சென்னை எக்ஸ்பிரஸ் |
தமிழ் சினிமாவில் பார்த்த மசாலா படங்களை காரம் மசாலாவாக மாற்றி இருக்கிறது சென்னை எக்ஸ்பிரஸ். |
கில்லி, முத்து, அலெக்ஸ் பாண்டியன்
சண்டைக்காட்சிகள், சில தெலுங்கு படங்கள் என அனைத்தையும் கலந்துகட்டிய
சென்னை எக்ஸ்பிரஸ் படு வேகத்தில் பறக்கிறது. தன் தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரம் கடலில் கரைப்பதற்காக தென்னிந்தியாவை நோக்கி புறப்படுகிறார் ஷாருக்கான் (ராகுல்). எதிர்பாராத விதமாக சென்னை எக்ஸ்பிரசில் தீபிகா படுகோனேவை (மீனம்மா என்கிற மீனலோச்சனி அழகுசுந்தரம்) சந்திக்கிறார். அவர் கூட உருவத்தில் பெரியதாக இருக்கும் நான்கு அடியாட்களும் இருக்கிறார்கள். தன் அப்பா பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்பதால் ஊரைவிட்டு தப்பிவந்த என்னைக் கண்டுபிடித்து மீண்டும் தன் அப்பாவிடமே கொண்டுசெல்கிறார்கள் என்ற உண்மையை ஷாருக்கானிடம் சொல்லி தன்னைக் காப்பாற்ற சொல்கிறார் தீபிகா. ஷாருக்கானும் ஏதேதோ ட்ரை பண்ண, எல்லாமே கொமெடியாக முடிந்துவிடுகிறது. வில்லன்களிடம் தன் குறும்புத்தனமான சேஷ்டைகளை காட்டியதால் ஷாருக்கானும் பிடித்துவைக்கப்படுகிறார். ரயில் தீபிகாவின் சொந்த ஊருக்கு வந்து சேர்கிறது. அங்கு தான் சத்யராஜ் அசத்தல் எண்ட்ரி கொடுக்கிறார். வேறு வழியில்லாமல், ஷாருக்கானைக் காட்டி இது தான் என் காதலன் என்று அப்பாவிடம் பொய்சொல்லிவிடுகிறார் தீபிகா. தூக்குங்கடா என் மாப்பிள்ளைய என்று சத்யராஜ் சொன்னதும் ஷாருக்கானுக்கு ராஜ மரியாதை வழங்கப்படுகிறது. அப்போது தான் வில்லன் வருகிறார். அவர் தான் தீபிகாவுக்கு சத்யராஜ் பார்த்திருக்கும் மாப்பிள்ளை. ஒத்தைக்கு ஒத்தை சண்டைபோடுவோம் என்னை ஜெயிச்சிட்டு தீபிகாவை கல்யாணம் பண்ணிக்கோ என்று சவால் விடுகிறார். வில்லனின் கம்பீர உருவத்தைப்பார்த்து மிரண்டுபோகிறார் ஷாருக்கான். அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றும் மீண்டும் அதே ஊரில் வந்து அவர்களிடமே சிக்கிக்கொள்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் கில்லி விஜய் ஸ்டைலில் ஒரு கத்தியை தீபிகா கழுத்தில் வைத்து அவரை ஒரு ஜீப்பில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து இருவரும் எஸ்கேப் ஆகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்குமே காதல் வருகிறது. தீபிகாவுடன் தன் சொந்த ஊருக்குத் தப்பிக்க போகிறார் ஷாருக் என எதிர்பார்க்கிற நேரத்தில் மீண்டும் சத்யராஜிடம் மாட்டிக் கொள்கின்றார். பின்பு தன் தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்து, தன் பாட்டி தனக்கு கொடுத்த கடமையை நிறைவேற்றுகிறார் ஷாருக். வில்லனை வீழ்த்தி தீபிகாவை எப்படி மணம் முடிக்கிறார். என்ற மீதிக் கதையோடு பயணிக்கிறது சென்னை எக்ஸ்பிரஸ். கதாநாயகனாக வரும் ஷாருக்கான் எந்தவித அலட்டலும் இல்லாமல் நடிப்பில் அசத்தியுள்ளார், காட்சிகளில் தமிழ் தெரியாமல் திணருவதும், இரண்டு மூன்று வார்த்தைகளை தமிழில் பேசும் கலாட்டா காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் ‘உயிரோட வந்த நீ உயிரோட போமாட்ட, வெட்டி பீஸ் பீஸ் ஆக்கி பார்சல் அனுப்பிடுவேன்’ என்று வில்லன் பேசிய வசனத்தை அவரிடமே ஷாருக் பேசிக்காட்டுவது தூள். மீனலோச்சனி அழகுசுந்தரம் என்ற பெயரில் வரும் அழகு என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாமல் ஒவ்வொரு முறையும் ‘அசுட அசுட’ என்று ஷாருக் பேசுவது கலகலப்பு. வழியைத் தொலைத்து திசைமாறி சென்றுவிடும் ஷாருக்கான் கேரளா பக்கம் போக, அங்கே ஒருவர் எந்தானு ஜோலி என்று கேட்க. ‘ஐ யம் நாட் ஏஞ்சலினா ஜோலி’ என்று ஷாருக் பதில் சொல்வது குபீர் சிரிப்பு. கதாநாயகியாக வரும் தீபிகா படுகோனே தனது அழகு, அசத்தல் நடிப்பால் அசரடிக்கிறார். தமிழ் வசனங்களுக்கு அவரே குரல் கொடுத்திருப்பது, கேட்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், மெச்சத் தக்க முயற்சி. ப்ரியாமணி ஒரு குத்துப்பாட்டுக்கு வருகிறார், அதிகமான கவர்ச்சி இல்லை என்றாலும் வழக்கமான திமிரோடு ஷாருக்கானுடன் கலக்கியிருக்கிறார், தமிழ் சினிமாவில் சரிந்த மார்க்கெட்டை பிடிப்பதற்கு இவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. பெரியதலையாக வரும் சத்யராஜ் அவருக்கு கொடுத்திருக்கும் பொருத்தமான கதாபாத்திரத்தை தனக்கே உரிய பாணியில் அசத்தியுள்ளார், படத்தில் மிகப்பெரிய பங்கு என்னம்மா கண்ணு சௌக்கியமா? என்று உச்சரிப்பதுதான். படத்தின் இசையில் மெலோடி பாடல் ஒன்று வருகிறது, மீதியுள்ள பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் தான், ஒளிப்பதிவாளரும் ரயில் பாலம் காட்சிகள், அருவிகள் என்று சில இடங்களில் பிரமிக்க வைத்துள்ளார். இயக்குனர் ரோஹித் ஷெட்டி தமிழ் மசாலா படங்களை காப்பியடித்து காரமான மசாலாவாக மாற்றி கொமடி, காதல், சென்டிமெண்ட் என்று கலந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். படத்தில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள், கதை நடப்பது அனைத்தும் தமிழகத்தில் என்பதால் படம் பார்க்கும் போது தமிழ் படம் பார்க்கிற உணர்வுதான் வருகிறது. ரஜினிக்கு மரியாதை என்ற பெயரில் கடைசியில் இடம்பெறும் அந்த லுங்கி டான்ஸ் முடியும் வரை கூட்டம் காத்திருக்கிறது. ஷாரூக்கானின் புத்திசாலித்தனத்துக்கு இன்னொரு சான்று இது. தமிழ் புரியாமல் மாட்டிக்கொண்டு சிரமப்படும் ஷாருக்கான், கலர் கலர் உடைகளோடு பளிச்சென வலம்வரும் தீபிகா படுகோனே, தென்னிந்தியாவின் டான்-னாக இருக்கும் சத்யராஜ் (பெரியதலை) என படம் முழுக்க கலர் புல் கலாட்டா தான். மொத்தத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம். நடிகர்கள்: ஷாரூக்கான், தீபிகா படுகோன், சத்யராஜ் இசை: விஷால் சேகர் ஒளிப்பதிவு: டட்லீ இயக்கம்: ரோஹித் ஷெட்டி தயாரிப்பு: கவுரி கான், ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய்கபூர் நன்றி விடுப்பு |
தமிழ் சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment