.
வாவென்றழைத்த கணமே
வந்தென் வாய்குவியும் வார்த்தைகளும்
மனங்குவியும் மொழிகளும்
அடம்பிடித்தோடும் குழந்தைகளாய்
இன்றென் வசப்பட மறுக்கின்றன!
நிகழ்வுகளைக் கொட்டிக் கொட்டி
நிறைத்துவைத்த நினைவுக்கிடங்கும்
ஆடிமுடிந்த மைதானமென
ஆளரவமற்றுக் காட்சியளிக்கிறது!
எதிரிலிருப்பவனின் அகன்ற நெற்றியும்,
புருவஞ்சுழித்தப் பார்வையும்
எவரையோ நினைவுறுத்த,
எஞ்சியிருக்கும் என் ஞாபகப்பொதியிலிருந்து
எத்தனையோ பக்கங்களைப் புரட்டிப்பார்த்தும்,
பிறர் சொல்லாமல் அறிய இயலவில்லை,
அவனென் அன்புமகனென்று!
ஆழ்ந்த பெருமூச்சுடன்
அலுத்துக்கொள்கிறான் அவனும்,
இது ஆயிரமாவது அறிமுகப்படலம் என்று!
சிறுபிள்ளைகள் கட்டிய மணல்வீடென
சிறுகச் சிறுகச் சரிகிறது என் நினைவுக்கோட்டை!
முழுதும் சரிந்து மண்ணாகுமுன்னே
எழுதிட நினைத்தேன் எவ்வளவோ!
சட்டெனத் தோன்றியத் தயக்கமொன்றால்
தடுமாறி நிற்கிறது, பேனா!
எனக்கென்று ஒரு பெயர்
இருந்திருக்கவேண்டுமே,
எவரேனும் அறிவீரோ அதை?
3 comments:
மனதை உருக்கும் அருமையன கவிதை. கவிஞரின் பெயரும் வெளியிட்டால் நலமாயிருக்கும்.
நன்றி,
அன்பு ஜெயா
Poignant kavithai about Alzheimers.
Ram
wow, beautiful.....and touching, romba nanri....
Post a Comment