் ஏட்டளவிலேயே வைத்து  பார்க்கிறோம். ஆனால் மலையாளமொழி பேசும் அண்டை மாநிலமான கேரளத்தில் திருவள்ளுவருக்கு கோவில்கள்கட்டி  சனாதான மத்தினை நிறுவி அவரை தெய்வம் போல் வணங்கி குறள்வழி நிற்கும் அம்மக்கள் நம்மைவிட உயர்ந்தவர் ஆவர்
தமிழர்கள் மறந்தாலும் தரணி  மறப்பதில்லை ....

Nantri : indrayavana blogspot



No comments: