மழை மேகங்களை அனுப்ப ஒரு மனிதன்

.

American_Indians_Art_Death_peublo
அவரை ஒரு பெரிய இலவ மரத்தின் கீழ் அவர்கள் கண்டு பிடித்தனர். அவருடைய ‘லீவை’ மேலங்கியும், கால்சராயும் வெளுத்து இள நீலமாக இருந்ததால், அவரைக் கண்டு பிடிப்பது சுலபமாக இருந்தது. மணலாகக் கிடந்த அகலமான காட்டோடையில் வளர்ந்து, சிறு தோப்பாக இருந்தபடி, குளிர் காலத்தால் இலைகளை இழந்து நின்ற இலவ மரங்களிலிருந்து அந்தப் பெரிய இலவ மரம் தனித்து நின்றது. அவர் இறந்து ஒரு நாளோ, அதற்கு மேலோ ஆகி இருக்கலாம், அவருடைய செம்மறி ஆடுகள் திரிந்து, காட்டோடையில் மேலும் கீழுமாக அலைந்து கொண்டிருந்தன. லியானும், அவனுடைய மைத்துனன், கென்னும், செம்மறிகளை ஒன்று திரட்டினர், ஆடுகளுக்கான முகாமில் பட்டியில் அடைத்தனர், பின்னரே இலவமரத்துக்குத் திரும்பி வந்தனர். மரத்தடியில் லியான் காத்திருக்கையில், கென் ட்ரக்கை அடர்ந்த மணலூடாக ஓட்டிப் போய், காட்டோடையின் கரையை அடைந்தான். கண்ணைச் சுருக்கிச் சூரியனைப் பார்த்தான், தன் மேலணியின் ஜிப்பைக் கழற்றினான் – வருடத்தின் இந்த மாதத்துக்கு இது மிகவும் உஷ்ணமாகத்தான் இருந்தது. ஆனால் உயரே, வடமேற்கே, நீல மலைகளில் இன்னும் பனி படர்ந்திருந்தது. கென் நொறுங்கிக் கொண்டிருக்கிற சரிவான கரையில், ஐம்பதடி போல சறுக்கியபடி கீழே இறங்கினான், அவன் ஒரு சிவப்புப் போர்வையைக் கொண்டு வந்தான்.


கிழவரைத் துணியால் சுற்றுமுன்னர், லியான் தன் பையிலிருந்து ஒரு நூலை எடுத்து, கிழவரின் நீண்ட முடியில் ஒரு சிறு சாம்பல் நிற இறகைக் கட்டினான். கென் அவனிடம் சாயத்தைக் கொடுத்தான். சுருக்கங்களிருந்த முன் நெற்றி மீதுஅவன் ஒரு வெள்ளைக் கோட்டைத் தீட்டினான், உயர்ந்த கன்னத்து எலும்புகள் மீது ஒரு திட்டு நீலச் சாயத்தை வரைந்தான். கொஞ்சம் நிறுத்தி, கென் சோள மாவுப் பொடி, மகரந்தம் ஆகியனவற்றில் சில சிட்டிகைகளை, சாம்பல் இறகை இலேசாக அசைத்த காற்றில் தூவுவதைக் கவனித்தான். பிறகு கிழவரின் அகன்ற மூக்குக்கடியில் மஞ்சள் சாயத்தைப் பூசினான், கடைசியில் தாடைக்கடியில் கழுத்தில் பச்சைச் சாயத்தைப் பூசிய பிறகு புன்முறுவல் செய்தான்.
”எங்களுக்கு மழை மேகங்களை அனுப்புங்கள் தாத்தா.” அந்த பிக் அப் ட்ரக்கின் பின்பகுதியில் கட்டுகளை வைத்து விட்டு, கனமான தார்ப்பாயால் அதை மூடிவிட்டு, ஊர்க் குடியிருப்புக்கு (புவப்லோ) திரும்பக் கிளம்பினர்.
நெடுஞ்சாலையிலிருந்து புவப்லோவுக்குப் போகும் மணல் சாலையில் திரும்பினர். கொஞ்ச தூரத்திலேயே, பல்பொருள் அங்காடியையும், தபால் அலுவலகத்தையும் தாண்டியவுடனே, அவர்களை நோக்கி பாதிரியார் பௌலின் கார் வருவதைப் பார்த்தனர். அவர்களின் அடையாளத்தைத் தெரிந்ததும், அவர் காரின் வேகத்தைக் குறைத்தார், கையாட்டி அவர்களை நிறுத்தச் சொன்னார். அந்த இளம் பாதிரி தன் காரின் ஜன்னலைக் கீழிறக்கினார்.
“டியோஃபிலோ பாட்டனாரைக் கண்டு பிடித்தீர்களா?” அவர் உரத்துக் கேட்டார்.
லியான் ட்ரக்கை நிறுத்தினான். “காலை வணக்கம், ஃபாதர். நாங்கள் செம்மறியாடுகளின் முகாமுக்குப் போய் வந்தோம். இப்போது எல்லாம் சரியாகி விட்டது.”
“இதற்குக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். டியோஃப்லோ மிகவும் வயதான மனிதர். செம்மறியாட்டு முகாமில் அவரைத் தனியாக இருக்க நீங்கள் விடக்கூடாது தெரியுமா?”
“இல்லை. இனிமேல் அவர் அப்படி இருக்க மாட்டார்.”
“நல்லது. உங்களுக்குப் அது புரிவதில் எனக்கு மகிழ்ச்சி. உங்களை இந்த வார சமூகப் பிரார்த்தனையில் பார்ப்பேன் என்று நம்புகிறேன் – உங்களைச் சென்ற ஞாயிறு அன்று நான் காணவில்லை. பாட்டனார் டியோஃப்லோவையும் அழைத்து வர முடியுமா என்று பாருங்கள்.”பாதிரியார் சிரித்தார், அவர்கள் ஓட்டிப் போகையில் கையசைத்து விடை கொடுத்தார்.
oOo

லூயீஸும், டெரேஸாவும் காத்துக் கொண்டிருந்தனர். மேஜையில் மதிய உணவு தயாராக இருந்தது, கருப்பு இரும்பு அடுப்பில் காஃபி கொதித்துக் கொண்டிருந்தது. லியான் லூயீஸைப் பார்த்தான், பின்னர் டெரேஸாவை.
“அவரை செம்மறி முகாமருகே பெரிய காட்டாற்றில் இருக்கும் இலவமரத்தினடியில் கண்டு பிடித்தோம். அவர் சற்று இளைப்பாற மரத்தடியில் உட்கார்ந்திருப்பார் போலிருக்கிறது, அப்புறம் அவர் எழுந்திருக்கவே இல்லை.” லியான் கிழவரின் படுக்கையை நோக்கி நடந்தான். கட்டம் போட்ட சிவப்பு மேலங்கி நன்கு உதறப்பட்டு, படுக்கையின் மீது கவனமாக விரிக்கப்பட்டிருந்தது, ஒரு புது ஃபளானல் சட்டையும், ஒரு புது லீவை கால்சராயும் தலையணை அருகே நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன. லூயீஸ் வலைக் கம்பிக் கதவைத் திறந்து பிடித்துக் கொண்டிருந்தாள், லியானும் கென்னும் சிவப்புப் போர்வைக் கட்டை உள்ளே கொண்டு வந்தனர். அவர் சிறு உருவாக, சுருங்கித் தெரிந்தார், புதுச் சட்டை, கால்சராயில் அவரை உடுத்தியபின் இன்னும் உருச் சுருங்கித் தெரிந்தார்.
ஏஞ்சிலஸ் பிரார்த்தனைக்காக சர்ச்சின் மணிகள் ஒலித்தன, அதனால் இப்போது நண்பகலாகி இருக்க வேண்டும். அவர்கள் பீன்ஸோடு சூடான ப்ரெட்டைச் சேர்த்து உண்டனர், டெரேஸா காஃபியை ஊற்றும் வரை யாரும் ஏதும் பேசவில்லை.
கென் எழுந்து நின்றான், மேல் அங்கியைப் போட்டுக் கொண்டான். “சவக்குழி வெட்டுவோரைப் போய்ப் பார்க்கிறேன். மண்ணின் மேல் அடுக்குதான் உறைந்திருக்கிறது. இருட்டுமுன் அதைத் தயார் செய்துவிடலாம் என்று நினைக்கிறேன்.”
லியான் தலையை ஆட்டினான், காஃபியைக் குடித்து முடித்தான். கென் போய்க் கொஞ்ச நேரம் கழித்து, அண்டை வீட்டாரும், கணத்து மனிதரும் அமைதியாக வந்து டியோஃபிலோவின் குடும்பத்தினரை அணைத்துக் கொள்ளவும், சவக்குழி வெட்டுபவர்கள் வேலை முடிந்து வந்ததும் உண்பதற்காக மேஜையில் உணவு வகைகளை விட்டுச் செல்லவும் வந்தனர்.
மேற்கில் ஆகாயம் வெளிறிய மஞ்சள் ஒளியால் நிரம்பியிருந்தது. லூயீஸ் வெளியில் நின்றாள், லியானின் பச்சை நிறத்து ராணுவ மேலங்கியைப் போட்டுக் கொண்டு, அதன் பைகளில் தன் கைகளை நுழைத்துக் கொண்டிருந்தாள், அந்த அங்கி அவளுக்கு மிகப் பெரிதாக இருந்தது. இறுதிச் சடங்கு முடிந்திருந்தது, மூத்தவர்கள் தங்கள் மூலிகைப் பைகளையும், மெழுகுவர்த்திகளையும் எடுத்துக் கொண்டு போயிருந்தனர். உடல் அந்த பிக் அப் ட்ரக்கின் பின் பகுதியில் கிடத்தப்படும் வரை காந்திருந்து, பின்னரே லியானிடம் ஏதோ சொல்ல வந்தாள். அவனுடைய கையைத் தொட்டாள், கிழவரின் உடலைச் சுற்றி அவள் தெளித்த சோள மாவுத் தூள்கள் அவள் கைகளில் இன்னும் படிந்திருந்தன என்று அவன் கவனித்தான். அவள் பேசியபோது லியானால் அவள் பேசுவதைக் கேட்கக் கூட முடியவில்லை.
“என்ன சொன்னாய்? நான் அதைக் கேட்கவில்லை.”
“நான் ஒன்றை யோசித்தேன் என்று சொன்னேன்.”
“எதைப் பற்றி?”
“தாத்தா மீது பாதிரி புனிதநீரைத் தெளிப்பதைப் பற்றி. அவருக்குத் தாகமெடுக்காமல் இருக்கும்.”
லியான் கோடையில் நடக்கவிருக்கும் நடனச் சடங்குகளுக்காக டியோஃபிலோ செய்து வைத்திருந்த புது மொக்காஸின் காலணிகளை உற்றுப் பார்த்தான். அவை சிவப்புப் போர்வையால் கிட்டத்தட்ட மறைக்கப்பட்டிருந்தன. குளிர் அதிகரிக்கத் துவங்கி இருந்தது, புவப்லோவின் குறுகலான சாலை ஊடே சாம்பல் நிறப் புழுதியைக் காற்று தள்ளிக் கொண்டு போயிற்று. நீண்ட மேஜை போல முகடிருந்த மலையை சூரியன் அணுகிக் கொண்டிருந்தது. குளிர் காலத்தில் அங்குதான் அஸ்தமனமாகும். அங்கு நின்றிருந்த லூயீஸ் நடுங்கிக் கொண்டு அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தன் மேலங்கியின் ஜிப்பை இழுத்து மூடிக் கொண்டான், ட்ரக்கின் கதவைத் திறந்தான். ”அவர் அங்கே இருக்கிறாரா என்று பார்க்கிறேன்.”
கென் சர்ச்சருகே பிக் அப் ட்ரக்கை நிறுத்தினான். லியான் வெளியே இறங்கினான்; பிறகு கென் மலையின் அடிவாரத்தை நோக்கி ஓட்டிச் சென்றான். அங்கே இடுகாட்டில் ஜனங்கள் காத்திருந்தனர். லியான் ஆடுகளின் உருவங்கள் செதுக்கப்பட்டு இருந்த மரக்கதவைத் தட்டினான். அவன் காத்துக் கொண்டிருந்த போது, மேலே நோக்கி ஸ்பெயின் அரசர் கொடுத்திருந்த இரட்டை மணிகளைப் பார்த்தான், மணிக்கூண்டிலிருந்த அவற்றைச் சுற்றி சூரிய ஒளி பெருகி வழிந்தது.
பாதிரி கதவைத் திறந்தார், யார் வந்திருப்பது என்று பார்த்ததும் முறுவலித்தார். “உள்ளே வாங்க! இந்த மாலை நேரத்தில் என்ன விஷயமாக வந்தீங்க?”
அவர் சமையலறையை நோக்கி நடந்தார், லியான் தன் தொப்பியைக் கையில் வைத்துக் கொண்டு நின்றான், அதன் காதுகளை மூடும் பகுதிகளை அசைத்துக் கொண்டிருந்தான் – பழுப்பு நிற சோஃபா, கை வைத்த பச்சை நிற நாற்காலி, மேல்கூரையிலிருந்து சங்கிலியில் தொங்கிய பித்தளை விளக்கு- இதெல்லாமிருந்த அந்த வரவேற்பறையை நன்கு கவனித்தான். சமையலறையிலிருந்து ஒரு நாற்காலியை இழுத்து வந்த பாதிரியார், லியானுக்கு அமர அதைக் கொடுத்தார்.
”நன்றி ஃபாதர், அது வேண்டாம். இடுகாட்டுக்கு உங்களுடைய புனிதநீரைக் கொண்டு வருவீர்களா என்று கேட்கத்தான் வந்திருக்கிறேன். “
பாதிரியார் லியானிடமிருந்து விலகித் திரும்பினார். ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். நிழல்கள் நிரம்பிய வெளி முற்றம், வெளி முற்றத்துக்கெதிரிலிருந்த கிருஸ்தவப் பெண் துறவியர் விடுதியின் சாப்பாட்டறை ஜன்னல்கள்- அதெல்லாவற்றையும் நோக்கினார். அங்கு கனமான திரைச்சீலைகள் தொங்கியதால், உள்ளிருந்து ஒளி மிக மெல்லியதாகவே ஊடுருவி வெளி வந்தது. உள்ளே சாப்பிட்டிருந்திருக்கக் கூடிய பெண் துறவியர்களைப் பார்க்க முடிந்திராது. “அவர் இறந்து விட்டாரென்று ஏன் என்னிடம் சொல்லவில்லை? இறுதிச் சடங்குகளை எப்படியும் நானே கொண்டு வந்திருப்பேனே?”
லியான் சொன்னான், “அது தேவைப்படவில்லை, ஃபாதர்.”
கீழே நோக்கிய பாதிரியார், பழையதாகி இருந்த தன் பழுப்புக் காலணிகளையும், தன் மேலங்கியின் நொய்ந்து போயிருந்த விளிம்புத் தையல்களையும் உற்றுப் பார்த்தார். ”கிருஸ்தவப் புதைப்புக்கு அது தேவையாயிற்றே.”
அவர் குரல் விலகி ஒலித்தது, லியான் அவருடைய நீல நிறக் கண்கள் சோர்வாக இருந்தன என்று நினைத்தான்.
“பரவாயில்லை, ஃபாதர், நாங்கள் அவருக்கு நிறையத் தண்ணீர் கிட்ட வேண்டுமென்று நினைக்கிறோம், அவ்வளவுதான்.”
பாதிரியார் பச்சை நிற நாற்காலியில் தளர்ந்து அமர்ந்தார், ஒரு பள பளப்பான சமயப் பரப்புப் பத்திரிகையை எடுத்தார். அதில் இருந்த குஷ்டரோகிகள், மேலும் கிருஸ்தவரல்லாத மனிதர்களின் படங்களைப் பார்க்காமல் வண்ணமயமான பக்கங்களைப் புரட்டினார்.
“லியான், என்னால் அப்படிச் செய்ய முடியாதென்று உனக்குத் தெரியுமே. முழு கிருஸ்தவச் சவ அடக்கமும் நடந்திருக்கவேண்டும், மேலும் குறைந்தது அடக்கத்தின் போது பிரார்த்தனையாவது செய்யப்பட்டிருக்கவேண்டும்.”
லியான் தன் பச்சைத் தொப்பியை அணிந்து கொண்டான், காதுகளை மூடும் பட்டிகளைக் கீழே இழுத்துக் காதுகளை மூடிக் கொண்டான். “நேரமாகி விட்டது, ஃபாதர். நான் போயாக வேண்டும்.”
லியான் கதவைத் திறந்த போது, பாதிரியார் பௌல் எழுந்து நின்றார், “இருங்க,” என்றார். அறையை விட்டுப் போனார், நீண்ட பழுப்பு மேலங்கியை அணிந்து கொண்டு திரும்பி வந்தார். லியானைப் பின் தொடர்ந்து கதவைத் தாண்டி வெளியே வந்தார், மங்கிய ஒளியில் இருந்த சர்ச்சின் முன் முற்றத்தைத் தாண்டி நடந்தார், சர்ச்சுக்கு முன்னால் இருந்த வெய்யிலில் சுட்ட களிமண் கற்களாலான படிக்கட்டுகளை அடைந்தார். காய்ந்த களிமண்ணால் கட்டப்பட்ட அந்த நுழை வாயில் தாழ்வாக இருந்தது, அதைக் கடக்க இருவரும் குனிந்து வெளிவந்தனர். இடுகாட்டுக்குப் போக மலைச் சரிவில் இறங்கத் துவங்கினர், அப்போது மேஜை போன்ற மலை முகட்டில் பாதி சூரியன் தான் தெரிந்தது.
பாதிரியார் சவக்குழியை மெதுவாக அணுகினார், உறைந்திருந்த தரையில் எப்படிக் குழியை வெட்டினார்கள் என்று வியந்தபடி வந்தார், அப்போது இது புது மெக்ஸிகோ என்பதை நினைவு கொண்டார், குழிக்கருகே இருந்த குளிர்ந்த, உதிரியான மண் குவியலைப் பார்த்தார். ஜனங்கள் ஒருவரையொருவர் ஒட்டி நின்று கொண்டிருந்தனர், முகங்களிலிருந்து நீராவி அலை வீச்சுகள் சிறு புகைக் குவியல்களாக வெளி வந்தன. பாதிரியார் அவர்கள் மீது பார்வையை ஓட்டினார், பிறகு இடுகாட்டில் வழக்கமாக வளரும், மஞ்சள் நிறம் கொண்ட, உலர்ந்த பூண்டுப் புதரின் மீது குவிக்கப்பட்டிருந்த மேலங்கிகள், கையுறைகள், கழுத்துப் பட்டிகளை எல்லாம் பார்த்தார். அவர் அந்த சிவப்புப் போர்வை மீது பார்வையைச் செலுத்தினார், டியோஃப்லோ இவ்வளவு சிறிய உருவா என்று அவருக்கு நிச்சயமாக இருக்கவில்லை, இது ஏதோ ஒரு அமெரிக்கப் பழங்குடியினரின் விபரீதமான தந்திரமோ என்று வியந்தார்- நல்ல அறுவடை வேண்டுமென மார்ச் மாதம் அவர்கள் வழக்கமாகச் செய்யும் ஏதோ சடங்கோ- ஒரு வேளை கிழவர் டியோஃப்லோ நிஜமாக செம்மறி ஆட்டு முகாமில்தான் இருக்கிறாரோ, ஆடுகளை இரவுக்காக அடைத்து வைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று கூட யோசித்தார். ஆனால் அவர் அங்கே இருந்தார், குளிர்ச்சியாக முகத்திலடிக்கும் உலர்ந்த காற்றை எதிர் கொண்டபடி, மறைந்து கொண்டிருக்கும் சூரியனின் இறுதிக் கிரண ஒளியைப் பார்த்துக் கண்களைச் சுருக்கியபடி, ஒரு சிவப்புப் போர்வையைப் புதைக்கத் தயாராக நின்றபடி. அதே நேரம் அவருடைய சர்ச்சின் வரம்புக்குட்பட்ட மக்கள் நிழலில் நின்றிருந்தனர், சூரியனின் கடைசித் துளி உஷ்ணம் அவர்கள் முதுகுகளில் பட்டுக் கொண்டிருந்தது.
