சிட்னியில் ஒலித்த தமிழும் தமிழ் மாநாடும் - செ .பாஸ்கரன்

.


சிட்னியில் 6ம் 7ம் 8ம் திகதிகளில் சிட்னி தமிழர் மண்டபத்தில் நடந்த உலகத்தமிழ் இலக்கிய மாநாடு சிட்னி தமிழர்களை மட்டுமல்லாது உலகத்தமிழர்களை ஒன்றுகூட்டியிருந்தது. விஜிபி உலகத்தமிழ்ச்சங்கமும் தமிழ்இலக்கிய கலைமன்றம் ஒஸ்ரேலியாவும் சேர்ந்து இந்த மூன்றுநாள் நிகழ்ச்சியை நடத்தியிருந்தது.







காலை மாலை என்று மூன்று நாட்களும் நடந்த இந்த தமிழ் மாநாட்டிற்கு பிரபல தொழிலதிபரான செவாலியர் டாக்டர் வி ஜி சந்தோசம் பிரதம நீதியரசர் வள்ளிநாயகம் கவிக்கோ அப்துல் ரகுமான் முனைவர் அவ்வை நடராஜன் முனைவர் வாசுகி கண்ணப்பன் முனைவர் விஜயலஸ்மி ராமசாமி ரிகே எஸ் கலைவாணன் முனைவர் பத்மநாதன் இப்படி மாபெரும் அறிஞர்கள் பேச்சாளர்கள் என்று மேடையில் தமிழ்முழக்கம் செய்தது கண்கொள்ளாக் காட்சியாகவும் கிடைத்தற்கரிய ஒரு தமிழ் விழாவாகவும் இருந்தது.



இந்திய மலேசிய அறிஞர்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் அவுஸ்ரேலிய அறிஞர்கள் கவிஞர்கள் கலைஞர்கள் பாடசாலை மாணவர்கள் நடன ஆசிரியர்கள் சங்குpத கலா வல்லுனர்கள் என்று மாறிமாறி மேடையை அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள். பட்டிமன்றங்கள் கவியரங்குகள் உரை அரங்கங்கள் ஆய்வரங்கங்கள் இசை அரங்கங்கள் நாடக அரங்கங்கள் என்று இடம் பெற்றுக்கொண்டேயிருந்தது. மக்கள் எதைப்பார்ப்பது எதை விடுவது என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தார்கள்.






ஜயன் வள்ளுவனுக்கு ஏழடி உயரமான சிலை அவுஸ்ரேலியாவில் முதன்முதலாக சிட்னி தமிழர் மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாதஸ்வர தவில் வித்துவான்கள் இசைமுழங்க மக்கள் நிறைந்த மாநாட்டு மண்டபத்தின் முன்னே வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்ட காட்சி நாம் தமிழ்நாட்டில் இருக்கின்றோமா இல்லை அவுஸ்ரேலியாவில் இருக்கின்றோமா என்று எண்ண வைத்துவிட்டது.


மாநாட்டு மண்டபத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி மக்களை ஆச்சிரியப்பட வைத்ததென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சங்ககாலத்திலிருந்து தற்காலம் வரையான அறிஞர்கள் தமிழை வளர்த்த பெரிறோர்கள் அத்தனை பேரும் வைக்கப்பட்டிருந்தார்கள். சங்க கால பாடல்கள் வாழ்க்கை முறை போர் வரலாறு என்றும் புத்தகங்கள் காசுகள் ஆயுதங்கள் என்று தமிழரின் பாரம்பரிய விடயங்களும் அதற்கான குறிப்புகளும் வைக்கப்பட்டிருந்தது இளையோரை மிகவும் கவர்ந்திருந்தது. இவற்றை ஒழுங்கு படுத்துவதிலும் காட்சிப்படுத்துவதிலும் பெரும்பாலான அளைஞரகளும் யுவதிகளும் பங்குகொண்டிருந்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நூற்றுக்கணக்கான இளையோர் பங்குபற்றியது குறிப்பிடப்படவேண்டியது.


குறிப்பாக பாலர்கள்கூட ஒளவையாராக அகத்தியராக திருவள்ளுவராக இளங்கோ அடிகளாக ராஜராஜசோழனாக தமிழ் அன்னையாக காட்சிதந்தது மனதைக் கொள்ளை கொண்டது.
தமிழால் நிறைந்து காணப்பட்ட மாநாட்டுமலர்கள் இரண்டும் மக்களை கர்ந்து கொள்ளும் வண்ணம் மிகுந்த நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தது பாராட்டுக்குரியது.






மூன்று நாட்கள் எப்படிப்போனதென்பதே தெரியாமல் போய்விட்டது. இவற்றை ஒழுங்கு படுத்திய தமிழ்இலக்கிய கலை மன்றத்தின் உறுப்பினர்களும் வி ஜி பி தமிழ்ச்சங்க உறுப்பினர்களும் ஒத்துழைப்பை வழங்கிய பாடசாலைகள் அமைப்புக்கள் என்பன பாராட்டுக்குரியவை. தமிழால் தமிழுக்காக ஒன்று திரண்ட இந்த மாநாட்டைப்போல் பல மாநாடுகள் நடக்கவேண்டும் வருங்கால சந்ததியினர் தமிழின் பெருமையை உணர்துகொள்ள வாய்ப்பாக அது அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.






இந்த மாநாட்டின் இறுதியில் மூன்று தீர்மானங்கள் இயற்றப்பட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமாக அவுஸ்ரேலிய பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பிரிவை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுதல் முக்கியமானதாகும்.
அவுஸ்ரேலியாவில் மாநாட்டை சிறப்புற நடாத்திய மன்றத் தலைவர் திரு மகேந்திரன் செயலாளர் திரு கருணாசலதேவா உட்பட  அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா  
















மாநாட்டின் இரண்டாம் மூன்றாம் நாள் படங்கள் அடுத்த வாரம் வெளிவரும் 

No comments: