இலங்கைச் செய்திகள்


தம்புள்ளையில் பத்திரகாளி அம்மன் சிலை உடைக்கப்பட்டு சேதம்: 5 பவுண் திருமாங்கல்யமும் கொள்ளை

17 பேர் கொண்ட சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு இலங்கை வருகை

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா: இலட்சோப இலட்சம் பக்தர்கள் பங்கேற்பு
-------------------------------------------------------------------------------------------------------

தம்புள்ளையில் பத்திரகாளி அம்மன் சிலை உடைக்கப்பட்டு சேதம்: 5 பவுண் திருமாங்கல்யமும் கொள்ளை

03/09/2013 தம்புள்ளை பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த பத்திரகாளியம்மன் சிலை நேற்று இரவு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 5 பவுண் திருமாங்கல்யமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மூலஸ்தானத்தின் சிலையினை புரட்டி எடுத்த இனந்தெரியாத நபர்கள் அதனை ஆலயத்துக்கு அருகிலுள்ள கிணற்றடியில் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
கிணற்றுக்கு அருகில் இருந்த கற்பாறையிலேயே அம்மன் சிலை உடைக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை நகரம் புனித பிரதேசமாக பிரகடப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பத்திரகாளியம்மன் கோவிலை அகற்றுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆலயத்துக்கு அருகில் அமைந்திருந்த வீடுகள் எற்கனவே இடிக்கப்பட்டிருந்தன. இந்த ஆலயத்துக்கு மாற்றிடம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே பத்திரகாளியம்மன் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது.


நேற்று மாலை 6 மணி முதல் ஆலயத்துக்கு எவரும் பிரவேசிக்கக் கூடாது என்ற நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்தல் பலகையொன்றினை அப்பகுதியில் போட்டிருந்தது. இதனையடுத்து நேற்று இரவு  ஆலயத்துக்குள் எவரும் செல்லவில்லை. இந்த நிலையிலேயே பத்திகரகாளியம்மன் சிலை மூலஸ்தானத்திலிருந்து புரட்டிச் செல்லப்பட்டு உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. சிலையின் சேதமாக்கப்பட்ட சில பகுதிகள் கிணற்றுக்குள் வீசப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வருடங்களுக்கு முன்னர் இந்த பத்திரகாளியம்மன் சிலை இந்த ஆலயத்தில் நிறுவப்பட்டிருந்தது. 35 வருடகாலமாக ஆலயத்தில் தேர்த் திருவிழா நடத்தப்பட்டு வந்ததாகவும் தற்போது இந்த ஆலயத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது கவலையளிக்கும் விடயமென்றும் ஆலயத்துக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பத்திரகாளியம்மன் சிலை உடைக்கப்பட்டதையடுத்து அதுகுறித்து தம்புள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுவதற்கு ஆலய நிர்வாகத்தினர் சென்றபோதிலும் முறைப்பாட்டினை ஏற்பதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்னர்.
இதனையடுத்து இவர்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனிடம் முறையிட்டதையடுத்து அவர் பொலிஸாருடன் கலந்துரையாடியுள்ளார். இதன் பின்னர் இன்று மாலை பொலிஸார் இந்த முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆலய நிர்வாகத்தினர் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனிடமும் முறையிட்டுள்ளனர். ஐ.தே.க. எம்.பி. ஆர் யோகராஜன் சம்பவ இடத்துக்கு இன்று மாலை சென்று பார்வையிட்டதுடன் ஆலய நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடியுள்ளார்.
பத்திரகாளியம்மன் சிலை உடைத்து சேதமாக்கப்பட்டதையடுத்து இன்று காலை ஆலயத்துக்கு வந்த ரங்கில தப்புள்ள சிறி இனாமாலுவே சுமங்கல தேரர் இந்தச் சம்பவத்துக்கும் பௌத்தர்களுக்கும் தொடர்பில்லை என்றும் இது பயங்கரவாதிகளின் செயற்பாடாகவே இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் முரண்பாட்டினை ஏற்படுத்தவே இச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.   நன்றி வீரகேசரி   17 பேர் கொண்ட சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு இலங்கை வருகை

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 17 பேர் கொண்ட சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுவொன்று இம்மாதம் 13 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

உள்ளூர் கண்காணிப்பு குழுக்கள், கட்சி பிரதிநிதிகள் குழு மற்றும் தேர்தல் செயலகம் ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து மேற்படி சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவை நாட்டுக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வலையமைப்பில் உள்ள 9 சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் மாகாணசபை தேர்தல் கண்காணிப்பு நடவடிகளை கண்காணிக்க ஏற்கனவே ஒத்துக்கொண்டிருந்த நிலையில் மேலும் 8 பேர் விருப்பதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி
 

 

 

 

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா: இலட்சோப இலட்சம் பக்தர்கள் பங்கேற்பு

04/09/2013 வரவாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. ஆலங்காரக் கந்தன் தேரில் பவனிவர இலட்சோப இலட்சம் பக்தர்கள் புடைசூழ்ந்து வடமிளுத்தனர்.
Pics By: Joy jayakumar


இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய தேர்த் திருவிழாவில் பக்தர் வெள்ளம் எழுப்பிய “அரோகார” சத்தம் வானைப் பிளந்தது.

இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்த பக்தர்கள் வெள்ளாமாக காட்சியளித்தனர். அத்துடன் இலங்கை விமானப் படையினர் நல்லூர் கந்தனுக்கு மலர் சொரிந்து வானை வட்டமிட்ட காட்சி மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

கடந்த மாதம் 11 ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமான நல்லூர்
கந்தனின் வருடாந்த உற்சவத்தில் நேற்று இருபத்தி மூன்றாவது நாள்
சப்பரத் திருவிழா இடம்பெற்றதுடன், இன்று தேர்த் திருவிழாவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. நாளை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.


No comments: