நீயும் என் தோழனே! - சே குவேரா 14.05. 1928 - 09-10-1967

.
- பூ. கொ. சரவணன்

che-guevaraசே குவேரா என்கிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது;இந்த தேசத்தின் பிள்ளை என ஒரு தேசத்துக்குள் குறுக்கிவிட முடியாத வாழ்க்கை வாழ்ந்த போராளி அவர்.

எங்கெல்லாம் அடக்குமுறையும்,ஏகாதிபத்தியமும் கட்டவிழ்த்து விடபட்டதோ அங்கெல்லாம் சே இருப்பார். வெனிசுலா, கொலம்பியா, பிரேசில், க்யூபா, பொலிவியா, காங்கோ எனப் பல இடங்களில் கொரில்லா போர் முறைகளின் பின்னே சே நின்று இருந்தார்.

அடிப்படையில் மருத்துவரான இவர் ஆஸ்துமா நோயாளியும் கூட; ஆனால் உடல் மருத்துவம் பார்த்து நோய்களை தீர்ப்பதை விட சமூகத்தின் அழுக்குகளை தீர்க்க வேண்டும் என்கிற உறுதி அவரிடம் இருந்தது. அதற்கு முக்கியமான காரணம் தன் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுக்க சுற்றியது தான்;அதோடு கார்ல் மார்க்சையும்,லெனினையும் உள்வாங்கிப் படித்த அவர் ஏழைகளும்,பாட்டாளிகளும் படும் துன்பங்களையும்,சோகம் ததும்பும் அவர்களின் உண்மை நிலையை அறிந்த பொழுது போராளியானார்.

அர்ஜென்டினாவை விட்டு வெளியேறிய சே, க்யூபாவில் அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருந்த ஆட்சியை காஸ்ட்ரோவுடன் இணைந்து கவிழ்க்க முதல் முறை முயன்று தோற்று, பின் வெற்றியும் பெற்றார். அவரின் அமைச்சரவையில் வங்கி மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் திடீர் என்று காணாமல் போனார்; அமைச்சர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு பொலிவியாவின் காடுகளில் போராடக்கிளம்பிய நாயகன் அவர். அங்கே அவர் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று.

இன்றும் சே ஒரு குறியீடு;அவர் ஆசைப்பட்டது மனித சமூகத்தின் சமத்துவம்;அதன் விடுதலை. அதில் நாடுகள் என்கிற வரையறை இல்லை. அவர் இறந்த பொழுது அவருக்கு வயது வெறும் 39 தான்! சாகிறபொழுதும் திறந்திருந்த கண்கள் அவருடையது.

ஏனென்றால் என்றைக்கும் கண்ணைமூடிக்கொண்டு கனவு கண்ட போலி புரட்சிக்காரன் இல்லை அவர் ;நிஜ உலகோடு முட்டி மோதி ஜெயித்த தனித்துவன்.

சே ஆயுதம் ஏந்தி போராடினார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், உலகின் மீது கொண்ட எல்லையில்லாத அன்பாலே தான் அப்படி செயல்பட்டார். " எல்லா மனிதருக்கும் மனிதம்,அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்." என்று அவர் எழுதினார்.

"உலகில் எங்கேனும் நடக்கும் அநீதிக்கு எதிராக நீ குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே !" என்று சொன்ன சே தன் பிள்ளைகளுக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை :

“அன்புள்ள இல்டிடா , அலைடிடா, கமிலோ , மற்றும் எர்னெஸ்டோ.. ஒரு நாள் இந்த கடிதத்தை நீங்கள் படிப்பீர்கள், உங்கள் அப்பா அன்று உயிரோடு இருக்கமாட்டேன். நீங்கள் இந்த அப்பாவை மறந்திருக்கலாம்.. குழந்தை எர்னெஸ்டோ என்னை முற்றிலும் மறந்திருக்கலாம். உங்கள் அப்பா மனசாட்சிக்கு நேர்மையாகவும், கொள்கையில் உறுதியாக இருந்தேன்.

ஒரு புரட்சியாளனின் பிள்ளைகள் நீங்கள். அதை மட்டும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் புரட்சிக்காரர்களாக வளர வேண்டும். கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும். தொழில் நுட்ப ஞானம் பெறவேண்டும். இந்த அறிவுதான் இயற்கையை நமது கட்டுக்குக் கொண்டு வர நமக்கு உதவும்.

நாமெல்லாம் தனிப்பட்ட முறையில் முக்கியமற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உலகில் எங்கு அநீதி நிலவினாலும் அதைக் கண்டு ஆழமாக வெறுப்புணர்வு கொள்ள வேண்டும். அதுதான் புரட்சிக்காரனின் முக்கியமான குணம்.”

சேவின் நினைவு தினமான இன்று வெறுப்புணர்வை வெறுத்து, அன்பை விதைப்போம். வருங்காலம் வண்ணமயமாகும். வாழ்க்கை வளமாகும்.

வணக்கம் காம்ரேட் !

சே குவேரா, நினைவு - (த இந்து)

1 comment:

kirrukan said...

மாற்றான் தோட்டத்து மல்லிகை தான் மணக்கும் எங்களுக்கு.....