திரும்பிப்பார்க்கின்றேன் --- 07 யாழ்தேவி… நீ யார் தேவி? நிற்பதும் ஓடுவதும் யாருக்காக? எடிட்டிங் கற்றுத்தந்த எடிட்டர் ‘நடா’ நடராஜா முருகபூபதி



யாழ்ப்பாணத்துக்கு   மீண்டும்   யாழ்தேவி   ஓடவிருப்பதாக  வெளியாகியிருக்கும்  செய்தி பார்த்து   மிகவும்  மகிழ்ச்சியடைந்தேன்.  தற்பொழுது  கிளிநொச்சிவரையில்  ஓடிக்கொண்டிருக்கும்   இந்த  ரயில்  பற்றித்தான்   எத்தனை  சுவாரஸ்யமான  கதைகள்  இருக்கின்றன.
காங்கேசன்துறையிலிருந்து    கொழும்பு    கோட்டைக்கும்    கோட்டையிலிருந்து  காங்கேசன்துறைக்கும்   தினமும்    காலை,  மதியம்   பின்னர்  இரவுநேரமும்  ஆறு ரயில்கள்    மற்றும்    அனைத்து    நிலையங்களிலும்    தரித்துச்செல்லும்   பொதிகள்  ஏற்றி  இறக்கி  நீண்ட  நேரத்தை  எடுத்துக்கொள்ளும்  சரக்கு   ரயில்   என்பனவற்றில்    பயணித்தவர்கள்    தற்காலத்தில்    உலகெங்கும்   வாழ்கிறார்கள்.
இவ்வாறு    தினமும்    எட்டு   ரயில்கள்  ஓடிக்கொண்டிருந்த   பாதையில்  பல  ஆண்டுகளாக    ரயிலே    இல்லை.   நீடித்த   உள்நாட்டுப்போர்   தொலைத்துவிட்ட  அந்த  ரயில்களை…   அந்தப்பயணங்களை,    அதில்  பயணித்த  எவராலுமே   தங்கள்   மனங்களிலிருந்து    தொலைத்துவிடவே    முடியாதுதான்.


அவர்களது    நினைவுகளில்   அந்த   ரயில்கள்….  யாழ்தேவி,   உத்தரதேவி, மெயில்வண்டி,   சரக்கு  ரயில்  முதலான  பெயர்களுடன்    இன்றும்  பசுமையாகவிருக்கும்.
கொழும்பு   கோட்டையிலிருந்து   இரவு  புறப்படும்   தபால்  ரயிலில்   பயணித்து  அதிகாலை   பளையை   கடக்கும்பொழுது   கண்டிவீதியில்  தென்னோலைகளை  ஏற்றியவாறு   அரிக்கேன்   விளக்குடன்   மாட்டுவண்டிகள்  அசைந்தசைந்து   வரிசையாக  செல்லும்  காட்சி  ஒரு  காலத்தில்  எனது  கண்களுக்கு  விருந்துபடைத்தவை.   சூரியன்  தனது  கதிர்களை  விரிக்கத்தொடங்கும்  அத்தருணத்தில்  அந்தக்காட்சி   அற்புதமானது.   கவிதைக்குரிய   ஓவியமாக   மனக்குகையில்  பதிந்திருக்கிறது.
கவிஞர்    புதுவை   ரத்தினதுரை,   பொல்கஹவெலையை  பகல்  பொழுதில்  ரயில்கடக்கும்பொழுது   தென்னந்தோட்டத்துக்   கிணறுகளுக்கு  குறுக்கு  மாராப்புடன்  நீராடவரும்   சிங்களப்   பெண்களின்    காட்சியை    தனது   கவிதை   ஒன்றில்  வர்ணித்திருக்கிறார்.
தனது  தந்தையுடன்  (மகாகவி உருத்திரமூர்த்தி)  இரவு  தபால் ரயிலில்  பயணித்தபொழுது  மாகோ  சந்தியில்  பல  நிமிடங்கள்  ரயில்  தரித்துச்செல்லும்வேளையில்,   எங்கிருந்தோ  கும்மிருட்டை  ஊடறுத்து    காற்றிலே   மிதந்துவந்த    சிங்கள   தாலாட்டுப்பாடலில்  தாம்  சொக்கிப்போய்விட்டதாக  ஒருசமயம்  எழுத்தில்    பதிவுசெய்தார்   கவிஞர்  சேரன்.
கொழும்பு    மெயிலில்    நடக்கும்  சுவாரஸ்யமான  சம்பவங்களைக்கோர்த்து  இசைநிகழ்ச்சியை  பல  தடவை  மேடையேற்றினார்    நாடக  எழுத்தாளர்  மாவை  நித்தியானந்தன்.
சிரித்திரன்   சிவஞானசுந்தரம்   தமது  மகுடி  கேள்வி – பதில்  பகுதியில் தமிழர்களை  தட்டி  எழுப்பிய  பெரியோர்  யார்?  என்ற  ஒரு  கேள்விக்கு, “அநுராதபுரத்தில்  ரயிலேறும்  சிங்களச்சகோதரர்கள்.”  என்ற  யதார்த்தமான   பதிலை  சுவாரஸ்யமாகத் தந்து   வாசகர்களை    சிரிக்கவும்;    சிந்திக்கவும்வைத்தார்.
பிரபல   சிங்கள  திரைப்பட  இயக்குநர்   தர்மசேன பத்திராஜா   ஒரு  பாதையைத்தேடி (
In search of a Road)   என்ற  திரைப்படத்தில்  ரயில்பாதையின்  வரலாற்றையே  வழங்கினார்.
இயக்கங்களுக்கும்    அரச  படைகளுக்கும்   இடையே   படிப்படியாக  மோதல்  வலுப்படத்தொடங்கியதும்    வடபகுதிக்கான  ரயில்  பாதையில்,  வவுனியாவுக்கு  அப்பால்  படிப்படியாக   ரயில்   தண்டவாளங்களும்  சிலிப்பர்கட்டைகளும்   இயக்கங்களின்    பங்கர்களுக்கு    இடம்பெயர்ந்துவிட்டன.
வடக்கு    நோக்கி   மேலே  குறிப்பிட்ட  ரயில்கள்  அனைத்தும்  ஓடிக்கொண்டிருந்த  காலத்தில்  அந்த  ரயில்கள்  பயணிகளை   மட்டுமன்றி  இராணுவத்தினரையும்  ஏற்றி  இறக்கிக்கொண்டிருந்தது.  பல   சந்தர்ப்பங்களில்  விடுதலை  இயக்கங்களின்   தாக்குதல்களுக்கு  அஞ்சிய  இராணுவம்,  வடபகுதி   பயணிகளை   பணயமாக  வைத்துக்கொண்டு      ஆனையிரவு    முகாமுக்கு    பயணித்துமிருக்கிறது.
வீரகேசரியில்   பணிபுரிந்த  தற்பொழுது  ஜெர்மனியில்  வதியும்    அலுவலக  நிருபர்  வீ. ஆர். வரதராஜா   ஒருநாள்  யாழ்ப்பாணம்  சென்று  திரும்பியவேளையில்  சில  செய்திகளுடனும்   வந்தார்.
அதில்  ஒன்று:  காங்கேசன்துறை   நோக்கிச்சென்ற  அவர்  பயணித்த    யாழ்தேவி,  தமிழ்ப்பயணிகளை   பாதுகாப்பு   பணயக்கேடயமாக   வைத்துக்கொண்டு,        கிளிநொச்சியில்   தரித்துநிற்காமல்   ஆனையிரவில்  தரித்து,  அதில்   பயணித்த   இராணுவத்தினரை  அங்கு  இறக்கிவிட்டு,  மீண்டும்  கிளிநொச்சிக்கு  திரும்பிவந்து  பயணிகளை   இறக்கிவிட்டு,  மீண்டும்   வடக்குநோக்கி   புறப்பட்டு   அதன்பின்னர்  வரும்  ரயில்  நிலையங்களில்  தரித்து  காங்கேசன்துறைக்கு  மிகவும்  தாமதமாகச்சென்றிருக்கிறது.
இதனால்  கிளிநொச்சிக்கும்  அதற்கு  அப்பால் இருக்கும்  ஊர்களுக்கும்   செல்லவிருந்த  பயணிகள்  எதிர்பாராமல்  எதிர்நோக்கிய  சிரமங்கள்,   அவதிகள்  குறித்தே   வரதராஜா  செய்தி   எழுதிக்கொடுத்திருந்தார்.
துணை   ஆசிரியராக   பணியிலிருந்த  என்னிடம்,  தினமும்  காலையில்  பணிகள்  தொடங்கும்பொழுது  பிரதேச  நிருபர்கள்  தபாலில்  அனுப்பிய  செய்திகள்  மற்றும்  அலுவலக  நிருபர்கள்  தரும்  செய்திகளையும்  எடிட் செய்து  தலையங்கம்  இடுவதற்காக  செய்தி   ஆசிரியராகவிருந்த   நடராஜா     தருவார்.
அவ்வாறு  ஏனைய  துணை   ஆசிரியர்களுக்கும்   வழங்குவார்.
நாம்   எடிட்  செய்து  கொடுப்பனவற்றை  மீண்டும்  ஒரு தடவை  பார்த்துவிட்டு அச்சுக்கோர்ப்பதற்காக    அந்தப்பிரிவுக்கு   அனுப்புவார்.
நிருபர்  வரதராஜா  எழுதியிருந்த  வடபகுதி  பயணிகள்  எதிர்கொண்ட  அவதிபற்றிய  செய்தி  என்னிடம்  வந்தது.  நானும்  வழக்கம்போன்று  எடிட்செய்துவிட்டு,  வடபகுதி பயணிகள்  அவதி,   கிளிநொச்சியில்  நிற்காமல்  சென்று  திரும்பிய   யாழ்தேவி.  என்று  தலைப்பிட்டு   கொடுத்துவிட்டேன்.
மறுநாள்  வீரகேசரியில்  குறிப்பிட்ட  செய்தி  முதல்   பக்கத்தில்  இவ்வாறு  வருகிறது.
யாழ். தேவி   நீ   யார்   தேவி ?  நிற்பதும்  ஓடுவதும்  யாருக்காக?
இவ்வாறு  அர்த்தம்பொதிந்த  தலைப்புகள்  இட்டு  அசத்தியவர்தான்  நாமெல்லோரும்  நடா  என்று  அன்பொழுக  அழைக்கும்  மூத்த  பத்திரிகையாளர்  நடராஜா.
அண்மையில்   அவர்  சுகவீனமுற்று  மருத்துவமனைசென்று   திரும்பியிருப்பதாக  அறிந்தவுடன்   தொடர்புகொண்டேன்.
எண்பது   வயதை   நெருங்கிக்கொண்டிருக்கும்   நடராஜா  வடமராட்சியில்  பிறந்தவர்.  கரவெட்டி   விக்னேஸ்வரா  கல்லூரியில்   படித்தவர்.   இவரைப்போன்று       வடமராட்சியைச்சேர்ந்த    பலர்  வீரகேசரியில்  பணியாற்றினார்கள்.   விடுதலைப்புலிகளின்   ஆலோசகராகவிருந்த   அன்ரன்  பாலசிங்கம்,   அவுஸ்திரேலியாவில்   வதியும்   கலாநிதி  காசிநாதர்,  முன்னாள்  இலங்கை  ஒலிபரப்புக்கூட்டுத்தாபன  தமிழ்ச்சேவை  பணிப்பாளர்  வி.ஏ. திருஞானசுந்தரம்,  தற்போதைய  தினக்குரல்  பிரதம  ஆசிரியர்  தனபாலசிங்கம்,  மறைந்த   படைப்பாளி  செ.  கதிர்காமநாதன்   ஆகியோரும்   இவருடன்   பணியாற்றியவர்களே.
கொழும்பில்   அரசகரும   மொழித்திணைக்களத்தில்   மொழிபெயர்ப்பாளராக   வேலை  செய்யவந்த  நடராஜாவை  1956  இல்  வீரகேசரி  விளம்பரப்பிரிவு   உள்வாங்கியிருந்தது.   அதன்பின்னர்   ஆசிரியபீடத்தில்   துணை  ஆசிரியராக   சிரேஷ்ட   துணை  ஆசிரியராக   செய்தி  ஆசிரியராக  படிப்படியாக  உயர்ந்து  பிரதம  ஆசிரியராகி  ஓய்வு  பெற்றார்.
1972   காலப்பகுதியில்   வீரகேசரியின்    நீர்கொழும்பு   பிரதேச  நிருபராக   பணியாற்றியபொழுது   அவரை  அடிக்கடி   சந்திக்கும்   சந்தர்ப்பங்கள்  எனக்கு  உருவாகின.
பிரதேச    நிருபர்களுடன்   தொடர்பாடல்,    அவர்களுக்கு   எழுத்துமூலம்   அறிவுறுத்தல்கள்  தருவது  முதலான  மேலதிக   பணிகளையும்   அவர்  கவனித்தார்.   அதனால்  நாட்டின்   பல  பாகங்களிலிருந்தும்   செய்திகளை  தபாலிலும்   தொலைபேசி  ஊடாகவும்  அனுப்பும்   நிருபர்களின்  பெயர்கள்  அவருக்கு  அத்துப்படி.
செய்தி   எழுதும்  பயிற்சியை   நான்   அவரிடம்தான்   கற்றுக்கொண்டேன்.
எஸ்.என்.ஆர்.ஜா   என்ற   புனைபெயரிலும்   நடைச்சித்திரங்கள்   எழுதியிருக்கிறார்.  அந்தப்பெயரில்   தான்தான்   எழுதுகின்றேன்   என்று   ஒரு  பிரகிருதி   வெளியே  சொல்லிக்கொண்டிருந்ததையும்   அறிவேன்.   அவருக்கும்   அது  தெரியும்   என  நினைக்கின்றேன்.   ஆனால்   அதற்காக   அவர்  அலட்டிக்கொண்டவரில்லை.
வீரகேசரி   ஆசிரியபீடத்தில்   பணியாற்றினாலும்   அங்குள்ள   அனைத்துப்பிரிவு  ஊழியர்களிடத்திலும்   தோழமை   உணர்வுடன்   உறவாடியவர்.  அங்கே ஆசிரியபீடம்,  ஒப்புநோக்காளர்,   அச்சுக்கோப்பாளர்,  விளம்பரம்,  விநியோகம்,  அச்சுக்கூடம், முகாமைத்துவம்   முதலான   பல  பிரிவுகள்  இருந்தன.   ஆனால்   பிரிவினைகள்   இருக்கவில்லை.
வாயில்காப்போன்களாக   பணியிலிருந்த   பாதுகாப்பு   ஊழியர்கள்  முதல்  சிற்றூழியர்கள்   வரையில்  வயதுவித்தியாசம்   பார்க்காமல்   எவருடனும்  இனிமையாக   பழகும்   இயல்பு   அவரிடம்  குடியிருந்தமையினால்   சிலர்  தங்களது  தனிப்பட்ட  பிரச்சினைகளுக்கும்  அவரிடமே  ஆலோசனைக்கு  வருவார்கள்.
சிலருக்கு  ஆங்கிலத்தில்  கடிதங்கள்   எழுதுவது   படிவங்கள்  பூர்த்திசெய்துகொடுப்பது முதலான   தொண்டுகளும்   செய்வார்.     அவர்கள்    மூவினங்களையும்   சேர்ந்தவர்களாக   இருப்பார்கள்.   சுருக்கமாகச்சொன்னால்   ஒரு  குடும்பமாக  வாழ்ந்தோம்.
பிரச்சினைகள்   மழைமேகங்கள்    போன்று  வந்துபோயிருக்கலாம்.  மழைவிட்டும்   தூரல்    நில்லாமல்   தொடர்ந்திருக்கலாம்.    எனினும்   அந்த   ஈரலிப்பில்   சகோதரவாஞ்சைதான்     துளிர்த்தது.
இலங்கையில்   நடந்த  வன்செயல்களில்   1977,  1981,  1983  உட்பட 1987 இல்  இலங்கை-  இந்திய  ஒப்பந்த  காலத்தில்  ஜே.வி.பி.  கிளர்ச்சியின்பொழுதும்   அவர்  வீரகேசரியில்   பல  அதிர்ச்சியான  அனுபவங்களையும்   சந்தித்திருக்கிறார்.
ஊரடங்கு   உத்தரவு  காலத்தில்   இரவில்   வீட்டுக்குத்திரும்பாமல்   அலுவலகத்தில்  தங்கியிருந்து   கடைச்சாப்பாட்டுடன்   பணிகளைச்செய்தார்.
இரவில்  கட்டில்களாக    மாறிய   ஆசிரியபீட  மேசைகளும்  படுக்கைவிரிப்புகளாக  உதவிய   அச்சுக்கூட   காகிதங்களும்   தலையணைகளாக  உருவெடுத்த   பத்திரிகைக்கோப்புகளுக்கும்    வாய்   இருந்தால்   அந்தப்பொற்காலக்கதைகளை   உதிர்க்கும்.
1983   வன்செயலின்பொழுது  சில   தீயசக்திகள்  வீரகேசரியை  முற்றுகையிட்டன.  ஆசிரியபீடத்திலிருந்த  அவரை   அந்தச்சக்திகள்  அச்சுறுத்தின.   சாமர்த்தியமாக   எதிர்கொண்ட   அச்சுறுத்தலை   சமாளித்தார்.
கொழும்பு  -  காங்கேசன்துறை  ரயில்  போக்குவரத்து  தடைப்பட்டதனால்  வீரகேசரியை  வடபகுதியில்  விநியோகிப்பதில்   நிருவாகத்திற்கு  நெருக்கடிகள்  தோன்றின. அதனால் யாழ்ப்பாணத்தில்  பத்திரிகையை  அச்சிடுவதற்கு  இயக்குநர்  சபை  நீண்ட  ஆலோசனைக்குப்பின்னர்  முடிவுசெய்தது.
நடராஜாவும்  துணை ஆசிரியராகவிருந்த  திருமதி  அன்னலட்சுமி  இராஜதுரையும்  யாழ்ப்பாணத்திற்கு    அனுப்பிவைக்கப்பட்டனர்.  வீரகேசரியை  யாழ்ப்பாணத்தில்  அச்சிடுவதற்கு  ஒரு அலுவலகமும்  அச்சுக்கூடமும்  தயாரானது.  அக்காலகட்டத்தில்  கணினி  வசதி  இல்லை.  இன்றுபோன்று  நவீன  தொழில் நுட்பங்களும்  இல்லை.
பத்திரிகைகளுக்குத்தேவைப்பட்ட  அரசியல்   மற்றும்  சமூகப்பிரமுகர்களின்  படங்களுக்குரிய  புளக்குகள்  அவசரஅவசரமாக  தயாரிக்கப்பட்டன.   மேலதிக  எழுத்தச்சுகள்  மற்றும்  சாதனங்களும்  யாழ்ப்பாணத்துக்கு  அனுப்பிவைக்கப்பட்டன.
பொதுமுகாமையாளரின்  அறையில்  யாழ்ப்பாணத்தில்  வெளியாகவுள்ள  வீரகேசரியின்  பூர்வாங்க   வேலைகள்  குறித்து  ஆராயப்பட்டது.  பொதுமுகாமையாளரின்  செயலாளர்  குறிப்புகளை  எடுத்துக்கொண்டிருந்தார்.
கொழும்பு   அலுவலகத்திலிருந்து  யாழ்.  அலுவலகத்திற்கு   தினமும்  செய்திகளை  தொலைபேசி  ஊடாக  அனுப்பும்     பொறுப்பினை   செய்தி  ஆசிரியர்   நடராஜாவும்  பிரதம  ஆசிரியர்  சிவநேசச்செல்வனும்  என்னிடம்  ஒப்படைத்தார்கள்.  கொழும்பிலிருந்து சில  அச்சுக்கோப்பாளர்களும்   பக்கவடிவமைப்பாளர்களும்   ஒப்புநோக்காளர்களும்  நடராஜாவுடன்  யாழ்ப்பாணத்திற்கு  புறப்பட்டார்கள்.
யாழ்ப்பாணத்தில்  வீரகேசரி  பதிப்பு   வெளியாகவிருப்பதை   அங்கிருந்த  சில  சக்திகள்   விரும்பவில்லை  என்பது  எமக்குப்பின்னரே  தெரியவந்தது.
எனினும்  யாழ்ப்பாண  பதிப்பை  ஆவலுடன்  எதிர்பார்த்தோம்.
ஒருநாள்  மதியம்  பிரதம ஆசிரியரின்  அறையிலிருந்து  சில  செய்திகளை  தொலைபேசி  ஊடாக  நடராஜாவுக்கு  தெரிவித்துக்கொண்டிருந்தேன்.  மறுநாள்  பத்திரிகை  வெளியாகும்  என்ற  நம்பிக்கையை  அவர்  சொன்னார்.
ஆனால்  நாம்  எதிர்பார்த்தவாறு  பத்திரிகை  வெளியாகமாட்டாது  என்பதை  சில  மணிநேரங்களில்  அறிந்து  அதிர்ச்சியடைந்தோம்.
ஒரு  இயக்கம்  துப்பாக்கி  முனையில்  பத்திரிகை  அங்கு  அச்சாவதை  தடைசெய்தது. அத்துடன்  அங்கிருந்;த   நடராஜா  உட்பட  அனைவரையும்   வெளியேற்றியது.
பத்திரிகை  அச்சிடவிருந்த  பெரிய  இயந்திரத்தையும்  சுவரை  உடைத்து  எடுத்துச்சென்றது  அந்த  இயக்கம்.
நடராஜாவும்  மற்றவர்களும்  மீண்டும்  கொழும்பு  திரும்பினார்கள்.  அவர்  சிரித்த முகத்துடன்தான்  வந்தார்.   அச்சு  இயந்திரத்தையும்  இதர  சாதனங்களையும்  மீளப்பெறுவதற்காக   குறிப்பிட்ட   இயக்கத்தின்   செயல்  அதிபருடன்  பேச்சுவார்த்தை  நடத்துவதற்காக   பிரதம  ஆசிரியரை    நிருவாகம்  தமிழ்நாடு  சென்னைக்கு  அனுப்பியது.
ஆனால்   எந்தப்பயனும்  இல்லை.  அந்த  அச்சு இயந்திரத்தையும்  சாதனங்களையும்  பிறிதொரு  இயக்கம்  பின்னாளில்  கையகப்படுத்தியது. 
இலங்கையில்  தேசிய  இனப்பிரச்சினை  கூர்மையடைந்த  காலம்   முதலாக  தமிழ்த்தேசியத்திற்காக   எழுதிய, - குரல்  கொடுத்த  வீரகேசரியின்   யாழ்ப்பாணம்  பதிப்பு  தமிழ்  இயக்கங்களினாலேயே    தடுக்கப்பட்டது    காலத்தில்  பதிந்த  கறைகளில்   இடம்பெறுகிறது.
நடராஜா  1983  இல்  சிங்கள பேரினவாத  சக்திகளின்  அச்சுறுத்தலுக்கு  ஆளானது  போன்றே  யாழ்ப்பாணத்தில்   தமிழ்த்தேசியம்   பேசிய  சக்திகளின்  அச்சுறுத்தலுக்கும்  ஆளாகியவர்தான்.
இன்று  பெரிதாகப்பேசப்படும்    ஊடகவியலாளர்கள்   மீதான  அச்சுறுத்தல்களுக்கு  அன்றே   முன்னுரை  எழுதப்பட்டுவிட்டது.
தனக்கு  வழங்கப்பட்ட   பணியை  அர்ப்பணிப்புணர்வுடன்  அவர்  மேற்கொண்டதை  அருகிருந்து  அவதானித்திருக்கின்றேன்.
ஒரு   சமயம்   வத்திகானில்  புதிய  போப்பாண்டவர்  தெரிவு  நடந்துகொண்டிருந்தது.  அப்பொழுது   இலங்கை   நேரம்  இரவு  11 மணியிருக்கும்.  குறிப்பிட்ட  தெரிவு வத்திக்கானில்    நடைபெறும்  மண்டபத்தில்  ஒரு  புகைபோக்கியின்  ஊடாக   மேலே   வெண்ணிறப்புகை  வெளியானால்  புதிய  போப்பாண்டவர்  தெரிவாகிவிட்டார்  என்பது  ஊர்ஜிதமாகிவிடும்.
மின்னஞ்சல்  இல்லாத  அக்காலப்பகுதியில்  பி.ரி.ஐ.  ரோய்டர்  செய்திச்சேவைகளையே  வீரகேசரி  நம்பியிருந்தது.  மறுநாளுக்குரிய   வீரகேசரியின்   நகரப்பதிப்பு   பக்கங்கள் அனைத்தும்  தயாராகிவிட்டன.
முதல்  பக்கத்தில்  தலைப்புச்செய்தியாக  புதிய போப்பாண்டவர்  தெரிவு  இடம்பெறவேண்டும்.  அன்று  இரவுப்பணியிலிருந்த  நடராஜா  வெளிநாட்டு  செய்திச்சேவைக்காக   காத்திருக்கிறார்.  அடிக்கடி  எழுந்து  சென்று  அச்சிட்டு வரும்  காகிதங்களை   பார்ப்பதும்  வருவதுமாக  நடமாடுகிறார்.
உடனிருக்கும்  அலுவலக  நிருபர்  பால. விவேகானந்தா    சுறுசுறுப்பான  பேர்வழி.  அவர்  அந்த  நேரத்திலும்  கொழும்பு  ஆயர்  இல்லத்துடன்  தொலைபேசி  தொடர்பில்  இருக்கிறார்.
நேரம்   கடந்துகொண்டிருக்கிறது.   செய்தி  தாமதிக்கிறது.  அச்சுக்கோப்பாளர்களையும்  பக்க   வடிவமைப்பாளர்களையும்    உறக்கம்  தழுவுகிறது.  கிடைக்கவிருக்கும்  ஓவர்டைம்   குறித்த  கனவுகளுடன்   அவர்கள்  ஆளுக்கொரு  திசையில்  உறங்கிவிட்டார்கள்.
நானும்  நடு  இரவு  12. 30  மணிக்கு  புறப்படும்  பஸ்ஸை  தவறவிட்டுவிட்டேன்.  நீர்கொழும்பு  பாதையில்  சீதுவை  என்னுமிடத்தில்   அமைந்த   ரத்தொழுகமை  வீடமைப்புத்திட்டத்தில்தான்  நடராஜாவின்  வீடு.  பெரும்பாலும்  நாம்  இருவரும்  ஒன்றாகத்தான்  புறப்படுவோம்.
அன்றையதினம்  எமக்கு  சிவராத்திரி.  ஒருவாறாக  நடுஇரவும் கடந்து  2 மணிக்கு  மேல்  புதியபாப்பாண்டவர்  தெரிவுபற்றிய  செய்தி  ஆங்கிலத்தில்  கிடைக்கிறது.  அதனை அவர்  உடனடியாக  மொழிபெயர்த்து  எழுதி அச்சுக்கு  கொடுக்கின்றார்.  நான்  செய்தியை  ஒப்புநோக்குகின்றேன்.
முதல்  பக்கம்  குறிப்பிட்ட  செய்தியை  தலைப்பாகக்கொண்டு  அச்சிடப்பட்டது.  அதனை  நன்கு  பார்த்துவிட்டு  அலுவலகத்திலிருந்து  அவர்  வெளியேறுவதற்கு  முன்னர்  எனக்காக  காத்து  நின்றார்.  இருவரும்  கொழும்பு  பஸ் நிலையம்  வந்து நீர்கொழும்புக்குப்   புறப்படும்  முதலாவது  பஸ்ஸில்  ஏறுகிறோம்.  அப்பொழுது  நேரம்  மறுநாள்  காலை  நான்கு   மணி.
மறுநாள்   காலை  மீண்டும்  9 மணிக்கு  வேலைக்கு  வரவேண்டும்.  வீடு  திரும்பி  கோழித்தூக்கம்  போட்டுவிட்டு  வருகின்றேன்.
நடா   காலை  பத்து மணியளவில்  வருகிறார்.  அவரிடம்  ஓடிச்சென்று  கைபற்றிக்குழுக்கி  எனது  மகிழ்ச்சியை   தெரிவிக்கின்றேன்.
அவர்  என்னை  விநோதமாகப்பார்க்கிறார்.
“ நடா… இன்று  எங்கள்  வீரகேசரியில்  மாத்திரம்தான்  புதியபோப்பாண்டவரின்  தெரிவுச்செய்தி   வெளியாகியிருக்கிறது.   வேறு  எந்தவொரு  ஆங்கில , சிங்கள  தினசரிகளிலும்  இல்லை”  என்றேன்.
அவர்  வழக்கமான  புன்னகையுடன்   மீண்டும்  தனது  அன்றாடக்கடமைக்குள்  புதைந்துவிடுகிறார்.
மதியம்   நிருவாக  இயக்குநர்    வென்சஸ்லாஸ்    அலுவலகம்  வந்து  நடாவுக்கு  தனது  மகிழ்ச்சியை  தெரிவித்தார்.  அவ்வளவுதான்  அன்று  அவருக்கு  அவரது  அர்ப்பணிப்புக்கு  கிடைத்த   சன்மானம்.
இதே  நடா  வெளிநாடொன்றில்   ஏதாவது  ஒரு  ஊடகத்தில்   பணியிலிருந்திருந்தால்  அதற்காக  ஒரு  கொண்டாட்டமும்  நடத்தி  விருது  வழங்கியிருப்பார்கள்.
தமிழ்நாட்டில்  எம்.ஜி. ஆர்  முதல்வராக  பதிவியிலிருந்த  காலப்பகுதியில் 1981 இல் மதுரையில்   5 ஆவது  அனைத்துலக  தமிழராய்ச்சி  மாநாடு  நடந்தவேளையில்  வீரகேசரியின்  சார்பில்  சென்றிருந்த   நடா    உடனுக்குடன்  செய்திகளை  அனுப்பியதுடன்,  நாடு  திரும்பியதும்  ஒரு  தொடர்  எழுதினார்.
குறிப்பிட்ட  மாநாடு  தொடர்பாக  கோயம்புத்தூரிலிருந்து  இலக்கு  என்ற  அமைப்பைச்சேர்ந்த   விமர்சகர்   கோவை ஞானி  உட்பட  பல  படைப்பாளிகள்  எதிர்வினையாற்றி  அறிக்கைகள்,  துண்டுப்பிரசுரங்கள்  வெளியிட்டிருந்தனர்.
தரமான   ஆய்வுகளுக்கு   முன்னுரிமை  வழங்காமல்  வெற்றுப்புகழ்ச்சி  களியாட்டத்திருவிழாவாகவே  தமிழக  ஆராய்ச்சி  மாநாடுகள்  நடப்பதாக   இலக்கு  குழுவினர்  எதிர்வினையாற்றியிருந்தனர்.  அவர்களுடன்    தொடர்பிலிருந்த  பத்மநாப ஐயர் ( தற்போழுது  இங்கிலாந்திலிருக்கிறார்)   சில  பிரசுரங்களை  எனக்கு  அனுப்பி  அவற்றையும்   நடாவின்  பயணத்தொடரில்  பதிவுசெய்வதற்கு  ஆவன  செய்யுமாறு  கேட்டிருந்தார்.  அவர்  சொன்னவாறு   நானும்  அவற்றை   நடாவின்  பார்வைக்குக்கொடுத்தேன்.
அவர்  எந்தமறுப்பும்   இன்றி  மாநாடு  தொடர்பாக  வெளியான   எதிர்வினைகளையும்  தனது  கட்டுரையில்  சேர்த்துக்கொண்டு  தொடரை  பூர்த்திசெய்தார்.
அலுவலக   நிருபர்களுக்கும்  வெளியூர்  பிரதேச  நிருபர்களுக்கும்  அவர்  தினம் தினம்  சலிப்பின்றி  வழங்கும்  அறிவுரை  முக்கியமானது.
நிருபர்கள்  பத்திரிகைகளுக்கு  தரும்  செய்திகள்,  ஆசிரிய  பீடத்தில்   எவ்வாறு  எடிட்  செய்யப்பட்டிருக்கின்றன?   எந்த  வடிவத்தில்  வந்திருக்கின்றன?   என்பதை  தெரிந்துகொள்வதற்கு   தாம்  எழுதிய  செய்திகளை   மறுநாள்   பத்திரிகையைப்பார்த்து   மீண்டும்  அவசியம்  படிக்கவேண்டும்.   அதனால்   செய்தி   எழுதும்  பயிர்ச்சியில்    முதிர்ச்சிவரும்.
நிருபர்கள்  தங்களது   பெயர் (
By Line)  வந்திருக்கிறதா  என்பதை  தெரிந்துகொள்வதில்    காண்பிக்கும்   ஆர்வத்தை  தமது  எழுத்து  எந்தக்கோணத்தில்  எத்தகைய  வடிவத்தில்  அச்சாகியிருக்கிறது  என்பதை  தெரிந்துகொள்வதில்  காண்பிப்பதில்லை   என்ற  வருத்தம்  அவர்  பணியிலிருந்த   காலம்  முதல்  மட்டுமல்ல   அங்கிருந்து    விடைபெறும்வரையிலும்  அவரிடம்  நீடித்திருந்தது.
பல  ஆண்டுகளுக்குப்பின்னர்   இலங்கை  சென்றவேளையில்  அவர்  வீரகேசரியில்  பிரதம  ஆசிரியராக  குறிப்பிட்ட  அறையிலிருந்தார்.
அவருடன்  பணியாற்றிய  சில  பிரதம  ஆசிரியர்கள்  ஏற்கனவே  அடுத்தடுத்து   விடைபெற்றுச்சென்றுவிட்டனர்.   அதனால்  ஏற்பட்ட  வெற்றிடம்  நடராஜாவால்  பூர்த்திசெய்யப்பட்டது.
எனினும்,  அன்று  நான்  அவரை சந்திக்கச்சென்றவேளையிலும்  அவர்  யாரோ  ஒரு  பிரதேச  நிருபர்  தபாலில்  அனுப்பியிருந்த  செய்தியைத்தான்  திருத்திக்கொண்டிருந்தார்.
வயதால்  தோன்றிய  முதுமையை  அவரது  முகம்  காண்பித்தாலும்  அவரது  வலதுகரம்     இளமைக்குரிய     தீவிரத்துடன்    வேகமாகவே    எழுதிக்கொண்டிருந்தது.
இந்தப்பத்திக்காக   நடா  அவர்களின்  ஒளிப்படத்திற்கு   தீவிர  முயற்சி  எடுத்தேன். எனினும்  கிடைக்கவில்லை.  தற்பொழுது  தமிழ்ப்பத்திரிகை  மற்றும்  இலக்கிய இதழ்  ஆசிரியர்களின்    படங்களை    பொன்னாடை,    பூமாலைகள்  சகிதம்  தாராளமாகப் பார்க்கமுடிகிறது.
ஆனால்  முன்னர்  பத்திரிகை  ஆசிரியர்களின்  படங்கள்  ஊடகங்களில்  வெளிவருவதில்லை.  அவர்களும்    விரும்புவதில்லை.    அந்த  நாட்களில்  வெளியாகும்   தமிழ்த்திரைப்பட   இயக்குநர்களின்  படங்களை  திரையில்கூட  பார்க்கமுடியாது.   நட்சத்திரங்களை    இயக்கும்    இயக்குநர்கள்    வெளியே  தோன்றாமல்    மறைந்தே   இருப்பார்கள்.
அதுபோன்று  பத்திரிகை  ஆசிரியர்களும்  தமது  படங்களை  வெளியிட்டு  பிரபலம்  தேடிக்கொள்வதில்லை.    அவர்கள்    வெளியே   தெரியாத   அத்திவாரங்கள்.   பலரை   உருவாக்கியவர்கள்.   நடா  அவர்களும்  அந்த  வரிசையில்  இணைந்தவர்தான்.
எனக்கு  இந்தப்பத்தியை   நிறைவுசெய்யும்  கணத்தில்  ஒரு  ஆசை.
யாழ்தேவி  விரைவில்  யாழ்ப்பாணம்  நோக்கி  ஓடப்போகிறதாம்.  அதில்  எனது  பாசத்துக்கும்  மரியாதைக்குமுரிய  நடா  அவர்களுடன்   பயணிக்கவேண்டும்.  யாழ்தேவி  நீ  யார்  தேவியும்  அல்ல,  எங்கள்   தேவி    என்று  உரத்துச்சொல்லவேண்டும்.
                 ---0---
                         



2 comments:

Anonymous said...

an excellent reflection at the right time.

Thanks to Mr Murugapoopathy.

Anonymous said...

Apt reward for 30 years pain and 30000 lives. Enjoy.