அவருடைய விரல்கள் கெட்டிதட்டிப் போயிருந்தன, புனித நீர்க் குடுவையின் மூடியைத் திருகித் திறக்க நிரம்ப நேரமாயிற்று அவருக்கு. சில துளிகள் நீர் சிவப்புப் போர்வை மீது விழுந்தன, குளிர்ச்சியான, கருத்த ஈரப் புள்ளிகளாக ஊறிப் போயின. அவர் சவக்குழி மீது நீரைத் தெளித்தார், ஒளியற்று, குளிர்ச்சியாக இருந்த மண் மீது விழுமுன்னரே அந்த நீர் காணாமல் போன மாதிரி இருந்தது; அது அவருக்கு எதையோ நினைவுபடுத்தியது- அது என்ன என்று நினைவூட்டிக் கொள்ள அவர் முயன்றார், அதை நினைவுக்குக் கொண்டு வர முடிந்தால் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தனக்குப் புரியுமென்று அவர் நினைத்தார். இன்னும் கொஞ்சம் நீரைத் தெளித்தார், காலியாகும் வரை அந்தப் புட்டியை அங்கு உலுக்கிக் கொண்டிருந்தார், சூரியன் இன்னும் ஒளிரும்போது பெய்யும் ஆகஸ்டு மாத மழை போல அஸ்தமனச் சூரிய ஒளியூடே அந்த நீர் விழுந்தது, வாடிய பூசணிப் பூக்கள் மீது படுமுன்னரே ஆவியாகியது போல இருந்தது.
காற்று பாதிரியாரின் நீண்ட பழுப்பு மேலங்கியைப் பிடித்திழுத்தது, சவப் போர்வை மீது தெளிக்கப்பட்டிருந்த சோள மாவையும், மகரந்தத் துகள்களையும் சுழற்றி அடித்து நீக்கிப் போயிற்று. அந்தக் கட்டை அவர்கள் குழிக்குள் இறக்கினார்கள், போர்வையின் முனைகளில் கட்டப்பட்ட, இறுகலாக இருந்த புதுக் கயிற்றை நீக்க அவர்கள் ஏதும் முனைப்பு காட்டவில்லை. சூரியன் விழுந்திருந்தது, கிழக்கே போகும் கிளைகளில், தூரத்து நெடுஞ்சாலையில் கார்களின் முகப்பு விளக்குகள் நிறைந்திருந்தன. பாதிரியார் மெதுவாக நடந்து விலகிப் போனார். லியான் அவர் மலைச் சரிவில் மேலேறுவதைப் பார்த்திருந்தான், அவர் அந்த உயர்ந்த, தடித்த சுவர்களுக்குப் பின்னே மறைந்த பின், திரும்பி மேலே நோக்கி, மேற்கிலிருந்து இன்னும் வீசிய மிக இலேசான சிவப்பு ஒளியைப் பிரதிபலித்த அடர்ந்த பனியடுக்கால் மூடப்பட்ட நீல மலைகளைப் பார்த்தான். எல்லாம் செவ்வனே முடிந்தது குறித்து அவன் திருப்தியாக உணர்ந்தான். புனித நீர் தெளிக்கப்பட்டது குறித்து அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது, இப்போது கிழவர் அவர்களுக்கு நிறைய மழையிடிமேகங்களை அனுப்புவாரென்பது நிச்சயம்.
லெஸ்லி மார்மோன் ஸில்கோ
லெஸ்லி மார்மோன் ஸில்கோ







தமிழாக்கம்: மைத்ரேயன்
மொழி பெயர்ப்பாளர் குறிப்பு:
ஸில்கோவின் இக்கதை ஒரு சிறுகதைத் தொகுப்பில் கிடைத்தது. ’You’ve Got To Read This’ என்கிற தலைப்பில் ரான் ஹான்ஸென்னும், ஜிம் ஷெப்பர்டும் இணைத் தொகுப்பாசிரியர்களாகப் பணியாற்றி, 1994 ஆம் வருடம் பிரசுரித்த புத்தகம். ஹார்பர் பெரென்னியல் பிரசுரத்தின் வெளியீடு.
35 பெயர் பெற்ற எழுத்தாளர்கள், தமது வாசிப்பில் தம்மை நிறையப் பாதித்து தம்மைச் செழுமைப்படுத்தியதாகக் கருதும் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து நமக்குக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் ஓரிரு பக்கங்களில் இக்கதை எப்போது, என்ன விதமாகத் தன்னைப் பாதித்தது என்றும், கதையாசிரியர் பற்றியும், கதையின் அசாதாரணத் தன்மை எங்கிருந்து வருவதாகத் தமக்குத் தோன்றியது என்றும் விளக்கி கதையை அறிமுகப்படுத்துகிறார்கள்.
லெஸ்லி மார்மொன் ஸில்கோவின் ‘The Man to Send Rain Clouds’ என்ற கதையைத் தேர்ந்தெடுத்து முன்வைப்பவர் லூயிஸ் ஓவன்ஸ் என்ற எழுத்தாளர். அரிஸோனாவின் வெள்ளை மலைப் பகுதியில் கூடாரமடித்துத் தங்கி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆளரவமே இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கவும், இயற்கையோடு ஒன்றிச் சில நாட்கள் வாழவும் போயிருக்கும்போது, மூன்றாம் நாள் மத்தியில் அலைப்புற்ற மனநிலையில், கொண்டு போயிருந்த சில புத்தகங்களில் ஒன்றைப் பையிலிருந்து உருவுகிறார் லூயிஸ் ஓவன்ஸ். அது லாகுனா புவப்லோவின் எழுத்தாளரான லெஸ்லி ஸில்கோவின் புத்தகம். ஸில்கோவின் ‘Ceremony’ என்கிற நாவலை ஏற்கனவே வாசித்து அதை மிகவுமே சிலாகித்திருந்ததாகச் சொல்லும் ஓவன்ஸ், ‘Storyteller’ என்கிற இந்தப் புத்தகத்தை விருப்பமில்லாமல் இந்தப் பயணத்திற்கு எடுத்து வந்ததாகத் தெரிவிக்கிறார். அது மிகப் பெரியதாக், கனமாக இருந்தது, மிகக் குறைவான பொருட்களோடு காட்டிற்குப் போய், காடு கொடுக்கும் வளங்களை நம்பிச் சில நாட்கள் வாழ வேண்டுமென்ற நோக்கத்தோடு இருப்பவருக்கு அப்படி ஒரு பெரிய புத்தகம் தேவையற்ற சுமை என்று தோன்றி இருக்கிறது. ஆனால் இறுதிக் கணத்தில் குற்ற உணர்வு உறுத்த, எடுத்துப் போகிறார்.
ஒரு புயல் வந்து அவரது வெளிப்புற நடவடிக்கைகளைத் தடுக்கவும், கூடாரத்துக்குள் இருந்து மழையும், இடியும், மின்னலும் ஓய்வதற்குக் காத்திருக்கையில் இப்புத்தகத்தைப் பிரித்துப் படிக்கிறார். படித்த கதை, இங்கு மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் கதை. ஹெமிங்வேயைப் போல ஸில்கோ கதையிலிருந்து அனேகமாக எல்லாவற்றையும் விட்டு விட்டிருக்கிறார், புவப்லோவைச் சிறிதும் உணர்ச்சி மயமாகச் சித்திரிக்காமல், பாவனைகளின்றி, கிளரும் நோக்கமின்றிக் கொடுக்கிறார். ஸில்கோ நம்மை அந்த உலகை உணர விடுகிறார் என்று ஓவன்ஸ் சொல்கிறார்.
ஓவன்ஸ் மேலும் சொல்வன இந்தியாவில் இருக்கும் நமக்கு நன்கு புரியும் என்பது என் கருத்து. கிட்டுவன, உணர்வன, உணர்த்தப்படுவன, வந்து சேர்ந்து தாக்கமுள்ளதாக ஆவன என்று எல்லாவற்றையும் அனுபவக் கொள்முதலாகக் கொண்டு தாராள மனதோடு அவற்றுக்குத் தம் வாழ்வில், சூழலில் இடம் கொடுத்து நெகிழ்வான வாழ்க்கை வாழும் அமெரிக்கப் பழங்குடியினரைப் பற்றி நமக்கு ஒரு உரை நிகழ்த்தாமல், விளக்கிக் கொண்டிராமல் அவர்கள் வாழ்வுக்குள் இயல்பாக நாம் நுழைந்து அறிய களம் விரிக்கிறார் ஸில்கோ. அமெரிக்கப் பழங்குடியினர் எல்லாவிதங்களிலும் அன்னியரான பாதிரிக்குத் தம் வாழ்வில் இடம் கொடுத்து அவருக்கும் பங்கெடுக்க வாய்ப்பு தருவது போல வாசகரான நமக்கு ஸில்கோ இடம் கொடுக்கிறார் என்பது ஓவன்ஸின் கருத்து. பாதிரியாரைப் போலவே விலகிய பார்வையோடு வரும் நாம், நெகிழ்வுடன் இயங்கும் ’இந்திய’ப் பண்பாட்டின் முன் நம் சந்தேகம், எதிர்ப்பு போன்ற ஆயுதங்களைக் கீழே போடுவது நல்லது என்று அறிகிறோம்.
அறிமுகக் கட்டுரையில் ஓவன்ஸின் முடிவான சொற்கள் இவை- ‘மரபு வழி வாழும் அமெரிக்கப் பழங்குடியினருக்குச் சொற்கள் நிஜமான சக்தி உள்ளவையாகத் தெரிகின்றன. சொற்கள் உயிரூட்டுவதோடு, புற உலகை வற்புறுத்தி ஒழுங்கையும், அர்த்த புஷ்டியையும் கொண்டதாக ஆக்குகின்றன. கதை சொல்லிக்குப் பெரும் பொறுப்பு உண்டு. இக்கதையின் ஒவ்வொரு வரியிலும் அத்தகைய பொறுப்புணர்வை நாம் உணர்கிறோம். ‘சடங்கு’ என்கிற நாவலில், ஸில்கோ ஏற்கனவே காட்டியிருப்பதைப் போல, ஒரு கதை என்பது செயற்கையானது என்பதைத் தாண்டி விடுகிறது. ஒவ்வொரு கதையும் ஒரு சடங்கு போன்றது, ஒவ்வொரு சடங்கும் உலகை மாற்றுகிறது.’
—————————————————–
ஸில்கோ (1948 – ) நியு மெக்ஸிகோ மாநிலத்தின் லாகுனா புவப்லோ இந்தியப் பெற்றோர்களின் மகள். நியு மெக்ஸிகோ பல்கலையில் கல்வி கற்றார். அவருடைய முன்னோரில் வெள்ளையரும் உண்டு. தாம் புவப்லோ இந்தியர் நடுவே வளர்கையில் முழுப் பழங்குடியினரும் சரி, வெள்ளையரும் சரி தன்னை முழுதும் அங்கீகரிக்காதது போல உணர்ந்ததாகச் சொல்கிறார். ’நான் கலப்பின மூலாதாரம் கொண்டவளாக இருந்தாலும், எனக்குத் தெரிந்தது லாகுனா (மரபு) தான்’ என்கிறார்.
பேச்சு வழி மரபு குறித்து ஆய்வுகள் செய்துள்ள ஸில்கோ அதையே பல்கலையில் போதித்திருக்கிறார். ‘Ceremony’, ‘Storyteller’, ‘Almanac of the Dead’, ‘Yellow Woman+ the Beauty of Spirit’ ஆகியன இவரது சில புத்தகங்கள்.
டூஸான் (Tucson) நகரில் வாழ்கிறார்.

நன்றி ampalam.com

No comments: