சிட்னி உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2013

.
சிட்னி உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2013

வரவேற்பு நடனத்திற்கு இயற்றப்பட்ட கவிதை

(பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி)


திசையெட்டும் போற்றும்நற் தேன்தமிழ் அன்னையின்
திறம்பாடும் விழாவன்றோ தோழர்களே!
இசைபாட இயல்பேச நாடகத் தமிழொடு
எழில் கூட்டும் விழாவன்றோ தோழர்களே!

திருவள்ளு வர்தந்த பொதுமறை போற்றியே
சிலைநாட்டும் விழாக்கண்டு சிறப்புச் செய்வோம்
அருந்தமிழ் வளர்த்திட்ட பெருமை விளக்கிடும்
அற்புத விழாவன்றோ தோழர்களே!

உலகிற் பரந்திட்ட தமிழின் பெருமையை
உணர்த்துமோர் கண்காட்சி காணவாரீர்
பலநாட்டு அறிஞர்கள் கலந்திடும் விழாவினைப்
பார்த்துச் சுவைப்பீரே தோழர்களே!

எங்கெங்கும் தமிழ்மணம் எதிலுந் தமிழ்மணம்
என்றென்றும் தமிழினை வளர்ப்போ மென்று
இங்குவாழ் தமிழர்நாம் கூடிச்சூ ழுரைப்பமே
இளைஞர்காள் விழாவிற்குத் திரண்டு வாரீர்!

2 comments:

Anonymous said...

உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு என்று தொடங்கி, இப்பொழுது உலகத் தமிழ் இலக்கிய மகாநாடு ஆகிவிட்டது, இது கருணாநிதி தொடங்கிய உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு பின்னர் தமிழ் செம்மொழி மாநாடு ஆன மாதிரித்தான். எங்களுக்கு படம் காட்டுறாங்கள்.

Anonymous said...

படம் காட்டுறாங்கள் என்பது பிழை. தண்ணி காட்டுறாங்கள் என்று எழுதியிருக்க வேணும். நீங்கள் தமிழ் மகாநாட்டுக்குப் போய் இருந்தால் சரியான தமிழை அவ்வை நடராஜன் போன்ற அறிஞர்கள் கற்பித்து இருப்பார்களே...